உலகின் முதல் இசைக் கருவிகளில் ஒன்றாக முடியும் என்று எளிதாக வரலாற்றுச் சான்றுகளின் மூலம் நிலைநிறுத்தக் கூடிய சில இசைக் கருவிகள் தமிழ் நாட்டில் தமிழ் மொழியாளர்களால் உருவாக்கப்பட்டவை.(குழல்,யாழ்..)அது மட்டுமல்ல அவை தமிழுக்கே உரிய சிறப்பான இசைக்கருவிகள் என்று எத்தலைமுறைக்கும் புரியும் வண்ணம் அக்கருவிகளுக்கு மொழிக்கேயுரிய சிறப்பான ஓசையை நினைவுறுத்தும் பெயரை விளித்து மகிழ்ந்தவர்கள் தமிழின் இசை வாணர்கள்.
தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு என்ன என்பதறியாமலோ அல்லது இன்று கர்நாடக இசை என்ற என்ற பெயரில் வழக்கப்படும் இசைக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்ற கருத்தாக்கதினாலோ பல இளைய தலைமுறையினர் இன்றைய சாஸ்திரீய சங்கீதமான 'கர்நாடக' சங்கீதம் தமிழர்களுக்குத் தொடர்பற்றது என்றும்,இன்று பெருமளவு அதைப் பாடுபவர்களின் மேலுள்ள வெறுப்பைக் காண்பிக்க இசையே எள்ளுவதுமாக தமிழகத்தின் கடந்த 50 ஆண்டுகள் வியர்த்தமாகிப் போயின;இன்றைய இளைய தலைமுறையிலும் பண்பட்ட இசையை வளர்ப்பவர்கள் அல்லது அதைக் கற்றுத் தெளிந்து பாவனையில் வைத்திருப்பவர்கள் எப்போதும் அதைப் பாடிக்கொண்டு வந்திருப்பவர்களே!
தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு பற்றிய இரண்டு பத்திகளை முன்னரே நான் எழுதியிருக்கிறேன்;அதன் பின்னூட்டங்களில் கூட என் நண்பர்கள் நான் துவேஷம் கொண்டு சில கருத்துகளை எழுதி இருப்பதாக கருத்து அறிவித்தார்கள்.அது அப்படி அல்ல என்று நான் விளக்கம் அளித்தேன்;நான் ஏன் அவ்வாறு எழுதினேன் என்றும் விளக்கினேன்.அவற்றிற்கான காரணங்கள் இன்றும் இப்போதும் இருக்கின்றன என்பதை நிறுவுகிறது தினமணியின் தலையங்கம் ஒன்று.
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் சென்னை இசை விழா முடிவடையும் நிலையை எட்டிவிட்டது. முக்கியமான பழம்பெரும் சபாக்களின் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. சென்னை சங்கமத்துடன் இந்த ஆண்டுக்கான இசைவிழா நிறைவுபெறும்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசை, நாட்டிய விழாவில் பங்குபெறவும், கலந்துகொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறே ஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, ஐரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்திக் குளிர்காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆ னால் நமது சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைவிழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்காகக் கலாரசிகர்களால் நடத்தப்படும் நமது சென்னை இசை விழாவின் பிரமாண்டம் உலகில் வேறு எந்தப் பகுதியில் நடைபெறும் விழாக்களுக்கும் இல்லை என்பதால்தான், சென்னை மாநகரம் இந்தியாவின் கலாசார தலைநகரம் என்று போற்றப்படுகிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திறமையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வடநாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சில நூறு புதிய இளைய தலைமுறைக் கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்களில் பலர் பணத்துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்காக நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்வதுதான் சரி. எப்படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனைவரையும் வடவர்கள் "மதராசிகள்' என்று குறிப்பிடுகிறார்களோ அதைப்போல, நமது தஞ்சைத் தரணியில் தோன்றி தென்னகமெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகிறார்கள், ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்பட உள்ள பகுதியை ஆண்ட கர்நாடிக் நவாபுகளின் நாட்டு இசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்டனர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படையில் அமைந்த இசை எப்படித் தமிழிசையாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வரங்கள் நமது பண்களின் பரிணாமம்தான் என்பதை. இசையும், முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆய இவை ஐந்தும் பஞ்ச மரபு என்பார்கள். "பஞ்ச மரபு' என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் சுத்த எழுத்தால், ""வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை'' என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
ந மக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் அந்த இசை பாமரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்பட வேண்டும். பெயருக்குத் துக்கடாவாக ஒரு திருப்புகழோ, திருப்பாவையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடும் அவலநிலை ஏற்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பி இருக்கிறது "விடுதலை' நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.இசை பாமரர்களைப் போய்ச் சேர வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும்.
பூங்காக்களில் பாடும் பல கலைஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவதில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை அவர்கள்,வெளிநாட்டவர்களும் வெளிமாநிலத்தாருமா, தமிழர்கள்தானே?பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொதுவாகி இருக்கிறது. இனி அதைப் பாமரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்களும் தமிழிசைக்கு முன்னுரிமை தரவேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!
-தினமணிக்கு நன்றியுடன்-
பொதுவான மக்கள் இன்னும் விழிப்படையவில்லை;சமூகத் துவேஷத்தை ஊக்குவிக்கும் அரசியலாளர்களோ இன்றும் வேறு ஏதும் காரணிகள் இல்லாத நேரத்தல் 'அரசியில் பிழைக்க' கையில் எடுக்கும் ஆயுதம் பழம் பஞ்சாங்கம்தான்!ஆனால் அவர்களின் குழந்தைகள் மணம் புரிவது அவர்கள் காலமுழுதும் நிந்திக்கும் வகுப்பினரையே என்பது சாதாரண மக்களுக்கு நினைவில் இருக்காது எனபதுதான் ஒரு முரண்.
இத்தகைய சூழலில் மேற்கண்ட தலையங்கத்தில் குறிக்கப்பட்ட தீர்வையே நான் என் முந்தைய பதிவுகளிலும் முன்வைத்தேன்;அதாவது பொது அரங்கங்களில் பாடும்போது தமிழிழ்தான் பாட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளில் எந்தமொழிக் கீர்த்தனைகளை வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை வந்தாலொழிய பாடகர்களின் மனோபாவம் மாறுவது கடினம்.
இதற்கு நண்பர்கள் லக்ஷமி நரசிம்மன், கமகம் லலிதா ராம் ஆகியோர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
அறிவன்,
ReplyDeleteபத்திரிக்கைகளுக்கு தமிழ் இசை பற்றி தலையங்கம் எழுதுவது ஒரு வருடாந்திர சடங்காகிவிட்டது. (திவசம் போல).
இவ்வளவு நீட்டி முழக்கும் தினமணி, ஏன் ஒரு தமிழிசைச் சங்க கச்சேரியைப் பற்றி கூட விமர்சனம் செய்யவில்லை?
தெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்று ஆசிரியர் எண்ணுகிறாரா?
இந்த டிசம்பரில், அநேக இடங்களில் நிறைய தமிழ்ப் பாடல்களும் ஒலித்தன.
தமிழில் பாட வேண்டுகோள் வேண்டாம். தமிழில் பாடினால் ஒரு குறைந்த பட்ச புன்னகையாவது பூக்கலாமல்லவா?
நான் செல்லும் கச்சேரிகளில் தமிழ்ல் பாடப்படும் பாடல்களைப் பாடியதற்காக பிரத்யேகமாக ஒரு வரி நிச்சயம் எழுதுவேன். இது ஒரு தமிழ் விமர்சகனின் கடைமை என்றே நான் நினைக்கிறேன்.
பாடகர்களைக் குற்றம் சொல்ல எந்தத் தகுதியும் பத்திரிக்கைகளுக்கு இல்லை என்பதே என் எண்ணம்.
இதைப் பற்றி விரிவாக முன்னமே இங்கு எழுதி இருக்கிறேன்: http://carnaticmusicreview.wordpress.com/2009/11/30/december-music-festival-a-curtain-raiser/
{இவ்வளவு நீட்டி முழக்கும் தினமணி, ஏன் ஒரு தமிழிசைச் சங்க கச்சேரியைப் பற்றி கூட விமர்சனம் செய்யவில்லை?
ReplyDeleteதெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்று ஆசிரியர் எண்ணுகிறாரா?
இந்த டிசம்பரில், அநேக இடங்களில் நிறைய தமிழ்ப் பாடல்களும் ஒலித்தன.
}
தினமணியைப் பெரும்பாலும் வாசிக்கும் ஒருவனாகச் சொல்கிறேன்,ஞாயிறு மலர்,கலைச் சோலை,கதிர் போன்ற பல தினமணி வெளியீடுகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்பட்டால் அதை சுட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்,நான் படித்த வரை.
தெலுங்கு கிருதிகள் ஒலிக்கும் சபைகளில் மட்டும்தான் நல்ல இசை ஒலிக்கிறது என்பது தினமணி ஆசிரியரின் எண்ணம் இல்லை;ஆனால் சொல்லப்போனால் பாடகர்களின் எண்ணமாக இருக்கிறது.
தினமணி ஆசிரியர் சுட்டுவது வைசி வெர்சா..தமிழ்ப்பாடல்களைப் பாடுவதன் மூலம் நல்ல சங்கீத்ததை தமிழர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்கிறார் ! என் கருத்தும் அதுவே !
இன்னொரு விதயமும் சுட்ட விரும்புகிறேன்,சிங்கையில் அருணா சாயிராம் கச்சேரி நடைபெற்றது.30 டாலர் கட்டணத்தில் போய் அமர்ந்தால்,இரண்டரை மணி நேரக் கச்சேரியில் மொத்தம் பாடிய 16 பாடல்களில் 2 பாடல்கள் தமிழில் பாடினார் ! நியாயமாக இந்த விகிதம் தலைகீழாக இருக்க வேண்டும் !(14 தமிழ்,2 தெலுங்கு)
தமிழகத்தில் நடக்கும் கச்சேரிகளில்,சபாக்கள் தமிழில்தான் பெரும்பான்மையான பாடல்கள் பாட வேண்டும் என்ற கட்டாயம் விதிப்பதில் என்ன தவறு?
நாதசுவர சக்ரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஒரு சமயம் ஒரு தமிழ்ப்பாடலை வாசித்து,வீதியில் ஒரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் ஆஹாகாரத்துக்கு பெரிதும் மகிழ்ந்து தன் அவரைப் பெரிதும் சிலாகித்துப் பாராட்டிய நிகழ்ச்சியை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
நல்ல தமிழில் அமர்ந்த பாடல்களைப் பாடும் போது உயர்ந்த ரசனைகள் சாதாரண மக்களுக்கும் எளிதில் கடத்தப்படும் அல்லவா? அதைப் பாடகர்கள் செய்வதை எது அல்லது யார் தடுக்கிறார்கள்??????
மற்றபடி படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி..எனது பக்கத்திற்கும் நல்வரவு..
ReplyDeleteராம்,உங்கள் கருத்தை தினமணி திரு.வைத்தியநாதனுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறேன்...அவரது கருத்தை வேண்டியிருக்கிறேன்.
ReplyDeleteபதில் வருகிறதா என்று பார்க்கலாம்.
Thanks for sharing. 2 days back Dinamani has written an article about Tevaaram, Tiruvaasagam to, and the need to support & encourage ODHUVAAR MOORTHIKAL.
ReplyDeleteMakkal TV only telecasts few programmes about tamil music but we do not have time to watc because we are busy with Maan aada mayil aada, anu alavu bayam illai neelimaa raani.
But one way we should salute to Dinamani, because Dinamani is the only tamil newspaper which devoted every day 1 page for chennai book exhibition.
நன்றி திரு குப்பன்.
ReplyDeleteராம்'க்கும் அதைத்தான் தெரிவித்திருந்தேன்;இயன்ற அளவு தமிழ் நிகழ்வுகளில் தினமணி கருத்து செலுத்துவதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.
அறிவன்,
ReplyDeleteமார்கழி இசை விழாவில், தமிழ் இசைக் கச்சேரிக்கு ஏண் தினமணி முக்கியம் தரவில்லை என்பதுதான் என் கேள்வி.
நீங்கள் எழுப்பியிருக்கும் விஷயம் அரதப் பழவு. பல முறை பேசியாகிவிட்டது. மீண்டும் எழுத அலுப்பாக இருக்கிறது.
>>>>>நாதசுவர சக்ரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை <<<<
இப்படி இருத்தர் இருக்காறா?
எனக்குத் தெரிந்த மட்டில் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின் வாசிப்பார். ராஜரத்தினம் பிள்ளைதான் நாதஸ்வர சக்ரவர்த்தி.
>>>>>>ஒரு சமயம் ஒரு தமிழ்ப்பாடலை வாசித்து,வீதியில் ஒரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் ஆஹாகாரத்துக்கு பெரிதும் மகிழ்ந்து தன் அவரைப் பெரிதும் சிலாகித்துப் பாராட்டிய நிகழ்ச்சியை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
<<<<<
இந்தச் செய்தியை எங்கு படித்தீர்கள்? எனக்குத் தெரிந்த வரை, ஒரு அரிய பிரயோகத்தை வாசித்தவுடன், விளக்கு சுமந்து வந்த தொழிலாளி ஆஹா என்றாராம். அதைத்தான் ராஜரத்தினம் பிள்ளை சிலாகித்து உள்ளார்.
அறிவன், தமிழ்ல்தான் பாட வேண்டும் என்று கட்டாயமாக ரூல் போட்டால் தமிழிசை வளராது.
தமிழிசைக்காக மட்டும் நடக்கும் கச்சேரிகளில் அரங்கு நிரம்பி வழிய வேண்டும். வருடா வருடம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடக்கும் தமிழிசை விழாவில் சொர்ப்பமானவர்களே கேட்க வருகிறார்கள். இந்த வருடம் கலாரஸனா தமிழ் இசை கச்சேரிகள் நடத்தியது. எதை வேண்டுமானாலும் பாடலாம் என்ற கச்சேரிகளும் அதே அரங்கில் நடைபெற்ரன.
இரண்டாவதாக சொன்ன கச்சேரிகளுக்கு ஏகக் கூட்டம். தமிழிசை கச்சேரிகளுக்கு பாடகரின் குடும்பத்தாரைத் தவிர ஆளேயில்லை. நான் அம்ருதா வெங்கடேஷ் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். மொத்தம் பத்து பேர் இருந்தால் அதிகம் என்ற நிலை.
குற்றம் பாடகரிடமா? அவர் தம்ழில் பாடியது தவறா?
இந்தத் தமிழ் இசை விழா பற்றி, ஒரு கட்டுரையையாவது எந்தப் பத்திரிக்கையாவது எழுதியதா?
நிறைய எழுதலாம். எழுதி என்ன ஆகப் போகிறது?
{குற்றம் பாடகரிடமா? அவர் தம்ழில் பாடியது தவறா?}
ReplyDeleteசரியான நிலவரம் ஒரு கச்சேரிக்கானதா அல்லது எல்லா தமிழிசை விழாக்களுக்கும் இதுதான் நிலவரமா என்பது தெரியவில்லை.
ஆனால் இதுதான் உண்மையான நிலவரம் என்றால் சுமார்40 ஆண்டுகளாக தமிழிசை வளர வேண்டும் என்று கல்கி முதல் ராஜாசர் வரை இவ்வளவு முயற்சி ஏன் எடுக்க வேண்டும் என்பதற்குப் பதில் என்ன?
தினமணியின் சார்பில் ஏதாவது சொல்கிறார்களா பார்ப்போம்.