தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
நூல் : திரிகடுகம்
ஆசிரியர் : நல்லாதனார்
பாடல் எண் : 12
பதம் பிரித்த பாடல்:
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.
முக்கிய சொற்கள்:
தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் - நட்பு
கருத்து:
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்; ஒற்றாடலில் சிறந்தவன்,பிறரின் காரியங்களை,கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிது கூட மறதிக் குணம் இல்லாதவனாக இருப்பான்; ஆகிய இம்மூன்று இயல்புடையவர்களும் தனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்று வாழும் ஒருவன் இனிமையான வாழ்வைப் பெற்றிருப்பான்.
டிட் பிட்ஸ்:
- திரிகடுகம் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- திரிகடுகம் என்பது தமிழ்நாட்டில் மக்கள் எளியமுறையில் தயாரித்து,பயன்படுத்தும் ஒரு நல்ல மருந்து.
- சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுவது திரிகடுகம்.உடலுக்கு வல்லமையும்,முத்தோஷத்தையும் நீக்கும் வல்லமையும் உடைய மருந்து
- அதுபோலவே மூன்று ஒத்த அல்லது ஒரே நியதியில் அமைந்த கருத்துக்களைக் கூறி, அதனுடம் தொடர்புடைய அறிவுரை அல்லது வாழ்க்கையைப் பற்றி அறிவுறுத்துவதால்,இந்தூல் திரிகடுகம் என்று பெயர்பெற்றது.
- ஆசிரியர் ஆதனார், தொல்காப்பியரின் பரிச்சயம் உடையவர் என்பது தொல்காப்பியத்தின் சில எழுத்ததிகாரச் செய்யுள்களில் ஆதனாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
- வேளாளன் என்ற சொல்லுக்கு உதவி செய்பவன் என்ற பொருளும் அகராதியில் கிடைக்கிறது; உலகம் அனைத்திற்கும் தேவையான உணவுப்பொருளை விளைவித்து, அனைவருக்கும் உதவி செய்யும் தொழிலைக் கொண்டிருப்பதால், வேளாளருக்கு அந்தப் பெயர் வந்திருக்கிறது !
- நல்ல முயற்சி என்பது கடன்படாது வாழ்வதும்,சிறந்த உதவி என்பது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் உபசரித்துப் பராமரிப்பதும்,ஒருவர் தனக்குச் சொன்ன செய்திகளை மறவாது சிந்தையில் வைத்திருப்பதே நல்ல சிந்தை என்பதும் கூற வந்த கருத்து.
9 | 365
எப்போதோ படித்தே ஞாபகம்... மறந்து விட்டது...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...
நன்றி நண்பர் தனபாலன்.
Deleteபல பாடல்கள் நாம் படித்திருப்போம்..ஆனால் பெரும்பாலுன் சட்டென்று நினைவில் இருக்காது...ஒரு வரியைப் பார்த்தவுடன் சட்டென்று பாடல் நினைவுக்கு வரும்...
:))
கோளாளன் (கோள்-செங்கோள் ஐ ஆள்பவன், அரசன்) என்பான் குடியிருக்க அஞ்சாதான்’ என்றுதான் படித்த நினைவு....
ReplyDeleteசெங்கோலுக்கு வரவேண்டியது கோல். கோள் அல்ல.
Deleteகோள் என்பது முன்னுக்குப் பின் முரணாகச் சொல்வது; கோள் சொல்லாதே என்று சொல்லப் படும் கோள்.
இன்னும் அதிகம் தமிழைப் படியுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சாணக்கியன்
Delete