குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, January 26, 2009

92.ஒரு நேர்மறை பத்திரிகையாளரின் வாக்குமூலம்

இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் போர்நடவடிக்கைகள் புலிகளுக்கு எதிராக இருப்பதை விட அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதைத்தான் முக்கியமாகச் செய்து வருகிறது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடியது.

இதே சமயத்தில் புலிகளைப் பற்றிய வன்மையான கண்டனங்ளும் ஆங்காங்கே எழுகின்றதையும் பார்க்கிறோம்.

இது போன்ற சூழலில் சமீபத்தில் இலங்கையின் ஒரு பத்திரிக்கையாளர்(லசந்த விக்ரமசிங்க) படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.அவர் இறக்கும் முன் எழுதி வைத்திருந்த பத்திரிகைக்கான தலையங்கம் இன்றைய இலங்கை நிலையை முற்றாக முன்வைக்கிறது எனத் தோன்றுகிறது.

சண்டே லீடரில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் மகிந்தவின் இளமைக்கால நண்பராகத் தன்னை சுட்டிக்கொண்டிருக்கும் நேரத்திலும் அவரின் தலையங்க வரிகள் மகிந்த செய்யும் அராஜகங்களை முன்வைக்கின்றன.

தமிழக சூழலில் கூட இது போன்ற தார்மீக தைரியத்துடன் செயல் படும் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைக்கிறது இவருடைய எழுத்து !


(இலங்கையிலிருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க, 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதி முடித்த மறுநாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில்புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை: இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவது, வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவது, மூடப்படுவது, பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சண்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்கவிரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர். நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்கு திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வை தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை. நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்த கண்ணாடியை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களை கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது… இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்த பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்விகேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும். உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்த பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதை பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்: எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழ காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாக கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது. இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத்தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.

இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான 'மஹிந்தா' என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் 'ஓயா' என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் 'ஹம்பன்டோடா'வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையை சொன்னால், எனது மரணத்திற்கு பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரை சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராக பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளை பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள். உண்மையை சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளை பறித்ததையும்போல எந்த குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதை பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னை படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையேசெய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப்பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப் பட்டுள்ளனர்: விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திரத்துக்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாதவகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களை பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்து திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனை தடுக்க நான் எதையும் செய்யவில்லை: முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளை கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காக போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை நாஜிக்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக்கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

9 comments:

  1. அறிவன்,

    பதிவிற்கு நன்றி.

    மொழி பெயர்ப்பாளர் யார்? நீங்களே என்றால் மற்றொருமுறை நன்றி.

    ReplyDelete
  2. ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களிடம் கொள்ளையடிக்க தயாராகிறார்கள் புலி முகவர்கள்!!

    - கனடா கந்தசாமி

    ‘cartoon-1ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’

    என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல.

    புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம். ஆனால் இவர்களது கவலை புலிகளின் துக்ககரமான முடிவைப்பற்றியதல்ல. புலிகளின் பெயரால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலராகவும் ஈரோவாகவும் பிராங்காகவும் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து ருசி கண்டவர்கள், இனிமேல்அதற்கு வழியில்லாமல் போகப்போகிறதே என்ற ஏக்கத்தில், கடைசித்தடவையாக பொய்புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் அடிக்கக்கூடியதை அடிக்கும் முயற்சியே இது.

    முன்பு வசூலாகும் பணத்தில் 20 முதல் 25 வீதம்வரை கமிசனாகபெற்ற புலி முகவர்கள், இப்பொழுது புலிகள் கணக்கு கேட்கும் நிலையில் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி, வசூலிப்பதை முழுவதுமாக தமது பைக்குள் போடும் துணிச்சலால் வந்த வினை இது. ஆனால் ‘பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லு’ என்பதை கூட மறந்துவிட்டனர்.

    கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, 1500 இராணுவத்தினரை நீரில் மூழ்கடித்துள்ளதாக ‘அப்பாவித்தனமாக’ கதை அளந்துள்ளனர்! இவர்களின் அண்டப்புழுகுகளால் ‘தலைவர் உள்ளுக்கை விட்டுத்தான் அடிப்பார்’ (அது என்ன அடி என்பது தலைவருக்கு தான் வெளிச்சம்!) என்ற மாஜையில் மயங்கிக்கிடந்த கனடா வாழ் சருகுபுலிகள் எல்லாம் களிப்படைந்து பல இடங்களில் ‘தண்ணிப்பார்ட்டி’ வைத்துக்கொண்டாடினார்களாம். இந்தபார்ட்டிகளில் சருகுபுலிகளின் வெற்றிப்போதை தலைக்கேறியதால், அதை மேலும் ஏற்றுவதற்காக, விஸ்கி போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளித் தீர்த்தனராம்!

    இந்த கொயபல்ஸ் மோசடிக்கும்பலில் உள்ள பலரின் பெயர்களில்தான், ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் ஏராளமான வர்த்தக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த பேர்வழிகளில் பலர் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமான உடனேயே, தமது பெயரிலிருந்த புலிகளுக்கு சொந்தமான வியாபாரங்களை விற்றுவிட்டு, பெரும் தொகை பணத்துடன் வேறு நாடுகளுக்கு இடம் மாற ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர்முதல்தடவையாக வியாபாரத்தில் நஸ்டக்கணக்கு காட்டி, புலிகளுக்கு கணக்குவிட ஆரம்பித்துவிட்டனர். புலிகளே பெரும் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்தப் பெருச்சாளிகள், புலிகளின் கொள்ளைகளுடன் ஒப்பிடுகையில், தமது ‘சிறு கொள்ளை’ அவ்வளவு மோசமானதல்ல என்ற நினைப்புடனேயே இந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவேவருங்காலத்தில் இன்னும் என்னென்ன வெடிகளை வெடித்து, மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப்போகிறார்களோ தெரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர், கடந்த 25 வருடங்களாக தமது மூளையை கழற்றி புலிகளிடம் அடகு வைத்துவிட்டு வந்திருக்கையில், அடகு கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு துணைநின்ற தரகர்களுக்கும்கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான் போங்கள்!

    ReplyDelete
  3. அறிவு,
    மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்புக்கு நன்றி!
    தராக்கி உட்பட பல பத்திரிகையாளர்களின் கொலைகளைக் குறித்த விசாரணைகளைப் போலவே இதுவும் மெல்ல மூடப்படும்.

    அதிகார வலயத்துக்குள் செல்லும் ஒருவர் எப்போது தான் மனிதர் என்பதை மறக்கிறாரோ, துணிச்சலைத் துறக்கிறாரோ அன்றே அவர் அநீதியின் பக்கம் நிற்கத் தொடங்கிவிடுகிறார். இது மகிந்த ராஜபக்சேக்கு மட்டுமல்ல, தமிழக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். அவர்கள் துணைபோகும் அநீதி அவர்களையே மாய்க்கும்.

    ReplyDelete
  4. இத்தனை வெளிப்படையாக தனது மரணத்தை முன்கூட்டியே அனுமானித்து, தனது வாக்குமூலத்தை கூட எழுதி வைத்துவிட்டு சென்ற பின்னரும், சர்தேசங்கள் என்னதான் செய்கின்றன?
    இதை கூட பயங்கரவாதிகளின் சதி என்று தான் சொல்லுவார்களா?

    சர்வேதசங்களுமே இந்த அரச பயங்கரவாதத்திற்கு தான் துணை போகின்றனவா?
    என் தேசம் இந்தியாவும் அந்த கேடுகெட்ட சர்வேதசங்களில் ஒன்றென்பதை எண்ணுகையில் வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறெதையும் செய்ய இயலவில்லை.

    ReplyDelete
  5. மோகன் கந்தசாமி,
    நன்றி.

    மொழிபெயர்ப்பு என்னுடையதல்ல.விகடன் குழுமத்தினுடையது.

    ReplyDelete
  6. அநாநி,
    உங்களுடைய பார்வையும் பலருக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    ஆனால் புலிகளுடன்தான் போரிடுகிறோம் என்று மகிந்த சொன்னாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் காரியத்தை செய்யக் கூடாது என்பது நடுநிலையாளர்கள் விரும்புவது.

    மக்களின் வாழ்வு கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்றால் சர்வதேச பத்திரிகையாளர்களை போர் நிலவரத்தைப் பார்க்க அனுமதிக்கலாம்.

    இலங்கை பத்திரிகையாளர் ஒருவரே இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருப்பது மகிந்தவின் அராஜகங்களைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

    புலிகள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அவர்களை வலிந்து வெளியேற்றும் சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அது நடக்கவில்லை என்ற கோணமும் இருக்கிறது.

    மொத்தத்தில் குழப்பமும் வேதனையும் நிலவுகிறது என்பது உண்மை.

    ReplyDelete
  7. சுந்தரா,
    நன்றி.
    என்னுடைய எழுத்தாக்கம் பற்றிய பரிச்சயத்தில் நான் மொழிபெயர்த்ததாகக் கருதிவிட்டாய்;இது விகடன் குழுமத்தால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

    அதிகார மமதை விரைவில் மறையும் மாயை;அது மறையும் போது நிதர்சனம் வெளிவரும்.

    அதற்குமுன் அப்பாவி மக்கள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் சம்பந்தப்பட்ட அனைவரின் கடமையாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  8. ஜோசப்,
    நன்றி.
    இலங்கைப் பிரச்னை பற்றிய பல குழப்பங்கள் நிலவும் இன்றைய சூழலில்,இந்திய அரசுக்குப் பொறுப்புகள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...