பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் !
நமது மேன்மை தங்கிய நிதியமைச்சர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சீர்திருத்தங்கள் (ரீஃபார்ம்ஸ்), காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இன்னும் இரண்டாண்டுகளுக்குத் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நிதிச் செயலர் கெய்ட்னர் இந்தியா இப்போது சரியான பொருளாதார வளர்ச்சி திசையில் நடைபோடுகிறது என்று பகழாரம் சூட்டியிருக்கிறார்.(இதே அமெரிக்க அரசும், அமெரிக்கப் பத்திரிகைகளும் சிறிது காலம் முன்பு வரை, இந்தியப் பிரதமர் செயல்படாத பிரதமர், இந்தியா திவாலாகும் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று தமது பத்திரிகைகள், கருத்தாக்கங்கள் வாயிலாகப் பயமுறுத்தும் கட்டமைப்பைச் செய்து கொண்டிருந்தன என்பதை இந்த இடத்தில் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்; குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியாவின் காங்கிரஸ் அரசு சில்லரை விற்பனையில் அந்நிய முதலீட்டைத் திறந்து விடுவதற்கு முன்னால் வரை!.இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட உடன் காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும் என்ற வகையில் அமெரிக்காவின் அரசு நிர்வாகமும், ஊடகங்களும் இந்தியவைப் பற்றிய கருத்துக்களில், தலைகீழ்த் திருப்பத்தில்-யூ டர்ன்- அசத்துகின்றன ! இதன் பின்னாக இருக்கும் நுண்ணிய விவரங்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் புரிந்து விடாது என்பதுதான் முக்கியமான விதயம்.
இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு முன்னர் அடிப்படையான பொருளாதார விதயங்கள் சிலவற்றைப் பார்த்து விடுவோம்!
()
கேபிடலிசம்-கம்யூனிசம் | மார்க்கெட் இகானமி-பேங்கிங் இகானமி
நாட்டின் பொருளாதார சுற்று |
பொருளாதாரத்தில் கொள்கை முடிவுகள் எடுக்கும் வகைப்படுத்தலின் படி முதலாளித்துவம் மற்றும் தொழிலாளித்துவம்(கேபிடலிசம் மற்றும் கம்யூனிலிசம்) என்று எவ்வாறு இரண்டு கூறுகள் உள்ளனவோ அதே போன்று செயல்பாட்டு முறையின் படி வகைப்படுத்தவதிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன. அவை சந்தைப் பொருளாதாரம் மற்றும் சேமித்தல் பொருளாதாரம் என்பவை.ஆங்கிலத்தில் மார்க்கெட் இகானமி மற்றும் பேங்கிங் இகானமி என்று அவை வகைப் படுத்தப் படுகின்றன.
கொள்கைக் கூறும், செயல்பாட்டுக் கூறும் ஒரே வகைப்படுத்தலில் ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. காட்டாக முதலாளித்துவ கொள்கையைப் பின்பற்றும் ஒரு நாடு சேமிப்புப் செயல்பாட்டையும் பின்பற்றலாம்;தொழிலாளித்துவத்தைப் பின்பற்றும் ஒரு நாடு சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றுதவதில் ஒன்றும் தடையில்லை.(ஆயினும் கொள்கையும்,செயல்பாட்டு முறையும் எப்படி ஒன்றுடன் ஒன்று ஒத்திசையும் என்பதிலும் கேள்விகள் உண்டு.)
உலக அளவில் முதலாளித்துவம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை முழுக்க முன்னெடுக்கும் நாடு அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம் முதலாளித்துவ கொள்கையைப் பின்பற்றினாலும் முழுக்க சந்தைப் பொருளாதார செயல்பாட்டில் கண்மூடித்தனமாக இயங்குவதில்லை.ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் முதலாளித்துவத்திற்கெதிரான மக்கள் நலனை முன்னிறுத்தும் பொருளாதார,நிதியம் சார்ந்த பல கொள்கைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனைத் தவிர மற்ற வலிமையான பொருளாதார நாடுகளான ஃபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் மேற்சொன்ன விதத்தில் முதலாளித்துவத்தையும்,சந்தைப் பொருளாதாரத்தையும் கண்மூடித்தனமாக பொருளாதார வளர்ச்சி அளவுகோலாகக் கொள்ளவில்லை.
ஆசியாவின் பெரிய பொருளாதார சக்திகளான ஜப்பானும், சீனமும் கூட முழுக்க சந்தைப் பொருளாதார செயல்பாட்டில் பொருளாதாரத்தை செலுத்தவில்லை.
இந்தியாவின் இப்போதைய அரசியல் நிர்வாகம் மட்டுமே முழுக்க முதலாளித்துவத்தையும், சந்தைப் பொருளாதாரத்துவம் நோக்கித் முழுமூச்சாக ஓடுவதையும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான கூறுகளாக எண்ணிக் கொண்டு இப்போது செயல்படுகின்றன.
()
சந்தைப் பொருளாதாரத்திற்கும் சேமிப்புப் பொருளாதாரத்திற்கும் என்ன வேறுபாடு என்று இன்னும் புரியாதவர்களுக்கு, மேலும் சிறிது விளக்குவோம்.
சந்தைப் பொருளாதாரத்தில் பொருளாதாரத்தின் முக்கிய வளர்ச்சியின் அறிகுறியாக நாட்டின் பங்கு வர்த்தகக் குறியீடும், மொத்த உற்பத்தி மற்றும் உபயோகிப்பு இரண்டும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
சேமிப்புப் பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தி மற்றும் உபயோகிப்புடன் மக்களின் சேமிப்பும், தனிமனித வருமானமும் முக்கியக் காரணிகள்.
காட்டாக, அய்யாசாமி மாதம் 50000 சம்பளம் வாங்குகிறார் அல்லது 50000 மதிப்புள்ள பொருள்களைத் தயாரித்து விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வாங்கிய சம்பளத்தில் தனது சாப்பாடு மற்றும் செலவுகளுக்காக 20000த்தைச் செலவு செய்கிறார்;மீதமுள்ள 30000'த்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்கிறார். பங்கு வர்த்தகக் குறியீடு எண் ராக்கெட் போல் தினமும் நூறு புள்ளிகள் ஏறிக் கொண்டிருக்கின்றது; பன்னாட்டு முதலீட்டாளர்கள் பல்வேறு காரணிகளுக்காக, இந்திய முதலீட்டுச் சந்தையிலிருந்து திடீரென்று வெளியேறுகிறார்கள்.(இது அடிக்கடி நடக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்; இதற்கான காரணங்கள் இன்னொரு பதிவில் விளக்கமாகப் பார்க்க வேண்டியவை,இங்கு இடம் போதாது!) நூறு இருநூறு என்று ஏறிக் கொண்டிருந்த பங்கு வர்த்தக குறியீட்டு எண் ஐநூறு,ஆயிரம் என்று வீழ்கிறது; அய்யாசாமி பங்கு வர்த்தகத்தில் போட்ட முதலீடு காற்றில் சூடம் போல் கரைந்து விட்டிருக்கிறது. அவர் நேரடிப் பங்கில் போட்டிருந்தாலும் சிலகாலம் பொறுத்தால், போட்ட காசையாவது எடுக்கும் வாய்ப்பிருக்கிறது; ஊக வணிகத்தில் போட்டிருந்தால் அந்த முதலீடு காற்றில் கரைந்திருக்கும்!
இதையே இன்னொரு வடிவில் பார்ப்போம். அதை அய்யாசாமி 20000 செலவு செய்தது போக, மீதமுள்ள 30000' த்தை வங்கியில் குறைந்த வட்டியில் சேமிப்பாகப் போட்டு வைக்கிறார்'.
சேமிப்பு ????! |
மேற்சொன்ன இரண்டு விதத்திலும் நாட்டின் பெரும்பாலான அய்யாசாமிகள் இருக்கும் போது, இரண்டு வித பொருளாதார செயல்பாட்டு முறைகள் வளர்ச்சியின் காரணிகளாக அறியப்படுகின்றன.இரண்டு வித செயல்பாட்டு முறையிலும் அய்யாசாமி 50000 அளவுக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்குதாரராக இருக்கிறார்;ஆனால் சந்தைப் பொருளாதார முறையில் நாட்டுப் பொருளாதாரம் நல்ல குறியீட்டில் இருப்பினும், அய்யாசாமியின் கையில் ஒன்றுமிருக்காது! ஆனால் சேமிப்பு பொருளாதார முறையில் நாட்டின் பொருளாதாரத்தின் குறியீடு சந்தைப் பொருளாதாரத்தின் அளவுக்கு இல்லாதிருப்பினும்(பங்கு வர்த்தகம் அந்த அளவுக்கு பாய்ச்சல் நிலையில் சேமிப்புப் பொருளாதார செயல்பாட்டில் இருப்பதில்லை) அய்யாசாமியின் மொத்த சம்பாத்தியம் அவரது கையில் சேமிப்பாகவும், நாட்டின் மொத்த சேமிப்பின் பகுதியாகவும் மிச்சமிருக்கும்.
()
இந்தியா நெடுங்காலமாக சேமிப்புப் பொருளாதாரத்தில் ஊறிய நாடு; முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை எடுத்த 90 களுக்குப் பின்னும் கூட சேமிப்புப் பொருளாதாரத்தின் செயல்பாட்டின் வழியிலேயே பெருமளவு இருந்த வந்த நாடு. சென்ற பத்தாண்டுகளாக இது சந்தைப் பொருளாதாரத்தை நோக்கித் தள்ளப்படுகிறது.
150 ரூபாய்க்கு சட்டைத் துணி வாங்கி 70 ரூபாய் கொடுத்துத் தைத்துப் போட்டுக்கொள்ள முடியும் நல்ல சட்டைக்குப் பதிலாக, 2000 ரூபாய் கொடுத்து அலென் சோலி சட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு பெருமைப்படும் மக்கள் தொகை பெருமளவில் பெருகிக் கொண்டிருக்கும் நிலை, கடந்த பத்தாண்டுகளில் வந்து விட்டது. இதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் உச்சக் கட்ட எடுத்துக் காட்டு.150 ரூபாய்க்கு இரண்டு மீட்டர் சட்டைத் துணி வாங்கும் போது, துணி உற்பத்தியாளர் முதல் விற்பனையாளர் வரையும், 70 ரூபாய் தையல்கூலி கொடுக்கும் போது ஒரு தையல் காரரும் பொருளாதாரச் சக்கரத்தின் கூறாக இருப்பார்கள். 2000 ரூபாய்க்கு அலென் சோலி சட்டை வாங்கும் போது துணி தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் இருவரும் ஒருவராகும் வாய்ப்பு இருக்கிறது; தையற்காரர் இருக்கலாம் அல்லது அதற்குப் பதிலாக ஒரு இயந்திரம் அந்த சட்டையைத் தைக்கலாம்: தையற்காரர் இருந்தாலும் அவர் இந்தியராக இருக்கும் நிச்சய வாய்ப்பு இல்லை; சீனராகவோ அல்லது இந்தோனேசியராகவோ அல்லது தாய்லாந்துக் காரராகவோ இருக்கப் பெருமளவு வாய்ப்பிருக்கிறது. துணி உற்பத்தியாளரும் இதே போன்று சீனத்தவராகவோ, இந்தோனேசியராகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் அந்த அலென் சோலி சட்டையை விற்று 150 ரூபாயில் உற்பத்தி செய்த சட்டையில் 1500 ரூபாய் லாபத்தை எடுத்துக் கொண்டு வெளியேறும் நபர் வால்மார்ட்டாக இருக்கும் வாய்ப்பு சந்தைப் பொருளாதாரத்தில் மிக அதிகம்.
இப்போது சந்தைப் பொருளாதாரம் எப்படி நடைபெறுகிறது என்பது உங்களுக்கு எளிதாக விளங்கியிருக்கும்.
()
அமெரிக்காவின் நிதிச் செயலர் கெய்ட்னர் சீனாவை ஒப்பிடுகையில்,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாகவும் துரிதமாகவும் இருக்கும் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
அதே நேரத்தில் தனிப்பட்ட முதலீட்டுவருமானத்தின் -பெர் கேபிடா இன்கம்-சிறிய ஒப்பீடு 2011ம் ஆண்டு அளவில் கீழ்வருமாறு:
இந்தியா- 1349 USD
சீனம் - 3490 USD
()
நாட்டின் ஒரு சிறு பங்கு மக்கள்தொகை பெருமளவு(கையூட்டு மற்றும் பதுக்கல்) பணத்தை சேமிப்பாவும்,பதுக்கலாகவும் ஸ்விஸ் பாங்கில் கொண்டுபோய் வைக்கும் போது அந்தப் பணம் நாட்டின் பொருளாதார சுற்றுப் பாதையில் இருந்து விலகுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை; இது மக்களின் சேமிப்பிலும் வராது!
முகநூலில் பகிர்ந்தவரிடமிருந்து-
What is Height of Customer Care ???
Swiss Bank Opening ATM Deposit Machine in Indian Parliament !!!
:))
()
இந்தப் பொருளில் 09.10,2012 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் குருமூர்த்தி எழுதியிருக்கும் ' சீர்திருத்தங்கள் காலாவதியாகிவிடவில்லையா பிரதமரே?' என்ற தலைப்பிலான கட்டுரை, பொருளாதாரத்தில் ஆர்வம் இருக்கும் அனைவரும் படிக்க வேண்டியது.
()
முகநூல் முகப்பு
Gujarat's agricultural growth is an eye opener says Dr. APJ Abdul Kalam.
Gujarat's agricultural growth rate since a decade : > 11 % while National Average is just below 3 %
-Thanks-Facebook Contributors for the above three..
test
ReplyDelete