Pages - Menu

Monday, August 13, 2012

* * * * * 161.சீரகம் தந்தீரேல்-நாளொரு பாடல்-11



வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன
இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே.

நூல் : தனிப்பாடல் திரட்டு
ஆசிரியர் : பலர், இப்பாடலுக்கு காளமேகப் புலவர்
முக்கியக் குறிப்பு : சிலேடைப் பாடல் வகையைச் சேர்ந்தது.

பதம் பிரித்த பாடல்:
வெம் காயம் சுக்கு ஆனால், வெந்த அயத்தால் ஆவதென்ன
இங்கு யார் சுமந்து இருப்பார் இச் சரக்கை
மங்காத சீர் அகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெரும் காயம் ஏரகத்துச் செட்டியாரே

முக்கிய சொற்கள்:
வெம் காயம்- வெங்காயம் மற்றும் உடல்; வெந்த அயம்- வெந்தயம் மற்றும்  இரும்பைச் சேர்த்துச் செய்த சக்தி வாய்ந்த மருந்துகள் ; சரக்கு- கடைச் சரக்கு மற்றும் உடல் ; சீர் அகம்- சீரகம் மற்றும் ஆன்மாவின் உய்வு ; ஏரகத்துச் செட்டியார் - கடைச் செட்டியார் மற்றும் முருகப் பெருமான்

கருத்து:
கடைச் சரக்கு நோக்கில் -
கடைச் சரக்கை விற்கும் ஏரகத்துச் செட்டியாரே,
வெங்காயம், வெந்தயம் போன்ற பொருள்கள் வாங்கி வைத்திருக்கையில், வெங்காயம் வாடி வதங்கிப் போய் விட்டால், அந்த இரண்டு சரக்கினாலும் பயன் இல்லை, எனவே யாரும் அவற்றைச் சுமந்திருக்க மாட்டார்கள். எப்போதும் கெட்டுப் போகாத சீரகத்தைத் தந்தால், பெருங்காயம் கூடத் தேவை இல்லை...


உள்ளார்ந்த நோக்கில் -
ஏரகம் என்னும் சுவாமிமலை நாதனான முருகப் பெருமானே,
வெம்மை பொருந்திய தன்மையுடைய உடலானது, தளர்ந்து சுக்கைப் போல வற்றிய காலத்தில், அந்த உடலுக்கு (அயக்காந்த செந்தூரம் போன்ற) நல்ல மருந்துகளால், உடலானது மேலும் பழுது பட்டுச் சிதையாமல், காக்க முடிந்தாலும், அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை; உடலில் உலவும் உயிரானது நன்மை நிலையை அடைந்து, வீடு பேறு கிடைக்கும் எனில், இவ்வாறு சுக்காக வற்றிய உடலைத் மேலும் நிலைநிறுத்தும் வண்ணம் தேடாது, உன் கருணையால் உய்வேன்..


டிட் பிட்ஸ்:

  • முருகன் வள்ளியைத் தேடி வந்த காலத்தில் வளையல் விற்கும் செட்டியார் உருவில் வந்ததாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. எனவே முருகனைச் செட்டியாரே என்று அழைக்கிறார் புலவர்.
  • மங்காத சீரகம் என்ற சொலவடை உயிர் மீண்டும் உலகியலில் பிறந்து இழைந்து மங்காத நிலையான வீடுபேற்றை அடைவதைக் குறிக்கிறது.
  • வீடுபேறு கிடைக்கும் நிலையில், நிலையற்ற உடலைப் பேணும் தேவை இருக்காது, எனவே பெருங்காயத்தைத் தேட மாட்டேன் என்கிறார்.
  • உடல் வற்றித் தளர்ந்து செல்லும் காலத்து, உடலை நிலைநிறுத்த பல காயகல்ப மருந்துகள் தேவைப் படுகின்றன. ஆன்ம உயர்நிலையை அடைய உடல் வடிவம் தேவைப் படுகிறது. எனவே உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே, ஆன்ம நிலையிலும் தேர்ச்சி அடைய முயல வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து.
  • பட்டியலிடப் பட்ட கடைச் சரக்குகளில் சீரகம் கெடாமல் இருக்கும் என்பதும், அகம்(உயிர்) சீர் பெற்றால், பிறவிக்குப் பயன் கிடைக்கும் என்பதும் சுட்டிய பொருள்.

11  | 365

7 comments:

  1. இவையெல்லாம் அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் தனபாலன் எப்போதும் போல் முதல் வருகைக்கு.. :)

      Delete
  2. "வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன" இதை கேள்விப் பட்டிருக்கிறேன். இதன் முழுப்போருளை இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. || இதன் முழுப்போருளை இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நண்பரே! ||

      பலருக்குத் தெரிய வேண்டும் நோக்கதிலேயே இதை நாளொரு பாடல் பகுதியில் சேர்த்தேன்.

      Delete
  3. அருமையான பாடல் !!! மற்றும் விளக்கங்கள் .. இப்படியான பழம் பாடல்களை விளக்கி பதிவிட்டால் என்னை போன்றோருக்கு புரியும்படி இருக்கும் .. நன்றிகள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் இக்பால் செல்வன்..

      || இப்படியான பழம் பாடல்களை விளக்கி பதிவிட்டால் என்னை போன்றோருக்கு புரியும்படி இருக்கும் .. நன்றிகள் !!! ||

      இந்த நோக்கத்திற்காகவே தினந்தோறும் ஒரு தமிழ்ப்பாடல் என்ற வகையில் ஒவ்வொரு பதிவிட்டு வருகிறேன்..ஆர்வமிருப்பின் நீங்கள் தினமும் வாசிக்கலாம்.

      நன்றி, பாராட்டுக்கும் கருத்துக்கும்.

      Delete
  4. வணக்கம்.
    பல ஆண்டுகள் நான் தேடிய பாடலும் விளக்கமும். மிக்க நன்றி. தொடரட்டும் மகேசன் சேவை ஐயா.

    ReplyDelete