'திறமையான தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய உயர் கல்வித் துறை தோல்வி அடைந்துவிட்டது' என்று வேதனை காட்டியிருக்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
தலைமைப் பண்பு எல்லா துறைக்குமே பொதுவானது என்றாலும், அரசியல்தான் இங்கே அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது. கட்-அவுட், விளம்பரம், விளக்குத் தோரணம் என்று அரசியல் தலைவர்கள் வலிந்து சூடும் புகழ்மாலைகளின் அடியில் நிஜமான சாதனைத் தலைவர்கள் அமுங்கும் அவலத்தைதான் பார்க்கிறோமே..! மும்பையில் உயிருக்கு அஞ்சாமல் தீவிரவாதிகளை எதிர்கொண்ட அதிகாரிகளும்தானே கொண்டாடப்பட வேண்டிய தலைவர்கள்.
ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படாமல் முடிந்த வேகத்தில் சுருட்டுவதும்... எதிர்க்கட்சியாக இருந்தால் தங்களின் நேற்றைய கொள்ளையை அடியில் புதைத்துவிட்டு, 'ஐயோ! கொள்ளை போகிறதே' என்று யோக்கிய சிகாமணிகளாக அலறுவதும்தானே 'தலைவருக்கான' இலக்கணமாக இருக்கிறது. அரசியல்தான் என்றில்லை... விளம்பர வெளிச்சத்தால் திணிக்கப்படுகிற மாயத் தலைவர்கள் மற்ற பல துறைகளிலும் இருப்பதை, அவர்களின் முகத்திரை கிழியும்போதெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பக்குவத்தை இன்றைய கல்வி முறையால் மட்டுமே அளிக்க முடியுமா?
எனவே, கல்விச் சாலைக்கு வெளியில் இருக்கும் உலகமும் ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகம்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பாடப் புத்தகங்களையும் தாண்டி, தலை நிமிர்த்திப் பார்வையைச் செலுத்த வேண்டும். நிஜமான லட்சியத் தலைவர்களைச் சுயமாகத் தேடிக் கண்டடைய வேண்டும்.
தலைசிறந்த ஒரு குருவைத் தேடி அடையும்போதே கல்விப் பயணத்தின் பாதை கைவசமாகிறது. சரியான ஒரு தலைவனைக் கண்டுகொள்ளும்போதே வாழ்க்கை லட்சியத்தின் பெரும்பகுதி முடிவாகிறது. சத்தியப் பாதையில் நடந்து சாதிக்கும் வெறிகொண்ட இளைஞர்கள் மனமார முயன்றால் போதும்... அவர்களின் தேடலில் வெற்றி நிச்சயமே!
மேலே கண்ட தலையங்கம் இந்த வார விகடன் பத்திரிகையின் தலையங்கம்.தலைவர்கள் உருவாவதின் அவசியம் பற்றி இப்படி பிலாக்கணம் படித்திருக்கும் விகடனுக்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.
விகடன் மற்றும் குமுதம் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் தமிழகத்தின் இரண்டு பிரபலமான வாரப்பத்திரிகைகள்.அதுவும் சமீப காலமாக இருபத்திரிகைகளும் ஒன்றையொன்றோ அல்லது ஏதாவது வலைப்பதிவுகளில் இருந்தோ கருத்துத் திருட்டு நடத்தி கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்;அதில் ஒன்றும் தவறில்லை.உலகில் அனைத்து படிப்பாளிகளும் யாராவது ஒருவர் எழுதிய ஏதாவது ஒன்றைப் படித்துத்தான் அறிவைக் கூர்தீட்டிக் கொள்கிறோம்.ஆனால் நாம் குறைந்த பட்சம் அந்த அறிவை அளித்த எழுத்தை அங்கீகரிக்கவோ பாராட்டவோ தவறுவது இல்லை.
ஆனால் கருத்துத் திருட்டு செய்யும் இவர்கள் அந்த குறைந்தபட்ச நாகரிகம் கூட காண்பிப்பது இல்லை.
போகட்டும்,எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டோம்..
மேற்சொன்னபடி திருடாத,சில அரிய கணங்களில் சிற்சில சொந்தக் கருத்துக்களை இப்பத்திரிகைகள் எழுதுவதும் உண்டு.அது போன்ற ஒரு தலையங்கம் தான் மேற்சொன்னது.
இளைஞர்கள் தலைமைத்துவம் வளர்ப்பது பற்றி ஆதங்கப்பட்டிருக்கும் விகடன் கடந்த 10 வருடங்களாகச் செய்வது என்ன?அப்படித் தேடும் இளைஞர்களுக்கு எத்தனை நல்ல தலைவர்களை விகடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது?
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு நுழைய இருக்கும் சாத்தியங்கள்,கார்த்திக்,சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம்,களத்தில் காப்டன் என்று நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிய விளம்பரத் தொடர்(ஏன் இப்போது வி.கா.ந்தே முழித்துக் கொண்டிருக்கிறார் என்று நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது;சமீப காலமாக நான் பார்க்கவில்லை!) அல்லது இவை எல்லாம் இல்லாத போது நடிகர் வடிவேலு வி.கா.ந்தை எதிர்த்து எப்போது கட்சி தொடங்கப் போகிறார் போன்று தலைமைத்துவம் வளர்க்கும் செய்திகளைத் தவிர வேறு எந்த வித பரபரப்பு செய்திகளைத் தந்திருக்கின்றன?
திரைப்பட நடிகர்கள் தவிர்த்த வேறு எந்த சிறந்த மனிதர்களை அவர்களின் அரிய பண்புகளுக்காக தலைமைத்துவத்திற்காக இந்தப் பத்திரிகைகள் பாராட்டி மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றன?
பெருவாரியான மக்கள் வாசிக்கும் இடத்தில் இருக்கும்,பெருவாரியான அதிகம் படிப்பற்ற கிராமங்களில் இருக்கும் மக்களின் கருத்தில் சார்பை அளிக்கும் அளவுக்கு வல்லமை பெற்றிருக்கும் இந்தப் பத்திரிகைகள் திரைநடிகர்கள் தவிர்த்த வேறு எந்த தனிமனிதர்களை அவர்களின் நற்பண்புகளுக்காக,தலைமைத்துவத்திற்காக,சேவைக்காக முன்னிறுத்தியிருக்கிறார்கள்?
தமிழினத்தின் தலைமைக்கு நடிகர்கள் தவிர் வேறு எவரும் இல்லை என்றும் திரைப்பட உலகம் தவிர வேறு எங்கிருந்தும் தலைவர்கள் வர இயலாது என்று கங்கணம் கட்டி எழுதிக் கொண்டிருக்கும் விகடன் போன்ற பத்திரிகைகள் தலைமைத்துவம் நீர்த்துப் போவது பற்றி எழுதுவது வேடிக்கையாகவும் வெட்கப்படும்படியும் இல்லையா?
இன்னும் சொல்லப் போனால் விகடன் குழுமப் பத்திரிகைகளின் அடக்கத்தில்-content- எத்தனை சதவீதம் திரைப்பட உலகம் தொடர்பற்ற செய்திகளாக இருக்கின்றன?தொலைக்காட்சிகளில் கூட அதில் முன்னணியில் இருக்கும் சில சானல்கள்,சினிமா தவிர வேறு எந்த வித அறிவுப் பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கின்றன ?
தமிழகத்தின் பெருவாரியான இளைஞர்களை திரையுலகம் என்னும் கருமாந்திரம் தவிர வேறு எதிலுமே புத்தி சென்றுவிடாமல் காக்கும் நல்ல விதயத்தை இந்த ஊடகங்கள் கவனமாகச் செய்து வருகின்றன.அதுவே நமது இளைஞர்கள் தமது நாளைய தலைவர்களையும் அந்த பொய்யுலகிலேயே தேடும் பைத்தியக்காரத்தனத்தை செய்யவும் காரணம்.
ஊடகத்துக்கிருக்கும் தார்மீகக் கடமையெல்லாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு எந்த நடிகனை முன்னிலைப்படுத்தலாம்,அதன் மூலம் எவ்வளவு சர்க்குலேஷனை அதிகரிப்போம் என்ற குறுக்குப் புத்தியில் இருக்கும் இந்த ஊடகங்கள் குறைந்த பட்சம் இது போன்று அங்கலாய்ப்புத் தலையங்கங்களாவது எழுதி வேடமிடாமல் இருக்கலாம்!
சோதனை
ReplyDelete