இந்தியாவில் பல சமயத்தவர் வாழ்கின்றோம்.பல சமயத்தவருள் பற்பல சடங்குகள்,சம்பிரதாயங்கள் செய்கிறார்கள்.
இவை எல்லாவற்றிலும் மனித குலத்தின் பிறப்பு,இறப்பு தழுவிய சடங்குகள் பலராலும் தவறாது செய்யப்படுபவை கண்கூடு.
இன்னும் சொல்லப்போனால் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தத்தம் முன்னோர்களை நினைவுகூரும் விதமான சடங்குகளை ,குடும்ப மூத்தவர்கள் சொல்ல சிரத்தையுடன் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.
நான் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் போது மற்ற நாடுகளில் இது போன்ற பழக்கவழக்கங்கள் என்ன என்பதெல்லாம் பற்றி கூர்ந்து ஆராய்ந்ததில்லை.
சிங்கப்பூரில் சிலகாலம் இருந்தும் சீனர்கள்,மலாய் இனத்தவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் உன்னிப்பாகக் கவனித்ததில்லை;நான் மட்டுமல்ல,பொதுவாக இந்திய மென்பொருள் வேலையர்கள் இங்கு பல காலம் தங்க நேரும் போது கூட சீனர்கள்,மலாய்க் காரர்களின் சமூக,சமய சடங்குகள்,கொண்டாட்டங்களில் முனைப்புடன் இணைவதோ,கலந்து கொள்வதோ இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பொதுவாக சீனர்களுக்கு பிப்ரவரியும்,ஆகஸ்ட்-செப்டெம்பரும் சமூகம் சார்ந்த கொண்டாட்ட,சடங்கு நிகழ்வுகள் நடக்கும் முக்கிய காலங்கள்.
முன்னது சீனப் புத்தாண்டு;பின்னது Ghost Month Celeberation என அவர்கள் அழைக்கும் நீத்தார் நினைவுக் கொண்டாட்ட காலம்.
சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் இந்த ஆண்டு ஒரு சீன நண்பர் அழைப்பில் அவர் வீட்டுக்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தேன்.
ஆகஸ்ட்-செப்டெம்பரில் எனது குடியிருப்புக்கு கீழேயே இவ்வாண்டு மிகப் பெரும் கொண்டாட்ட முஸ்தீபுகள் களை கட்டின.மூக்கு வேர்த்ததால்,இம்முறை இவற்றின் தாத்பரியம் என்ன என்று அறிந்து கொண்டே ஆகவேண்டும் என தீர்மானித்தேன்.அதில் கலந்து கொண்ட சீன நண்பர்களிடம் கட்டை போட்டதில் அறிந்தவைதான் இங்கே !
இரண்டு நாட்கள் பகலிரவாக அலங்காரங்கள் நடைபெற்றன.பின்னர் கிட்டத்திட்ட மூன்று நாட்கள் பலர் கூடி வழிபாடும் விருந்தும்.
வழிபாடு பெரும்பாலும் புத்தருக்கு;வழிபாட்டு சமயத்தில் எவரெவரின் நீத்த மூத்தோர்களை நினைவு கூர வேண்டுமோ அவர்கள் இந்த சடங்குகளை நடத்தி வைக்கும் பிக்குகளுக்கு முன் பணம் கொடுத்து விட வேண்டுமாம்.
இப் பிக்குகள் பெரும்பாலும் தனியர்களாய்,குடும்பம் இல்லாமல்,சீனக் கோவில்களிலேயே தங்குபவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் அழகழகான கண்ணாடியாலான(அழகான கடைசல் வேலைபாடுடன் கூடிய கண்ணாடி சிமிழ் மேலே,கீழ்ப்புறம் LPG அடைக்கப் பட்டு திரி மட்டும் மேல்தெரியும் பகுதி;எரியும் போது மிக அழகு!) விளக்குகள்,படத்தில் போல,பெருமளவில் ஏற்றி வைக்கிறார்கள்;கட்டுக் கட்டாக டாலர் வடிவம் அச்சடித்த,டாலர் அளவில் அமைந்த பேப்பர்களை நெருப்பில் எரிக்கிறார்கள்;சாதம்,ஆரஞ்சு,அறுகோண வடிவில் பல நிறத்தில் அமைந்த பஞ்சு போன்று மெத்தென இருக்கும் ஒரு தின்பொருள்-எல்லாம் தரையில் பரப்பி ஒரு கட்டு ஊது பத்திகளை ஏற்றி வைப்பார்கள்...எல்லாம் குடியிருப்பின் நடை பாதையோரத்தில்...
இவை அனைத்தும் நீத்தாருக்காக,விளக்குகள் அவர்களுக்கு பாதைகளில் ஒளி கொடுக்கவும்,எரிக்கப் படும் டாலர் வடிவ காகிதங்கள் அவர்கள் மறு உலகில் செலவு செய்யப் பணமாகவும்,படைக்கப்படும் உணவுகள் அவர்களுக்கு உணவாகவும் பயன்படும் என்றும் நம்புகிறார்கள்.
சீனர்களின் வாழ்விலும் நெருப்பு,வான்வெளி ஆகியவை(பொதுவில் பஞ்சபூதக் கூறுகள்) முக்கிய சமூக,சடங்குகள் சார்ந்த அடையாளங்களாக விளங்குவதை அறிய முடிகிறது.
ஆழ்ந்து நோக்கும் போது உலகின் மிகப் பெரும் இரு நாகரிகங்களில்(இந்திய,சீன)பழக்க வழக்கங்கள்,சடங்குகள் பெரும்பாலும் ஒத்த அளவிலேதான் இருந்திருக்கின்றன.
மிக்க நன்று
ReplyDelete