Pages - Menu

Tuesday, August 14, 2012

* * * * * 162.பாரதி துறந்த பூணூல்




பாரதியார் சுந்தர ரூபன்.மாநிறம்.ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.அவருடைய மூக்கு மிகவும் அழகான மூக்கு.அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப்பட்டதைப் போலிருக்கும் அந்த அழகிய நாசி.ஸீஸர்,ராஜகோபாலாச்சாரியாருடவை போல கருட மூக்கல்ல.ஸீஸர் மூக்கு நடுவில் உயர்ந்து,நுனியில் கூர்மையாகி,கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும்.பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போலிருக்கும்.நீண்ட நாசி. அந்த நீளத்தில் அவலட்சணம் துளி கூட இருக்காது.
பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள்.இமைகளின் நடுவே,அக்கினிப் பந்துகள் ஜ்வலிப்பது போல பிரகாசத்துடன் விளங்கும்.அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.
()
பாரதியாருக்கு மீசை உண்டு.அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும்.கண்ணைக் குத்தும் கெய்ஸர் மீசையல்ல;கத்திரிக்கோல் பட்ட 'தருக்கு' மீசையல்ல; தானாக வளர்ந்து பக்குவப்பட்டு,அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை.அவரது வலக்கை எழுதாத நேரங்களிலெல்லாம் அனேகமாய் மீசையை முறுக்குவதாகத் தோன்றாது;மீசைக்கு 'டிரில்' பழக்கிக் கொடுப்பது போலிருக்கும்.
சில சமயங்களில் தாடி வைத்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி மீசை மட்டும்தானிருந்தது.ஒரே ஒரு சமயந்தான் மீசை இல்லாமலிருந்தார் என்பது என் நினைவு.அவருடை நடுநெற்றியில் சந்திர வட்டத்தைப் போலக் குங்குமப்பொட்டு எப்பொழுதும் இருக்கும்.குங்குமப்பொட்டு இருப்பதில் அவருக்கு ரொம்பக் கவனம்.
()
அந்த 1910-11 ஆம் வருஷங்களில்,பாரதியாரின் பெயரும் கீர்த்தியும் நாடு முழுவதும் பரவவில்லை.
சென்னையில் ஸ்டாண்டர்ட் என்ற ஆங்கிலத் தினசரி ஒன்று நடந்து வந்தது.அதற்கு ராமசேஷையர் என்பவர் அதிபர்.இந்த பத்திரிகையைத்தான் பின்னர் நியூ இந்தியா என்ற பெயருடன் ஸ்ரீ  அன்னிபெசண்ட் நடத்தி வந்தார்.ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் பாரதியாருக்கும் கும்பகோணம் புரொபஸர் சுந்தர ராமய்யர் அவர்களுக்கும் அத்வைதத் தத்துவ தரிசனத்தைப் பற்றிச் சுமார் நான்கு மாத காலம் வரையில் விவாதம் நடந்து வந்தது.
இந்த வாதத்தில் ஒரு ஸ்வாரஸ்யம்.தத்துவத்தின் வியாக்கினத்தில் இரண்டு பேருக்கும் அபிப்ராய பேதம் வந்து விட்டது.சுந்தர ராமய்யருக்கு சாஸ்திர ஆராய்ச்சிப் பழக்கம் நிரம்பவும் உண்டு.பாரதியாருக்கு அவ்வளவு பழக்கமில்லை.(அந்தக் காலகட்டடத்தில்).இவர்களுடைய வாதம் எப்படி நடைபெறுகிறது என்பதைக் கவனிக்க இந்தக் கட்டுரைகள் வரும் பத்திரிகையை எதிர்பார்த்த வண்ணமாய் நாங்கள் துடிதுடித்துக் கொண்டிருப்போம்.
சுந்தர ராமய்யருக்குப் பக்கபலம் அவருடைய நூல்பயிற்சி.பாரதியாருக்குப் பக்கபலம் அவருடைய நுண்ணிய அறிவும் மேதையும் ஆவேசமுமாகும்.இரண்டு மத்தகஜங்கள் மோதிக் கொண்டால் அது எப்படி இருக்கும்?வீரனுடைய தன்மையை இன்னொரு வீரன்தான் அறிய முடியும்.சுந்தர ராமய்யர் படித்த புலவர்; பாரதியாரோ மேதாவி.ஆச்சாரிய சங்கரருடைய தத்துவம் எளிதிலே பாரதியாருக்குப் பிடிபட்டுப் போய்விட்டது.
எவனும் ஈசுவரத் தன்மையை அடையலாம் என்பது பாரதியாருடைய கட்சி.எல்லாம் ஈசன் என்பது அய்யருடைய வாதம்.பார்வைக்கு இரண்டும் ஒன்று போலத் தோன்றும். எல்லாம் ஈசன் என்பது காகிதத் தத்துவம் என்பார் பாரதியார்.மனிதன் ஈசுவரத் தன்மையை அடைவதாவது என்று அய்யர் ஏளனம் செய்தார்.எங்களுக்குப் பாரதியாரிடம் அளவு கடந்த பிரேமை.எனவே அவர் சொல்லுவதுதான் சரி என்பது எங்களுடைய எண்ணம்.
ஆனால் தெளிந்த தெரிந்த இடத்தில் இதைப்பற்றிப் பேச்சு வந்தபோது நாங்கள் நினைத்தது சரியென்ற முடிவுக்கு வந்தோம்.அதாவது,அரவிந்தரின் பங்களாவில் இதைப் பற்றி சம்பாஷணை பிறக்கும்.சுந்தர ராமய்யருக்கு உண்மையில் அனுபூதி கிடையாது என்று அரவிந்தர் சொல்லுவார்.'தத்துவத்தை தர்க்கத்தால் காண முடியாது,அதை அனுபவிக்க வேண்டும்' என்பார் அரவிந்தர். பெரும்பாலும் நூல் பயிற்சியுள்ள பண்டிதர்களுக்கு தத்துவ அனுபவம் இருப்பதில்லை.அவர்கள் தர்க்க கஜக்கோலால்,மகத்தான உண்மைகளை அளக்கப் பார்க்கிறார்கள்.
()
பாரதியார் புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபின் திருவல்லிக்கேணி கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவது வழக்கம்.பாரதியாரின் சொற்பொழிவைக் கேட்க இளைஞர்கள் நூற்றுக் கணக்கில் கூடி விடுவார்கள்;வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார்கள்.
பாரதியாரின் சொற்பொழிவு வெறும் பிரசங்கமா? அது சண்டமாருதமல்லவா?' என்று அவர்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அவ்வாறு கூட்டப்பட்ட கூட்டங்களில் ஒன்றில்,ஸ்ரீ சத்திய மூர்த்தியும் இன்னொருவரும்(அவருடைய பெயர் நினைவில் இல்லை) முதலில் பேசி விட்டார்கள்.அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதைக் கூட கவனிக்காமல் சத்தியமூர்த்தி துடுக்காக 'நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதியார் நாளைக்குப் பேசுவார்.இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவுபெற்றது' என்று அறிவித்துவிட்டுப் போய் விட்டார்.
ஆனால் கூட்டம் கலையவில்லை.
பாரதியார் எழுந்திருந்தார்.ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு அழகான சொற்களில்,விதரனையாகச் சன்மானம் கொடுத்தார்.பிறகு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது போல,ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே,பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார்.அன்றிரவு கூட்டம் கலையும் பொழுது மணி பதினொன்று இருக்கும்.அன்றைக்குத்தான் என்றும் உயிரோடு இருக்கக் கூடிய 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற அற்புதப் பாடலைப் பாரதியார் பாடினார்.
()
ஒரு நாள் காலை எட்டு மணி இருக்கும்.அகஸ்மாத்தாய் நான்  அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன்.வீட்டின் கூடத்தில் சிறு கூட்டமொன்று கூடியிருந்தது.நடுவில் ஹோமம் வளர்க்கிறார்போலப் புகைந்து கொண்டிருந்தது.சிலர் வேதமந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்கள்.ஓர் ஆசிரமத்தில் பாரதியார் வீற்றிருந்தார்.இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் என்ற ஹரிஜனப் பையன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.புரொபசர் சுப்பிரமணிய ஐயர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள். 
என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரொபசரைக் கேட்டேன்.'கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டு,காயத்ரி மந்திரம் உபதேசமாகிக் கொண்டிருக்கிறது' என்றார்.'உட்கார்ந்திருப்பது கனகலிங்கம் தானே,அதிலே சந்தேகமில்லையே' என்று மறுபடியும் அவரைக் கேட்டேன். 'சாஷாத் அவனேதான்! அவனுக்குத்தான்,பாரதி காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்' என்றார் புரொபசர். 
எனக்கு ஆச்சரியாமாய் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு சில மாதம் முன்புதான்,என் பூணூலை எடுத்து விடும் படி பாரதியார் சொன்னார்.அவரோ,வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார்.தமது பூணூலை எடுத்து விட்டு, என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்கு திடீரென்று வைதீக வெறி தலைக்கு ஏறிவிட்டதா என்று எண்ணினேன்.
மௌனமாக உட்காந்திருந்தேன்.பாரதியார் நான் இருந்த பக்கம் பார்க்கவேயில்லை.மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு, 'கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்; எதற்கும் அஞ்சாதே;யாரைக் கண்டும் பயப்படாதே;யார் உனக்குப் பூணூல் போட்டு வைக்கத் துணிந்தது என்று கேட்டால்,பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டியே பதில் சொல்.எது நேர்ந்தாலும் சரி,இந்தப் பூணூலை மட்டும் எடுத்து விடாதே' என்று அவனுக்கு வேறு வகையில் உபதேசம் செய்தார்.
 
இதைக் கேட்டு,யாரேனும் வாய்க்குள்ளாகவே சிரிக்கிறார்களோ என்று பார்த்தேன்.பாரதியார் சொன்னதை ஆமோதிப்பதைப் போல,அவர்கள் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்.இந்த வைபவத்துக்கு வந்தவர்கள்,தாம்பூலம் வாங்கிக் கொண்டு,பாரதியாரிடம் விடைபெற்றுக் கொண்டு,போய் விட்டார்கள்.கனகலிங்கமும் போய்விட்டான்.யாரோ ஒருவனைக் கூப்பிட்டு, ' நீ கனகலிங்கத்துடன் கூடப்போய்,அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா' என்று பாரதியார் அனுப்பினார். 
எல்லோரும் போனபின் பாரதியார் தான் போட்டுக் கொண்டிருந்த பூணூலை எடுத்து விட்டார்.' என்ன ஓய்' என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்; 'இரண்டு பத்தினி மார்கள்,பதினாயிரம் கோபியர்கள்,இவர்களோடு லீலைகள் புரிந்த கண்ணனுக்கு நித்ய பிரமச்சாரி என்ற பெயர் வந்த கதையாக இருக்கிறதே,உங்கள் பிரமோபதேசம்?' என்றேன்.'நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு? உமக்கும் எனக்கும் வேண்டா.புதுப் பார்ப்பான் கனகலிங்கத்துக்குப் பூணூல் தேவை.எப்பொழுது நான் அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தேனோ,அப்பொழுது எனக்கும் பூணூல் இருக்க வேண்டும்.அது முடிந்து விட்டது.இனிமேல் என்னத்துக்குப் பூணூல்?' என்று பேச்சை அழகாக முடித்து விட்டார் பாரதியார்.
 ()
 அப்பொழுது ராஜாஜி,கத்தீட்ரல் ரோடு, இரண்டாம் நெம்பர் பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில்தான் காந்தி வந்து தங்கினது.நாலைந்து நாட்கள் தங்கியிருந்தார்.ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும்.காந்தி வழக்கப் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார்.அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார்.
காலமான சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவிற்காக ரசம் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள்.நான் வாயில் காப்போன்.யாரையும் உள்ளே விடக் கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.
நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; 'என்ன ஓய்' என்று சொல்லிக் கொண்டே,அறைக்குள்ளே நுழைந்து விட்டார்.என் காவல் கட்டுக் குலைந்து போனது.
உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன்.பாரதியார் காந்தியை வணங்கி விட்டு,அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார்.அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது.
பாரதியார்: மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன்.அந்தக் கூட்டதுக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?
காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?
மகாதேவ்:இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நான் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும்.
காந்தி: அப்படியானால்,இன்றைக்குத் தோதுப் படாது,தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?
பாரதியார்: முடியாது,நான் போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி ! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்.
பாரதியார் போய்விட்டார். நானும் வாயில் படிக்குப் போய்விட்டேன்.பாரதியார் வெளியே போனதும், 'இவர் யார்?' என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் ஆகாது என்று நினைத்தோ என்னவோ ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபம் கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், 'அவர் எங்கள் தமிழ் நாட்டுக் கவி' என்று சொன்னார்.
அதைக் கேட்டதும், 'இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?' என்றார் காந்தி.எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.
நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்று கொண்டு விண்ணப்பம் செய்து கொள்கிறதா? ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும்,அவரை அழகாக, காந்திக்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அனாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமான வரையில் சரியாக பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்.
()
'நாட்டின் விடுதலைக்கு முன்,
நரம்பின் விடுதலை வேண்டும்;
நாவுக்கு விடுதலை வேண்டும்;
பாவுக்கு விடுதலை வேண்டும்;
பாஷைக்கு விடுதலை வேண்டும்'
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார்.வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்பொழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியிடந்தான்.
()

அருவி வெளியீடாக வந்திருக்கும் வ.ரா. எழுதிய பாரதியைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியார் என்ற கவிஞரின் ஆக்கங்கள் நமக்குத் தெரியும்.

காவியமான  கவிதைகளை எழுதிய ஒரு கவிஞன், விடுதலை வேட்கையும், பொங்கும் உணர்ச்சியும்,மானுட நேசமும், மங்காத தமிழும் நிரம்பிய ஒரு மனிதன் எப்படி நித்தியப் படி வாழ்த்திருக்கக் கூடும்   என்ற சிந்தனைகளுக்கான அழகிய தரிசனம் இந்தச் சிறிய புத்தகம்.

பாரதியாரின் ரசிகர்களுக்கும், தமிழார்வலர்களுக்கும் தவறாத வாசிப்புப் பரிந்துரை இந்த நூல் !!!




புத்தகம் : மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ.ரா.
வெளியீடு: அருவி

13 comments:

  1. படித்திருந்தாலும் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தலைப்பு பிராமண நண்பர்களைச் சீண்டுவது போல இருப்பதாகச் சில நண்பர்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்...உளமார அந்த நோக்கத்தில் தலைப்பை வைக்கவில்லை. பதிவுக்குள் படிப்பவரை இழுப்பதற்காக வைக்கப்படும் கேட்சிங்' தலைப்பு என்ற வகையிலேயே அவ்வாறு வைத்தேன்..

    எனினும், அதன் தாக்கம் வேறு வடிவிலும் இருப்பதாகத் தெரிகிறது...எவரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்லவாதலால், தலைப்பை சிறிது மாற்றி விட்டேன்..
    :))

    ReplyDelete
  3. பாரதியின் தோற்றம் கம்பீரமானது.மனதில் பட்டதை சொல்லும் நெஞ்சுரம் கொண்டவன்.காலத்தை தாண்டி நிற்கும் கவிதைகள் படைத்தவன்.அந்த மகா கவியைப் பற்றிய செய்திகள் அருமை.நான் எனது profile படமாக பாரதியையே வைத்துள்ளேன்.
    பாரதியைப் பற்றிய கவிதை ஒன்றையும் என் வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.நேரம் இருப்பின் வாசிக்கவும்
    http://tnmurali.blogspot.com/2011/12/blog-post_11.html

    ReplyDelete
    Replies
    1. || பாரதியின் தோற்றம் கம்பீரமானது.மனதில் பட்டதை சொல்லும் நெஞ்சுரம் கொண்டவன்.காலத்தை தாண்டி நிற்கும் கவிதைகள் படைத்தவன்.அந்த மகா கவியைப் பற்றிய செய்திகள் அருமை.நான் எனது profile படமாக பாரதியையே வைத்துள்ளேன்.||
      தமிழில் ஆர்வம் இருக்கும் எவருக்கும் பாரதியாரைப் பிடிக்கும், பிடிக்க வேண்டும்... :)

      || பாரதியைப் பற்றிய கவிதை ஒன்றையும் என் வலைப்பூவில் பதிவிட்டிருக்கிறேன்.நேரம் இருப்பின் வாசிக்கவும் ||

      வாசித்து விட்டேன்.. நக்கீரர் வேலையும் பார்த்தாயிற்று..

      :))

      Delete
  4. அறிவன்,

    நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள், மிக தேவையான பகிர்வு, இன்றும் நம் சமூகம் அடிமைப்பட்டே கிடக்கிறது ஆனால் அடிமையாக இருப்பது தெரியாமலே.

    அதை எல்லாம் பேசினால் "துஷ்டன்" என்ற பெயரே கிட்டும் :-))

    //'நாட்டின் விடுதலைக்கு முன்,
    நரம்பின் விடுதலை வேண்டும்;
    நாவுக்கு விடுதலை வேண்டும்;
    பாவுக்கு விடுதலை வேண்டும்;
    பாஷைக்கு விடுதலை வேண்டும்'//

    இன்று நாட்டின் விடுதலை என்பது சட்டப்பூர்வமாக இருந்தாலும் நம் நாட்டில் மற்ற எதுவும் அடையவில்லை, உண்மையில் அவை இருந்தாலும் யாருக்கும் பயன்ப்படுத்த விருப்பம் இல்லை,


    பணம்,பலம்,அதிகாரம் படைத்தோருக்கு ஒரு நீதி, சாமன்யனுக்கு ஒரு நீதி, அட சட்டத்தின் முன் அனைவரும் சமம் என எழுதி இருந்தாலும், சமுகமே தானே வரிந்துக்கட்டிக்கொண்டு சமச்சீர்மை வேண்டாம் என்கிறது.

    ReplyDelete
    Replies
    1. || அதை எல்லாம் பேசினால் "துஷ்டன்" என்ற பெயரே கிட்டும் :-)) ||
      அப்படிப்பட்ட 'துஷ்டர்'கள் ரொம்பத் தேவை, இன்றைய சூழலில்.. 'கெட்டுப்' போய் 'நல்லவராய்' மாறி விட வேண்டாம்...

      || இன்று நாட்டின் விடுதலை என்பது சட்டப்பூர்வமாக இருந்தாலும் நம் நாட்டில் மற்ற எதுவும் அடையவில்லை, உண்மையில் அவை இருந்தாலும் யாருக்கும் பயன்ப்படுத்த விருப்பம் இல்லை, ||

      சுதந்திர தின சிறப்புப் பதிவு இதைப் பத்திதான் எழுதலாம்னு இருக்கேன். :))

      Delete
  5. //சீண்டுவது போல இருப்பதாகச் சில நண்பர்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்...//

    நானும் தான் இது போல் தலைப்பிட்டு எழுதுகிறேன், எனக்கும் பார்பன நண்பர்கள் நிறைய உண்டு, ஆனா என்னிடம் இது போல் யாரும் தெரிவித்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. || நானும் தான் இது போல் தலைப்பிட்டு எழுதுகிறேன், எனக்கும் பார்பன நண்பர்கள் நிறைய உண்டு, ஆனா என்னிடம் இது போல் யாரும் தெரிவித்ததே இல்லை.||

      ஒரு வேளை அவர்கள் யாரும் உங்கள் பதிவைப் படிப்பது இல்லையோ? :))
      ஜோக்ஸ் அபார்ட், இதற்குக் காரணம் என்னுடைய எழுத்தில், தலைப்பில் தெரியும் கூர்ப்பும் விமர்சனமும் நேரில் பழகும் அவர்கள் மென்மையானவனாக உணர்வதால் இருக்கலாம்..என்னுடைய 15 வருட நண்பர், துபாயில் இருந்த தொலைபேசிய போது, என்ன தலைப்பெல்லாம் காரசாரமாக வைத்திருக்கிறாய் என்று கேட்டார்..
      மேலும் துருவிக் கேட்ட போது,நண்பனாகவும், பதிவு எழுத்தாளராகவும் என்னை மிகவும் அறிந்த அவருக்கே, அந்தத் தலைப்பு சிறிது அதிர்ச்சி அளித்ததாகச் சொன்னார்..

      இதில் எனக்கும் வியப்பு ஏற்பட்டது உண்மை;ஏனெனில் அவ்வாறு எவரையும் சீண்டும் வண்ணமோ, அல்லது பதிவுலகில் குழு அரசியலிலோ இல்லாத எனக்கு, எப்போதும் என் எழுத்தை வைத்துத்தான் என்னை மற்றவர்கள் எடை போடுவார்கள், எந்த ஒரு குழுவுடனும் என்னை அடையாளம் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் எனது நம்பிக்கையாக இருந்தது..

      அதையும் மீறி நான் சார்பாக எழுதுவதாக ஒரு தோற்றத்தை அந்த ஒரு தலைப்பு அளிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொண்டதே எனக்கு வியப்பாக இருந்தது..

      கருத்தைத் தவிர, தனி மனிதர்களை,நண்பர்களைக் காயப்படுத்துவதை நான் எப்போதும் விரும்புவதில்லை..எனவேதான் மாற்றினேன்..
      :))

      Delete
  6. அறிவன்,

    //கருத்தைத் தவிர, தனி மனிதர்களை,நண்பர்களைக் காயப்படுத்துவதை நான் எப்போதும் விரும்புவதில்லை..எனவேதான் மாற்றினேன்..
    :))//

    இங்கே கருத்தை விமர்சித்தாலே தனி மனிதர்களை விமர்சித்தாகவே எடுத்துக்கொள்ளப்படுமே, அப்போ நீங்க உங்க பதிவை தவிர வேறு எங்கும் கருத்தினை விமர்சிக்கவில்லை என நினைக்கிறேன் :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்ஸ்,
      || இங்கே கருத்தை விமர்சித்தாலே தனி மனிதர்களை விமர்சித்தாகவே எடுத்துக்கொள்ளப்படுமே, அப்போ நீங்க உங்க பதிவை தவிர வேறு எங்கும் கருத்தினை விமர்சிக்கவில்லை என நினைக்கிறேன் :-)) ||

      நிறைய முறை பலருடைய பதிவுகளில் மாற்றுக் கருத்தை விவாதிக்கும் போது கூட, மனிதர்களை விமர்சிப்பதாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது...

      இதற்காகவே சில காலம் அனானியாக கருத்துக்களைத் தெரிவித்தேன்-தொடக்க காலத்தில்..பின்னர் என் வழி தனி வழி என்று நிர்ணயித்துக் கொண்டாயிற்று...

      :)

      Delete
  7. //கருத்தைத் தவிர, தனி மனிதர்களை,நண்பர்களைக் காயப்படுத்துவதை நான் எப்போதும் விரும்புவதில்லை..எனவேதான் மாற்றினேன்..//

    நானும் தனிமனித சாடல்கள் செய்ததில்லை, பொதுவாகத் தான் எழுதுகிறேன். ஒருவர் என்னிடம் வந்து ஏன் ஒட்டுமொத்தமாக 'பார்பனர்' என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பும் பொழுது இவ்வாறு தான் சொல்வேன் "தேவநாதனின் செயல் பார்பனர்களுக்கு இழிவு என்பதை பார்பனர்கள் ஒப்புக் கொள்ளாத போது இதை மட்டும் ஏன் பொதுவாகச் சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும் ?" தனிமனிதர்களின் இழிவான செயலோ, பெருமையான செயலோ அதைச் சாதியின் அடையாளம் ஆக்கிப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அப்படி ஆக்கிப் பார்ப்பவர்கள் தான் சாதி சார்ந்த இழிவை மறைத்தும், சாதி சார்ந்தவர்களின் புகழை லேபிள் ஆக்கிக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். ஒரு இனம் அல்லது சாதியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காதவர்கள் தன் குலம் இழிவுபடுத்தப்படுகிறது என்பதற்கு மட்டும் வருத்தப்படுவது முரண்பாடாக இல்லையா ?

    நான் "பார்பனர்" என்ற சொல்லை இழிவாகப் பயன்படுத்துவது இல்லை, அதை ஒரு அடையாளமாகத்தான் பயன்படுத்துகிறேன், தவிர பார்பனரை "ப்ராமணர்" என்று உயர்த்திச் சொல்லி என்னைத் தாழ்த்திக் கொள்ளவும் நான் விரும்பியதில்லை என்று தெளிவாக எழுதிவருகிறேன், அதனால் எனது பார்பன நண்பர்கள் என்னிடம் ஏன் இப்படியெல்லாம் எழுதினீர்கள் என்று கேட்பது கிடையாது, எனக்கு நெருங்கிய வலைப்பதிவர்களாக 10க்கும் மேற்பட்ட பார்பன நண்பர்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. || தனிமனிதர்களின் இழிவான செயலோ, பெருமையான செயலோ அதைச் சாதியின் அடையாளம் ஆக்கிப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அப்படி ஆக்கிப் பார்ப்பவர்கள் தான் சாதி சார்ந்த இழிவை மறைத்தும், சாதி சார்ந்தவர்களின் புகழை லேபிள் ஆக்கிக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். ஒரு இனம் அல்லது சாதியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்காதவர்கள் தன் குலம் இழிவுபடுத்தப்படுகிறது என்பதற்கு மட்டும் வருத்தப்படுவது முரண்பாடாக இல்லையா ? ||

      முதலில் இனப்பெயரை விளிப்பது, அவர்களை இழிவு படுத்துகிறது என்ற கருத்தாக்கம் சமூகத்தால் ஏற்பட்டது..

      பள்ளர், கள்ளர் என்று இனப்பெயரை விளிப்பது கூட அந்த இனத்தவர்களை இழிவு படுத்துகிறது என்ற கருத்தாக்கமும் இங்குதான் உள்ளது;அதுவே முக்குலத்தோர் என்றால் அதில் உயர்வு இருப்பதாகவும் அதே கருத்தாகம் உருவாக்கப்பட்டிருகிறது.

      இந்த கான்டெக்ஸ்டே பிராமணர் என்று அழைப்பதும், பார்ப்பார் என்று அழைப்பதும். முன்னது மரியாதையானது என்றும் பின்னது கேவலமானது என்றும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

      எனவே நீங்கள் சொன்ன முரண்பாடு எல்லா சாதியினரிடமும் இருக்கிறது..இதற்கு பார்ப்பனர்களை மட்டும் தனிமைப் படுத்தி சுட்டுவதில் அர்த்தமில்லை.

      இந்த விவகாரத்தில் உண்மையான முரண்பாடு என்னவெனில், அந்தந்த சாதியினரே, தங்களுக்கு பொருளாதார,சமூக,பிழைப்பு வசதிகள் கிடைக்கும் என்றால், இனத்தின் எந்தப் பெயரையும் சொல்லி விளித்துக் கொள்ளத் தயங்குவது இல்லை என்பதே !

      || நான் "பார்பனர்" என்ற சொல்லை இழிவாகப் பயன்படுத்துவது இல்லை, அதை ஒரு அடையாளமாகத்தான் பயன்படுத்துகிறேன், தவிர பார்பனரை "ப்ராமணர்" என்று உயர்த்திச் சொல்லி என்னைத் தாழ்த்திக் கொள்ளவும் நான் விரும்பியதில்லை என்று தெளிவாக எழுதிவருகிறேன், அதனால் எனது பார்பன நண்பர்கள் என்னிடம் ஏன் இப்படியெல்லாம் எழுதினீர்கள் என்று கேட்பது கிடையாது, எனக்கு நெருங்கிய வலைப்பதிவர்களாக 10க்கும் மேற்பட்ட பார்பன நண்பர்கள் உண்டு.||

      இதற்கு நீங்கள் பொதுவாக பார்ப்பனர்கள் சார்ந்த விவகாரங்களில் என்ன நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து,தனி நபர்களின் கணிப்பு மாறும். எனக்கும் பார்ப்பனர்களில் தொடர்பில் மிகச் சிறந்த நண்பர்களும், மிகக் கொடிய, கேவலமான,சுயநலம் சார்ந்த அனுபவங்களும் உண்டு. அவை அந்தந்தத் தனி மனிதர்களின் குண விலாசங்கள் என்ற அளவிலேயே பார்க்கிறேன்..இனமாக பொதுமைப் படுத்துவதில்(பாம்பை விட்டு, பார்ப்பானை அடி, மலையாளி கொலையாளி, கள்ளப் பய கன்னம் வைப்பான்..போன்ற) எனக்கும் உடன்பாடு இல்லை.

      கொள்கை அளவில் பார்ப்பனர்கள் என்ற சாதியில் பிறந்தார்கள் என்பதற்காகவே அவர்களை ஒடுக்க கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக அரசுகள் முயன்றன. அதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தேவைப் படும் ஒடுக்கப் பட்ட சாதியினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இன்னொரு சாதியினர் மீது இன்னொரு விதமான ஒடுக்குமுறை பாய்வது சரியான அரசின் செயலாக இருக்க முடியாது என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன்..இவற்றை எப்படி சரியாகச் செய்வது என்பதற்கு பல மாடல்'கள் பல நாடுகளில் காணக் கிடைக்கின்றன.

      இந்த எல்லாவித புரிதல்களின் விளைவாகவே, தலைப்பு விமர்சனப் பார்வையுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போது, அதை மாற்றினேன். :)

      Delete