தமிழனுக்கு ஒரு ஆஸ்கர் பரிசு கிடைப்பது எக்காலம் என்று பல காலம் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது போல இருந்த சூழல்தான் இதுவரை இருந்தது.
ஆஸ்கர் வெல்லப்பட்டால் கமலஹாசன்,மணிரத்னம் மற்றும் சங்கர் போன்றோர்தான் எப்போதாவது அதை சாதிக்க முடியும் என்று பரவலான ஒரு எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்தது.ஆனால் இனிய ஒரு தென்றல் போல,மின்னும் மின்னல் வீச்சைப் போல,ஒளிர்ந்து மிளிரும் வாள்வீச்சின் கூர் போல சட சடவென கோல்டன் குளோப்,பாஃப்டா,ஆஸ்கர் என்று ஒரே வீச்சில் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் ரகுமான் என்ற திலீப்குமார்.அதுவும் ஒன்றுக்கு இரண்டாக !
Slum dog Millionaire என்ற அந்தப் படத்தின் மையக்கருத்து ஒரு சாதாரணன் கோடீஸ்வர ஜாக்பாட் அடித்த சம்பவத்தை விவரிக்கும் விவரணத்தைச் சொல்லும் படமென்றாலும் அதன் பின்னணிக் கதை இந்தியாவின்,மும்பையின் ஏழ்மை வாழ்வின் அவலங்களை,அவற்றின் அவல மற்றும் கேவலப் பார்வையுடன் முன்வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்தப் படம் சொன்ன உள்ளார்ந்த செய்தியை என்னால் சிலாகித்துப் பாராட்ட முடியவில்லை,அது உண்மையாக இருந்த போதிலும்! ஒரு பார்வையாளனின் பார்வையோடு சேர்க்கப்பட்ட ஏழமை வாழ்வு மற்றும் மும்பை வாழ்வின் கலவரங்கள் சார்ந்த ஒரு எள்ளலும் அந்தப் படத்தின் சம்பவங்களில் மறைந்திருந்தது.சொல்லப் போனால் அமெரிக்க நிலவரத்தில்,வாழ்வியலில் இந்தப் படத்திற்கு கிடைத்த அதீத வெளிச்சத்தின் பின்னணி,இந்தியாவின் அவலத்தின் மீது வெளிச்சமடிக்கும் வெள்ளைத் தோலின் ஆர்வமே காரணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப்படம் சார்ந்த தி சண்டே இந்தியன் பத்திரிகையின் ஆசிரியர் எழுதும் வலைப்பக்கத்தில்-Passionate About India- இந்தப் படம் சார்ந்த பதிவு, இந்த வெள்ளை மனோபாவத்தின் நீள அகல ஆழங்களை சரியான பார்வையில் முன் வைக்கிறது.அந்தப் பதிவின் பல பார்வைகளுடன் நான் ஒத்துப் போகிறேன்.
ஆனால் இவை எல்லாம் இந்தப் படத்தின் ஆன்மாவைப் பற்றியவை.
இந்த எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு படமாக சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் எடிட்டிங்,ஒளிக்கோர்வை,இயக்கம் ஆகியவற்றில் இந்தப்படத்தின் ஆக்க நேர்த்தி வியக்க வைத்த ஒன்று.நான் பார்க்கக் கிடைத்த இணையப் பிரதியிலும் கூட படத்தின் தெளிவும் மற்ற மேற்கூறிய நேர்த்தியும் பாராட்ட வைத்தது உண்மை.
ரகுமானைப் பொறுத்தவரை அவரது இசை subtle ஆக படத்தின் கதையோடு கூடவே இழைந்து சென்றது என்று தாராளமாகச்சொல்லலாம்.சிலர் இசை தனித்துக் கொண்டாடும் அளவுக்கு இல்லை என்று கருத்தளித்தார்கள்.தனித்துத் தெரியாத அந்த இசைதான் ரகுமான் இந்தக் கதைக்கு அளித்த பலம் என்று எனக்குப் படுகிறது.அந்தக் கடைசிப் பாட்டு ஒரு கொண்டாட்டம்.
எனவே எதிர் பார்த்த படி இசைக்கோர்வை மற்றும் அந்தக் கடைசிப்பாடல் இரண்டிலும் விருது வென்றிருக்கிறது.ரகுமான் பாராட்டப் படவும் கொண்டாடப்படவும் வேண்டியவர்.
பாராட்டுக்கள் சக தமிழா!
ஆனால் ஒரு படமாக அவருடைய ரங் தே பசந்தி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் மேலும் நெகிழ்வூட்டியவை என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.
மேலும் இந்த நேரத்தில் ஆஸ்கர் ஆஸ்கர் என்று சுமார் 10,20 ஆண்டுகளாகப் பீலா விட்டுக்கொண்டிருக்கும் கமலஹாசன் வகையறாக்கள் ஒரு படத்தின் ஆக்க நேர்த்தி சார்ந்த விதயங்களில் பார்த்து திருத்திக் கொள்ள வேண்டிய வகையான படம் Slum dog Millionaire.தசாவதாரம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆஸ்கர் கிடைக்கும் என்ற,அந்தப் படம் வெளிவந்த நேர ஊடகப் பீலாவை நினைக்கையில் சிரிப்பு பீரிடுகிறது.
0 0 0
அங்கு நிகழும் செயல்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது.மன அதிர்ச்சிக்கும் அவலத்திற்கும் விளிக்கப் படவேண்டிய எல்லா சொற்களையும் தாண்டிய அவலத்தைப் பிரதிபலிக்கிறது இலங்கைத் தமிழர்களின் நிலை.வாருங்கள்,பாதுகாப்பு தருகிறோம் என்று கூப்பிட்டு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி அவர்களை அழிக்கும் ஒரு அரசை என்னவென்று வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.
கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எண்ணற்ற இளைஞர்களின் பிணங்கள் வன்னி,புதுக் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்றுக் கிடப்பதாக ஐநா சார்ந்த ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்,ராஜீவைக் கொன்றார்கள் போன்ற பார்வைகளெல்லாம் நீர்த்துப் போகும் அளவுக்கு இருக்கிறது அப்பாவி மக்களின் அவல நிலை.இந்தியா பேசா மடந்தையாக இருப்பதுடன் இலங்கை அரசுக்கு தார்மீக ஆதரவு தருகிறது என்ற நிலைப்பாடு தந்த இறுமாப்பில் இந்த நிலையை முழுதும் உபயோகப்படுத்தி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் முற்றாக அழித்து விடலாம் என்ற எண்ணத்துடன்தான் கோத்தபய மற்றும் ராஜபட்சேயின் கூட்டணி செயல்படுகிறது.புலிகளுடன்தான் சண்டையிடுகிறோம் என்று சொல்லும் இந்தக் கூட்டணியின் தாக்குதல்களுக்குப் பெருமளவு பலியாபவர்கள் அப்பாவிகளே!இவர்கள் அனைவரையும் கொன்ற பின்னால்தான் புலிகளை அழிக்க முடியும் என்பது ஒரு கேணவாதம்.அந்த நிலையிலும் புலிகள் பிடிபடவோ அழிபடவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இன்னும் புலிகளைப் பிடிக்கவோ,அழிக்கவோ இலங்கை விரும்பினால்,அங்குள்ள தமிழர்களின் மனங்களை வென்றால்தான் அது சாத்தியம்;இலங்கையோ அவர்களின் பிணங்களை வெல்கிறது....
இந்தியாவின் மைய அரசு இந்த விவகாரத்தை அணுகுவது சோனியா என்ற தனி மனிதப் பெண்ணின் பார்வையில் தான் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் மிகவும் தெரிகின்றன.ஒரு அண்டைய தேசத்தின் அரசாக,தமிழர்களை குடிகளாகக் கொண்ட இந்திய அரசு இலங்கை விதயத்தில் மிகத்தவறான பார்வையில்,செயல்பாட்டில் இருக்கிறது.
அமெரிக்க அரசை தலையிட வைக்க வேண்டும் என்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரிதும் முயற்சிக்கும் இந்த வேளையில்,அமெரிக்கா அவல நிலையில் இருக்கும் முல்லைத்தீவு அப்பாவித் தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கில் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இது நடந்தால் மிக நல்லது.அப்படி அமெரிக்கத் தலையீட்டிலாவது இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் குறைந்தால் இந்திய அரசு தன் அசட்டு முகத்தைத் எங்கே வைக்கும் என்று தெரியவில்லை!
சோதனை
ReplyDelete//
ReplyDeleteபாராட்டுக்கள் சக தமிழா!
ஆனால் ஒரு படமாக அவருடைய ரங் தே பசந்தி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் மேலும் நெகிழ்வூட்டியவை என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.
//
அதை நான் ஆமோதிக்கிறேன்..
நல்ல பதிவு.. அந்த கார்ட்டூனை பார்த்த பொழுது அதே எண்ணம்தான் எனக்கும் எழுந்தது..
வருக நர்சிம்.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
உங்க வீடு ஒத்தி,சிறுவன் பதிவு சும்மா ஓலைப்பட்டாசு மாதிரி கலக்கல்..