குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (4) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (17) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இந்திய அரசிகள் (1) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உயிருக்கு நேர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) எனது நூல் (3) எனது படைப்பு (1) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (3) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (7) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழறிஞர் வரலாறு (2) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (49) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (3) பாரதி களஞ்சியம் (1) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, November 13, 2024

208 - பாரதி களஞ்சியம் - ஐநூறு அறிஞர்களின் கட்டுரைகள் கொண்டு ஆக்கப்படும் தொகுப்பு

பாரதி களஞ்சியம் என்ற ஒரு தொகுப்பு தமிழகத்தின் ஐநூறு அறிஞர்கள் பாரதியை அறிந்து படைத்தளித்திருக்கும் ஐநூறு கட்டுரைகளின் தொகுப்பாக, பத்து தொகுதிகள் உள்ள, சுமார் 5000 பக்கங்கள் உள்ள நூற்தொகுதியாக வெளிவர இருக்கிறது. வர்த்தமானன் பதிப்பகம் இந்த பெருஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறது. 




இந்த ஐநூற்றுவரில் ஒருவனாக எனது கட்டுரையும் இணைந்திருக்கிறது என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். பாரதி என்னும் பன்முகப் பாவலன் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெறுகிறது. 

கட்டுரையின் முன்னோட்டம் இவ்வாறு தொடங்குகிறது...


()


பாரதி என்னும் பன்முகப் பாவலன்

முன்னுரை:

பாரதி என்ற சொல்லே ஒரு மந்திரம்.

உலகின் மாபெரும் கவிஞர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் வாக்கினில் பிறந்த சொற்கள் தனித்தன்மையுடையனவாக இருக்கும். அவை எளிய சொற்களாகவே இருக்கலாம், ஆனால் அவை சுட்டும் பொருளுடன் இணைந்து வரும் போது அவற்றிற்குத் தனியொளி உண்டாவதை இயல்பாகப் பார்க்கலாம். உன்னதக் கவிகளுக்கான இலக்கணம் அவர்களின் சொற்கள் வழி விளையும் இம்மாயமே.

Monday, November 11, 2024

207 - இந்திய அரசிகள் - நான் எழுதி வருகின்ற தொடரின் இறுதிப் பகுதி

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி ஏற்படுவதற்கு முற்பட்ட காலம். முற்காலப் பாண்டிய அரசர்களில் ஒரு பாண்டிய அரசரின் அரசி இவர்.

ஆட்சிக் காலத்தில் அவர் எடுத்த முடிவுகளால் தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதோடு சைவ சமயத்தின் சமயப் பெரியார்களாகக் கருதப்படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் இந்தப் பெண்மணிக்கு ஓர் இடம் கிடைத்தது. அந்த அறுபத்து மூவரில் இடம் பெற்ற பெருமையுடைய மூன்றே பெண்களில் இவரும் ஒருவர்.

கூன்பாண்டியன் என்ற அழைப்புப் பெயர் கொண்ட, நின்றசீர் நெடுமாற பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட, அரிகேசரி மாறவர்ம பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசத் துணைவியும், சைவ சமய முக்கிய அடியாராகவும் விளங்கிய மங்கையர்க்கரசி தேவியார்தான் அவர்.

மங்கையர்க்கரசி பிறந்தது சோழக் குலத்தில். மணம் செய்து சென்றது பாண்டியக் குலம். அதுவும் போரில் தனது தந்தையை வென்ற பாண்டிய மன்னனைத் திருமணம் செய்து கொண்டவர். புகுந்த வீட்டில் நாட்டின் மன்னனும் கணவனும் தலைவனுமாகியவன் கைக்கொண்ட மாறான சமயக்கொள்கையும், அதன் தீவிரத்தன்மையும் தன்னையும் மக்களையும் வருத்தியபோதும் அதுகுறித்து மயங்கி நிற்காமல், அதிலிருந்து மீளும் வழியைப் பற்றிச் சிந்தித்தவர். தமிழகத்தின் பக்தி இலக்கியக் காலம் தோன்றி நிலைபெற அவரும் ஒரு காரணம். தனது கணவன் கூன் முதுகாலும் நோயாலும் தவித்த காலங்களில், அரச நிர்வாகத்தையும் நாட்டையும் நெறியாகக் கையாண்டவர். தொடர.... இந்திய அரசிகள் - முருகு தமிழ் அறிவன்

Wednesday, October 16, 2024

206 - உயிருக்கு நேர் - எனது நூல்

MadrasPaper இதழில் கடந்த 52 வாரங்களாக நான் எழுதி வந்த உயிருக்கு நேர் தொடர் வரும் புதன்கிழமை வெளியாகப் போகும் இதழுடன் நிறைவடைகிறது.  அதற்காக எழுதிய ஒரு நிறைவுரை இது. 
கடைசிக் கட்டுரையை அலங்கரிப்பது யார், என்ன என்ற விவரங்களை இதழ் வெளிவருகின்ற புதன்கிழமையன்று வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் 

o O o 

உயிருக்கு நேர் : ஒரு நிறைவுரை: 

உயிருக்கு நேர் தொடரைத் திட்டமிட்டது சரியாக ஓராண்டுக்கு முன்னர். Madras Paper இதழின் ஆசிரியரும், எனது இனிய நண்பருமான திருமிகு.பா.இராகவன், எனது வரலாறு முக்கியம் தொடருக்குப் பின்னர் இன்னொரு தொடர் முயற்சி செய்யலாம் என்று சொல்லி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழுக்கு மாபெரும் தொண்டு செய்த 52 தமிழறிஞர்களின் வாழ்வையும், ஆக்கங்களையும் ஆவணப்படுத்தும் தொடரைப் பற்றிய எண்ணத்தைச் சொன்னபோது, எனக்கு முதலில் சிறிது மலைப்பு ஏற்பட்டது. காரணம் இருநூறு ஆண்டுகளின் வரலாறு ஒழுங்காகக் கிடைக்குமா என்ற கவலை.




 விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய போது, அந்தக் கவலை கூடியது. பின்னர் பல தமிழ்த் தளங்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட இந்திய

205 - தமிழ் என்னைத் தேடிப் பிடித்த கதை

கீழுள்ள இந்தப் பதிவை இரண்டாண்டு முன்னர் பகிர்ந்திருக்கிறேன். அப்போது நண்பி Gayathri Ramakrishnan எப்படி ஐயா இப்படித் தமிழில் உழல்கிறீர் என்று கேட்டிருக்கிறார்; கேட்டிருந்ததை இன்றுதான் பார்த்தேன். அவருக்குப் பதில் சொன்னேன். 
அது ஒரு பதிவாகவும் படிக்கத் தக்க வடிவில் இருந்தது. எனவே ...

()

|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.|| 
சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. 🙂.
சரி சொல்லிவிடுவோம், 

()

மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது. 




ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர். 

204 - உயிருக்கு நேர் - சுவாமி சித்பவானந்தர்

16 வயதில் அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த போது எனக்கு அந்தக் கல்லூரியைப் பற்றிய பெரிய அறிமுகம் கிடையாது.  மதுரை அமெரிக்கன் கல்லூரி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் சேருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த என்னை, எனது பெற்றோரும், பெரியப்பாவும் சேர்ந்து இந்தக் கல்லூரிக்குத் தள்ளி விட்டார்கள். தள்ள முயற்சி செய்து அவர்கள் வென்றதன் காரணம் எளிது; பெரியப்பாவின் மகனும் எனது ஒன்றுவிட்ட தம்பியுமான சொக்கன் அந்தக் கல்லூரியோடு இணைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். 




எனது பள்ளித் தோழர்கள் எல்லாம் , நான் அந்தக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்றதும் என்னைப் பார்த்து அத்தனை அனுதாபப் பட்டார்கள்.

Wednesday, February 22, 2023

203 - அரசாண்மை என்றால் என்ன (அல்லது) ஏன் லீ க்வான் யூ ஒரு மிகச்சிறந்த தலைவர் ?


அரசாண்மையில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி. 

சூழல் இதுதான் : 1990'ல் லீ பதவியிலிருந்து விலகி, இரண்டாம் தலைமுறைத் தலைவராக கோ சிங்கையின் பிரதமராகிறார்.

லீ எவ்வாறு செயல்படுபவர், எவ்வாறு செயல்பட்டார் என்பதை உலகம் 30 ஆண்டுகளாக அப்போது கண்டிருந்தது. ஒப்பு நோக்க கோ, எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும், லீ பெயருக்குத்தான் பதவி விலகுகிறார், உண்மையில் ஆளப்போவது அவர்தான் என்ற ஊகங்களும் நிலவிய காலகட்டம். 

அந்த நேரத்தில் சிங்கை தேசியப் பல்கலையில் மாணவர்களிடைய நடைபெற்றது இந்த உரை. 

இந்த உரையில் மூன்று பொருண்மைகளை நான் மிக இரசித்தேன். 

Tuesday, February 21, 2023

202 - தமிழ் மொழிக்கு நாம் செய்ய வேண்டிய நன்மை என்ன? (கவிஞர் மகுடேசுவரன் பதிவு)

தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 

1. முடிந்தவரை ஆங்கிலச் சொல் தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நீங்களே உருவாக்குங்கள். அது ஓரளவுக்குத்தான் பொருந்தும் என்றாலும் பழுதில்லை. எல்லாச் சொற்களும் நூறு விழுக்காடு பொருந்தி வரவேண்டியதில்லை. 

2. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை இயன்றவரை தவிர்த்துப் பேசுங்கள், எழுதுங்கள். தொடக்கத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் மிகவும் இயல்பாகிவிடும். 

3. முடிந்தவரை நல்ல தமிழில் பிழையில்லாமல் எழுதுங்கள். பிழை நேர்ந்துவிடுமே என்ற அச்சத்தால் எழுதாமலும் இருந்துவிடாதீர்கள். எழுதிக்கொண்டே இருக்கையில்தான் நம்முடைய பிழைகள் தெரியவரும். அவற்றினைக் கண்டறிந்து நீக்கிக் கொள்ளலாம். துணிந்து எழுதுவதும் பிறகு உரிய பிழைகளைக் களைவதும் இரட்டைச் செயல்பாடுகள். 

4. பொதுத்தமிழ்ப் பேச்சுமுறைக்கு வாராமல் முடிந்தவரை உங்களுடைய வட்டார வழக்கில் பேசிக்கொண்டிருங்கள். அதனை இழிவாகக் கருதாதீர்கள், பெருமையாகக் கருதுங்கள். வட்டார வழக்கில் இன்னும் கண்டறியப்படாத அருஞ்சொற்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வட்டார வழக்கினை வாழவைப்பது மொழியின் ஒரு கிளையை வாழவைப்பதாகும்.  

201 - தமிழார்வம் வந்த கதை

தமிழார்வம் எப்படி வந்தது என்று கவிஞர் மகுடேசுவரன் எழுதிய ஒரு பதிவைப் நான் பகிர்ந்திருந்த பதிவில்  நண்பி காயத்ரி இராமகிருட்டிணன் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் 

()

|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.|| சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. :).

சரி சொல்லிவிடுவோம்,

மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது. ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர். அப்போது அவர் ஒரு சிறிய பெட்டிக்கடை போன்ற பலசரக்குக் கடையும், சித்தமருந்துகளைக் கிராம மக்களுக்கு, நோய் அறிந்து கொடுப்பதுவுமான வாழ்வை பிழைப்புக்காக வைத்திருந்தவர். ஆர்வத்தினால் தமிழ் வித்வான் தேர்வு. அந்தத் தேர்வுக்கு முயற்சி செய்யலாம் என்று எண்ணிய காலத்திலேயே அவருக்குத் திருமணம் நடந்து, தேர்வெழுதிய காலத்தில் முதல் குழந்தை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது.

அந்தக் குழந்தை என் அம்மா, தமிழ்ச்செல்வி அம்மை. பெயர் வைத்தவர் ஐயன். தமிழ்க்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கலாம். அவருக்கும் இயல்பிலேயே தமிழார்வம். அவரும் வளர்ந்து பத்தாம் வகுப்பு வந்த பின் (அக்காலத்தில் பாரம் என்று வகுப்பு இருந்தது போல) அதே தமிழ்ச்சங்கப் புலவர் படிப்பில் இணைந்து படித்தவர்.

அவர்களெல்லாம் புலவர்கள், போகட்டும். ஆனால் நான் சாமானியப் பையனாகவே வளர்ந்தேன்.

சாதாரண வகுப்பறை மாணவன். ஆறாம் வகுப்பில் 65 லிருந்து 75 சதம் வரை மதிப்பெண் எடுப்பேன். சராசரி, அவ்வளவுதான்.

எனது ஆறாம் வகுப்பு விடுமுறையைத் தாளித்து விடுவது என்று எங்களது தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முடிவு கட்டியிருந்தது எனக்குத் தெரியாது. மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் செந்தமிழ்க்கல்லூரி என்ற கல்லூரி புகழ்பெற்றது. வசுப மாணிக்கம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டி போன்ற பல அறிஞர்கள் தொடர்பு கொண்டது. அவர்கள் வருடாந்திரமாகத் தமிழில் ஏதாவது ஒரு போட்டி மாணவர்களுக்கு நடத்தி, போட்டியில் நன்கு தேறும் மாணவர்களுக்குப் பரிசளிப்பார்கள்.

அந்த வருடம் திருக்குறளைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். 10 அதிகாரம், 100 பாக்கள். எப்படிக் கேட்டாலும் சொல்ல வேண்டும். முதற்சொல், கடைசிச் சொல், இடைச்சொல் எப்படி வேண்டுமானாலும் கேட்பார்கள். வரிசையாகவும் கேட்பார்கள்.

இருபது நாள் தினமும் காலையில், மாலையில் விடுமுறையில் இருந்த பள்ளிக்கு, போட்டிக்குச் சென்ற 4 மாணவர்களை வரச்சொல்லி மாணிக்கவாசகம் பயிற்சியளித்தார். ஒவ்வொரு நாளும் இரண்டு, இரண்டரை மணி நேரம். தவறாமல்.

விடுமுறையைக் குடும்பத்துடன் செலவு செய்து நிம்மதியாக இருப்போம் என்ற நல்ல நோக்கங்கள் இல்லாத மனிதர். அந்தப் போட்டிப் பயல்களில் என்னுடன் அவரது மகன் சேகரும் இருந்தான். சேகர் ஐந்தாவது வகுப்பு. நான் ஆறாவது முடித்திருந்தோம்.

போட்டிக்குச் சென்றோம். சொன்னோம். தேர்வாளர்களுக்கு நான் சொன்னவிதம் மிகவும் பிடித்துப் போனது. எப்படிக் கேட்டாலும் பிய்த்து உதறினேன். மாணிக்கவாசகத்தின் பயிற்சி அப்படி. சேகரும் நன்றாகச் சொன்னான் எனினும், ஒரு வயது இளையவனாக இருந்ததாலோ, சிறிது பயிற்சி பற்றாததாலோ, அத்தனை சிலாக்கியம் இல்லை. என்னை கிட்டத்தட்ட முதற்பரிசுக்குத் தேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

தேர்வாளர்களில் ஒருவர், 'அம்பி, முடிவுகளை எழுதிச் சொல்ல அரை மணி நேரம் ஆகும்; வேறு ஏதாவது பாடல்கள் தெரிந்தால் சொல்லு கேட்போம்' என்றார் என்னிடம். எனக்கோ, ஒரு வேறு எந்தப் பாடலும் அந்த நேரத்தில் தெரியாது. காரணம் மாணிக்க வாசகம் எனக்கு வேறு தமிழ்ப்பாடல்களை எதையும் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்திருக்கவில்லை. ஆனால் ஒரு மகனாக சேகருக்கு வீட்டில் தொழும் பாடல்களை இசைக்கும் பயிற்சி இருந்தது.

அம்பி, நீ சொல், உனக்கு ஏதாவது பாட்டு தெரியுமா?' என்று சேகரிடம் கேட்டார் தேர்வாளர். அவன் ஏதோ ஒன்றிரண்டு பாடல்களைப் பாடினான்.

முதல் பரிசு அவனுக்குப் போனது; இரண்டாம் பரிசு எனக்கு வந்தது.

வீட்டிற்கு வந்தேன், எனது அம்மா என்னைத் தாளித்து விட்டார். அடேய், எத்தனை நாள சொல்லியிருக்கிறேன், ஏதாவது பாடல்களைக் கற்றுக் கொள் என்று; ஒரு நாளாவது காதில் வாங்கினாயா, இத்யாதி,இத்யாதி...

வாங்கிய இரண்டாம் பரிசும், தவறிப் போன முதல்பரிசும் என்னைத் தூண்டின. பாரதியாரை முதலில் தொட்டேன்.

பின்னர் தமிழ் என்னைப் பிடித்துக் கொண்டது.

காலஞ்சென்று போனாலும், மாணிக்கவாசகம் இன்றும் எனது சிந்தனையில் வாழ்கிறார்.

மாணிக்க வாசகம் மட்டுமல்ல, எனது முதலாம் வகுப்பு ஆசிரியராக இருந்த, கண்ணாடி வாத்தியார் என்ற பாலசுப்ரமணியம் முதல், எனது சிஏ படிப்புக்கு எனது வழிகாட்டு முன்னவராக இருந்த இராம்மோகன் வரை எனக்குள் ஏதாவது ஒரு பண்பில், வடிவில், சிந்தனையில், செயலில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். 

Tuesday, February 14, 2023

200 - வரலாறு முக்கியம் - எனது நூல்

எழுத்தில் நான் புலியல்ல. ஆனால் தெளிவான மொழியறிவும், தமிழில், அதன் மொழி வளத்தில், தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும், அவற்றில் ஓரளவு குறிப்பிடத்தக்க பயிற்சியும் உண்டு. 
எழுத விரும்புபவர்களுக்கு, எழுதத் தொடங்குபவர்களுக்கு தெளிவான மொழி வேண்டும் என்பது அடிப்படை. 
           எனக்கு பதின்மத்திலிருந்தே மொழி கைவரப் பெற்றதுதான். பள்ளி,          கல்லூரி என்று வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் எழுத்து வாய்ப்புகளைத் தவற விட்டதில்லை. அந்த வாய்ப்புகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.   
எனினும் அடிப்படையில் நான் கணிதன். நிதியாளன். எனவே

199 - ஒரு நாடு, ஒரு கனவு, ஒரு தலைவன்

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
சூன் 8' 2022 இதழில் ஒரு நாடு, ஒரு கனவு, ஒரு தலைவன் வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.



சிங்கப்பூர் ! 
இந்தச் சொல்லைக் கேட்டவுடன் உங்களுக்குத் தோன்றுவது என்ன?
பெரும்பாலும் பலரும் சொல்லுவது, ஓ, பிரமாதமான நாடு, பிரமாதமான நகரம்! என்பது. இன்னும் சிலர், ஓ, லீ க்வான் யூ என்ற பிரமாதமான பிரதமர் இருந்தாரே, அவர் ஆண்ட நாடா' என்பார்கள். மேலும் விவரமறிந்த சிலர், ‘சுமார் 240 சதுர மைல்கள் பரப்பளவே கொண்ட நாடு அது; இப்போதைய மக்கள் தொகை சுமார் ஐந்தரை மில்லியன் (55 லட்சம்); தமிழ், மலாய், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் தொடர்பு, நிருவாக, வணிக மொழியாகவும் கொண்டிருக்கிறது; சீன சிங்கப்பூரியர்கள் 74 சதம், மலாய் சிங்கப்பூரியர்கள் 14 சதவிகதம், தமிழ் சிங்கப்பூரியர்கள் 11 சதவிகிதம் கொண்டது; 95 சதவிகதம் படிப்பறிவு கொண்ட நாடு ; தேசிய உற்பத்தி (2103’ல் சுமார் 339 பில்லியன் டாலரும் ( சுமார் 3,39,000 * 75 = 25,42,000 கோடி ரூபாய்கள்!), தேசிய ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் 62,500 டாலர்கள் ( சுமார் நாற்பத்து ஏழு லட்சம் இந்திய ரூபாய்கள்); மக்களின் சராசரி ஆயுள் சுமார் 84.50 ஆண்டுகள்; ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமா் 4.1 சதவிகிதம் ; ஆண்டு பணவீக்கம் 5.2 சதவிகிதம் கொண்ட நாடு ' என்றெல்லாம் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவார்கள். 

Wednesday, June 8, 2022

198 - ஆதீனங்களின் கதை

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
முதல் இதழ் வெளிவந்த சூன் 1' 2022 இதழில் ஆதீனங்களின் கதை வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.


தமிழர் சமயம்
இந்தியாவெங்கும் காலங்காலமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான தத்துவ வழிகாட்டல்கள் நெடுங்காலந்தொட்டே இருக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சமய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டல்கள், வழிகாட்டிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. கிருத்துவம், இசுலாம் போன்ற பெரு மார்க்கங்களுக்கான வழிகாட்டல்கள் எவ்விதம் உள்ளன என்பது பெரும்பாலும் பரவலாக அறியப்பட்டது; இந்த பெருமதங்கள் அல்லாத மற்றவற்றைப் பொதுவாக இந்து என்று குறிப்பிடும் வழக்கம் இற்றை நாளில் நிலவுகிறது. கவனித்துப் பார்த்தோமானால் இந்த இந்து என்ற பதத்தை இந்து 'சமயம்' என்று தமிழில் குறிப்பிட விழைவார்கள்; இந்து 'மதம்' என்று குறிப்பிடுவது குறைவாக இருக்கும். ஆனால் பண்டைய இந்தியாவில் சமயங்கள் மட்டுமே நிலவின; மதங்கள் இல்லை என்பதையும், இன்று இந்து 'மதமாக' நிலவுவதை, இந்து 'சமயமாக' அறிமுகப் படுத்துவதன் உட்பொருள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது நிற்க.

ஆனால் இந்த இந்து என்ற சொல்லாக்கம் ஆங்கிலேயர் வழி வந்தது. அதற்கு முன்னால் இந்தியாவில் பற்பல சமயங்கள் நிலவின. தென்னாட்டைப் பொறுத்தவரை சைவம் என்ற சிவம், வைணவம் என்ற விண்ணவம், காணாதிபத்யம் என்ற கணபதியம், கௌமாரம் என்ற குமரம், சமணம் என்ற செயினம் (இதற்கு ஆசீவகம் என்ற முன்னோடியும் உண்டு) மற்றும் பௌத்தம் என்ற புத்தம் என்ற சமயங்களே நிலவின. இந்த சமயங்களில் சிவமும், குமாரமும் தமிழ்ச் சமயங்களாக பொ.உ.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிலை பெற்று விட்டன என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை இவற்றிலேயே சான்றுகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த இளையனும் அழகனுமாக முருகன் குறிப்பிடப் படும் அதே நேரத்தில், சிவன் மிக உயர்ந்த நிலையில் வைத்தும் வழங்கப்படும் தெய்வமாகிறான். இந்த இரண்டு ஆரம்பகால இறை வடிவங்கள் பின்னர் நிலங்கள், தினைகள் மூலம் பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களுக்கு முறையே வேலன், மாலன், இந்திரன், வருணன், கொற்றவை என்று நிலம் சார்ந்த பகுதிகளாகப் பாகுபாடு அடைந்தாலும் சிவன் என்ற தத்துவம் அனைத்திற்கும் உள்ளாய், அனைத்தினும் புறம்பாய் என்று சித்தாந்தம் குறிப்பிடுவது போல எல்லா இடங்களிலும் நிலை பெற்று வளர்ந்து விளங்கியது. இந்த நிலை பொ.உ. மு மூன்றிலிருந்து பொ.உ.பி இரண்டு வரை நிலவியதற்கான இலக்கியச் சான்றுகள் தமிழில் உள்ளன.  

Wednesday, March 10, 2021

197- ஜெயமோகன் - புனைவுக்களியாட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் திரும்பவும் பட்டையைக் கிளப்பும் வேகத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது பக்கத்தில் நாளைக்கு ஒன்று என்று அணி வகுத்திருக்கின்றன சிறுகதைகள்.

எனக்கு அவர் அடிப்படையில் ஒரு இந்துத்தவ வாதியோ என்ற ஐயம் பல நாட்களாக உண்டு. வலதுசாரித்துவமான சிந்தனைகளை மேலோட்டமாகப் பல நேரங்களில் கண்டித்து எழுதியிருந்தாலும், இப்போதைய பாசக அரசையும் சில நேரங்களில் கடுமையாக விமரிசித்திருந்தாலும், அடிப்படையில் அவர் இவை இரண்டுக்கும் ஆதரவான மனிதர் என்பது எனது ஒரு ஐயம். தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றில் ஒரு நையாண்டி அல்லது நக்கலை அவ்வப்போதும் அல்லது எப்போதும் வலதுசாரியர்கள் வெளிப்படுத்துவது வழமை; அவரும் அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு படைப்பாளியாக,

Sunday, January 24, 2021

196 - சிங்கையில் தமிழிசைப் பள்ளி தொடக்கம் !

கடந்த 23 சனவரி 2021 அன்று சிங்கையி்ன் தமிழ் வரலாற்றுப் மரபுடைமைக் கழகத்தின் சார்பில் தமிழிசைப் பள்ளி உருவாக்கப்பட்டு தொடங்கப்பெற்றது. இது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தோடு அலுவல் பூர்வமாக இணைவு பெற்றது. 

  இந்த தமிழிசைப்பள்ளியில் தமிழில் வாய்ப்பாட்டு இசை வகுப்பு, நாட்டிய வகுப்பு, விணை வகுப்பு, குழலிசை வகுப்பு(புல்லாங்குழல்), வயலின் என்ற பிடில் கருவி போன்ற வாத்திய இசைக் கருவிகளைக்கான பயிற்சி போன்றவற்றைத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு  பயிற்றுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் தொடக்கவிழாவும், இணையப் பக்க வெளியீடும்  பேராசிரியர் சுப.திண்ணப்பன் தலைமையில், அவரது தலைமையுரையோடு இனிதே நடந்தன. விழாவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலையின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தசாமி, திருமதி.மீனாட்சி சபாபதி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் இராச.கலைவாணி, புதுமைத்தேனி மா.அன்பழகன், திரு.தனபால்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

Sunday, December 16, 2018

195- யதி - ஒரு கருத்துரை

கதையாசிரியர் பாரா- என் பார்வையில்
எழுத்தாளர் பாரா அவர்கள் எழுதிய மிக சமீபத்திய நாவல் யதி.

இதற்கு முன்பாக அவர் எழுதிய குறிப்பிடத்தகுந்த நாவல் பூனைக்கதை; ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர் முழு நேர எழுத்தாளர் பணியிலிருந்து விலகிய (அல்லது கிழக்கிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்த நேரத்தில் அவ்வாறு நான் புரிந்து கொண்ட) நேரத்தில் அதைப் பற்றி விசனப்பட்ட அவரது வாசகர்களில் நானும் ஒருவன்.

நேர்த்தியான கதைசொல்லியும், சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளையும் அனுபவங்களையும் சொல்லும் வல்லமை கொண்டவரும் மொழியாளுனருமான எந்த ஒரு எழுத்தாளர் அவ்வாறு அறிவித்தாலும் வாசகப் புலத்தில் சலசலப்பும், விசனமும் ஏற்படுவது இயல்பு; அவ்வாறு விலகி, ஓரிரு மாதங்களில் காட்சிப்புலத்தில் (திரை, சின்னத்திரை)  அவர் வசனகர்த்தாவாக நுழைந்த போது (அதையும் நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தேன்!) ஒரு எழுத்தாளராக அவர் நீர்த்துப் போகப் போகிறார் என்ற கவலையுடனும், ஆதங்கத்துடனும் பார்த்திருந்தேன். ஆனால் அவர் சின்னத்திரை வசனகர்த்தாவாகவம், அவ்வப்போது (ராட்சச வேகத்தில்|அவதாரத்தில் விசுவரூபமெடுக்கும்) தொடர்ந்த எழுத்தாளராகவும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அந்த நிரூபித்தலின் சமீபத்திய சாட்சிகள் பூனைக்கதையும், யதியும் !

அவரை ஒரு எழுத்தாளராக எனது பதின்ம அல்லது இருபதின்ம நாட்களில் அவர் கல்கி குழுமத்திலிருந்த காலத்திலிருந்து வாசிக்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவ்வப்போது, கண்ணில் படுகிற அவரது முக்கியமான புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கல்கியில் அவர் புழங்கத் தொடங்கிய காலத்தில் அவர் வேண்டியமைத்துக் கொண்ட ஒரு தனித்துவமான நடை அவரை தனித்துக் காட்டியது; பிற்காலங்களில் அந்த நடை வலிந்து அமையாமல் அவ்வப்போது இயல்பாக நுழைந்து வெளியேறுவது போலவே அவரது எழுத்தில் தோன்றவாரம்பித்தது; இதற்குக் காரணம்  ஒரு கதைசொல்லியாக அவருக்கு கைவந்த மொழியின் இலாகவம். எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பா.ராவால் நேர்த்தியாக எழுத முடியும் என்ற நிலைக்கு அவர் வந்து வெகுகாலம் ஆயிற்று. இந்த நிலையை அடைவது ஒரு எழுத்தாளருக்கான பூரணத்துவத்துங்களுள் ஒன்று. [யதியின் கதைசொல்லியாக தன்மை நிலையில் வரும் விமல் பாத்திரமும் கூட இப்படி ‘மொழியின் குழந்தை’ என்றுதான் விளிக்கப்படுகிறான் ;)].
அப்படியான நிலையை அவர் அடைந்த பின்னர் (என்ற எனது கருத்தில் ) அவர் எழுதிய முதல் நாவல் அலகிலா விளையாட்டு; பின்னர் புவியிலோரிடம்; பின்னர் ரெண்டு ஒரு வித்தியாசமான கதைக்களனுக்காக சலசலக்கப் பட்ட ஒரு புனைவு.
ஆனால் இதுநாள் வரையான அவரது 20 ஆண்டு கால, அல்லது சற்றேறக்குறைய முன்பின்னான, கால அவகாசத்தில் அவரெழுதிய புனைவுகளில் எனக்கு துலக்கமாக நினைவில் நிற்பது அலகிலா விளையாட்டு மட்டுமே.

இரண்டாவதாக புவியிலோரிடம்.

இப்போது யதி, பூனைக்கதை இரண்டும் ! (பூனைக்கதையின் முதல் இரு பாகங்கள். சரியாகச் சொல்ல வேண்டுமானால்! :)

இவற்றில் யதி அதனது அடர்வு, களம், நெடிதோட்டம், சாகசம், புனைவின் அழகியல், அவ்வப்போதான பாத்திரங்கள் வாயிலான பாரா வின் தத்துவக் குறிப்புத் தெறிப்புகள் போன்ற காரணங்களால் இனி எளிதாக முதலிடம் பெற்று விடும் என்று தோன்றுகிறது.

களம், இரசிப்புகளுக்கான கூறுகள் :

புனைவோ அல்லது அபுனைவோ நல்ல நூல்கள் பலவற்றுக்கான ஆதார குணம் ஒன்று உண்டு; அது வாசகனின் மன விவாதத்தைக் கிளப்பி அவனை சிந்திக்க விடுவது.

பதின்மங்களில் நான் படித்த ஒரு புனைவு, வாழ்வில் நான் எதிர் நோக்கப் போகின்ற அத்தனை பொருதங்களையும் அதன் நடு மண்டையின் உச்சியில் அடித்து எதிர் கொள்ள வைத்த ஒரு வல்லமையை எனது சிந்தனைக்குள் விதைத்தது; அது 16 வயதில், அன்றிலிருந்து இன்று வரை எனது நெருங்கிய நட்புகளில் ஒருவனான தங்கமணி பரிந்துரைத்த,  ஒரு மனிதனின் கதை என்ற உருஷ்ய புனைவின் தமிழாக்கம் அது; பதினேழு வயதில் திஜா வின் மோக முள்ளைப் படித்து அந்த முள் கிளறிய வலியை பல நாட்கள் விவாதித்துச் சுமந்து கிடந்து கடந்த வாலிபம் எங்களது; ஜெயகாந்தனைத் தொட்ட கணங்களில் படித்த அக்கினிப் பிரவேசம் படித்த  அக்கணத்தின் அதிர்வும், அட, சரிதானே இந்த ஆள் சொல்றது.. என்று பின்னரேற்பட்ட உணர்வும் இப்போதும் நினைவில் நிழலாடுகிறது; பதினெட்டு வயதில், ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ’வைப் படித்து விட்டு நானும் தங்கமணியும் (Dr.Thangamani Nithyanatham,இன்றைய இயல்பியல் துறை முனைவர், பறவையியல் புகைப்படக் கலைஞர்), சுந்தரும் (Dr. சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியம், Prana science என்று கூகிளிட்டால் இவன்(ர்) இன்று என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறியலாம். J ) இரண்டரை மணி நேரம் அதை விவாதித்திருக்கிறோம். 

யதியும் இவ்விதமான மன விவாதத்தை எனக்குள் நிகழ்த்தியது; நிச்சயம் உங்களுக்குள்ளும் நிகழ்த்தலாம்!

யதியின் களம் அவரே அவரது முன்னுரையில் சொல்லுகின்ற படி சன்னியாசிகளின் உலகில் உழலும் ஓரு கதையின் களம்; நான்கு சகோதரர்களும் துறவறம் பூண்ட, வேறு குழந்தைகள் இல்லாத ஒரு குடும்பத்தின்,  அவர்களுக்குள் நிகழ்கிற வாழ்வின், அவர்கள் அமைத்துக் கொண்ட அல்லது தேடியடைகிற துறவின், வேறுபாடுகளுக்குள் திளைத்துக் கிளம்புகிற, அந்த முயற்சியில் இடம் பெறுகிற பல்வேறு செய்திகள், தத்துவங்கள், திடுக்கிடல்கள், கதை போகிற போக்கில் இடம் பெறுகிற சில சமகால அல்லது சமீபத்திய உண்மை நிகழ்வுகளின் படிமங்கள், சில கொலைகள் அனைத்திலும் ஊடாடிக் கிளம்புகிற கதை யதி.

இப்படித் துறவின் பல கிளைத்துவங்களைப் பாடுபொருளாக வைத்து இன்னொரு புனைவு தமிழில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அவ்வாறில்லையெனில் அக்காரணத்திற்காகவும் யதி முதன்மை பெறும்.

கதைக்களனுக்கு அப்பால் மேலும் துலக்கமாக நான் இரசித்தது அவ்வப்போது யதியின் பாத்திரங்கள், பெரும்பாலும் விமலன், வெளியிடுகின்ற அல்லது சிந்திக்கின்றனவாக கதையில் வருகிற தத்துவார்த்தமான ஓரிரு வாக்கியங்கள் !  அவற்றை நான் மிகவும் இரசித்தனால் எனது முன்னுரை முடிவில் அவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன், என்னைப் போலவே இரசனை உள்ளவர்கள் ஒரு ஓட்டமாக அவற்றை வாசிக்க முன்னுரையின் இறுதியில் நேரம் ஒதுக்குங்கள் J. மாதிரிக்கு இங்கு இரண்டு மட்டும் – பாகம் 1 நீலக்குறிஞ்சியில்…

ஆனாலும் வனத்தின் ஆகிருதி நதிக்குப் பொறுக்க முடியாது போய்விடும் போலிருக்கிறது. அதன் அடர்த்தியைக் கிழித்துக்கொண்டு சீறுவதில் வெறி கொண்ட சந்தோஷம். உன்னைவிட நான் வீரியம் மிக்கவன். உன்னைக் காட்டிலும் என் உரு பெரிது. உனது அமைதியை எனது ஆவேசம் புணர்ந்து பெருகுவதே இயற்கை.
நல்லது. இயற்கை பெரிதுதான். அது பெரிது என உணரும் மனத்தைவிடவா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

()

சிப்பிக்குள் சித்திரம் எழுதுவது போல. தவிர, ஒரே உயிர்தான் என்றாலும் ஒன்றிலிருந்து கிளைக்கிறபோதே தன் உருவையும் வெளிப்பாட்டையும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்வதில்தான் எத்தனை வேட்கை இந்தச் செடிகளுக்கு! ஆயினும் கலவையான வாசனையில் அவை புதர்த்தன்மை எய்திவிடுகின்றன. நெருங்கிப் படர்ந்த அடர்த்தியில் ஓர் அச்சுறுத்தல் சேர்ந்துவிடுகிறது.

()
சிந்தனை ஒரு புதர். நெருங்கி அமர்ந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு இலையாக எடுத்து நீவிவிட்டு உற்றுக் கவனிக்கலாம். முகர்ந்து பார்த்து பேதம் அறியலாம். எது நல்லது? எது கெட்டது? எது மருந்தாகும்? எது விஷமாகும்? யாரையாவது கேட்கலாம்.
இப்படியான பல தெறிப்புத் தெளிப்புகள் கடை நெடுகிலும் உண்டு.

கதை மற்றும் உள்ளடக்கம் பற்றி :
யதியின் உள்ளடக்கத்தில் முதலில் எளிமையிலிருந்து தொடங்கி பின்னர் கனமானவற்றைப் பார்க்கலாம்.
அழகிய தமிழ் மொழி நடை மற்றும் வாசிப்புச் சுவை:
புலரி போன்ற சொற்களையெல்லாம் இற்றைய நாள் தமிழ் எழுத்தாளர் எளிதாகக் கையாண்டு எழுதுவது சமகாலத் தமிழெழுத்தின் நல்லூழ். (புலரி என்றால் விடியல் என்ற பொருள்.)
மேலும் எந்தப் புத்தகமும் எடுத்தால் கீழே வைக்க இயலாத வாசிப்புச் சுவையைக் கொண்டிருக்க வேண்டும். வாசிப்புச் சுவை இல்லாததாலேயே நான் படிக்காதிருக்கும் புகழ்வாய்ந்த தமிழ்ப்புதினங்கள் சில உண்டு.
ஆனால் யதி ஒரு தொடராக வெளிவந்த போதே, துறவு என்ற அதன் உள்ளடக்கத்தை மீறி, சுண்டியிழுந்த ஒரு தொடர்; புத்தகமாக வரும்போது அதன் வாசிப்புச் சுவை, கீழே வைக்கத் தோன்றாத அளவில் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.
தகவல்கள்:
யதியின் கதை போகிற போக்கில் சொல்லப்படும் பல தகவல்கள் சுவையானவை, உதகையில் மூப்பர்களின் வயதை குறிஞ்சி மலர்ப்புடன் ஒத்துக் கூறுவது (மூன்று குறிஞ்சி கண்டவர்), பலார்ஸா சப்பாத்திக் கல்லில் சப்பாத்தி மெல்லிசாக வரும், (எங்கு இந்தக் கல் சென்னையில் கிடைக்கிறது பாரா? J ), திருப்பதியில் திருப்பாவை கோஷ்டியில் எவரும் பின்னால் இணைந்து கொண்டால், பத்து நிமிடம் அளவுக்கு தரிசனம் பார்க்கலாம் (மீசை மழித்திருக்க வேண்டும், திருமண் அணிந்திருக்க வேண்டும் J ) போன்று பல சுவையான தகவற்கூறுகள் கதை முழுவதும் விரவியிருப்பது.. இதுவெல்லாம் ஒரு சுவையா என்று கேட்டால், ஆம், நிச்சயமாக! வாசகனுக்கு வாசிப்பின் போக்கில் பல தகவல்களைக் கடத்துவதும் நல்ல எழுத்தின் ஒரு அறிகுறி.

சாகச நிகழ்வுகள்:
துறவின், சித்தர்களின் சாகச நிகழ்வுகள் பல கதைப்போக்கில் பல இடங்களில் வருகின்றன. பகுதி 38 ல் வரும் மீன் உண்டவன்’ல் வரும் திரைலங்கரின் கதை, மற்றும் விஜயன் நெருப்பில் படுத்திருப்பது போன்றவை காமிக்ஸ் நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், உண்மையான சித்தர்களின் அனுபவங்கள், சக்திகளை உணர்ந்தவர்கள் இந்த 20,21 ம் நூற்றாண்டிலும் உண்டு; ஆசிரியர் பாரா’ கூட இப்படிப்பட்ட சில அனுபவங்களைக் கண்டிருக்கக் கூடும்.

இந்த இடத்தில் பேராசிரியர் அசஞா அவர்கள் எழுதிய அருளாளர்கள் என்ற நூலின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை; அதில் அவர் நேரில் கண்ட, உணர்ந்த அருளாளர்களின் செயல்களையும் அற்புதங்களையும் அவர் விவரித்திருக்கிறார். தேர்ந்த தமிழறிஞரும், தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற சமகால விற்பன்னரான பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான அவருடைய அந்த நூலே, இவ்விதமான சித்தர்களின் சாகசங்களுக்குச் சான்று.

யதியில் இத்தகைய சாகசங்கள் வேண்டுமளவு உண்டு; யதியின் நிறைவுப் பகுதி கூட இப்படி ஒரு சாகச ஆகுதியுடனேயே நிறைவுறுகிறது.

துறவு:
கதை  எளிமையாகத் தோன்றிப் பிரவாகமெடுக்கிற ஒரு கதை. எளிமையான வாழ்வு வாழும் ஒரு பிராமண ஐயங்கார் குடும்பத்தின் தாய், தந்தை, அவர்களது நான்கு குழந்தைகள், குழந்தைகளின் ஒரே தாய் மாமன், இரண்டு வயசாளிகளான சித்தர்கள் மற்றும் திருப்போரூர்ச் சாமி, நாயகி, அவளின் அம்மா… இவ்வளவுதான் பாத்திரங்கள்.

என்ன ஒரேயடியாகத் தூக்குகிறாய் என்று கூட இந்த முன்னுரையை வாசிப்பவர்களுக்கு ஒரு எண்ணம் வரக் கூடும்; இந்த குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும், துறவைப் பின்புலமாகக்கொண்ட கதை, சுமார் 1,70,000 சொற்கள் கொண்ட, சுவாரசியம் குறையாத வாசிப்புக்கு உத்தரவாதமளிக்கிற புனைவாகப் பெருகுவது ஒரு அசாத்தியமான காரியம்!

யதியின் நாயகர்கள் நால்வரான விஜய், வினய், வினோத், விமல் (விமலன் என்ற விளிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது, ‘விமலா, விடைப்பாகா, வேதங்கள் ஐயா என்றழைக்கும் என்பதாலும் இருக்கலாம்...) ஒருவர் பின் ஒருவராகத் துறவுத் தேடலில் ஈடுபடுவதற்காகக் கிளம்புவதும், இறுதியில் அவர்கள் என்ன காரணத்திற்காகத் திரும்பச் சேரும் சூழல் வருகிறது என்பதும்தான் கதையின் ஓரிழை (ஒன்லைன்).  இதில் நான்கு பேரும் நான்கு விதமான துறவு வர்க்கத்தில் நுழைந்து புறப்படுகிறார்கள்.

துறவிகளில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்ற நிலையடைந்த ஞானிகள் உண்டு ; மந்திரம், மாந்திரீகம், கருப்புலகம், ஆவிகள், யட்சினிகள் என்ற புலத்திற்குள் உழலும் கேரளச் சாமியார்களின் பிரிவு உண்டு; ஏதோவொரு இயக்கத்தைப் பற்றிக் கொண்டு பாண்டுரங்கா, பண்டரி நாதா, ஹரே கிருஷ்ணா என்று பாடிக்கொண்டலையும் துறவு மார்க்கம் உண்டு, சாதாரண மக்கள் எண்ணி அச்சப் படுகிற அளவில் அரசின் அதிகார மட்டத்தின் சகல இழைகள், நிகழ்,நிழலுலகின் முடிசூடா மன்னர்களுடனான தொடர்புகளோடு இயங்கும் துறவிகள் வர்க்கம் உண்டு; இத்தைகய துறவின் அனைத்துப் புலங்களிலும் புகுந்து புறப்படுகிறது யதியின் கதை மாந்தர்களின் கதை. இந்த ஒவ்வொரு இழையும் பிரித்து நெய்யப்பட்டால் கிடைக்கும் துறவின் பேரெழில் துகிலே யதி.

இவ்வாறு துறவின் நான்கு படிம நிலைகளை முன் வைக்கின்ற பொழுதில் அவை நான்கையும் ஒப்பிட்டுச் சிந்திக்கவும்; துறவு என்றால் என்ன என்பதன் ஆதாரக் கேள்வியை எழுப்புவதையும் யதி உங்களுக்குள் இடறி விடுவது நிச்சயம்; ஒரு வகையில் அதுவும் இந்தப் புனைவின் வெற்றிகளில் ஒன்று.

மேற்கண்ட நான்கு துறவு நிலைகளுள் ஒரு கூற்றைக் கொண்ட விமலன், கதையின் முடிவில் தான் கைக்கொண்ட துறவின் வழியை மீண்டும் துறவைத் தொடர்வானா அல்லது துறவின் மேன்மைகளின் உன்னதங்களை மட்டும் தனதாக்கி துறவின் உன்னதத்துவத்தை அடைந்து சிவனை ஒத்த சித்தனாகி விட்ட தன் ஒரு சகோதரனையும்,  வாழ்வின் பலவீனங்களின் சறுக்கல்களைத் தனது துறவு முயற்சியின் ஊடாகச் சந்தித்து அவற்றில் வீழ்ந்து, எழுந்து, வீழ்ந்து, எழுந்து கடைசியில் தியாகத்தின் மூலமும், எதனையும் பெற விரும்பாமல், எல்லாவற்றையும் கொடுக்க விரும்பிய நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்டு தானும் சித்தனாகி விட்ட இன்னொரு சகோதரன் வழியிலான துறவின் வழியை மேற்கொள்வானா,  என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை; சொன்னால் அவன் துறவியாகவே தொடர்வானா என்ற ஐயத்தையும் கூடத் தொக்கி வைத்து முடிகிறது யதி. ஆனால் உறுதியாகத் தெரிவது ஒரு நல்ல மானுடனாக அவன் தொடர்வான் என்பது. அதுதானே என்றைக்குமான சமூகத் தேவை. J.

இந்தத் துறவிகளைப் பெற்றவளான வி’க்களின் தாய் கதையின் பெரும்பகுதியிலும் படர்க்கை முறையில்தான் அறியப்படுகிறாள்; தன்மையில் அவள் பேசுவது, சொல்வதெல்லாம் மிகச்சில சொற்கள்தான்; மொழியின் குழந்தை’யாக அறியப் படுகிற ஒருவனைப் பெற்றெடுத்த அவள் பேசுகிற மிகக் குறைந்த சொற்கள் அவளைப் பற்றிய பிம்பம், கதையில் நியாயமாக, நிழலாகத் தேய்ந்து மறையவே துணை புரிந்திருக்க வேண்டும்; ஆனால் கதையின் எதிர்பாரா ஒரு கணத்தில் அவளது பிரம்மாண்டம் துலக்கம் பெறுகிறது. அந்த துலக்கம் சரியாகப் புரிந்து கொள்பவர்களுக்கு ஒரு தரிசனமும் கூட.

துறவும், காமமும் :
துறவுக்கும், காமத்துக்குமான இழை எப்போதும் பேசு பொருளாவது. அருணகிரிநாதரிலிருந்து, பட்டினத்தடிகளிலிருந்து, சமீபத்திய ஓஷோ ரஜனீஷ் மற்றும் கண்ணதாசன் வரை காமத்தின் வேட்புக்கும், துறவின் வாசனைக்குமான இழை விரிவாகப் பேசப்பட்ட ஒன்று. ஒருமுறை நண்பர் மோகன்ஜியின் வலைப்பக்கப் பதிவான காமச்சேறு என்ற பதிலில் இதைப் பற்றி நான் ஒரு பக்கமும், பல நண்பர்கள் ஒரு பக்கமும் நின்று விரிவாக விவாதித்தகணங்கள் எனக்கு நினைவிலாடுகின்றது.காமத்தின் துறப்பும், துறவின் துவக்கமும் ஓரிழையில் அமைந்தவையா என்பது ஒரு ஆதாரக் கேள்வி. இதற்கு நோக்கர்களின் பார்வையில் பலவிதமான கருத்துகள், மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப் படலாம்.

இந்த - காமம் மற்றும் துறவு இரண்டுக்கிடையேயான ஆதாரக் கொக்கிக் கேள்விக்கான பதிலை யதி இரு விதமான நேரெதிர் பார்வைகளில், இருவிதமான பாத்திரங்கள் வாயிலாக முன்வைக்கிறது. அந்தப் பார்வைகளின் நியாய அநியாயங்களை வாசகனின் மன விவாதத்திற்கு விட்டு விடுகிற போக்கு யதியில் நல்ல ஒன்று.

தீண்டுவீராயின் திருநீல கண்டம் என்று சொல்லிக் கட்டி வைத்துவிட்ட யாழ்ப்பாணனின் மனைவி பற்றிச் சொன்ன திருமுறைகளை ஓதியறிந்தது தமிழுலகம்; அதன் ஒரு இழைக் கூற்று யதியிலும் உண்டு; இந்த இழை காமத்தை விலக்குவதே துறவின் வாயில் என்ற ஒன்று சொல்லப்படுவதாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். காமம் படிந்த துறவு, பாழ்பட்ட மேன்மையின் உச்சநிலை என்ற கருத்தாக்கத்தில் யதியின் விஜயன் எடுக்கும் முடிவு யதியின் அதிர வைக்கும் கட்டங்களில் ஒன்று.

எதிலும் திளைத்துக்கிளம்பி, வெளியேறி, புறந்தள்ளி இலக்கை நோக்கிச் செல்வதே வாழ்வு, துறவு எல்லாவற்றிற்குமான இலக்கணம் என்று சொல்லுகிற இன்னொரு இழைக்கூற்றும் யதியில் உண்டு. அப்படியாயின் இரண்டாவது பார்வையின் இலக்குதான் என்ன என்ற கேள்வி எழுவது இயற்கை.
யதியின் இறுதி அத்தியாயங்கள் ஒருவேளை இதற்கான விடையை, விளக்கத்தைத் தரக் கூடும் !

பெண்மையின் பிரம்மாண்டம்:
பெண்மை எப்போதும் உலகில் பிரவாகமெடுப்பது; பெண்மையின்றி அமையாது உலகு. பெண்மை பெரும்பாலும் அன்பின் அடித்தளம் கொண்டு அனைவரையும், அனைத்தையும் ஆண்டு கொள்வது என்பதும்; அம்மாவின் ஆதுரம், மனைவியின் கரிசனம், தங்கை, தமக்கைகளின் தோழமை, மகள்களின் பேரன்பு என்று பெண்மை அன்பின் பிரவாகத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டு ஆண்கள் உலகை ஆளுகிறது என்பதும் நிகழ்கின்ற வாழ்வின் புரிதல்.

இந்தப்பெண்மையின் இழைக்குள் ஊடுபாவாகத் திகழ்வது காமமும் அது விளைவிக்கும் விளைவுகளும்.

காமத்தை வேண்டாது துச்சமாக தூக்கி எறிந்து விடும் பெண்மை, பெண்மையின் பேரெழிலும், பேரச்சத்தின் பிரமாண்டமும் கொண்டது. அத்தகைய பெண்களைச் சந்தித்த ஆண்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கவியலும். அத்தகைய ஆண்கள் அந்தப் பெண்மையின் பேரெழிலையும், பிரமாண்டத்தையும் கண்டிப்பாக உணர்வார்கள்; நானே உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட பெண்களை எதிர்நிலையில் எதிர்கொள்ள வேண்டிய ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் அந்தப் பெண்மைச் சக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறுக்கும் அடிமட்டத்தில் கிடந்து வாழ்ந்து போகவே ஏலும். யதியில் அப்படி ஒரு ஆண் அப்படி ஒரு பெண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அந்த ஆண் கணவனாகவும் போனால்? பெண்மையின் பெருவலிவு, விசுவரூபம், பெருந்தன்மை என அத்தனையைம் தழுவிச் செல்கிறது யதியின் இந்தப் பாத்திரப் படைப்பு.   

காமம் விலக்கப்பட்ட, அல்லது மறுக்கப் பட்ட பெண்மையின் வடிவம் இன்னொரு எல்லை; அது பெண்மையின் பெரு ஊழியை ஒத்தது. இதோடு அப் பெண்ணுக்கு ஒரு தபஸ்வினியின் வலிமை சேருகிறது என்று வைப்போம்; கூடவே பழி உணர்ச்சி! என்ன ஆவான் இதை எதிர் நோக்க வேண்டிய ஆண்? யதியின் சித்ரா அந்த உணர்வோடு உக்கிரமாக நிற்கிறாள்; வினோதன் அவ்வளவு அழகாகத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறான். அவள் தோற்றாளா, வென்றாளா என்பதில் யதி வெல்கிறது.
மேற்கண்ட இரண்டு கதை நிலைகளும் யதியின் முக்கியப் பாத்திரங்களோடு கலந்தோடுகின்றன.

கதைப்போக்கின் முடிவு:
துறவுகளின் பல நிலைகள், பெண்மையின் பிரமாண்டம் என்ற இரு தடத்தில் பயணம் செய்யும் யதியில், இரு சகோதரப் பாத்திரங்கள் துறவின் இருவிதமான உச்சநிலைகளை அடைகிறார்கள்.

ஒரு துறவுநிலை, யோகத்தைக் கைக்கொண்டு, சித்த ஞான நிலை எய்தி விடுகிற ஒரு நிலை; அங்கு உடல் ஒரு பொருட்டில்லை.

இன்னொரு நிலை துறவும் வாழ்வும் சந்திக்கின்ற ஒரு நிலை; வாழ்ந்து கொண்டே துறத்தலும், துறந்து கொண்டே வாழ்தலுமான ஒரு நிலை.

இந்த இரு நிலைகளும் பெண்மையின் பிரமாண்டத்துடன் ஒரு புள்ளியில் பொருதுகின்றன. பொருதலின் விளைவில் இந்த இரு துறவின் நிலைகளும் துலக்கம் பெறுகின்றன. யதியின் பூரணத்துவமான இடம் அதுதான்.
இரண்டு முக்கியமான பாத்திரங்கள் துறவின் இந்த இரு வித நிலைகளை அடைவதுடன் நிறைகிறது கதை.

ஏதேனும் சறுக்கல்கள்?
ஒரு புனைவாக யதியில் ஏதாவது குறையாகச் சொல்ல வேண்டுமெனில் ஒன்று இருக்கிறது.
ஆம். யதி கிட்டத்திட்ட ஒரு நான் லீனியர் வடிவில் சம்பவக் கோர்வைகளைக் கொண்டு செலுத்துகிறது; அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்று, 30 ஆண்டுகளுக்குப் பின் வந்த சம்பவத்தோடு கதைப்போக்கில் இணைந்து அடுத்தடுத்துச் சொல்லப் படும்; பல புனைவுகள், நெடுங்கதைகள் இவ்வாறு எழுதப் பட்டிருக்கின்றனதான். ஒரு எடுத்துக்காட்டு பாருங்கள், பின்வரும் பகுதியில் கடைசிப் பத்தி மட்டும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து நிகழ்வு, முதல் இரண்டு பத்திகள், இப்போது நிகழ்வது; இவை இரண்டு இணையும் கணம் கதையில் எவ்விதம் தொய்வையும் ஏற்படுத்துவதில்லை.

'இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷாகற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.'  
'அப்படியா? இது எனக்குத் தெரியாதே' என்றவள் சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.  

யுனானி மருத்துவர் அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.  

இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. வினாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.

ஆனால் யதியில் இவை நிகழும் கணங்கள் அளவில் அதிகமானவை; இருந்தும் கதைப் போக்கு, சுவை சிறிதும் குன்றாமல் செல்வதுதான் கதையின் விசேஷம்.

இந்த முன்பின் உத்தி சறுக்கும் இடம் ஒன்று இருக்கிறது ; வினய் தன் மூத்தவன் விஜயால் எப்படி வரதர் குளத்தின் புஷ்கரணிக்குச் சென்றான் என்ற விவரணையில் ஒரு தொடர்வுப் பிழை இருக்கிறது. பகுதி 51 ன் இறுதியையும், 54 ன் இறுதியும் இந்த நிகழ்வைச் சொல்லுகின்றன.

ஆனால் சொல்லும் சம்பவ விவரிப்புகள் ஒன்றுக்கொன்று முரணானவை, ஒன்றில் தூங்கி எழுந்து புஷ்கரணியில் விழிக்கிறான் வினய்; இன்னொன்றில்  அவனது அண்ணன் விஜய் விழிந்திருக்கும் போதே தன் யோக சாதனையால் அவனை வரதர் கோவில் புஷ்கரணிக்கு அனுப்புகிறேன்.  இது என் புரிதலின் தவறா, அல்லது கதைப் போக்கில் நிகழ்ந்த சிறு பிழையா என்பதை பா.ரா’தான் கவனிக்க வேண்டும்.

- அறிவன்
2018  நவம்பர்- ஒரு ஞாயிறின் அதிகாலை
சிங்கை



Quotable Quotes of யதி (’யின் சில மட்டும்)
அசைந்துகொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பதே உலகின் இயல்பு என்று எடுத்துச் சொல்லுகிற லாகவம். இயல்பே ஆனாலும் இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று போதிக்கிற பாவனை. இயல்பு மீறும் போது மரம் முறிந்துவிடுகிறது.  
 'அங்கே பாருங்கள். அந்த மரங்களின் அசைவைக் கவனியுங்கள்.'  
நான் சுட்டிக்காட்டிய திசையில் சீடர்கள் திரும்பிப் பார்த்தார்கள். 'தலையைக் கலைத்துவிட்டுக் கொண்டு சாமியாடும் பெண்களைப் போன்றதல்ல மரங்களின் ஆட்டம். தலை ஆடிக்கொண்டிருந்தாலும் ஒழுங்காக வகிடெடுக்கிற நேர்த்தி அதில் ஒளிந்திருப்பது தெரிகிறதா?'  
'ஆமாம் குருஜி!' வியப்போடு சொன்னார்கள்.    01- நீலக்குறிஞ்சி

()
தொண்ணூற்று நான்காம் வருடம் ஆனமலையில் குறிஞ்சி பூத்தபோது நான் தனியாள். அன்றெனக்குக் காவி இருந்தது. ஆனால் அடையாளமில்லை. சீடர்கள் கிடையாது. நான் சொல்வதைக் கேட்க நான்கு பேர் இல்லை என்பதல்ல விஷயம். எனக்கு சொல்லத் தெரியுமா, என்ன சொல்வேன் என்பதில் எனக்கே குழப்பம் இருந்த காலம் அது. ஆனால் என் குரு தீர்மானமாகச் சொன்னார். 'மொழியின் குழந்தை நீ.'
-01 நீலக்குறிஞ்சி

()

சரியான மொழி வசமாகிவிட்டால் அபத்தங்களின் அழகியலை உதறி விரித்து உலர்த்திவிடலாம். அனுபவம் எனக்குக் காட்டித்தந்த பாடம் அதுதான்.                              02-புரிதலில் இருந்து விடுதலை

()
சாதனைகள் புரிந்து பழகுவதற்குத் தனிமை தேவை என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு போதையாகிவிடும் அளவுக்குத் தனிமை பழகிவிடுவதும் ஆபத்தே அல்லவா? நான் சன்னியாசம் ஏற்றபோது எனக்குள் நியமித்துக்கொண்ட வைராக்கியம், எதனிடமிருந்தும் விலகுவதில்லை என்பதுதான்.   'அப்புறம் அது எப்படி சன்னியாசமாகும்?' என்று என்னோடு குருகுலத்தில் பயின்ற மாணவன் ஒருவன் ஒரு சமயம் கேட்டான்.   'ஆகும். விலகுவதற்குச் சமமான வீரியம், நெருங்கிக் கரைந்து காணாமல் போய்விடுவதிலும் உள்ளது'.                 04-நாமகரணம்

()
 'குருஜி, நீங்கள் பெண்களின் முலைகளை எண்ணிப் பார்ப்பதுண்டா?'  
அவர் யோசிக்கவேயில்லை.
சட்டென்று பதில் சொன்னார்,
'கண் திறந்த கணத்தில் பார்த்த முதல் உறுப்பு. எப்படி நினைக்காதிருப்பேன்? முலைகள்தாம் என் கடவுள். ஆனால் கடவுளைத் தொட்டு, கசக்கிப் பார்க்க எனக்குச் சக்தி இல்லை.'    - 04  நாமகரணம்

()

அந்தக் கணத்தில்தான் எனக்குத் தோன்றியது.
எதற்கும் அதிர்ச்சியுறாத ஒரு வாழ்வை எனக்கே எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்துகொண்டால் என்ன? துக்கம் தரத்தக்க எதையும் அண்டவிடாதிருப்பது. துக்கத்தின் ஒரு சொட்டு நிழலும் என் மீது படியாமல் பார்த்துக்கொள்வது. துக்ககரமான எந்த ஒரு நிகழ்விலும் பங்கு கொள்ளாதிருப்பது.  
குருநாதர் இறந்துவிடுவார் என்று தெரிந்தபோது நான் ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டதன் காரணம் அதுதான்.

எனக்கு அவர்மீது பற்றில்லாமல் இல்லை. பாசமில்லாமல் இல்லை. பக்தியோ, மரியாதையோ சற்றும் குறைந்ததேயில்லை. நான் ஆக நினைத்த வடிவை அவர் எனக்குச் சமைத்துக் கொடுத்தவர். என் ஆளுமையின் பிரம்மாண்டம் அவர் வடிவமைத்தது. அதில் சந்தேகமில்லை. ஆனாலும் மரணம் துக்ககரமானது. உலவிய ஒரு உயிரைக் கிடந்த கோலத்தில் காண்பது ஒரு சவால். வைராக்கியத்துக்கோ, விரக்திக்கோ இட்டுச் செல்லும் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை
-        23 – துக்கம் தவிர்த்தல்

()
உறவு நிலைகளின் புதிர்த்தன்மை பேரெழில் கொண்டது. அன்பென்றும் பாசமென்றும் ஒற்றைச் சொற்களில் அனைத்தையும் முடிந்து வைத்துவிட நினைக்கிறது மனம். உண்மையில் சொற்களற்ற பெருவெளியில் காற்றில் அலைக்கழியும் ஒரு சிறு சிறகு அல்லது சருகு நிகர்த்த ஸ்தூலமாகத்தான் நான் அதைஉணர்ந்தேன். எதையும் நகர்த்தி வைத்துவிட முடியும் என்று தோன்றியது. தேவை என்ன, அவசியம் என்ன என்பதுதான் விஷயம்.       – 29 கண்ணீரின் கனம்
 ()
அறிமுகமற்ற முகங்களின் நடுவேதான் தனிமையின் உச்சத்தைக் கண்டுணர முடியும். கூட்டத்தில் கரைவது காற்றில் கரைவதினும் பேரனுபவம்.       - 38 மீன் உண்டவன்
 ()
அற்புதங்கள் எனக்குப் பிடிக்கும்.
ஆனால் அவை கதைகளில் மட்டுமே நிகழக்கூடியவை என்று நினைத்தேன். துயரங்களின் அடியாழத்தில் அமர்ந்திருந்தும் அதன் ஈரம் படாமல் என்னைத் தற்காத்துக்கொள்ள முடிந்ததன் பலன் அது ஒன்றுதான். எதற்கும் உணர்ச்சி வயப்படுவதில்லை. எது குறித்தும் பரவசமாவதில்லை.
கண்ணீர்?
அறவே கிடையாது. புன்னகை ஒன்றைத்தான் என் போர்வையாக்கிக்கொண்டிருந்தேன்.
அது தேவைப்படுகிறது. எதையும் மறைப்பதற்கு. அல்லது எதையாவது அடைவதற்கு. சொல்கூட அப்போது எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. புன்னகை போதுமென்று நினைத்தேன். என் புன்னகையை நீங்கள் அறிய மாட்டீர்கள். அதில் தெய்வீகம் கிடையாது. மயக்கும் குண விசேடங்கள் ஏதுமில்லை. அது இயல்பானது. பாவனைகள் களைந்த ஒரு மாயப் பாவனை கொண்டது. கணப் பொழுதில் விரிந்து நிறைந்து மறைந்துவிடக் கூடியது. ஆனால் அதற்கொரு நாதமுண்டு. புன்னகையின் நாதம். புலரியின் வசீகரத்துக்கு ஒப்பானதொரு நாதம். அதையே ஆயுதமாகவும் கேடயமாகவும் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.  39- அக்னி சந்தானம்
 ()
அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் என் புன்னகையைத்தான் முதலில் எடுத்து விரிப்பேன். அதில் பரவசம் இருக்காது. உணர்ச்சிப் பெருக்கு இருக்காது. கண்ணீர் இருக்காது. கதறல் அறவே இராது.
ஒரு புன்னகை. வெறும் புன்னகை.
ஆனால் சகல உணர்ச்சிகளையும் அது உள்ளடக்கியிருக்கும். என் கண்ணை நீங்கள் உற்றுப் பார்த்தால் என் புன்னகையின் ஊற்று அங்கே புலப்படும். இதழ்களால் புன்னகை செய்வது இயற்கை விரோதம். கண் போதும். கணப் பொழுது போதவே போதும். அவனில்லாமல் வளர்ந்த வருடங்களில் நான் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் மௌனத்தால் அவர்களை ஈர்த்து நிறுத்தவும் பழகிப் பயின்றிருந்தேன். வீட்டில்கூட வீணாகப் பேசுவதே கிடையாது. ஒரு சொல்லில் ஒரு பதில். அல்லது ஒரு பார்வையில் ஒரு வினா. சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். 39- அக்னி சந்தானம்
 ()
எனக்கு அதுதான் உடன்பாடற்றதாக இருந்தது. மரணத்தை எதற்கு வெல்ல வேண்டும்? வாழ்வின் அனைத்துப் பிசிறுகளையும் நான் விரும்பினேன். மரணம் உள்பட. முரண்பாடுகளில் ஒளிந்துள்ள கவித்துவத்தை ரசித்தேன். கண்ணீரின் ருசியும் புன்னகையின் வாசனையும் இணையும் புள்ளியைத் தேடுவதை விடுத்து மரணத்துக்கு எதிரான துவந்த யுத்தத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?  
கடவுள். ஐயோ அவன் ஒருத்தன் இந்த யோகிகளை என்ன பாடு படுத்தி எடுக்கிறான்!
வாழ்வை விடுத்து மலை முகடுகளில் அவர்கள் தேடிச் செல்லும் பக்காத் திருடன். சிலருக்கு அவன் அகப்படுகிறான். பலர் இறுதிவரை தேடிவிட்டுக் காலாவதியாகிவிடுகிறார்கள். ஆனால் காலம் தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சௌக்கியமாகத் தேடட்டும். எனக்கு அதில் ஆர்வம் இல்லை. நிகழ மறுக்கும் அற்புதமான இந்த வாழ்வே எனக்குப் போதும். இதன் கசடுகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இதன் துவர்ப்பு பிடித்திருக்கிறது. இதன் வாசனையும் துர்நாற்றமும் எனக்குப் பாதுகாப்பாக உள்ளது. போதும்.
அற்புதங்களை அவர்களே நிகழ்த்திக்கொள்ளட்டும். அதை வியக்க நான் ஆளில்லை.
-      41 பிசிறுகளின் காதலன்.
 ()
மனோமயகோசத்தைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அது பிராணமயகோசத்தின் பங்காளி. இந்த இரண்டுமே சூட்சும வகையறா. இதனால்தான் சூட்சுமத்தை சிந்திக்காதே என்கிறேன்.
ஸ்தூலத்தில் இருந்து தொடங்கு. உன் உடலைக் கவனி. சிறிய பிரயத்தனங்களில் அதை உன் வசப்படுத்திவிட முடியும்.'  
'ஆனால் உடலைக் கவனித்தால் போதுமா?'  
'முடிந்ததைச் செய்வதுதான் யோகம். முடிந்ததையும் செய்யாதிருப்பதுதான் யோகத்தின் எதிர்நிலை.'
 – 46 உடலாகு பெயர்
 ()

Saturday, January 21, 2017

194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி

சுற்றி நிற்காதே போ, பகையே !

நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் போராட்டம்.
இவ்வளவு தன்னெழுச்சியாக மக்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டது இரண்டு போராட்டங்களிலும் நடந்த ஒற்றுமை. மக்கள் உணர்வு ரீதியாக போராட்டத்தின் காரணத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். உண்மையில் மக்கள் உணர்வு ரீதியாக ஈடுபட்டு நடக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. வரலாறு இதை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பதிவு செய்திருக்கிறது. இது ஒற்றுமை.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

Monday, May 23, 2016

193-வெள்ளையானை - நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம்



வெள்ளையானை- நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நெடுங்கதை அனுபவம் !

ஜெமோ எழுதிய வெள்ளையானை என்னும் நெடுங்கதைப் புத்தகத்தை இப்போது(தான்) படித்தேன்.

எய்டன் என்ற அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்துப் படையில் சேர்ந்து காலனிய நாடான இந்தியாவில் மதராசப் பட்டனத்தில் கேப்டன் பொறுப்பில் இருப்பவனுடைய பார்வையில் விரிகிறது கதை. இன்றைக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஆண்டான் அடிமைத் தனமான மனோபாவம் உச்சத்திலிருந்த 1870 கள்தான் கதைக்களத்தின் காலம்.

மதராசப் பட்டினத்தில் இருக்கும் அமெரிக்க நிறுவனமான ஐஸ் ஹவுசில் நிகழும் தொழிலாளர்களின் மீதான கொடுமைகளும், அவர்களின் பனிச் சூழல் நரகநிலையும், தினக்கூலிகளாக எந்தவிதப் பெயரடையாளங்களுமற்று தினப்படி வேலைக்கு வரும் எண்ணிக்கையால் மட்டுமே அமைந்த அவர்கள் வாழ்வியல் கொடூரங்களும், அவர்களை கண்காணிக்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த கண்காணிகளிடத்து பஞ்சமர்களான தொழிலாளர்கள் அடையும் விலங்குகளை விடக் கேவலமான வாழ்வு நிலையும் அமைந்த சூழலை, அத்தொழிலாளர்களில் இருவர் தங்கள் நிலை குறித்துப் புகார் செய்ய முயற்சித்ததனால் கடைசியாக் கொன்று, கடலில் வீசப் படுகிற கணவன் மனைவியான இரு தொழிலாளிகள், கேப்டன் எய்டன் கண்ணில் பட்டு அறிமுகமாகும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த நெடுங்கதை!

ஆட்சி நிகழ்த்தியிருக்கும் அவலம்...1877 காலகட்டம்

Monday, May 16, 2016

192. தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2016 - 1



சட்டமன்றத் தேர்தல் 2016 - வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் இந்த தேர்தல் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் தேர்தல். எவ்வகையில்?
Image result for election 2016 tamilnadu-images


-திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் தோன்றி,வளர்ந்து வேரூன்றியதற்கான சமூக பொருளாதாரக் காரணங்கள் வலிமையானவையே.ஆனால் திராவிடக் கட்சிகள் முன்வைத்த சமூக நீதி என்ற இலக்கிலிருந்து அவை விலகத் துவங்கிய 80 களில் இருந்து துவங்கிய அக்கட்சிகளின் தார்மீக வீழ்ச்சி அதன் உச்சத்தை அடைந்த காலகட்டம் என்று 2006-2011, 2011-2016 ஐச் சொல்லலாம். திராவிடக் கட்சிகளின் இரு பெரிய வடிவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தக் காலகட்டங்களில் நடத்திய ஆட்சி அழகைக் கண்டு மொத்தத் தமிழகமும் வெதும்பும் நிலைக்கு வந்துவிட்ட நிலையில் நடக்கும் தேர்தல் இந்தத் தேர்தல்.
Image result for sagayam ias

-இந்த வெதும்பல் நேர்மையாகச் செயல்படும் அதிகாரி என்றறியப் பட்ட ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரான திரு.சகாயம் அவர்களை மாநிலத் தலைமை ஏற்க வரும்படி பெருவாரியானவர்கள் மன்றாடி அழைத்த சூழல்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...