சென்ற பதிவில்
-க்ரூட் சுத்திகரிக்கும் போது பல விளைவுப் பொருட்கள் கிடைக்கின்றன
அதில் பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு முதலியவை முக்கியமானவை
-கிடைக்கும் பொருட்களில் 7 சதம் மட்டுமே பெட்ரோலாகவும், ஏறக் குறைய 55 சதம் டீசல்,மண்ணெண்ணெய்,மற்றும் சமையல் எரிவாயுவும், ஏறக்குறைய 40 சதம் மற்ற விளைபொருட்களும் கிடைக்கின்றன.
-பெட்ரோலின் விற்பனை விலையில் ஏறத்தாழ 55 சதம் மத்திய மாநில அரசுகளின் வரிவிதிப்பால் கூடும் மதிப்பு.
-முக்கியப் பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விற்பனை விலை,உற்பத்தி விலையை விடக் குறைவாக இருப்பதால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களுக்கு மானியம் அளிக்க வேண்டியிருக்கிறது.
மேற்கண்டவற்றில் முதல் இரண்டைப் புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது;மூன்றாவது சிறிது குழப்பலாம்..தொடர்வோம் !
தலை சுற்றும் பெட்ரோலுக்கான அடக்க விலை(Total manufacturing cost) கணக்கீடு:
இப்போது சிறிது கணக்குப் போட்டுப் பார்க்கலாம்.
க்ரூட் எண்ணெய் சர்வதேச வியாபாரத்தில் பேரல் எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. சென்ற வாரத்தில் அது ஒரு பேரலுக்கு அமெரிக்க டாலர் 105 க்கும் மேல் சென்று விட்டது.ஒரு பேரல் என்பது 160 லிட்டர் கொண்டது.
ஒரு பேரல் க்ரூட் இந்திய விலையில் ரூ.5500 என்று வைத்துக் கொண்டால்,ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான க்ரூட் மூலக்கூறின் விலை சுமார் ரூ.34.50 வருகிறது. இது பெட்ரோலுக்கான மூலப் பொருளின் அடக்க விலை, அதாவது raw material cost of petrol constituent. இதற்கு மேல் சுத்திகரிப்புக்கான செலவு,ஒஎம்சி நிறுவனங்கள் அதை விநியோகிக்க செய்யும் செலவு ஆகியவை பெட்ரோலுக்கான உற்பத்திச் செலவில் சேர்கின்றன.
இந்தச் செலவுகள் விளை பொருட்களான பெட்ரோல்,மண்ணெண்ணெய்,டீசல் மற்றும் சமையல் எரிவாயுக்கான உற்பத்திச் சுத்திகரிப்புச் செலவாக கணக்கிடப் படுகின்றன.
மதிப்புக் கூட்டும் விதமாக பெட்ரோலுக்கான விலை, க்ரூடின் அடக்க விலை,இறக்குமதி வரி, டீலருக்கான தரகு, அதற்கு மேல் உற்பத்தியில் சுத்திகரிப்புக்கான செலவு, அதன் மேல் விதிக்கப்படும் கலால்-எக்சைஸ்-வரி,அதற்கும் மேலான மாநில விற்பனை வரிகள் இவை எல்லாம் சேர்த்து விலை கணக்கிடப்பட்டு ரூ.75 வருகிறது. இந்த ரூ 75 என்பது அரசு ஓஎம்சி.க்களுக்கு அளிக்கும் மானியங்களை உள்ளடக்காமல் கிடைக்கும் விலை.
அரசு அளிக்கும் மானியமான சுமார் ரூ.9.50 ஐயும் சேர்த்தால் அடக்க,சுத்திகரிப்பு,வரிகள் உள்பட பெட்ரோல் தயாரிப்பு விலை சுமார் ரூ.86 அளவில் இருக்கலாம்.
இந்தத் விலையில் ஓஎம்சி நிறுவனங்கள் தங்கள் சுத்திகரிப்புக்கான செலவு மற்றும் விற்பனை விநியோகத்திற்கான செலவு மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கான தரகுத் தொகை-sales commission- அனைத்தையும் பெற்று விடுகிறது என்பதை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசு ஓஎம்சி நிறுவனங்கள் செலவு செய்யும் சுத்திகரிப்புக்கான செலவு அரசு அளிக்கும் மானிய இழப்புக்கு மேல் இருக்கலாம் என்பது புரியம். இதற்கான சரியான கணக்கீட்டை அரசோ அல்லது ஓஎம்சி நிறுவனங்களோ பொதுத்தளத்தில் பகிர்வதாகத் தெரியவில்லை.
இதனால் பெட்ரோலுக்கான மூலப் பொருள் விலை,அதன் மீது செய்யப்படும் சுத்திகரிப்புச் செலவு, இவை இரண்டின் அடக்கதில் அரசு விதிக்கும் சுமார் 120 சதம் மொத்த வரிகள் சேர்த்து பெட்ரோலின் விலை சுமார் ரூ.86 அளவில் இந்தியாவில் இருப்பதால்,அரசு அளிக்கும் மானியமான ரூ.9.50 க்குப் பிறகு சில்லரையில் சுமார்.ரூ 75 க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.(தற்போதைய விலையேற்றத்தையும் சேர்த்து).
இந்தக் கணக்கீடு தோராயமாக விளக்கத்திற்காகச் சொல்வது.சிறு சிறு வேறுபாடுகள் கணக்கீட்டில் இருக்கலாம்.
டீசல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு விலைகளின் தாக்கம்:
இந்தியாவில் அரசு கொள்கையாளர்கள் பல காரணங்களுக்காக டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை மொத்த உற்பத்தி மற்றும் வரிகள் சேர்த்த அடக்க விலையில் இருந்து சுமார் 30 சதம் முதல் 55 சதம் வரை மானிய விலையில் விற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன.(இப்போது சென்ற பதிவிற்குச் சென்று டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்கான மானிய விவரங்களை ஒரு முறை பார்த்து விடுங்கள்!)
இந்த மூன்று பொருள்களுமே மானியத்தின் மூலம் பெரும் நிதிச் சுமையை அரசுக்கு அளிக்கின்றன.
கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களில் விலை உயர்த்தப்பட்ட போது
அதே அளவில் சர்வதேச நிலைக்கேற்ப டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயர்த்தப் படவில்லை.வேறு வார்த்தைகளில் சொன்னால் நான்கு பெட்ரோலியப் பொருள்களில் பெட்ரோலில் மட்டுமே அரசுக்கான மானிய நிதிச்சுமை மிகக் குறைந்த அளவில் இருக்குமாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
டீசல் புகைவண்டிகள்.நாடெங்கும் இருக்கும் மற்ற போக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் தேவை.அவை உயர்த்தப் பட்டால் எல்லாப் பொருள்களிலும் அவற்றின் தாக்கம் தெரியும் சமூகக் காரணிகள் இருக்கின்றன.
சமையல் எரிவாயு உயர்த்தப் பட்டால் சாமானியனின் பணப்பையை நேரடியாக அது பாதிப்பதால், உறுதியாக அடுத்த தேர்தலிலேயே அதன் எதிரொலி தெரியும் பயம் இருப்பதால் அதிலும் கை வைப்பதில்லை.
மண்ணெண்ணெய் விலையிலும் இதே காரணத்திற்காக விலையேற்றம் செய்யமுடியாது;ஏனெனில் இந்தியாவில் இன்னும் மின்சாரம் இல்லாத பெரும்பான்மை மக்களின் வீடுகளில் ம.எண்ணெய் விளக்குகள்தான் பயன்பாட்டில் இருக்கின்றன.
எனவே சமூக மற்றும் பதவியைக் காப்பாற்றும் காரணங்களுக்காக பெட்ரோலில் மட்டும் அதிக விலையேற்றம் வைக்கப்படுவதால் பெட்ரோல் மட்டும் அதீத விலைக்குச் சென்று விட்டதாக கருத்தாக்கம் நிலவுகிறது.
தீர்வு என்ன?
பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் நடக்கும் குளறுபடிகளை அலசும் விற்பன்னர்கள் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறார்கள்.
1. தனது வருவாய் வரவினங்களுக்கு சீரான நேரடி வரிக் கொள்கையைக் கடைப் பிடிக்க முடியாத அரசின் கையாலாகத் தனத்தை மறைக்க பெட்ரோலியப் பொருள்களின் மீது உச்சபட்சமாக உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரிகளால் மட்டும் நேரடி வரிவிதிப்பைக் காட்டிலும் அதிகப் பணத்தை மத்திய அரசு பெறுகிறது. இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.பின்வரும் படத்தில் ஆசிய நாடுகளில் பெட்ரோல் விற்பனை விலையில் வரிகளின் பங்கு எவ்வளவு என்ற விவரத்தைப் பாருங்கள் !!!!
2. இந்தியாவில் பொதுப் போக்குவரத்தின் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு அதிகரிக்கப் பட்டு ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும்; பொதுப் போக்குவரத்து முதன்மையான போக்குவரத்து சாதனமாக இருக்கும் நிலை வர வேண்டும்; தனிப் போக்குவரத்து அதி வசதி தேவையானால் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.
3. இந்திய ஓஎம்சி நிறுவனங்கள் அனைத்தும் அரசுத் துறை நிறவனங்கள். இவற்றின் சுத்திகரிப்பு தொழில் நுட்பமும். முறைகளும்-ப்ராசஸ்- காலாவதியானவை. இத்துறையில் 40 சதவீத அளவிற்காவது தனியார் துறைகளின் பங்கீட்டை அரசு அனுமதிக்க வேண்டும்;போட்டித் தன்மை இல்லாத ஓஎம்சி நிறுவனங்கள் அண்டாக்கா கசம் என்று பணத்தை விழுங்கும் தயாரிப்புச் செலவில் இயங்குகின்றன.
4. இந்திய ஓஎம்சி நிறுவனங்களின் சுத்திகரிப்பு முறைகளில் வீணாகும் சதம் உலக அளவில் அதிகமான ஒன்று.
5. ஒரே வீச்சில் மானியங்களை எடுத்து விட்டு, சமையல் எரிவாயு மற்றும் ம.எண்ணெய் வினியோகத்தில் இருக்கும் கள்ளச் சந்தையை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.( பெரும்பான்மை சதவீத மண்ணெண்ணெய் கள்ளச் சந்தைக்கு மாற்றப் படுவதன் மூலம் மானியத்தின் சகாயத்தை இடைநிலை தனியார் வியாபாரிகள்தான் அனுபவிக்கிறார்கள்.எளிய வார்த்தைகளில் சொன்னால் நமக்கு நியாயவிலைக் கடையில் கிடைக்கும் ம.எண்ணெய் மாதத்திற்கு 2 லிட்டர் ரூபாய் 18 க்குக் கிடைக்கிறது. ஆனால் வெளி விற்பனையில் மண்ணெண்ணெய் ரூ 40,சில சமயம் ரூ.50 வரை போகிறது.காரணம் கையாலாகாத அரசின் மின் விநியோகக் குழப்பங்களால் எவரும் ஜெனரேட்டர் என்னும் மின்உற்பத்தி சாதனம் இல்லாது வாழ முடியாத நிலை.இப்போது வீடுகளில் கூட ஜெனரேட்டர் வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதே நிலை சமையல் எரிவாயுவிலும் நடக்கிறது.அப்பாவிப் பொது சனம் சிலிண்டர் பதிந்து விட்டு இரண்டு மாதம் காத்திருக்க தெருவோர டீக்கடைகளுக்கும் கார்களுக்கும் சமையல் எரிவாயு திருட்டுத்தனமாக கள்ளச் சந்தை விலையில் தங்குதடையின்றி வழங்கப் படும் நிலை)
எனவே அரசிடம் வாங்கினாலும் வெளிச் சந்தையில் வாங்கினாலும் ம.எண்ணெய் ரூ.40 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.600 என்பது போன்ற சீரான வெளிப்படை விநியோகம் நடக்க வேண்டும். அதே நேரம் வணிக நோக்கிற்கான எரிவாயு தனியாகப் பிரிக்கப்பட்டு ரூ.900 என்ற வகையில் விற்பனை செய்யப்படவேண்டும்.
சமையல் எரிவாயு விநியோகத்தில் இருக்கும் கள்ளத்தனம் முற்றாக அகற்றப் படவேண்டும்.
5. தனியார் முதலீடுகள் பெட்ரோலியத் தயாரிப்பில் அனுமதிக்கப் படும் அதே நேரத்தில் விதிகள் அவர்களுக்கு இந்திய அரசால் முறையற்று வளைக்கப் படுகின்றன.ரிலையன்சின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு க்ரூட் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஸீரோ காஸ்ட் பாலிசி அனுமதிக்கப் பட்டிருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிவாயுவுக்கான ஆசிய நாடுகளின் விலை விகிதங்கள் பின்வரும் படத்தில்....
ஏன் இவை செய்யப்பட வேண்டும்?
இந்தக் குழப்பங்களை நீக்கி விட்ட நாடுகள் என்ன செய்திருக்கின்றன என்று பார்த்தாலே, ஏன் இந்தத் தீர்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று தெரிந்து விடும்.
ஆசியாவில் முன்னேறிய அல்லது முன்னேறிக் கொண்டிருக்கும் எந்த நாட்டையும் பாருங்கள்; அவற்றின் பொதுப் போக்குவரத்து சீரான மக்களுக்கு அதிக வசதி அளிக்கும் நிலையில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் மாற்றம் பெற்றிருக்கின்றன. சிங்கப்பூர்,ஹாங்காங், சீனா, மலேசியா போன்ற எல்லா நாடுகளிலும் தடையற்ற சீரான பொதுப் போக்குவரத்து வசதிகள் அசத்தும் வண்ணம் உருவாகி நிர்வகிக்கப் படுகின்றன.
இந்திய ரயில்களில் பல பெட்டிகள் 50 களில் செய்யப்பட்டவை என்பதோடு இந்த நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கார்களின் எண்ணிக்கை தயவு தாடசணியமின்றி குறைக்கப் படவேண்டும். கார் வைத்துக் கொள்ள சிங்கப்பூர் போல தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் வர வேண்டும். ஆனால் இதற்கு முன் முதல் நிலை பொதுப் போக்குவரத்து வசதிகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மறந்து விடக் கூடாது.
மாநில அளவில் நதிகளில் சாக்கடைகள் கலப்பதைத் தடை செய்து அவற்றை இணைத்து, நீர் வழியாக சிறு படகுப் போக்குவரத்ததை ஊக்குவிக்க வேண்டும். சீனாவில் இவ்வகைப் போக்குவரத்து வசதிகள் பிரபலம். சுற்றுலாத் துறையும் இதனால் வளரும்.
இவற்றையெல்லாம் செய்ய சீரிய தலைமையும், ஊழல் மற்றும் தவறுகளுக்கெதிரான இறுக்கமான நிர்வாகமும் திறமையான அமைச்சர்களும் தேவை.
இந்திய அரசியல் தலைமைகளின் டர்பன்கள்,குர்தாக்கள் மற்றும் சால்வைகளுக்குள் வண்டி வண்டியாக ஊழல் முடை நாற்றங்கள்தான் இருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்!
சோகத்தை வெனஸஸா ஹட்ஜன்ஸ்'ஐப் பார்த்து ஆற்றிக் கொள்ளுங்கள்...
:)