நண்பர்களே,
திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு.
திருமுறைகளையும் தமிழ் இலக்கியங்களையும் ஓதாமல் விட்டுவிட்டிருக்கும் தமிழ்ச் சமுதாயம் கடந்த சில பத்தாண்டுகளில் அடைந்திருக்கும் சமூக நோக்கிலான வீழ்ச்சி விளக்குதற்கரியது.
நமது தலைமுறையின் இளையர்கள் எவரும் நல்ல தமிழ் அல்ல, சகித்துக் கொள்ளக் கூடிய அளவில் கூடத் தமிழில் பேசும் வழக்கம் கொண்டிருக்க வில்லை என்பதும், இதில் பெரும்பான்மைச் தமிழ்ச் சமூகம் பெருமை கொண்டிருக்கிறது என்பதும் நினைந்து நோக வேண்டிய நிலையாகும்.
இந்த நிலையில் ஒரு சிறு அளவிலான தமிழர்களை தமிழ் மொழியின் வேரான பண்டாரத்தை(புதையல்) நோக்கித் திரும்பியிருப்பது மகிழ வேண்டிய செய்தியாகும்; இந்த குறைந்த விகித நண்பர்கள் தமிழிலக்கியங்கள் மற்றும் திருமுறைகளைப் படித்தறிய முற்படுவதோடு, அவற்றைத் தத்தமது வாரிசுகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தையும் சுற்றுப் புறத்தையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட மேற்கண்ட சிறிய விகிதத்திலான மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதே நம்மாலான சிறு கையளிப்பு என்ற எண்ணம் தோன்றியதால் இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வருகிறேன்.
திருவாசகத்தின் நூற்பயனும் ஓதற்பயனும் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிந்த விதயமே. ஆ்யினும் எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை என்பது எனது வாழ்வனுபவம் எனக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே இந்த சேவை கட்டண சேவையாகவே அளிக்கப் படப் போகிறது.
ஆகா, சிங்கப்பூரில் பணம் சம்பாதிக்க என்ன நூதனமான வழி என்று வாதிடும் நண்பர்கள் தயவு செய்து விலகவும்;
இதன் மூலம் சேர்க்கும் பணம் இந்தப் பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் நோக்கதிற்காகச் செலவு செய்யப் படும் தொகையுடன் சேர்த்துக் கொள்ளப் படும் என்பது ஒரு சிறிய அறிவிப்பு.