குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, March 1, 2008

44.அமரர் சுஜாதா !!!!!

அமரர் சுஜாதா!

எனக்கு(மட்டுமல்ல,இன்றைய தமிழர்களில் சுமார் 16-17 வயதிலிருந்து 70 வயது வரைக்குமான தமிழர்களில் பெரும்பான்மையோருக்கு) மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் !

அமரர் என்ற அடைமொழி கல்கிக்குப் பிறகு வேறு யாருக்காணும் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டுமென்றால் அது சுஜாதாவுக்கு மட்டும்தான் பொருந்துமென நினைக்கிறேன்.
சிறிது யோசித்துப் பாருங்கள்,ஏன் அமரர் கல்கி என்றே கல்கி அறியப்படுகிறார்?அவரது எழுத்துக்களைப் படிக்கும் எவருக்கும்,அந்த எழுத்துப் படிமம் இதோ இரண்டு நாளைக்கு முன்னால்தான் எழுதப் பட்டு,நேற்று அச்சுக்குப் போய் இன்று நம் கைகளில் படிக்கத் தவழ்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை;இல்லை,இவை உண்மையில் ஜீவிதம் முடிந்து போன ஒரு எழுத்தாளனின்-எப்போதும் வசீகரிக்கும் -எழுத்துக்கள் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்லவே
கல்கி,பெரும்பாலும் ‘அமரர்’ கல்கி’யாக விளிக்கப் படுகிறார்.

இது சுஜாதாவுக்கும் முழுதும் பொருந்தும்.

இரண்டு எழுத்தாளர்களுமே அவர்களின் பங்களிப்பு இருப்பதால் மட்டுமே பத்திரிகைகளின் விற்பனையை எகிற வைத்தவர்கள்/வைப்பவர்கள்.(கல்கி பொன்னியின் செல்வன் ஆரம்பித்தவுடன்,வார அச்சுக்காப்பிகள் 35000 லிருந்து 72000 க்கு எகிறியதும்;சுஜாதா பிரிவோம் சந்திப்போம் எழுத ஆரம்பித்தபோது விகடன் அவருக்கு சினிமாவுக்குப் போல அண்ணாசாலையில் கட் அவுட் வைத்ததும்,சுஜாதாவின் ஆசிரியக் காலத்தில் குமுதம் சுமார் 800000 பிரதிகளை எட்டியதும்,அவர்களின் வியாபார வீச்சுக்கும்,ரசனைத் தாக்கத்துக்கும் சான்று)

எழுத்தின் சகல பரிமாணங்களிலும் சுஜாதாவுக்கிருந்த காதலும்,தேர்ச்சியும் வியப்பூட்டுவன.லாசரா,தி.ஜா,ஜெ.கா,போன்றோர்கள் உணர்வில் கொண்டு வந்த தாக்கத்தை தனது மொழிநடையின் மூலமே வாசகனுக்குக் கொண்டு வந்த அற்புத,கத்தி வீச்சுப் போன்ற கூர்மையான வசீகரிக்கும் மொழிநடை அவருடையது.ஜெயமோகன் சொல்கையில்
சுஜாதாவைப்பற்றிய இலக்கிய உரையாடல் அவரது நடையில் இருந்து தொடங்கபப்ட்டு நடையிலேயே முடித்துக்கொள்ளப்பட்டலாம். அதைப்பற்றி விரிவாகவே ஆராய வேண்டும்.அவரது சமகால படைப்பாளிகள் மட்டுமல்ல அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் கூட பழமை கொண்டபோதும் சுஜாதா புதியவராகவே இருந்தார். சுஜாதாவின் மூன்று அடிப்படை இயல்புகளே அதற்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். ஒன்று, புறவாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை அவரது புனைவுலகில் காண்பதுபோல தமிழில் அதிகம்பேரின் ஆக்கங்களில் காண முடியாது. உதாரணமாக ஒரு தொலைதூரப்பேருந்தில் லுங்கிகட்டிய ஓட்டுநர் அந்த சுதந்திரத்தால் கால்களை நன்றாக அகற்றிவைத்திருக்கிற காட்சி ஒரேவரியில் கடந்துசெல்கிறது ஒரு கதையில்.

இரண்டு, மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது. மொழிமீது அவருக்கு இருந்த மோகமே அவரது பெரும் வலிமை. கடைசிக்காலக் கதைகளில் ஒன்றில் இன்றைய இளைஞர்களின் எஸ்.எம்.எஸ் மொழியை அப்படியே எழுதியிருந்தார். முழுக்கமுழுக்க விளம்பர தேய்வழக்குகளினாலான ஒரு கட்டுரையை ஒருமுறை எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக அவரது கூரிய மூளைத்திறன். எழுதும் ஒவ்வொரு வரியிலும் அவரது ‘சவரநுனி’க் கூர்மை கொண்ட மூளையின் பங்களிப்பு இருக்கும்.


என்கிறார்.
அதற்கு மின்னல் நடைக்கு வலுவூட்டிய அவரின் பரந்த வாசிப்பனுவமும்,

ஒவ்வொரு முறை சுஜாதாவைச் சந்திக்கும் போது ஏதாவது ஒரு புதிய துறை சார்ந்து அவர் தனது பார்வைகளைப் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். எப்படி இந்த மனிதன் இவ்வளவும் படிக்கிறார்-எஸ்.ராமகிருஷ்ணன்
,

அபார புத்திக் கூர்மையும்,விதய ஞானமும்,நிறைந்த நகைச்சுவை, வாசகனின் தோள் மீது கைபோட்டு அவனை எழுத்துக்குள் இழுக்கும் லாவகமும்,
கணிதமேதை ராமானுஜனையும்,ஐஸ்வர்யா ராயை(பச்சனை)யும் ஒரேகட்டுரையில் எழுதும் விஷயக் கோர்ப்பும் இருந்தன.

பாலகுமாரனுக்கு(ம்,சுப்ரமணிய ராஜூவுக்கும்) எப்படி எழுதவேண்டும் என விவரித்த ஒரு அரைமணி நேரப் பேச்சின் போது-இரண்டாவது வரியில் வாசகன் கதையில் முழுமையாக நுழைந்திருக்க வேண்டும் என்பதை அவர் மிகவும் வலியுறுத்தினார் என்று பா.கு. சொல்வார்-அதை தனது அத்தனை படைப்புகளிலும் செயல்படுத்திக் காண்பித்தவர்.

கணினி,அறிவியல் சார்ந்த தமிழ் எழுத்துகளின் ஆக்கத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு பெரியது,ராஜீவ்காந்திக்கு இந்திய தகவல் தொழில் நுட்பாளர்கள் எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டியவர்களோ,அவ்வளவு நன்றியுடன் இன்றைய த.தொ.நுட்ப தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர் அவர்.70’களின் இறுதியிலும்,80’களின் ஆரம்பங்களிலும் கணினி பற்றிய அவரின் எழுத்துக்கள் சிறுவனாக முதன்முதலில் அவரின் எழுத்துக்களுக்குப் பரிச்சயமான பலருக்கு உத்வேகம் தந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.
s.ராமகிருஷ்ணன் எழுதிய அவருக்கான அஞ்சலியின் இப்பகுதி இதற்கான ஒரு உரைகல் !
எண்பதுகளின் துவக்கத்தில் சுஜாதாவைப் படிக்கத் துவங்கிய நாட்களில் அவர் தான் நண்பர்களுக்கு வாத்தியார். எது தொடர்பான சந்தேகம் உண்டானாலும் வாத்தியார் ஏதாவது எழுதியிருப்பார் பாரேன் என்று உடனே சுஜாதாவின் புத்தகத்தைத் தேடி ஒடுவார்கள். அநேகமாக எழுதியிருப்பார். அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.

படிப்பது, ஊர்சுற்றுவது, பெண்கள் பற்றிய உரையாடல்கள் என்று நீண்ட கல்லூரிவயதின் பிரிக்க முடியாத நண்பனைப் போலிருந்தார் சுஜாதா. புதுமைபித்தன், தி.ஜானகிராமன் போன்றவர்கள் மீது மரியாதையும் வியப்புமே மேலோங்கியிருந்தது. ஆனால் சுஜாதாவிடம் மட்டுமே இணக்கமான நட்பும் ஒருமையில் அழைக்கும் உரிமையும் ஏற்பட்டிருந்தது. அநேகமாக தினமும் சுஜாதாவைப் பற்றி பேச்சு கட்டாயம் வந்துவிடும். அவருக்காக மட்டுமே புத்தகம் படித்தார்கள் நண்பர்கள்.

இன்று கம்ப்யூட்டர் பற்றி எல்கேஜி குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்களில் கம்ப்யூட்டர் என்பது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி. அதைப்பற்றி விருதுநகர் போன்ற சிறுநகரங்களில் இருந்த எங்களுக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது.

ஆனால் விஞ்ஞானத்தில் ஈடுபாடு உள்ள நண்பர்களுக்கு ஒரே துணையாக இருந்தது சுஜாதாவின் அறிவியல்கட்டுரைகள். குறிப்பாக கணிப்பொறி பற்றி அவர் எழுதிய அறிமுகங்கள் மற்றும் விரிவான அலசல்கள். என்னோடு படித்தவனை இன்று அமெரிக்காவின் மென்பொருள் விற்பன்னராக மாற்றியிருக்கிறது.


சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகின் அசைக்க முடியாத ஒரு சாதனையாளர் ;சிறுகதை(பார்வை,எல்டரோடா போன்றவை இன்றும் சிலாகிக்கப்படுபவைகளில் சில),நாவல்,கட்டுரைகள்,கவிதை,நாடகம்,வலை ஊடகம்,சினிமா என்று எழுத்தின் அனைத்துத் துறைகளிலும் தன் அழுத்த முத்திரையைப் பதித்தவர்;அவர் எழுதிய வீட்டின் துணி சலவைக் கணக்குக் கூட பிரசுரமானது ஒருமுறை!

அவரின் எழுத்தின் ஆளுமை பற்றிச் சொல்ல வரும் s.ராமகிருஷ்ணன் சொல்லும் போது

எப்படியாவது சுஜாதா மாதிரி கம்ப்யூட்டர்ல வந்துறணும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். அது இன்று நிஜமாகவும் ஆக்கியிருக்கிறது. பின்னாளில் ஒரு முறை அவன் சுஜாதாவைப் பார்க்க விரும்பி நான் நேரில் அழைத்துக் கொண்டு போனபோது சட்டென அவர் காலில் விழுந்ததோடு அழுதும் விட்டான். அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். அவனது கைகளைப் பற்றிக் கொண்டு எனக்கு தெரிஞ்சதை ஏதோ எழுதினேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

அவன் சுஜாதாவிடம் அதிகம் பேசவில்லை. அவரை பார்த்துக் கொண்டேயிருந்தான். சொற்களற்ற நிர்கதியை அவன் அடைந்திருந்தான். பிறகு என்னிடம் போய்விடலாம் என்னமோ போலிருக்கு என்று சொன்னான். அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே வாத்தியார் ரொம்ப பெரிய ஆளுடா என்றபடியே அவன் அறியாமல் கண்ணீர் பெருகியது. அதை அவன் துடைத்துக் கொள்ளவேயில்லை. அது தான் சுஜாதாவின் ஆளுமை.


என்கிறார்.அதுதான் அவரின் வெற்றி !!!

திரைத்துறையின் அவரிடமிருந்து வந்திருக்கக் கூடாத சில பங்களிப்புகளுக்கான காரணங்களை நடிகர் கமலஹாசன் அழகாகச் சொல்லிவிட்டார்.

பெருமளவு புனைவுலகத்திலேயே அவரது ஆக்கங்கள் அமைந்தன,அதனால் அவர் அவ்வளவு சிறந்தவரல்லர் என்பது,கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் தவிர வெறும் திரைப்பாடல்கள் மட்டும்தான் எழுதினார்,அதனால் புறக்கணிக்கப் பட வேண்டியவர் என்பது போன்ற முரண் வாதத்தைச் சேர்ந்தது.

இலக்கியம் படைக்கிறேன் என்ற கூரைக் கூவலுடன் அவர் எழுதவில்லை என்பது ஒத்துக் கொள்ளவேண்டிய ஒன்றே;ஆயினும் அவரது கட்டுரை ஆக்கங்கள் நல்ல வாசிப்பனுபவத்துக்கு உத்தரவாதமளிப்பவை;ஆழ்வார்கள்-ஒரு எளிய அறிமுகம்,குறளுக்கான எளிய உரை-குறிப்பாக அதற்கான முன்னுரை, பிரம்மசூத்திரத்திற்கான எளிய உரை போன்றவை முக்கிய ஆக்கங்களில் சில;ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்,கடவுள்களின் பள்ளத்தாக்கு,கனையாழியின் கடைசிப்பக்கம்,ஏன் – எதற்கு – எப்படி , தலைமைச் செயலகம் போன்றவை மறக்கவியலாதவை !

தமிழிலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்த அவர் அகம்,புறம்,தொல்காப்பியம் போன்றவற்றை எளிமையான,அவருக்கேயுரித்தான வசீகர நடையில், பணி ஓய்வுக்குப் பின்னர்,எழுதக் கொண்டிருந்த ஆர்வத்தை தமிழின் வணிக சினிமா முழுதுமாக விழுங்கியது,ஒருவகையில் நமது துரதிருஷ்டமே.கற்றதும் பெற்றதும்’ன் அவ்வப்போதைய பின்வருவன போன்ற

அம்பலத்தில் குறுந்தொகையின் எளிய அறிமுகம் எழுதிவருகிறேன்.சில பாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.உதாரணம் 130ம் பாடலின் எளிய வடிவம் இது.
நிலம் தோண்டிப் புகுந்து கொள்ளவில்லை
வானில் ஏற்ச் செல்லவில்லை
கடல்மேல் நடந்து செல்லவில்லை
நாடு,நாடாக,ஊர் ஊராக
வீடு வீடாகத்
தேடினால் கிடைக்காமலா போவார் காதலர் ?
வெள்ளிவீதியாரின் இப்பாடல் இரண்டாம் நூற்றாண்டில் இல்லாமல் நேற்று எழுதப்பட்டது என்று சொன்னாலும் நம்பலாம்


சுஜாதாவின் இலக்கியப் பூக்கள்,அவர் இன்னும் சிறிது காலம் இருந்திருக்கலாமே என்ற ஆயாச ஆதங்கத்தை அளிப்பது நிஜம்.

ஒரு தனிமனிதராக, நேர்படப் பேசுதல்,இனியகுணம்,எவரையும் வெறுக்காதிருத்தல், (பா.கு.க்கு எழுத பெரும் ஊன்றுகோலாகவும்,அறிவுரைகள் கொடுத்த அவரையே,சாவி அளித்த ஒரு விருந்தின் போது போதையின் தாக்கத்தில் உன்னை விட நான் சாதிக்கிறேன் பார்க்கிறாயா? என்று சவால் விட்ட பா.கு.னை பற்றிச் சாவியிடம்,பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொன்ன பண்பை பா.குமாரனே எழுதி இருக்கிறார் !) பணத்தை விட நட்பையும் மனிதர்களையும் மதிக்கும் பாங்கு போன்ற அவரின் பண்புகளை
அவருடன் பழகிய அனுபவம் பெற்றவர்கள் சிலாகிக்கிறார்கள்;இவற்றை நம் நண்பர்கள் சிலரிடம் நாமே பார்க்க முடியும்.அவர்கள் மேன்மக்களானவர்களின் குணாதிசயங்களை தேடி அடைபவர்கள். ராமகிருஷ்ணன்,சுஜாதாவை நினைவு கூர்ந்து,

நாலைந்து முறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். அவரது தனித்துவம் அவரிடமிருந்த இயல்பான நகைச்சுவை. எதையும் நட்போடு எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கு. நான் அறிந்தவரை இதுவரை அவர் எவரையும் பற்றி கடுமையாகப் பேசியோ, எழுதியோ அறிந்ததேயில்லை. எழுத்தாளர்களில் பலருக்கும் இல்லாத அரிய மனப்பக்குவம் அது.

அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவருக்கும் எல்லோரையும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவரிடமிருந்த எளிமை மற்றும் நேர்பட பேசுதல். அத்தோடு குறைகாணாத பெரிய மனது.

எழுத்தாளர்களில் லட்சக்கணக்கான வாசகர்கள் கொண்ட முதல் எழுத்தாளர் இவர் மட்டுமே. இவரை இலக்கியாவதிகளும் வாசித்தார்கள். எளிய மனிதனும் வாசித்தான். இருவருக்கும் அவர் நெருக்கமாகவே இருந்தார். அதைப்பற்றி ஒரு போதும் அவர் பெருமிதம் கொண்டதில்லை மாறாக எளிய புன்னகை மட்டுமே கொண்டிருந்தார்.


பணம் சம்பாதிப்பது பற்றிய மிகுவான மன உந்துதல்கள் இல்லாத அவரின் எளிய மன குணத்தை ஹரன் பிரசன்னா அழகாக சொல்கிறார்.

ஒருசமயம், AnyIndian.comல் அவரது பூக்குட்டி புத்தகத்தை விற்பது தொடர்பாகப் பேச அவர் அழைத்தார். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தகத்தின் விலையை, விற்பனையாளர்களுக்குத் தரவேண்டிய கழிவு பற்றிய எண்ணமில்லாமல் வைத்துவிட்டதாகச் சொன்னார். இத்தனை நாள் எழுத்துலகில் இருக்கும் சுஜாதாவிற்கு இதுபோன்ற விஷயங்கள் புரியவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அவர் AnyIndian செயல்பாடுகளைக் கேட்டுக்கொண்டார். தமிழில் எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் தேடலாம் என்கிற எண்ணமே அவருக்கு நிறைய மகிழ்ச்சியைத் தந்தது. எங்களது கஸ்டமர் சர்வீஸ் பற்றிச் சொன்னபோது, அது ரொம்ப முக்கியம் என்றார். பின்னர் பூக்குட்டி புத்தகம் பற்றி பேச்சு வந்தபோது, எப்படியாது தள்ளிடணும் என்றார். உண்மையில் வயது முதிர்ந்த குழந்தையுடன் பேசுவது போன்ற சித்திரத்தைத்தான் என்னால் யோசிக்கமுடிந்தது.


இப்படியான ஒரு குணாதிசயம் கொண்ட ஒரு அற்புத அறிவுஜீவியான ஒரு எழுத்தாளனைத் தொலைத்திருக்கிறோம் என்பதுதான் கனத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது;
ஆயினும் காலம் அனைத்தையும் கடந்து போகும் என்பதுதான் உண்மை.

அவர் தன் அப்பா மறைந்த போது ‘அப்பா,அன்புள்ள அப்பா’ என்ற ஒரு கட்டுரை எழுதினார்.அதில் அவரின் தந்தையாரின் பல பண்புகளுடன் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்காத நேர்மனம்,தன் மகனுக்காக என்று கூட,அண்ணாமலை(யா,அல்லது அண்ணா'வா என நினைவில்லை)ப் பல்கலையில் முக்கியப் பொறுப்பில் இருந்த தன் நண்பரிடம் தொழில்கல்விக்கான(Engineering) கல்லூரி இடத்துக்காக வேண்டாத தன்மை-இச் சம்பவம் பின்னால் அவரின் ஒரு சிறுகதையிலும் ஒரு knot ஆக வந்தது- போன்றவற்றை நினைவுகூர்ந்து எழுதிய பல விதயங்கள்,அவருக்கும் பொருத்தமானவை !

அவரின் 70 ஆவது பிறந்த தினக் கற்றதும் பெற்றதுமை பலர் நினைவு கூர்ந்து விட்டார்கள்.அதில்

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!


என்ற அவரின் பதிவு நெகிழ்வூட்டுவது !

ஹரண் சுஜாதாவுடனான தன் அனுபவத்தை,நினைவஞ்சலியை இவ்வாறு முடிக்கிறார்..

இன்று எத்தனையோ பேர் சுஜாதாவின் மரணத்துக்காக வருத்தப்படுகிறார்கள். சுஜாதாவைத் தவிர எதையும் படிக்காத தலைமுறைகூட ஒன்றிருக்கிறது. 'ஏன் இன்னும் கணேஷ் வசந்தெல்லாம் எழுதுறீங்க' என்று நான் கேட்டபோது, அதன் வழியாக நல்ல இலக்கியத்திற்கு அதன் வாசகர்களைக் கூட்டி வரலாம் என்று சுஜாதா சொன்னது இதுபோன்ற தலைமுறை ஒன்றை எண்ணியே. இந்தத் தலைமுறையெல்லாம் இன்று தன் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததாகவே கருதும். இது ஒரு எழுத்தாளனுக்கு அளிக்கப்படும் உச்சகட்ட கௌரவம்.

புத்தகக் காட்சியில் திருமகள் நிலையத்துக்கு வந்த சுஜாதா திரும்பிச் செல்லும்போது மெல்ல நடந்து சென்றார். அவரால் தனியாக நடந்து செல்லமுடியாது. திருமகள் நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர் அவரை அழைத்துச் சென்றார். அவரும் உடல் நிலை சரியில்லாமல் வேகமாக நடக்கமுடியாத நிலையில் இருப்பவர். அவர் சுஜாதாவை ஆதரவாகப் பிடித்திருக்க, சுஜாதா அவரை ஆதரவாகப் பிடித்திருக்க, இரண்டு பேரும் மெல்ல நடந்து என்னைக் கடந்து சென்றார்கள். என் கண்ணின் வழியே விரிந்த அந்தக் காட்சி என்றும் என் நினைவில் நின்றிருக்கும் என்று அப்போதே தோன்றியது. இரண்டு முதிய குழந்தைகள் தவழ்வதைப் போன்ற சித்திரம் என் கண்ணை இப்போதும் நிறைக்கிறது. அன்புள்ள சுஜாதா, வருத்ததுடன், நெஞ்ச நிறைவுடன் உங்களுக்கு ஒரு good-bye


நானும் வழிமொழிகிறேன்...
சுஜாதா,எங்களின் வாழ்நாளின் சில,பல நாட்களை உங்கள் எழுத்தால் மகிழ்வுறவும்,அறிவுறவும் செய்தீர்கள்,உங்களிடம் கற்றதையும்,உங்களால் பெற்றதையும் நிறைவுடன் நினைந்து,மேலும் சிறிது பெற்றிருக்கலாமே என்று வருந்தி,
அன்புடன்,நெகிழ்வுடன் உங்களுக்கு ஒரு Good Bye !!!!!


-ஹரன்,ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோருக்கு நன்றியுடன்.

Tuesday, February 19, 2008

43-ஞாநியின் இடமாற்றமும்,விகடனின் முக மாற்றமும்

ஞாநி அனைவரும் அறிந்த பத்திரிகையாளர்களில் ஒருவர்;சுமார் 33 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்.அவரது ஒரு நாவல்-ஒரு டிவி மீடியா நபருக்கும்,அவரது இளமைக் கால தோழிக்கும்,அரசியல் பித்தலாட்டங்களுக்குமிடையான சம்பவங்களின் தொகுப்பான கதை.எனக்கு ஓரளவு பிடித்த நாவல்களில் அதுவும் ஒன்று.

அவரது கட்டுரைகளின் கருத்துக்களில் பலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.எனக்கும் அவரது கருத்துக்கள் அனைத்திலும் முழு உடன்பாடு என்றும் பொருளில்லை.
அவர் சில மாதங்களாக(வருடங்களாக?) ஆவி.யில் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் அது நிறுத்தப்பட்டது;போன வாரத்திலிருந்து அவர் குமுதம் இதழில் ஓ பக்கங்களைத் தொடர்கிறார்.

பின்புலத்து விதயங்களில் சில சுவாரசியமானவை.

ஞாநி எழுதிய அரசியல் கட்டுரைகளில் சில ஆளும் திமுக தரப்புக்குப் பிடிக்காதவை என்பது ஊரறிந்த ரசசியம்,குறிப்பாக திமுக தலைமைக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் எழுதிய கட்டுரை,மற்றும் வேறு சில.

அதற்குப் பரவலான எதிர்வினை எழுந்தது;எவரது எழுத்துக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.ஆனாலும் அவரின் கட்டுரைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களும்,கண்டனக் கூட்ட்ங்களும் நடந்தன.

திமுக’வின் சமீப வெளிச்சப் பிரமுகர் தமிழச்சி கூட்டிய கூட்டத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் உதிர்க்கப்பட்டன. குறிப்பாக ஒருவர் ஞாநி இலக்கியப் பத்திரிகையில் எழுதினால் ஒன்றும் பிரச்னையில்லை;வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவதுதான் பிரச்னை எனக் கூறினாராம்.

சிறிது காலத்தில் விகடனிலிருந்து அவர் வெளியேற்றப் பட்டார்.

விகடன் !

இதே பத்திரிகைதான் எம்ஜிஆர் காலத்தில் பிஹெச்.பாண்டியனின் கருத்தை விமர்சித்து வெளியிட்ட கார்ட்டூனை மறுக்கவோ,திரும்பப் பெறவோ முடியாது என் உறுதியாக மறுத்து,சட்டமன்ற உரிமைப் பிரச்னையை எதிர்நோக்கி,ஆசிரியர் பாலு சிறை சென்று,பின் வழக்காடி,அரசை வென்று,அபராதம் வசூலித்து,அக் காசோலையை பணமாக்காது,சட்டமிட்டு ஆசிரியர் பாலு’வின் அறையில் மாட்டி பெருமிதப்பட்ட பத்திரிகை.

இன்று அரசின் தலைமையை ஒருவர் விமர்சித்தார் என்பதற்காக அதே பத்திரிகை ஒரு நிரூபிக்கப் பட்ட எழுத்தாளரை வெளியேற்றியிருக்கிறது !

நிச்சயம் அரசின்,கட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அரசின் தலைமை ஒரு அறியப்பட்ட பத்திரிகையாளரும்,அப்படி அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவரும்,பத்திரிகையாளர்களுடன் சுமுகமான உறவைப் பேணுவதில் கவனம் வைப்பவர் என்றும் பரவலாக அறியப்படுபவர்;
செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்கள்
ஆண்ட நாட்டைத் தான் அவரும் ஆட்சி செய்கிறார்;அந்த சொற்றொடரை ஆய்ந்தும், பொருள் விரித்தவர் அவர்,ஆனாலும் இப்போது அதை நினைவில் கொள்ளவோ, பொறுக்கவோ இயலவில்லை போலிருக்கிறது !

குமுதம் எத்தனை நாளைக்குப் புகல் அளிக்கும் என்பதும் பொறுத்துப் பார்க்க வேண்டிய ஒன்று !

காலங்கள் மாறும்;காட்சிகள் மாறும்;அரசியல் என்பது பொய்வேஷம் !!!!

Wednesday, February 13, 2008

42-திராவிடம் மற்றும் தமிழ்மொழி இலக்கியம்-II

தமிழே இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கும் சாத்தியங்களையும்,தென்னிந்திய மொழிகளான கன்னடம்,மலையாளம்,தெலுங்கு ஆகியவற்றிற்கு தமிழே மூலமொழி என்று உறுதியாகக் கருத இடமிருப்பதையும் சென்ற பகுதியில் பார்த்தோம்.

இவற்றில் கன்னடமும்,தெலுங்கும் தமிழிலிருந்து அதிக வேறுபாடுகளையும்,மலையாளம் அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழோடு குறைந்த அளவு வேறுபாடுகளையும் கொண்டிருப்பது கண்கூடு;இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியானவை.

வட இந்தியாவில் நிலைபெற்ற ஆரியர்கள் (பிராமணர்களின் மூதாதைகள்) காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் குடியேறினார்கள்;இதனால் தமிழும் பிராகிருதமும் வடமொழியும் கலக்கும் நிலை கன்னட,தெலுங்கு தேசங்களில் ஏற்பட்டது.அந்தந்த வட்டாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப கன்னடமும்,தெலுங்கும் வட்டார மொழிகளாக தனிவடிவம் பெறத் தலைப்பட்டன.இதற்கேற்ப அங்கு சேர சோழ பாண்டிய ஆட்சியாளர்கள் அல்லாத வேறு வர்ணத்தவர்கள் ஆட்சியாளர்களாக இருந்ததும் இந்த வேறுபாடு மிகுந்ததற்கு ஒரு காரணம்.

ஆனால் கேரளத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு எட்டு நூற்றாண்டு முன்பு வரை(அதாவது கி.பி.1200 கள் வரை) கேரளத்தின் பகுதிகளிலும் தமிழே ஆட்சி மொழியாகவும்,கலைமொழியாகவும் இருந்தது.காரணம் சுமார் பதினைந்து நூற்றாண்டுக்கு முன் கேரளத்தை ஆண்ட மன்னர்கள் தமிழரசர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்;அவர்கள் பெருமான்கள்,பெருக்கன்மார்(சேரமான் பெருமான்) என்ற அபிடேகப் பெயர் கொண்டு கேரளப் பகுதியை ஆண்டு வந்தார்கள்.கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டபோது திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர் தலைவராக இருந்ததற்கான் குறிப்புகள் கிடைக்கின்றன.மேலும் கிபி முதல் நூற்றாண்டு வரை கேரளப் பகுதிப் புலவர்கள் பலர் இயற்றிய பாடல்கள் தொகை நூல்களான புறநானூறு,அகநானூறு முதலியவற்றில் காணக் கிடைக்கின்றன.

சிலம்பு பாடிய இளங்கோவும் கேரளப் பகுதியைச் சேர்ந்தவரே;சேரமான் பெருமாள் நாயனார்,குலசேகர ஆழ்வார் போன்றவர்கள் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்களே.இவ்வாறு கேரளம் தொன்மைமொழியான தமிழ் ஊடாடும் பகுதியாக நெடுங்காலம் இருந்ததால் மற்ற திராவிட(தென்னிந்திய) மொழிகளை விட தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை அதிகம் காணப்படுகிறது.
அதோடு தென்னிந்தியப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிக வலுவானவர்களாகவும்,கடல் கடந்து இலங்கை,பர்மா,சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேசியா,தெனாப்பிரிக்கா,பிஜித்தீவுகள்,மொரீஷியஸ் போன்ற பிரதேசங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டியதாலும் அந்த இடங்களிலெல்லாம் தமிழும் தமிழர்களும் வாழத் தலைப்பட்டனர்.
இவற்றிற்கான குறிப்புகள் தென்னகம் மட்டுமல்லாமல் இந்த வெளிநாடுகளிலும் காணக் கிடைக்கின்றன.

கிமு 10 ஆம் நூற்றாண்டின் அரசனான சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயிற்தோகையும்,யானைத்தந்தமும்,வாசனைத் திரவியங்களையும் கொண்டு சென்றிருக்கின்றன;ஈப்ரு மொழியில் உள்ள துகி(மயில் இறகு),அஹலத்(வாசனைப் பொருள்) போன்ற சொற்கள் முறையே தோகை,அகில் ஆகிய தமிழ் வார்த்தைகளின் திரிபு.கிரேக்கத்திற்கு அக்காலத்தில்(கிமு 5’ம் நூற்றாண்டு) தமிழகம் அனுப்பிய இஞ்சியும்,பிப்பிலியுமே முறையே சிக்கிபெரஸ்,பெப்பரி(ஆங்கில ginger,pepper) போன்ற கிரேக்க சொற்களின் மூலங்கள்.அக்காலத்திய ரோமப் பேரரசின் நாணயங்கள் தமிழகப் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன;சீனத்திலிருந்து வந்த பட்டு நமது இலக்கியங்களில் கூட இடம் பெறுகிறது.

இவ்வாறு உலகின் பல பகுதிகளில் தனது மேலாண்மைத் திறத்தால் கோலோச்சிய தமிழ் இன்றைய திரிந்த திராவிட வர்க்கக் கூறுபாடுகளால்,தமிழகத்தில் கூட செழுமையான நிலையில் இல்லாத நிலை இருக்கிறது.

நமது குழந்தைகளில் பலர் தமிழை எழுதத் தெரியாமலேயே பள்ளிப் படிப்பை முடிக்கும் அவலம் நடைபெறுகிறது;இலக்கியங்களின் பரிச்சயம் இல்லாதே போகிறது;தமிழக வழிபாட்டுத் தலங்களில் கூட அருந்தமிழ்ப் பதிகங்கள் அரங்கேற மறுக்கின்றன.
ஆட்சியோ துவேஷத்தையும் வெறுப்பையும் விசிறி விடுவைதையே நிறைவேற்றியிருப்பது ஒன்றுதான் இன்றைய 'திராவிடம்' செய்திருக்கும் சாதனை என்பது எண்ணி வருந்த வேண்டிய ஒன்று.

-இன்னும் வரும்

Wednesday, February 6, 2008

41-திராவிடம் மற்றும் தமிழ்மொழி இலக்கியம்

திராவிடம் என்ற சொல் சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அனைவரும் அன்றாடம் கேட்கும் சொற்களில் ஒன்று எனச்சொன்னால் அது மிகையல்ல;திராவிடம் என்ற சொல் வழங்கி வருகிறதே தவிர திராவிடம் என்ற சொல்லின் பொருள் என்ன என்பது பற்றியோ,அதன் வேர்ச்சொல்,பொருள் பற்றியோ இன்றைய திராவிடக் குடிதாங்கிகள் அறிவார்களா என்பது சந்தேகமே.
ஒரு காலத்தில் இந்திய தேசம் முழுதுமே ஒரே மொழி பேசப்பட்திருக்கக் கூடிய சாத்தியம் இருந்திருக்கிறது;அதை ‘பழந்திராவிட மொழி’ என ஆராய்ச்சியாளர்கள் குறிப்புச் சொல்லாக அழைக்கிறார்கள்.காலப் போக்கில் வட இந்தியாவில் வடகிழக்குக் கணவாய் வழியாகத் துரானியர்களும்,வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியர்களும் வந்து வட இந்திய மக்களோடு கலந்து ஒன்றானார்கள்.இதனால் வட இந்தியப் பகுதியில் பேசப்பட்டு வந்த மொழி பல மாறுதல்களுக்கு உட்பட்டு,பிராகிருதம்,பாலி முதலிய மொழிகள் தோன்றின.
வட இந்தியாவின் வடமேற்கே பலூசிஸ்தானத்தில் ஒரு சாரார் பேசும் மொழி பிராகூய்(Brahui).இம்மொழியின் இரட்(இரண்டு),முசிட்(மூன்று) முதலான எண்ணுப் பெயர்களும்,வாக்கிய அமைப்பும்(Syntex),மூவிடப் பெயர்களும்(தன்மை,முன்னிலை,படர்க்கை) போன்ற இயல்புகளும் தமிழைப் போலவே இருப்பதும்,வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தமிழுக்குமான வாக்கிய அமைப்பு இன்றளவும் பெருமளவு ஒத்திருப்பதாலும்,இந்த ‘பழந்திராவிட’ மொழி தமிழாகவே இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவு சாத்தியம் என்பதும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
இந்த திராவிடம் என்ற சொல் பிற்காலத்திலேயே ஏற்பட்டது;இது தமிழ் என்ற சொல்லின் திரிபே என்பதும் நூலாய்வர்களின் முடிவு.திராவிடம் என்ற சொல் தமிழ்,தமிள,த்ரமிள,த்ரமிட,திரபிட,திரவிட என்று திரிந்தமைந்தது என்று விளக்கம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆயினும் துரானியர்,ஆரியர் கலப்பிற்குப் பிறகு வட இந்தியாவில் பிராகிருதம்,பாலி போன்ற மொழிகள் செல்வாக்குப் பெற,தென்னிந்திய அளவில் பழந்திராவிட மொழி-தமிழ்- குறுகவேண்டிய நிலை ஏற்பட்டது.
காலப்போக்கில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள்,மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குப் செல்வதில் உள்ள சிரமங்கள் இவற்றால் இந்த வேற்றுமைகள் தென்னிந்திய அளவிலும் பல பிராந்தியங்களில் வேறுபட்டன.

தெற்கே இருப்பவர்கள் பேசிய மொழி தமிழ் எனவும்,திருப்பதி மலைக்கு வடக்கே இருப்பவர்கள் பேசிய மொழி தெலுங்கு எனவும்,மைசூர்ப்பகுதி பேசிய மொழி கன்னடம் எனவும் வேறாக வளர்ந்தது;இவை வெவ்வேறு மொழிகளாக வளர்ந்தது.இந்த நான்கு மொழிகளுக்குள் இன்றளவும் சுமார் ஐந்தாயிரம் சொற்கள் பொதுவானவையாக உள்ள விதயம்,சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஆயினும் தமிழுக்கு மட்டுமே நீண்ட இலக்கிய வரலாறு இருக்கிறது.



-இன்னும் வரும்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...