அதாவது பெட்ரோலியத்துறை அமைச்சரிடம்,தன்னுடைய நிறுவனத்துக்கு சலுகை விலையில் இயற்கை எரிவாயு விநியோகிக்க நிர்ப்பந்தித்தார் என்ற புகார் எழுந்தது.
இது போன்ற ஊழல்/கடமை தவறும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் நடக்கும் எதிர்வினைகள் மூன்றுவிதமானதாக இருக்கலாம்.
1.இந்த தவறு நடந்தது என்னுடைய கவனத்துக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்றோ,அல்லது அந்த தவறு நடக்க நான் காரணமில்லை-ஆயினும் இது போன்ற குற்றச்சாட்டு எழுந்தது துரதிருஷ்டவசமானது,ஆகவே இதற்குப் பொறுப்பேற்று நான் என் துறையின் பொறுப்பிலிருந்து சுயமாக விலகுகிறேன் என்று அறிவித்து,சட்டபூர்வ விசாரணைகளுக்கு வழி ஏற்படுத்துவது.
ஆனால் ஒரு கஷ்டம்,இதெல்லாம் நேர்மையான அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் வழி.
அரக்கோணம்(?) ரயில் விபத்து நடந்த போது லால் பகதூர் சாஸ்திரி சுய-விலக்கம்(ராஜினாமா) செய்தார்.
காமராஜரின் தாய்,மகன் 100 ரூபாய்க்கு சிறிது அதிகமாக அனுப்பும்படியும்,முதல்வர் வீடு என வரும் நண்பர்களுக்கு காபி வாங்கிக் கொடுப்பதால் சிறிது அதிகம் செலவாவதாகவும்,எனவே மாதம் 120 ரூபாய் அனுப்பினால் சிலாக்கியமாக இருக்கும் என்றும்,அதுவும் நேரடியாகக் கேட்காமல் ஒரு அமைச்சரவை நண்பரின் மூலமாகக் கேட்டதாகவும்,அப்போது,காமராசர்,’ஏன்,ஏன்ங்கிறேன்,முதல்வர் வீடுன்னு சொல்லி உன்னை வந்து என் பாக்கனும்கிறேன்,தேவைப்படுறவங்க செயலகம் வந்து பாத்துக்குவாங்கங்கிறேன்,அவர்களையெல்லாம் உபசரிக்கவேண்டாம்ங்கிறேன்’ என்று சொல்லிவிட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறோம்.
அதெல்லாம் அரசியல் சேவையென்ற சூழல் நிலவியபோதும் ,திறனார்களும்,நேர்மையாளர்களுமானவர்களுமான நபர்களின் கையில் அரசியல் இருந்த போதும் !
நடிப்பே அரசியல்,அரசியலே நடிப்பு என்ற சூழல் வந்த பின் சூழ்நிலை மாறியது.
2.பின்னர் வந்த இடைநிலையில்,அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது, 'குற்றமா,நானா,இல்லவே இல்லை,வாய்ப்பே இல்லை,இது எதிர்க்கட்சி அரசியலின் சதி;எங்கள் கரங்கள் கறைபடியாதவை,துணிந்தவனுக்குத் தூக்குமேடை பஞ்சுமெத்தை,மரக்கூண்டு மணிமண்டபம்,எங்களுக்குப் பதவி தோளில் போடும் துண்டு,தமிழனின் மானம் இடுப்பிலிருக்கும் வேட்டி’ என்றெல்லாம் ஜல்லியடித்துவிட்டு,பெருவாரியான பொதுமக்களை அடிமைகளை வைத்திருப்பது போல மூளைச்சலவை செய்யும் கோஷங்களை எழுப்பி விட்டு,விவகாரத்தின் மேல் ஒரு விசாரணைக் குழு அமைத்து அந்த விவகாரத்துக்கே சங்கு ஊதி விடுவார்கள் !
பதவியிலிருந்து விலகவோ,தார்மீக பொறுப்பேற்கவோ மறுப்பது,மாறாக எதிர்வரும் விசாரணையை முடக்கும்,மடக்கும் செயல்களைப் பதவியின்,அதிகாரத்தின் மூலம் மேற்கொள்வது,இது 90’கள் வரை இருந்தது,
பத்திரிக்கைகள் சிறிதுகாலம் வெறும்வாய்க்கு அவலாக அதை மெல்லும்,அவ்வளவுதான்!
சர்க்காரியா’விலிருந்து,போஃபர்ஸ் வரை இதுதான் நடந்தது.
3. இனி மூன்றாவது நிலை,வெகு முன்னேறிய,வெகு அபாயகரமான நிலை.
தற்போது அமைச்சர் திருவாய் மலர்ந்து அருளியிருப்பது போல.
ஆமாம்,அது எ(ன் மக)ன் நிறுவனம்தான்,நான் எரிவாயுத்துறை அமைச்சரிடம் கேட்டேன் தான்,அதில் என்ன தவறு இருக்கிறது, என் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலத்தை(அதாவது தன் குடும்ப சம்பாத்தியம்) அழிக்கும் குற்றச்சாட்டு இது !(என்ன பகுத்தறிவு !!!!!!)...
அதாவது,’ஆமாம் பண்ணேன்,இப்ப என்னான்றே,பொத்திகிட்டு போ’ என நாகரிமாகச் சொல்வது.
மக்கள் பசியால் வாடுகிறார்கள்,உண்ண ரொட்டித்துண்டு கிடைக்கவில்லை எனச்சொன்ன போது,அதனால் என்ன கேக் வாங்கி உண்ண வேண்டியதுதானே,எனச் சொல்லிய நீரோவின் அராஜக அகம்பாவத்துக்கும் இதற்கும் அதிகம் வித்தியாசமில்லை..
லாலுவின் தீவன ஊழல் சமயத்திலும்,மாயாவதியின் ஊழல்புகார்கள் எழுந்தபோதும்,அடிமைப்பட்ட மக்களுக்கெதிரான ஆதிக்கவெறியர்களின் சதி இது,என்றெல்லாம் அறிக்கை அளிக்கும் உதார்த்தனம் இப்போது தமிழகத்து அரசியலிலும் பரிச்சயமாகிறது.
மக்களை அடிமை மனோபாவத்தில் வைத்துவிட்டு,என்ன விதமான அரசியல் கொள்ளைகளையும் நடத்தலாம்’ என அரசியல்வாதிகள் துணிந்துவிட்ட அவலத்தின் நீட்சி இது.
இந்த இடத்தில்,சிங்கப்பூரில் சீனியர் லீ பிரதமராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி,தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வருகிறது.
லீ 1957’ல் இருந்து 1993 வரை பிரதமராக இருந்தவர்.
50’களில் இந்திய கிராமங்கள் இருந்த நிலையில்தான் சிங்கப்பூரும் கிராமங்களின் கூட்டமைப்பாக இருந்தது;இறைச்சிப் பன்றி வளர்த்தல்,சிறு தொழில் கூடங்களில் வேலை,இவைதான் மக்களின் வாழ்வாதாரங்களாக இருந்தன.
இதை இப்போதைய உலகின் மூன்றாவது தனிநபர் வருமான,ஒரு முதல்தர-First World –நாடாக,மிகக் குறுகிய,சுமார் 30 ஆண்டு காலத்துக்குள் மாற்றிய சாதனைக்கு சொந்தக்காரர் சீனியர் லீ.
அது எப்படிச் சாத்தியமானது?
முதலான ஒரு காரணம்,அரசியலில்,ஆட்சியில் குறிக்கோள்களாக வைக்கப்பட்ட உயர்ந்த விழுமியங்கள் !
70’களில் சீனியர் லீ’யின் அமைச்சரவையில் ஒரு அமைச்சரின் மீது ஊழல் புகார் எழும்பியது;பத்திரிகைகள் அது பற்றி ஆர்வமாக,ஆழமாக எழுதத் தலைப் பட்டன.
லீ உடனடியாக அந்த அமைச்சரை தற்காலிகப் பதவி நீக்கம் செய்தார்;விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.
விசாரணை என்றால்,இந்தியாபோல விசாரணைக் கமிஷன் அல்ல;நேர்மையான குறுக்கீடுகள் அற்ற விசாரணை.காவல்துறை சகலவித அதிகாரத்துடனும்,நேர்மையுடனும் கையாளப்படும் ஒரு நாடு சிங்கப்பூர்.
இந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்,லீ’யை சந்திக்க நேரம் கேட்டார்;லீ சொன்ன பதில்-‘விசாரணை முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படட்டும்,அது பாராளுமன்றத்தில் விசாரணைக்கு வைக்கப் படும்,அன்று காலை நான் உங்களை சந்திப்பேன்,அதுவரை நீங்கள் என்னை சந்திக்கவோ,இது பற்றி விளக்கமளிக்கவோ அவசியம் இல்லை!’
அதாவது, 'நான் என அமைச்சர் தவறு செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன்,எனவே இது ஊர்ஜிதமாக்கப் பட்டபின் அவரை சந்திப்பேன் என்ற ஒரு நோக்கும்,மாறாக அவர் தவறு செய்திருக்கும் பட்சத்தில்,என்னை சந்திக்கும் அவரின் செயல்,விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு சிறிய மனத் துணுக்கத்தையும் அளித்துவிடக் கூடாது' என்னும் எச்சரிக்கையும் இதில் வெளிப்பட்டது.
விசாரணை முடிந்தது,அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப் பட்டு,மறுநாள் காலை பாராளுமன்றத்தில் விவாததுக்கு வைக்கப் பட்டது.
அன்று காலை பராளுமன்றம் செல்வதற்கு முன்,சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றார் லீ.
சம்பந்தப்பட்ட அமைச்சரின் வீட்டில்,பிரதமரை எதிர்கொண்ட அமைச்சரின் மனைவி அவரிடம்(லீ) ஒரு கடித்தைதைக் கொடுத்தார்,அது பின்வருமாறு தெரிவித்தது:
“மதிப்புறு பிரதமர் லீ அவர்களுக்கு,
நான் குற்றமிழைத்தவன்.
அரசியலில் மிகுந்த உயர்நிலை அளவீடுகளை-High Standards- முன்வைத்து செயல்படும் நம் அமைச்சரவையில் செயல்பாடுகளுக்கோ,லட்சிய நோக்கில் செயல்படும் பிரதமரான உங்கள் கோட்பாடுகளுக்கோ நியாயம் செய்வதாக என் செயல்பாடுகள் இல்லை.
இதற்கான உச்சபட்ச தண்டனையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியவன்,எனவே நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்’
உங்களுடைய அமைச்சராக உங்களுடன் மேலும் பணியாற்ற இயலாமல் போனது எனது துரதிருஷ்டம்.’
அந்த அமைச்சர் தவறை ஒப்புக் கொண்டதோடு,தற்கொலை செய்துகொண்டு தண்டனையையும் முந்தைய இரவில் தேடிக்கொண்டிருந்தார் !
இதன் பின்னணியில் பல கோட்பாடுகள்,காரணங்கள் முன்வைக்கப் படலாம்;ஆனால் அரசியலில்,பொதுவாழ்வில் நேர்மை,தூய்மையான செயல்பாடு என்பதை சீனியர் லீ எவ்விதத்திலும்,எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதுதான் சம்பவத்தின் அடிநாதம்.
இன்றைய சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கான அடிப்படைக் காரணம் இந்த ஒரு சம்பவத்தில் தெற்றென விளங்குகிறது.
இந்தியாவில் இப்போது எழுந்திருக்கும் விவகாரத்தையும்,இதையும் சற்றே ஒப்பு நோக்கினால் கிடைப்பது ஆயாசமே.
இதுவரை மௌனமாக இருந்த பிரதமர் அலுவலகம்,இப்போது லேசாக செயல்படும் கூறுகளைக் காட்டியுள்ளது.
பிரதமர் அலுவலகம்,பின்வரும் கேள்விகளுக்கான விவரங்களை,மத்தியப் புலனாய்வுத் துறையிடம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
1. ஆந்திரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரை பினாமியாகப்
பயன்படுத்திக் கொண்டு, சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, கடலில்
மணலைத் தோண்டும் ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறதா? அதில் அமைச்சரின் உறவினர்கள்
யாருக்காவது பயன் கிடைத்திருக்கிறதா?
2. தங்க நாற்கரத் திட்டத்தில்
பல மாநிலங்களில் பெரிய முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில்
கீழ்நிலையில் உள்ள அரசியல்வாதிகள் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும்
சொல்லப்படுகிறதே; இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
3. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் எந்த அளவுக்கு டி.ஆர். பாலுவின் மகன்கள் சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் பயன்பெற்றிருக்கின்றன? அந்த நிறுவனங்களுக்கு ஓ.என்.ஜி.சி. என்ன
சலுகைகளை வழங்கி இருக்கிறது? விதிகளை மீறி ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டனவா? என்ற
முழு விவரத்தையும் சேகரித்திட வேண்டும்.
4. டி.ஆர். பாலுவின்
மகன்களின் நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் பெருமளவு கடன்கள் பெறப்பட்டுத்
திருப்பிக் கட்டவில்லை என்ற தகவல் சரியானதா? இதுதொடர்பாக வங்கிகள் நடவடிக்கை
எடுக்காமல் தடுப்பதற்குத் தன்னுடைய பதவியைக் காட்டி டி.ஆர். பாலு முயற்சி செய்தாரா?
வங்கிகள் கடன் தீர்ப்பாயத்தின் விசாரணையில் சில கடன் வசூல் வழக்குகள்
இருக்கின்றனவா?
மேற்படி விவரங்களை விரைவாகச் சேகரித்து தருமாறு
பிரதமரின் அலுவலகம் கோரியிருப்பதாக நம்பகமான தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சேதுத் திட்டத்தில் கூட கழக அரசின்,அமைச்சரின் ஆர்வத்திற்கான வேறு காரணங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்புகள் இருக்கின்றன;ஆனாலும் எவருக்கும் வெட்கமில்லையாதலால் தட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள் !
யாருக்கும் வெட்கமில்லை என எண்ணியிருந்த நேரத்தில்,ஏதோ சிலருக்கு இன்னும் அரசியலில் விழுமியங்கள் மேல் மதிப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.
பார்ப்போம் அது உண்மையா,அல்லது பின்னணியில் காங்கிரஸ்-திமுக'வின் அரசியல் இருக்கும் ஒரு கானல்தானா இதுவும் என்று !
Acknowledgements :
1.The Singapore Story - Lee Kwan Yu
2.Express Press Holdings