குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, September 21, 2012

175.சில்லரை விற்பனையில் அன்னிய முதலீடு- அடிமைகளின் முடிவா?

மைய அரசின் தான்தோன்றித் தனம்

இந்திய மைய அரசு சில்லரை வணிகத்தில் 51 சதவிகித வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவை அறிவித்த 24 மணி நேரத்தில் மமதை பானர்ஜி மைய அரசுக்கான தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார். உடனை, ஆகா,இந்தியாவில் சிலர் மக்கள் நலன் பற்றிச் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், உங்களைக் கோமாளி ஆக்கும் படி மமதை ராணி சொன்ன காரணம், காங்கிரஸ் மைய அரசு தன்னுடைய கட்சியை,இரண்டாவது பெரிய கூட்டு பொரியல் இன்கிரிடியென்ட் என்ற அந்தஸ்தில் மதித்து தன் கருத்தைக் கேட்டு முடிவை அறிவிக்கவில்லை' என்பது.

அவருடைய கருத்தைக் கேட்டு அறிவித்திருந்தால் பேசாமல் இருந்திருப்பாராயிருக்கும் !

காங்கிரஸ் மைய அரசு முக்கியமான கொள்கை முடிவுகளை இப்படித் தான்தோன்றித் தனமாக அறிவிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்; நாடாளுமன்ற கூட்டத் தொடர் இனி சனவரியில்தான் வருகிறது. நியாயமாக அரசின் கொள்கை முடிவுகள் கூட்டத்தொடரின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டு அறிவிக்கப்படவேண்டும்.
பின்னர் கொள்கையின் கூறுகளை,சட்ட முன் வரைவின் க்ஷரத்துகளாக சமர்ப்பித்து, விவாதித்து,ஓட்டளித்து அதை சட்டமாக்குவார்கள்.

இப்போது கொள்கை முடிவை கூட்டத் தொடர் இல்லாத நேரத்தில் அறிவித்தால், எதிர்க்கட்சிகள் அதிகபட்சம் பத்திரிகைகளில் கத்த முடியும்.சனவரி வருவதற்குள், கொள்கை முடிவு,பாராளுமன்றத்தின் பின்வாசல் விதிகளின் படி சட்டமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.



அல்லது தலையைத் தின்னும் நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் 2ஜி ஊழல்களிலிருந்து கவனைத்தைக் கலைக்க இந்த முயற்சியா என்பதும் புரியவில்லை.

இது போன்ற அரசாண்மை மோசடி, தன்னை குடியாட்சி நாடு என்று சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு நாட்டிலும் நடைபெறுவதில்லை!!!

()



கேபிடலிசம் சர்வரோக நிவாரணி?

இன்றைய பொருளாதார சூழலில் எல்லா நாடுகளும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளையும், ஒரளவு முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரக் கொள்கை வழிகளையே முன்னேற்றத்திற்கான வழியாகக் கையில் எடுக்கின்றன. இரு பெரிய பொருளாதாரம் சார்ந்த சித்தாந்தங்களாக இருந்த கேபிடலிசம் மற்றும் கம்யூனிசம் இரண்டில் கம்யூனிசம் உறுதியாகச் செத்து விட்டது. கேபிடலிசத்தின் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தும் அக்டோபஸ் கால்களைக் கட்டுப்படுத்தி, ஒரளவுக்கு ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை சமூகங்கள் அடைய வேண்டும் என்ற எண்ணத்தினால், கலப்பு பொருளாதாரம் என்று சொல்லக் கூடிய மிக்ஸ்ட் எகானமியின் கொள்கைகளையே இன்றைய பெரும்பான்மையான வளர்ச்சியடைந்த,வளரும் நாடுகள் கடைப்பிடிக்கின்றன.

சீனம் இன்னும் கம்யூனிசத்தை விடவில்லை என்று தடியெடுத்துக் கொண்டு வருபவர்களை விட்டு விடலாம்;அவர்கள் பாவம் ஹலூசனேஷனில் இருக்கிறார்கள். அது ஒரு வியாதி!

()

யாருக்கு என்ன நன்மை?

இந்த சூழலில் எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்கப்படும் போது அந்தந்த நாடுகள், எடுக்கப் படும் அந்தந்த முடிவுகளால் அரசுக்கு,மக்களுக்கு மற்றும் பொதுவாக நாட்டுக்கு என்ன சாதக பாதகங்கள் கிடைக்கும் என்பதைப் பார்த்தே எந்த வித முடிவும் எடுக்க வேண்டியிருக்கிறது.மக்களுக்கு நன்மை தருவதுதானே நாட்டுக்கும்,அரசுக்கும் நன்மை தருவதாக இருக்க முடியும், இதென்ன தத்துப் பித்தென்று உளறிக் கொண்டு?' என்பவர்களுக்கு அடுத்த பத்தியில் விடை இருக்கிறது.

சில்லரை விற்பனை முடிவையே எடுத்துக் கொள்வோம். இதில் அரசுக்குக் கிடைக்கும் பயன்கள், உலகத்தின் பெரும் வியாபாரக் குழுமங்களுக்குப் ( அந்தக் குழுமங்களின் சொல்படி நடக்கும் அரசாங்கங்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்) இந்தியாவின் பெரிய வியாபார சந்தையைத் திறந்து விடுவதன் மூலம், தத்தம் அரசாங்கங்கள் வழியாக சலுகைக் கொள்கைகளையும், சிலபல பயன்களையும், இந்திய அரசின் ஆளுக் கட்சிக்கும், தலைவர்களுக்கும் வழங்கக் கூடும். இது வெளியில் தெரிவது மிகவும் துர்பலம்.ஆனால் நிச்சயம் இந்த முடிவுகளின் பயன்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.

நிச்சயம் தவிர்க்கலாம் !!
மக்களுக்கு உலகின் அனைத்து பிராண்டுகளின் பொருட்கள் இந்தியாவில் கிடைப்பது ஒரு அனுகூலம். இதன் காரணமாகத் தவிர்க்க இயலாமல் இந்தியாவின் சில்லரை விற்பனையின் நகர முகம் மாறியாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். நிச்சயம் போட்டித் தன்மை கூடும். ரிலையன்ஸ் சில்லரைக் குழுமம் போன்றவை இன்னும் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.பொதுவான நோக்கில் உள்ளூரில் தயாராகும் பொருட்கள் தங்கள் தயாரிப்புகளை மேன்மைப்படுத்தாவிடில், போண்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தர மேம்பாடு அவசியம் !!

நாட்டுக்கு என்ன நன்மை? அமெரிக்கா போன்ற, முதலாளித்துவத்தை அதிகார பூர்வமாக, ஏற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில், பெரும் தொழில் குழுமங்களே,பெரும்பாலும் கொள்கை முடிவுகளின் பின்னணியில் இருக்கின்றன. அரசாங்கங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதிலும் அவர்களது விருப்பு வெறுப்புகள் பெரும் பங்கை வகிக்கின்றன.இந்தியா அவர்களுக்குச் செய்த அனுகூலத்திற்கு பிரதி அனுகூலமாக, பன்னாட்டு ரேட்டிங் நிறுவனங்கள் இந்தியாவின் மைய அரசு பொருளாதார சீர்திருத்தங்கள் வழி மேன்மைப்படுவதாக சான்றளித்து, இந்தியா மேலும் உலக நிதியம் போன்ற நிறுவனங்களில் பல்லிளித்துக் கடன் வாங்க உதவிகள் செய்வார்கள்.இது மாநிலங்கள் வரை கடன் வாங்க ஏதுவான சூழலை உருவாக்கும் என்பதால் சிறிது நன்மை இதில் இருக்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து, ஒரு கொள்கை முடிவால் ஒரு நாடு அடையும் பயன் என்ன என்று சிந்திப்பதும்,ஒவ்வொரு கொள்கை முடிவையும் எடுக்கும் நேரத்தில்,அந்த நாட்டிற்கு, அரசிற்கு அவசியமான ஒன்று.இந்தக் கோணத்தில் இந்தியாவின் காங்கிரஸ் மைய அரசு சிந்தித்திருக்கிறதா என்பதை, இப்போதே உறுதியாகச் சொல்லி விட முடியாது. இந்தக் கொள்கை முடிவின் வரையறைக் கூறுகள் அனைத்தும் முன்வைக்கப் படும்போதே இது தெரியவரும்.

ஆனால் இந்த வரையறைக் கூறுகள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விவாதத்திற்குட்படுத்தப் படும் சூழ்நிலைக்கு, எதிர்க்கட்சிகள் எடுத்துச் செல்லுமா என்றும் சொல்ல இயலவில்லை.

()

மாநில அரசுகள்தான் நிராகரிக்கலாமே?

இந்த முடிவைச் செயல்படுத்துவதில் அந்தந்த மாநில அரசுகள் தனித்தனியான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மைய அரசு அறிவித்திருக்கிறது. இது என்னவிதமான கூட்டாட்சித் தத்துவம் என்பது புரியவில்லை. இது போன்ற கிறுக்குத் தனமாக வழிகாட்டல்கள், சிறிது சிறிதாக இந்தியா மீண்டும் சமஸ்தானங்களின் கூட்டமைப்பாக மாறுவதை வகை செய்யும். ஃபெடரல் அரசு என்பது, ஒரு நாடு தழுவிய கொள்கையை எடுக்கும் போது, மாநில அரசுகளைக் கூட்டி கொள்கையின் பயன் மற்றும் அபயன்களின் வழி எல்லோருக்கும் சேர்ந்திருக்கும் ஒரு முடிவை எடுப்பதே, நீண்ட கால நோக்கில் நன்மை விளைவிக்கும்.

தமிழகம்,பீகார், வங்காளம் போன்ற மாநிலங்கள் உடனடி இந்த முடிவு தங்கள் மாநிலங்களைக் கட்டுப் படுத்தாது என்று அறிவித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இவற்றை அனுமதிக்கும்.

இன்றைய காங்கிரஸ் ஆளும் மாநிலமான மகாராட்டியம் இந்த கொள்கை முடிவை ஏற்றுக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை அனுமதித்த சூழலில்,நாளை சிவசேனா-பாஜக கூட்டணி மகாராட்டியத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அரசு மாறப் போகிறது என்ற சூழல் வந்தால் கூட, வெளிநாட்டு நிறுவனங்கள், செய்ய வேண்டியதைச் செய்து, பார்க்க வேண்டியவரைப் பார்த்து தங்கள் வணிகம் பாதிப்படையாத நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் !

எனவே, தனித்தனி மாநிலங்கள் இந்த முடிவை ஏற்பதிலோ, நிராகரிப்பதிலோ அதிகாரம் கொண்டிருக்கின்றன என்பது போன்ற சூழலை காங்கிரஸ் மைய அரசு ஏற்படுத்துவது வெறும் மாயை மட்டுமே.

()

இதனால் என்ன பாதகங்கள் ஏற்பட்டு விடும்? ஏன் இவ்வளவு எதிர்ப்பும் அச்சமும்?


மேலே சொன்னது போல,நிச்சயம் போட்டித் தன்மை கூடும்; பல இந்தியாவில் தயாராகும் பொருட்களுக்கான தயாரிப்பு மேம்பாடு நிச்சயம் கட்டாயம் நடைபெற்றாக வேண்டும். இல்லாவிடில் அவர்கள் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவில் தயாரிப்புக்கான தர மேம்பாட்டில் கிஞ்சித்தும் ஆர்வம் செலுத்தாத அரசமைப்புகள் இருக்கும் சூழலில்,தனியார்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்த்தாட்சண்யமான நிலைக்குத் தள்ளப்படுவது ஓரளவுக்கு நல்லதே. ஆனால் இது முற்றிலும் நல்லது என்று சொல்லி விட முடியாது.

இந்த முடிவில் உள்ளூர் தயாரிப்புகள் நிச்சயம் அம்பலம் ஏறாது; ஏனெனில் ஐஃபோன் முதல், வால்மார்ட் விற்கும் பொருட்கள் வரை, இன்று பெருமளவான அமெரிக்க நிறுவனங்களின் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவது சீனாவில் ! நிச்சயம் மறைமுகமாக சீனாவின் பொருளாதார பலம், இந்திய சந்தையை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதன் மூலம் இன்னும் பலப்படும் !!

உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு, தயாரிப்பில் மேன்மையை எட்டுவதற்கு எந்த உதவிகளையும் செய்ய சுட்டு விரலைக் கூட அசைக்காத மைய அரசுகள், இது போன்ற கொள்கை முடிவுகளை எடுப்பதில் மட்டும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இந்திய சூழலில் ஆய்வு, தயாரிப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் மேன்மையை எட்டுவதற்கு, தனியார்கள் தாங்களேதான் முயற்சித்துக் கொள்ள வேண்டியிருக்கும் கட்டாயம் நிச்சயம் கொடுமையான ஒன்று.இந்த சூழலில் வெளிநாட்டுத் தயாரிப்புகளோடும் மோத வேண்டும் என்பது நிச்சயம் ஆரோக்கியமான போட்டி அல்ல.

சாதாரணமாக ஒரு குளிக்கும் சோப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இனி யார்ட்லியின் சோப்புகள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என்ற நிலையில், 50 ரூபாய் கொடுத்து மைசூர் சாண்டல் வாங்கும் ஒருவர், 80 ரூபாய் கொடுத்து யார்ட்லி வாங்குவார்;அதுவும் இந்திய சந்தையில் நுழையும் போது யார்ட்லி தன்னுடைய விலையை 60 ரூபாயில் வைக்கும். பின்னர் சிறிது சிறிதாக ஏற்றுவார்கள்.நிச்சயம் அந்தத் தயாரிப்பு மைசூர் சாண்டலை விட மேன்மையானது. மைசூர் சாண்டல் தன்னுடைய தயாரிப்பை மேன்மைப் படுத்தியாக வேண்டும்.இல்லாவிட்டால் மூட வேண்டும்.மைசூர் சாண்டல் நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் மூடுவிழா நடத்தி விட்ட நிலையில், உலக அளவில் யார்ட்லியின் உண்மையான விலையான ரூ.80 ஆக்கி விடுவார்கள்.

அந்தத் தயாரிப்பின் மேன்மைக்குப் பழகி விட்ட பயனாளர், பின்னர் அந்த விலையைக் கருத்தில் கொள்ள மாட்டார் !!

இது ஒரு எளிய உதாரணம்.

இது போக தெருவோரத்தில், எந்தவித படாபடோபங்கள் இன்றி விற்பனை நடத்தும் பல சில்லரை விற்பனைக் காரர்கள்,கைத் தொழிலாளர்கள தங்களுடைய வாடிக்கைகளில் பெருமளவை இழப்பதும் நடக்கும். அவர்கள் போட்ட முதலுக்கு லாபம் கிடைக்காத அளவுக்கு அவர்களது வியாபாரம் சுருங்கும்.அவர்கள் அனைவரும் தங்கள் தொழிலை மூட்டை கட்டும் நிலை சிறிது சிறிதாக வரும்! ( இன்று காலணி தைக்கும் தொழிலாளிகளும், சலவைத் தொழிலாளர்களும் ஏன் அருகி வருகிறார்கள் என்பதன் நீட்சியே மேற்சொன்ன விளைவு)


()

இது போன்ற முடிவுகளை எடுக்கும், நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அரசுகள் என்ன செய்யலாம்? 


இந்தக் கொள்கை முடிவுகளில், தம்முடைய மக்கள் பாதிப்படையாமல் என்ன விதிகளை அரசுகள் விதிக்கின்றன என்பதைப் பொறுத்தே, இவை ஒட்டு மொத்த சமூகத்திற்கு நன்மையைக் கொண்டு வருகிறதா அல்லது தீமையைக் கொண்டு வருகிறதா என்பது புரிய வரும்.எடுத்துக் காட்டாக, அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் விற்பனை நிலையங்களை இந்தியாவில் தொடங்கும் போது, பின்வருவன போன்ற சில விதிகளை விதிக்கலாம்.

- ஒட்டுமொத்த கொள்முதலில் குறைந்தது 40 சதவிகிதமாவது உள்நாட்டுப் பொருள்களாக இருக்க வேண்டும்.

- இந்த நிறுவனங்களின் வருடாந்திர லாபத்தில் 20 சதவிகிதமாவது இந்தியாவின் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

- இவை தொழில் தொடங்குவதற்கு, காலை நக்கும் அளவில், மின்சாரம், இடம், விற்பனை வரிகள்,லாப வரிகள் போன்றவற்றில் சலுகைகளை இலவசமாக வாரி வழங்கக் கூடாது.(ஆனால் மண்ணு மோகனம் நிச்சயம் இவற்றை வாரி வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம் !)

- இந்த நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கப் படப் போகும் பணியாளர்கள் 90 சதம் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

-தொழிலாளர்களுக்கான உள்ளூர் சட்டங்கள், இந்த நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கப் படப் போகும் பணியாளர்களுக்கும் பொருந்த வேண்டும்.

-இவை அமைப்பதற்கான இடம் கையகப் படுத்தலில் அரசோ,அரசு அமைப்புகளோ தலையிடக் கூடாது.
(டாடா நானோ)

-உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களை இவை வாங்குவதற்குத் தடை செய்ய வேண்டும்
(ஃபெப்சியால் காணாமல் போன பவண்டோ, காளிமுத்து கலர் நிறுவனங்கள்!)

-வெளிநாட்டுத் தயாரிப்புகளின் மீது குற்றச்சாட்டு எழும்போது பாரபட்சமின்றி சோதித்து, அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பது.(கோக கோலாவின் இந்தியத் தயாரிப்பில் எழுந்த குற்றச்சாட்டு போன இடம் தெரியவில்லை! இது போன்ற குற்றச் சாட்டு எழுந்த போது ,சீனா சிறிதும் தயங்காமல் கோக்கோலாவை சுளுக்கெடுத்தது !)

இது ஒரு எடுத்துக் காட்டு மட்டுமே. நன்றாகச் செயல்படும் ஒரு அரசு இது போன்ற பல நேரடி, மறைமுக குறுக்கீடு|உதவி விதிகளின் மூலம் (செக் அன்ட் பாலன்சஸ்) உள்நாட்டுத் தயாரிப்புகளை மேன்மைப் படுத்தலாம். அது அனைவருக்குமான வெற்றியைத் தரும்.

இதனால் உள்நாட்டுத் தயாரிப்புகளும் மேன்மைப்படும் நிலை வரும் போது, தானாகவே வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியைறத் தொடங்கி விடும்.( சிங்கப்பூரில் இருந்து கார்ஃபோர் டிசம்பர் 2012'ல் வெளியேறுகிறது. சீனாவில் கார்ஃபோரின் கடைகளில் ஆறுக்கும் மேற்பட்டவை உள்ளூர் நிறுவனங்களால் வாங்கப்படப் போகின்றன. கோக் சீனாவின் புகழ் பெற்ற இயற்கைப் பான நிறுனவத்தை வாங்க 2008'ல் முயற்சி செய்த போது சீன அரசு தலையிட்டு கோக் நிறுவத்திற்கு தடை போட்டது!)

இவையே உண்மையான செக்ஸ் அன்ட் பாலன்சஸ் விதிகள் எப்படிச் செயல் பட வேண்டும் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் பிரதமரே ஒரு உயர்ந்த வெளிநாட்டு அடிமையாகக் காட்சி தரும் சூழலில் மேற்கண்ட ஆசைகள் எந்த அளவில் நிறைவேறும் என்பது கேள்விக் குறி மட்டுமே !


()


இந்த ஃபோட்டூனைப் பார்த்து வேகப்பட்டதில்தான் Reform Friday பிறந்ததாக ஒரு வதந்தீ உலவுகிறது என்று நான் சொல்லவில்லை !!

:))
முகநூலில் இருந்து....
-அனைத்து படங்களும் முகநூலில் இருந்து...

16 comments:

  1. சிந்திக்கவைக்கும் கட்டுரை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் குட்டிப்பிசாசு..

      சிந்தித்து முடிவெடுக்க வேண்டியவர்கள் சடா புடா வென்று முடிவெடுக்கிறார்கள்.. :((

      Delete
  2. அறிவன்,

    நல்ல அலசல், எனக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டில் ஒரு மாற்றுப்பார்வையுண்டு. உற்பத்தியை விரயம் ஆக்காமல் மக்களுக்கு கொண்டு செல்லவும், விவசாயி, நுகர்வோருக்கு சாதகம் தர செய்யவும் முடியும், ஆனால் எல்லாம் அரசின் கொள்கை முடிவில் இருக்கு.

    மேலும் நாம் தான் கொள்கை முடிவுகளை வரையறுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக சுதந்திரம் கொடுக்க கூடாது எனவும் சொல்லியிருப்பேன். வால் மார்ட் பற்றியும் , மன்னு மோகனின் தவறான பொருளாதாரக்கொள்கைகள் பற்றியும் சில பதிவுகளின் சுட்டி ,பார்க்கவும்.

    #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!

    #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!

    #வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: INDIA INC.,

    ---------

    இந்திய பொருள்களை வாங்க வேண்டும் என நினைப்பவன்,ஆனால் பல இந்திய உற்பத்தியாளர்களின் தரம் மற்றும் விலைக்கொள்கை சரியாக இல்லை.

    பவன்டோ வாங்குகிறேன், 1.5 லிட்டர் 60 ரூ, ஆனால் கோக் 2 லிட்டர் 60 ரூ.இத்தனைக்கும் கோக் அளவுக்கு விளம்பர செலவு கூட இல்லை.

    இதே போல இந்திய உற்பத்தியாளர்கள் அவர்களே நுகர்வோரின் விருப்பத்திற்கு தீ வைத்து விடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வவ்வால்...

      || பவன்டோ வாங்குகிறேன், 1.5 லிட்டர் 60 ரூ, ஆனால் கோக் 2 லிட்டர் 60 ரூ.இத்தனைக்கும் கோக் அளவுக்கு விளம்பர செலவு கூட இல்லை.

      இதே போல இந்திய உற்பத்தியாளர்கள் அவர்களே நுகர்வோரின் விருப்பத்திற்கு தீ வைத்து விடுகிறார்கள்.||

      நீங்கள் சொல்வது சரிதான். உற்பத்தி, தர மேம்பாடு முன்னேற்றம் என்று இவற்றையே சொல்கிறேன்.
      மேலும் கோக் போன்ற நிறுவனங்களுக்கு, அட்வான்டேஜ் ஆஃப் மார்ஜினாலிடி இருக்கிறது.

      பத்து கோடி பாட்டில்கள் தயாரிக்கும் உற்பத்தி செலவுக்கும் பத்து லட்சம் பாட்டில்கள் தயாரிக்கும் உற்பத்தி செலவுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு; இந்த நிலையில் கோக் விலை குறைத்துக் கொடுப்பது ஒன்றும் வியப்பே அல்ல.

      ஆனாலும் அந்த வெள்ள உற்பத்திக்கிடையிலும் காளிமுத்து ப்ராண்ட் தாக்குப் பிடித்து நிற்பது அவர்கள் தரத்தினால்தான் என்பேன்.

      ஆனால் இதே தரம், யார்ட்லி சாண்டல் சோப்பை ஒப்பிடுகையில் மைசூர் சாண்டலுக்கு இருக்காது! அதைத்தான் சுட்டியிருக்கிறேன். :))

      Delete
    2. //நீங்கள் சொல்வது சரிதான். உற்பத்தி, தர மேம்பாடு முன்னேற்றம் என்று இவற்றையே சொல்கிறேன்.
      மேலும் கோக் போன்ற நிறுவனங்களுக்கு, அட்வான்டேஜ் ஆஃப் மார்ஜினாலிடி இருக்கிறது.

      பத்து கோடி பாட்டில்கள் தயாரிக்கும் உற்பத்தி செலவுக்கும் பத்து லட்சம் பாட்டில்கள் தயாரிக்கும் உற்பத்தி செலவுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு; இந்த நிலையில் கோக் விலை குறைத்துக் கொடுப்பது ஒன்றும் வியப்பே அல்ல.//

      அறிவன்,

      ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்நாட்டு பானங்கள் கோக், பெப்ஸியைவிட கிட்டதட்ட 50% மலிவாக இருக்கின்றன. ஆனால் அவை நாடு முழுக்க வினியோகிக்கப்படுகிறது. ஒருவேளை பொவண்டோ, காளிமார்க் போன்ற தமிழ்நாட்டு பானங்கள் வெளிமாநிலங்களில் சந்தை கிடைக்கும்போது விலை குறையலாம்.

      Delete
    3. குட்டிப்பிசாசு,
      || ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்நாட்டு பானங்கள் கோக், பெப்ஸியைவிட கிட்டதட்ட 50% மலிவாக இருக்கின்றன. ஆனால் அவை நாடு முழுக்க வினியோகிக்கப்படுகிறது. ஒருவேளை பொவண்டோ, காளிமார்க் போன்ற தமிழ்நாட்டு பானங்கள் வெளிமாநிலங்களில் சந்தை கிடைக்கும்போது விலை குறையலாம். ||

      நீங்கள் சொல்வது சரி.

      சிங்கை போன்ற நாடுகளிலும், சீனாவிலும் கூட பானங்கள் என்று வரும் போது கோக் விற்கும் அளவுக்கு சமமாகவே க்ரீன் டீ அல்லது சோயா பானங்கள் விற்கும் என்றுதான் தோன்றுகிறது. இவை அனைத்தும் உள்நாட்டு பானங்கள் என்பதோடு விலை மலிவானவையும் கூட.

      அவை கார்பனேட்டட் பானங்களாக இல்லாவிடினும், ஆரோக்ய நோக்கில் பெருமளவு விற்கின்றன.

      இவை போன்ற போட்டி அல்லது மாறுபட்ட பொருள்கள் அதே உபயோகிப்பிற்குத் தேவை;அவை உள்நாட்டுப் பொருளாக இருத்தல் இன்னும் நல்லது.Different product in same product line தேவை.

      தமிழகத்தில் இந்த வித ஒப்பீட்டில் பவண்டோ தவிர ஏதாவது தேறுகிறதா என்று பாருங்கள், ஏமாற்றமே மிஞ்சும்.

      முன்னால் பன்னீர் சோடா இருந்தது; ஆவினில் பல வகையான சுவை பால் வகைகள் இருந்தன.இப்போது காளிமுத்துவின் பன்னீர் சோடா தமிழகம் முழுவதும் சீராகக் கிடைப்பதில்லை; ஆவின் பொருள்களும் தமிழகம் முழுவதும் கிடைப்பதில்லை.

      ஆனால் கோக் பட்டிவீரன்பட்டி பெட்டிக் கடையிலும் வேண்டிய அளவு கிடைக்கிறது. இந்த முரண்கள் வால் மார்ட் போன்ற மெகா மால் கடைகள் வரும்போது இன்னும் விரிவடையும்.

      Delete
    4. வவ்ஸ்,
      இந்தியா INC அருமையான பதிவு..உங்கள் பதிவிலும் சுட்டியிருக்கிறேன்.நன்றி.

      Delete
  3. அறிவன்,

    நான் குளிர்ப்பானத்தினை சுட்டிக்காட்ட காரணமே அதன் உற்பத்தி செலவு தான் மிக குறைவு, ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க ஒரு ரூபாய் தான் ஆகும்னு நான் படிக்கும் காலத்திலேயே பொருளாதார ஆசிரியர் விளக்கம் சொன்னார், அதனால் தான் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து விற்கிறார்கள் எனவும் சொன்னார்.

    பவண்டோ கோக் விட குறைவான உற்பத்தி என்றாலும், அதே விலையில் விற்றாலும் நட்டம் வரப்போவதில்லை.

    மைசூர் சாண்டல் சோப் தயாரிக்க ஆகும் செலவை ஒப்பிட்டால் அதன் விலை நிர்ணயம் சரியானதாகவே படும்.அது விற்ப்னையில் போட்டி போட முடியாமல் இருக்க காரணம், கர்நாடக அரசு கூட்டுறவு தயாரிப்பு, எனவே வியாபாரிகளுக்கான மார்ஜின் அதிகமமாக கொடுப்பதில்லை.

    ஒரு பொருள் மாநில சூப்பர்ஸ்டாக்கிஸ்ட் எனப்படுவருக்கு என்ன மார்ஜினில் கிடைக்கிறது என்பதை பொறுத்தே கடைகளில் அதிகம் முன்னிலைப்படுத்தப்படும்.சப்ளை செயின் நீளமாக இருக்க இருக்க, அடிப்படை விலை குறைவாக இருக்கணும் ,மார்ஜின் கூட இருக்கணும். மாநில விநியோகம்-மாவட்டம்- நகரம்- கடைனு 4 கை மாற ஏற்றபடி விலை வைப்பாங்க.

    சூப்பர் மார்க்கெட் முறையில் அவர்களே மாநில விநியோகம்- கடைனு சிறிய சப்ளை செயினாக இருப்பதால் விலை குறைவாக விற்கவும் முடியும்.இது நுகர்வோருக்கு கிடைக்கும் பலன்.

    கொள்முதல் செய்கையில் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் வாங்க துவங்கினால் உற்பத்தியாளர்களுக்கும் பலன் கிடைக்கும்.

    அரிசியை எடுத்துக்கொண்டால் ..நெல்லாக வாங்கும் போதும் இடைத்தரகர்கள்,அரிசியாக விற்பனைக்கு வரும் போது இடைத்தரகர்கள் என தேவை இல்லாமல் விலை உயர்கிறது.

    இதில் அரசின் கண்காணிப்பும் இருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியினை எந்த அளவுக்கு கொள்முதல் செய்யவேண்டும் என அரசு விதி போட வேண்டும், இப்போது 30% என சொல்லியிருப்பதாக தகவல், 50% ஆவது உள்நாட்டு பொருளினை கொள்முதல் செய்ய வேண்டும் என மாற்ற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எப்ஃ டி ஐ'க்கு சில விதி விவரங்கள் டைம்ஸ் இதழில் பார்த்தேன்.. விதிகள் முழுக்க லிஸ்ட் செய்யப் படும் என்றே நினைக்கிறேன்.

      சிலர் இந்தியாவின் விதி விவரங்கள் சீனாவின் விதிகளை விடக் கடினமானவேயே என்றும் சீனாவில் தாக்குப்பிடிக்கும் அளவுக்குக் கூட இந்தியாவில் அன்னிய ரீடெய்ல் நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

      முழு விதி விவரங்கள் கிடைக்கும் போது மட்டுமே தெளிவு வரும்.

      Delete
  4. || நான் குளிர்ப்பானத்தினை சுட்டிக்காட்ட காரணமே அதன் உற்பத்தி செலவு தான் மிக குறைவு, ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க ஒரு ரூபாய் தான் ஆகும்னு நான் படிக்கும் காலத்திலேயே பொருளாதார ஆசிரியர் விளக்கம் சொன்னார், அதனால் தான் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து விற்கிறார்கள் எனவும் சொன்னார்.

    பவண்டோ கோக் விட குறைவான உற்பத்தி என்றாலும், அதே விலையில் விற்றாலும் நட்டம் வரப்போவதில்லை.||

    முதல் பாதி சரி..ஆனால் ஒரு ப்ராடக்டில் மார்ஜின் எப்படி வைக்கிறார்கள் என்பதிலும், அவர்களது லாபம் எந்த அளவுக்கு திரும்ப தயாரிப்பில் போடப்பட வேண்டிய நிலை இருக்கிறது என்பதும் முக்கியமான விதயங்கள்.

    காளிமுத்து சோடா கம்பெனியாக இருக்கையில் அந்த கம்பெனி சொந்தக்காரரைப் பார்த்திருக்கிறேன், எங்களுடைய சொந்த ஊர்ப் பக்கம்தான் அவர்.அவருடைய முதலீடு, அதற்கான கடன்,வட்டி, நிர்வாக செலவு போன்ற பல அம்சங்கள் இதில் இருக்கின்றன.

    ஆனால் கோக் போன்ற கம்பெனிகள் நுழையும் போதே அட்டகாச ஆரம்பத்துடன் நுழைகின்றன; டாக்ஸ் ஹாலிடே, தடையற்ற மின்சாரம், அரசின் ஆதரவு போன்ற பல அம்சங்கள் கோக போன்ற கம்பெனிகளுடன் நுழையும்.

    அவற்றோடு பவண்டோ ப்ராண்ட் காளிமுத்து கம்பெனி மோத வேண்டிய சூழல் கட்டாயமாக்கப்படும்போது, எளிய தீர்வாக, அவர்கள் கம்பெனியை விற்றுவிட்டு வெளியேறவதே நடக்கும்.

    அதுதான் மற்ற எல்லா தயாரிப்புகளுக்கும் நடந்தது(டொரினோ,தம்ஸ் அப்..போன்ற பல)

    காளிமுத்து'க் காரர் விற்க மறுத்து விட்டார்.
    அவர்கள் போன்றவர்கள் கோக்'குடன் மோதும் போது, பின்னணியில் அரசுடனும் மோதுகிறார்கள். :))

    தரம் நன்றாக இருக்கும் வரை அவர்களை ஆதரிப்பதில் தவறில்லை என்பதுதான் நான் சுட்ட விழைவது.

    சோப் விதயத்தை எடுத்துக் கொள்கையில் எம்ஆர்பி ஆக்ட்'க்குள் அது வந்தால், கமிஷன் கிடைப்பதைப் பொறுத்தும், பொருளின் தரத்தைப் பொறுத்தும்தான் அந்தப் பொருள் சந்தையில் நிற்கும்.மைசூர் சாண்டல் எம்ஆர்பி லிஸ்டட் பொருள்.

    யார்ட்லி நாளைக்கு வரும் போது அது நிச்சயம் எம்ஆர்பி லிஸ்டட் ஆக இருக்காது. தரத்தின் காராணமாக விற்பனை கூடும் போது,தனித் தனி விற்பனையாளர்களே விலையைக் கூட்டி விற்பதை யாரும் தடுக்க முடியாது.!

    ஆனால் மைசூர் சாண்டல் விலையைக் கூட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது;தர மேலாண்மைக்குத் தயாராவதிலும் சிக்கல் இருக்கிறது.!

    ReplyDelete
  5. செறிவான கருத்துக்களுடன் எழுதப்பட்டக் கட்டுரை.
    சில்லறை விற்பனை (retail?)யில் வெளிநாட்டு முதலீடு அனுமதிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். அதை எப்படிக் கட்டுக்கோப்பில் வைப்பது, உள்ளூருக்கு எப்படி ஆதாய பூர்வமாக்குவது என்பதில் கவனம் வைத்தால் இது பயனுள்ள அறிக்கையே.
    வாங்கவும், தவிர்க்கவும் பட்டியல் சுவாரசியம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அப்பாதுரை, கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
      || சில்லறை விற்பனை (retail?)யில் வெளிநாட்டு முதலீடு அனுமதிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். அதை எப்படிக் கட்டுக்கோப்பில் வைப்பது, உள்ளூருக்கு எப்படி ஆதாய பூர்வமாக்குவது என்பதில் கவனம் வைத்தால் இது பயனுள்ள அறிக்கையே. ||
      ஆம், சில்லரை விற்பனையில் பல குறியீட்டுப்(மல்டி பிராண்ட்) பொருட்களை அனுமதிப்பது ஒரு நிலையில் தவிர்க்க இயலாலதே. ஆனால் இதில் நாம் நுகர்வோராகவும் விற்பவர் பயனாளராகவும் இருக்கிறார். இது கவனமாகப் அணுக வேண்டிய விதயம் என்பதே நான் சுட்டுவது. அத்தகைய கவனம் இருக்கிறது என்பது நடைமுறையில் தெரியவில்லை.

      || வாங்கவும், தவிர்க்கவும் பட்டியல் சுவாரசியம்.||
      முகநூலில் இருந்து ! :))

      Delete
  6. தமிழில் கலைச்சொற்கள் நிறையக் கற்க முடிகிறது உங்கள் பதிவுகளைப் படித்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      தமிழிலக்கியப் பரிச்சயம் இருக்கும் எவரும் சிறிது சிந்தித்தால் நல்ல கலைச் சொற்களை உருவாக்க | பயன்படுத்த முடியும் என்றே நான் நினைக்கிறேன்,நம்புகிறேன்.

      Delete
  7. சிந்திக்க வைத்த கட்டுரை.

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு தன்னிஷ்டத்துக்கு ஆட்டம்போடுவதே கொடுமை:(

    'வாங்க, தவிர்க்க' லிஸ்ட் நல்லா இருக்கு!

    அந்த வாங்க லிஸ்ட்டைத்தான் பெரும்பாலும் இங்கே வாங்கிக்கிட்டு இருக்கேன். எனக்கு ஃபாரீன் பொருட்கள் பிடிக்கும்:-)

    ReplyDelete
    Replies
    1. || அந்த வாங்க லிஸ்ட்டைத்தான் பெரும்பாலும் இங்கே வாங்கிக்கிட்டு இருக்கேன்.||

      நியூசியில் இருந்து கொண்டு நீங்கள் இதை முயற்சிக்கிறீர்கள் என்றால் உண்மையில் பாராட்டுக்குரியர் நீங்கள் !

      || எனக்கு ஃபாரீன் பொருட்கள் பிடிக்கும்:-) ||

      இது துளசி மேடம் பஞ்ச்!!!

      நன்னி டீச்சர்.

      Delete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...