நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள் என்ற தலைப்பில் நண்பர் சுரேஷ்கண்ணன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு பார்வையாகவும் ஆசிரியர்களின் மீதான விமர்சனப் பார்வையுடனும் அமைந்தது அந்தப் பதிவு.
நீயா நானாவைத் தொடர்ந்த பார்ப்பினும்,பதிவைப் படித்தவுடன் தொடர்புடைய நிகழ்ச்சியின் பகுதியைத் தவற விடக் கூடாது என முடிவு செய்தேன்.
சிங்கையில் இந்த வார இறுதியில்தான் அந்த நிகழ்ச்சி வந்தது.இப்போது நிகழ்ச்சி முன்வைத்த கருத்துக்களோடு சுரேஷ் முன் வைத்திருக்கும் பார்வைகளுடனான ஒரு உரையாடல்...
******************
முதலில் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த கணத்தில் எனக்குத் தோன்றிய உணர்ச்சி,கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் சில பகுதிகளுக்கு முன்முடிவுகளுடன் வருகிறாரோ என்ற என் சந்தேகம் மேலும் வலுவானதே.
இந்தப் பகுதியின் நிகழ்ச்சிக்கு வரும் போதே ஆசிரியர்களை ஒரு வழி செய்து விட வேண்டும் என்ற முடிவுடனே அவர் வந்திருந்தார் என நினைக்கிறேன்.இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல முடியும்.
இதே நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பெற்றோர்கள் vs. பிள்ளைகள் பகுதி ஒரு நாளில் வந்தது.அதில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்ய, நடப்பு காலகட்டத்தில் பெற்றோர்களால் முடியவில்லை என்பது ஒரு குற்றமாக வைக்கப் பட்டது.அது ஒரளவுக்கு உண்மைதான்.
இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒரு ஒரு டீன் ஏஜ் பெண்ணின் பெற்றோர் “தங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலம் கருதியே நாங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது” என்று சொன்னபோது அந்த மகள் “இன்னைக்கு வாழ்க்கையைப் பாருங்க,நாளைக்கு என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது.இன்னைக்கு நான் சந்தோஷமா இல்லை,அது இல்லாமல் உங்க காசை வச்சு என்ன செய்றது” என்ற கேட்டாள்.
அந்தப் பெண்ணின் கேள்வியும்,அதைவிட அந்தக் கேள்வியின் குரலில் இருந்த ஆங்காரமும் என்னைத் தாக்கியது.சொல்லத் தேவையன்றி கோபிநாத் அந்தப் பெண்ணின் கேள்விக்கு மேலுறுதி சேர்த்து,பெற்றோரைக் ‘கண்டித்து’ அவர்களுக்கு ‘புத்திசொல்லி’ நிகழ்ச்சியை முடித்தார்.
இதில் எழும் எனது கேள்விகள்:
##ஒரு பெற்றோரை விட குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவோர் யாராக இருக்க முடியும்?
##அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிட இயலவில்லை என்பது,இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் பெற்றொரைக் கூனிக் குறுக வைக்க வேண்டிய அளவுக்கு அந்தப் பெற்றொர் மகளுக்கு இழைத்த கொடும் குற்றச்செயலா?
##தன் பெற்றோரின் மீது,அதுவும் தன் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் விரும்பிய விதயங்களைச் செய்ய வேண்டும்,விரும்பிய படிப்பைப் படிக்க வேண்டும்,விரும்பிய தொழிலைச் செய்ய வேண்டும் என்ற காரணம் பற்றி உழைக்கும் தன் பெற்றோரின் மீது இவ்வளவு ஆங்காரம் காட்டும் ஒரு பெண்,நாளை சமூகத்தில் ஒரு பொதுமனிதன்,தான் நினைத்த படி அந்த நபர் செயல்படவில்லையென்றால்,அந்த மனிதனின் மீது எவ்வளவு ஆங்காரம் காண்பிப்பாள்?
##இத்தகைய மனோபாவப் பெண்கள் எப்படி தன் கணவன்,மாமியார் போன்ற புது சொந்தங்களுடன் ஒன்ற முடியும்?
அந்த நிகழ்ச்சியிலும் கோபிநாத் முன்முடிவுடனே வந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.
* * *
இப்போது ஆசிரியர்கள் பற்றிய எபிசோடுக்கு வருவோம்.
சிறப்பு விருந்தினர்கள் பற்றி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது அடுத்த குற்றப் பத்திரிகை.
என் கேள்வி:தெரிந்திருக்காதது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எவ்விதம் பாதிக்கிறது?
பேராசிரியர் கல்யாணியைப் பற்றித் தெரிந்திருக்க அவர் செய்தித்தாளில் தினமும் இடமும்,படமும் இடம்பிடிக்கும் ஒரு பொதுமுகம் அல்ல.வீரப்பன் எபிசோடில் அவர் இடம் பிடித்திருந்தார் எனினும் அவரைப் பற்றி முக அறிமுகம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒன்றிரண்டு பத்திரிகைகள் தவிர் அந்த சமயத்தில் வந்த அனைத்து பத்திரிகைகளும் கோபால் முகத்தைத்தான் ஃபிளாஷ் செய்தன.கல்யாணியின் பெயர் வந்ததேயொழிய,புகைப்படம் அனைத்திலும் வந்ததாக நினைவில்லை.
* * *
இன்னொரு காமெடி நடந்தது.
பேராசிரியர் கல்யாணி தன்னுடைய ஆசிரியர் தன்னைப் பெஞ்சுமேல் ஏறி நிற்கச் சொன்னார் என்பதற்காக சுமார் 50 வருடங்கள் கழித்து நிகழ்ச்சியில் வந்து கண்கலங்கினார்;அவரை கோபிநாத் தேற்றினார்.
என்னங்கய்யா நடக்குது? இவ்வளவு காமெடி நாடகம் நடத்துறீங்க ....
ஆசிரியர்கள் தண்டிப்பது என்பது மாணவர்களின் குறைகளைக களையும் நோக்கிலேயே.சுமார் 20 வருடங்களுக்கு முன் பள்ளிகளில் ஆசிரியர்கள் படிக்காத அல்லது அடம் செய்யும் மாணவர்களைத் தண்டிக்க பிரம்பு அல்லது குச்சியால் (பெரும்பாலும் பின்பக்கம் புட்டத்தில்) அடிப்பார்கள்;அல்லது உள்ளங்கைகளில்,கையை விரிக்கச் சொல்லி அடிப்பார்கள்.இது தீவிரத் தவறு செய்யும் மாணவர்களுக்கு மட்டும்.
சாதாரணத் தண்டனைகள் முட்டி போடச் சொல்லுதல் அல்லது இம்போசிஷன்(இதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) கொடுப்பார்கள்.
இவை மாணவர்களை நெறிப்படுத்தும் பொருட்டு அளிக்கப் படும் தண்டனைகள்.சுமார் 20 வருடம் முன்பு வரை இதற்காக பெற்றோரோ,மற்ற உறவினரோ ஆசிரியர்களிடம்,ஏன் பையனை அடித்தாய் எனச் சண்டைக்குப் போவதும் கிடையாது.
வீட்டில் வந்து ஆசிரியர் அடித்து விட்டார் என்று சொன்னால் நீ என்ன தவறு செய்தாய் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் முதல் கேள்வியாக இருக்கும்.
இன்னும் சொல்லப் போனால் வீட்டில் ஏதாவது குறும்பு செய்தால் கூட,வாத்தியாரிடம் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தி குழந்தைகளை பெற்றோர்கள் அக்காலங்களில் நெறிப்படுத்த முடிந்தது.
இது போன்ற சூழலில் வளர்ந்த மாணவர்கள் நல்ல முறையிலேயே வளர்ந்தார்கள்,நான் உள்பட!
தவறு செய்தால் அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்ற நீதியும்,தவறு செய்யும் மனநிலைக்கெதிரான தடையாகவும்-டிட்டரெண்ட்-அந்த தண்டனைகள் விளங்கின.அதற்காக தனத்திற்கு ஒரு மனநோயாளி ஆசிரியர் அளித்த தண்டனைகள் போன்ற தண்டனைகளை நான் நியாயப்படுத்தவில்லை.சிறார்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள்,அவர்களின் கற்பித்தல் மற்றும் தண்டனைபயம் ஆகியவை மாணவப் பருவத்தை செதுக்கும் நல்ல காரணிகளாகவே பெரும்பாலும் கையாண்டார்கள்.இதன் மூலம் மாணவர்கள் நல்ல சமூகத்தின் அங்கமாக மாறுவதற்கான சரியான ஆயத்தங்களை அந்த ஆசிரியர்கள் ஏற்படுத்தினார்கள் எனலாம்.
இந்த விதமான மாணவப் பருவத்தை செதுக்கிய என்னுடைய சிறுவயது ஆசிரியர்களை இன்றளவும் என்னால் நன்றியுடன் நினைத்து சிலாகிக்க முடிகிறது.
இத்தகைய ஒரு தண்டிப்பை சுமார் 50 வருடம் கழித்து விசித்து அழும் அளவுக்கு ஒரு கடின நிகழ்வாக ஏற்றுக் கொண்ட கோபிநாத் இன்னொரு பொருந்தாத கேள்வியைக் கேட்டார்.
ஒரு மாணவர்,மாணவர்கள் ஆசிரியர் சரியாகக் கற்பிபக்கும் திறனுடன் இல்லாதநிலை பற்றிக் குறிப்பிடும் போது, it’s his job என்று சொன்ன போது,அதைப் பிடித்துக் கொண்டு தொங்கிய கோபிநாத் “எங்கள் காலங்களில் இப்படி ஆசிரியரைப் பற்றிய மனோபாவம் இல்லை;நீங்கள் ஆசிரியரை ஒரு பணம் கொடுத்து அமர்த்திய வேலைக்காரனைப் போல் பார்க்கிறீர்கள்:நாங்கள் எங்கள் காலத்தில் அவர்களைக் குருவாகப் பார்த்தோம்.....” என்று அங்கலாய்த்தார்.
இப்படி மாணவர்கள் ஆசிரியரைக் குருவாகப் பார்க்கவில்லை என அங்கலாய்ப்பதும்,கண்டித்த ஆசிரியரின் செயலை குற்றச் செயலாக விமர்சித்த பாங்கும் ஒன்றுக்கொன்று முரணான இரு செயல்கள்.
நல்வழிப்படுத்தும் கடமையில்லாத,கண்டிக்கும் அதிகாரம் அற்ற,’குரு’வாக இருக்க முடியாத ஒரு ஆசிரியரை மாணவர்,it’s his job என்ற அளவில்தான் பார்ப்பார்!
அந்த மாணவனின் மாறிய மனநிலைக்கு என்ன காரணம்?
மேற்சொன்ன எல்லாமே காரணம்.
ஆசிரியர் என்பவர் மாணவர்களை நல்வழிப் படுத்தும் பொருட்டு கூட கண்டிக்கக் கூடாது என்ற மனநிலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வந்து விட்ட சூழலில் கற்பிக்கும் பணி என்பது ஒரு consuming item என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறது;எனவேதான் I am paying money;I expect the relevant job content என்ற மனோபாவம் வந்தது.ஆசிரியர்களும் character building,human shaping போன்ற கடமைகளிலிருந்த தம்மை விடுவித்துக் கொண்டு விட்டார்கள்.
நாம் இக்காலங்களில் பொதுவாக பெரியவர்களை நடத்த வேண்டிய முறையில் குழந்தைகளையும்,குழந்தைகளை நடத்த வேண்டிய முறையில் பெரியவர்களையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டிய குழந்தைகளை செல்லம் கொடுத்து வளர்க்கிறேன் என்ற பெயரில் வாங்க,போங்க எனப் பெரியவர்கள் போல நடத்தி சமூகத்திலும் அவ்வித சீராட்டல்களுக்கான எதிர்பார்ப்பைக் குழந்தைகளிடம் விதைக்கிறோம்.மரியாதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதற்கும் இவ்வித போலி சீராட்டல்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
மறுபுறம் கவனமாக கண்ணாடிப் பாத்திரம் போல சீராட்டிப் பேண வேண்டிய பெரியவர்களை,பெற்றோரை சிறார்களை நடத்துவதைப் போல ஹாஸ்டல்களில் கொண்டு விடுகிறோம்.
இவ்வித மாறுபட்ட நம்முடைய குணமாறுதல்களால்தான் ஆசிரியர்களும் மாறிப் போனார்கள்....
* * *
கடைசியாகப் படித்த புத்ததகம் என்ன என்பதற்கும்,புக்கர் பரிசு பெற்ற நூலை எழுதிய ஆசிரியர் யார் என்பதற்கும் ஆசிரியர்கள் பதிலளிக்க இயலவில்லை என்பதும் அடுத்த குற்றம்.
இது ஒரு குறை என்பதில் மாற்றுக் கருத்தில்லை;ஆனால் இது ஆசிரியராக இருக்கத் தகுதியல்லாத அளவுக்க ஒரு குற்றம் அல்ல.
தனது பாடம் சார்ந்த,துறை சார்ந்த விதயங்களில் ஆசிரியர்கள் விவரங்களை விரல் நுனியில் வைத்திருத்தலும்,அனைத்து மாணவர்களையும் புரிந்து கொள்ளச் செய்யும் கற்பிக்கும் திறனும் ஆசிரியர்களுக்கு இருந்தால் இந்திய சூழலில் அது யதேஷ்டம்.
ஆசிரியர்கள் அவ்விதம் துறை மீறிய அறிவுடன் இருந்தால் அது nice to have அம்சம் என்பதை மறுப்பதற்கில்லை;ஆனால் just பாடத்தை தெளிவாக நடத்தினாலே ஆசிரியர்கள் ஒரு நல்ல அடித்தளத்தை மாணவர்களுக்க அளிப்பார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.
சிகரமாக இன்னொரு விநோதம் !
அவ்வாறு எந்த துறைமீறிய சிறப்பறிவும் அறியாத ஆசிரியர்களில் சிலரைத்தான் அதே மாணவர்கள்,ஆசிரியர்களின் பாடங்கள் கற்பிக்கும் திறனுக்காக சிலாகித்துப் பாராட்டியதும் 1000 க்கு 1000 மதிப்பெண்கள் வழங்கியதும் அதே நிகழ்ச்சியில்தான் நடந்தது !
நீங்களாவது இதை கண்டித்து எழுதினீர்களே ?
ReplyDeleteஅந்த பதிவை எழுதுபவருக்கு கொஞ்ச காலமாக உடம்பு சரியில்லை...
ரவி,நன்றி.
ReplyDeleteஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு சூப்பர் ஐடியல் இலக்காக இருப்பது மிக நல்ல ஒரு விதயம்.
ஆனால் அப்படி இல்லை என்னும் ஒரு காரணம் பற்றி அளவிலா தூற்றல் என்பது இன்னொரு எக்ஸ்ட்ரீம்...
அதைத்தான் சுட்ட விரும்பினேன்.
Very nice post
ReplyDeleteintha manobaavam maarinal mattume nalla panbuhalai maanavarhalidam uruvahum.
நன்றி இயற்கை..
Deleteஇந்த மனோபாவத்தை மாற்றுவதிலும் இளைய தலைமுறையை ஒழுங்கு படுத்தி வளர்ப்பதிலும் நமது பங்கும் பெருமளவு இருக்கிறது..
பாராட்டுக்கு நன்றி.