Pages - Menu

Friday, April 4, 2008

51.திறனற்ற செயலும்,செயலற்ற திறனும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறோம்;நம்மைப் பற்றிய மதிப்பீடு எப்படி உருவாகிறது?
கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.

நேர்த்தியாக’ என்பதற்கான பொருள் மிக விரிவானது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எதைப் பொறுத்து அமைகிறது? இதற்குப் பலவிதமான,ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை;ஆயினும் முதலில் முக்கியமாக கவனத்துக்கு வரும் ஒரு விதயம் நேர்த்தியான,நேர்மையான தலைவர்கள் நாட்டிற்கு அமைவது முக்கியம்.

தலைவர்கள் நேர்மையாக மட்டுமே இருந்தால் போதுமா,திறன் வேண்டாமா என்ற அடுத்த கேள்வி வரும்.இதற்கும் பலர் மாற்பட்ட கருத்துக்களை முன்வைப்பார்கள்;சிலர் திறன் மட்டுமே முக்கியம்,அவர் ‘அப்படி இப்படி’ இருந்தாலும் நாட்டிற்கோ அதன் வளர்ச்சிக்கோ பெரும் கேடு வந்துவிடாது என்பார்கள்;மற்று சிலர் தலைவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது முதலில் முக்கியம்,அவர்கள் திறனாளர்களை தேடிக் கொள்ளலாம் என்பார்கள்.

ஒரு தேர்ந்த அமைப்பில்,நேர்மையான திறனாளர்கள் மட்டுமே தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பது கண்கூடு.சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டு.
திறனுடைய நேர்மையாளர்கள் தலைவர்களாக அமைந்துவிட்டால் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்துவிடும் என்ற முடிவு கிடைக்கிறது.

திறனின் அடுத்தகூறு,அவ்வகையான திறன் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில்.

நமது நாட்டைப் பொறுத்தவரை நேர்மையான திறமையாளர்கள் த்லைவர்களாக அமைவது குதிரைக்கொம்பு;நாடு விடுதலை பெற்றதிலிருந்து வரிசைப்படுத்தினால் மிகச்சிலரே இந்த வகைக்குள் வருவார்கள்.அதுவும் தற்போதைய சூழலில் இத்தகு தலைவர்களை பெரிதாக்கிகளின்-லென்ஸ்- வழி தேடவேண்டியதிருக்கிறது.ஓரளவுக்கு பட்டியலிடலாம் என்றால் பிரதமர் மன்மோகன்,நிதி அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் இந்த பட்டியலில் வரக்கூடும்.

சிதம்பரம் நல்ல திறனாளர் என கிட்டத்தட்ட அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவர்;நல்ல கல்வியும் தெளிந்த சிந்தனையும்,குழப்பமில்லாமல் எண்ணிய கருத்துக்களைப் பேசுவதிலும் வல்லவரென அறியப்படுவர்.பொருளாதார நிபுணர் என அனைவராலும் அறியப்படுபவர்.இந்தியாவில் மட்டுமல்ல,வெளிநாடுகளுக்குச் செல்கையிலும் மதிப்பையும் மரியாதையையும் தானாகப் பெறும்-Commanding respect, not demanding it- மிகச் சில த்லைவர்களில் ஒருவர்.எந்த ஒரு அரசின் தலைவரையும் அவரவரின் செயல்திறனை வைத்தே மதிக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட நல்மதிப்பைப் பெறுபவர்.

1997 குஜ்ரால்’ன் (என நினைக்கிறேன்..) அமைச்சரவையின் அங்கமாக இருந்து அவர் அளித்த நிதிநிலை அறிக்கையை ஒரு கனவின் அறிக்கை-Dream Budget – என்றே அனைவரும் அழைத்தார்கள்.அரசாக எப்படியிருப்பினும்,அவர் சிறப்பாக செயல்பட்டதாக அனைவருமே கருதினார்கள்.

இப்போது UPA அரசின் நிதி அமைச்சராக தனது ஐந்தாவது நிதிநிலை அறிக்கையை சென்ற ஃபெப்ரவரி 2008 ல் சமர்ப்பித்தார்;பலரும் பாராட்டினார்கள்;குறை சொல்ல இயலா நிதிநிலை அறிக்கை என அனைவரும் விமர்சித்தார்கள்;சென்ற 5 ஆண்டுகளாக சுமார் 9 சதவீதத்தில் இந்தியாவின் மொத்த உற்பத்தியின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாமே நன்றாக இருக்கின்றன;
அல்லது இருப்பனவாகத் தோன்றுகின்றனவா ?
திறனாளராக அறியப்பட்ட நமது நிதிமைச்சர் முழு அளவில் செயல்படுபவரா??

சில செய்திகளைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆண்டின் நிதிநிலை அறிக்கையுடன்,சென்ற ஆண்டின் செயல்பாட்டு அறிக்கையும் ( நிதிநிலை அறிக்கைக்கும்,செயல்பாட்டு அறிக்கைக்கும் வேறுபாடு அறியாதவர்கள் மேற்கொண்டு படிக்காதீர்கள்,தலைவலிக்கப் போகிறது !) ஒரு பகுதி அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்;இதையெல்லாம் நமது மேன்மை தங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அலசுகிறார்களா அல்லது குறைந்தபட்சம் முழுதும் படிப்பார்களா என்பது கேள்விக்குறி.உண்மையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணி இதுவே,ஆனால் இவை எல்லாம் இந்தியாவில் நன்முறையில் நடக்கவேண்டும் என எண்ணுவதெல்லாம் சிறிது அதிகப்படியான ஆசைதான்...)

சென்ற மூன்று ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் முக்கியமான மூன்று விதயங்களாக அறிவிக்கப்பட்டவையும் அதற்கான மதிப்பீடுகளும் பின்வருமாறு:-
1.மும்பையின் மிதாய்(Mithi River) ஆறு சீர்செய்யப்படும் திட்டம்-ரூ.1260 கோடி
2.மும்பையை சீனாவின் ஷாங்காய் நகரைப் போல் மாற்றும் திட்டம்-ரூ 1000 கோடி
3.ஒரு சர்வதேச நிதி முனையமாக உருவாக்கும் திட்டம்-ரூ 1000 கோடி

இந்த மூன்று திட்டங்களுக்கும் மூன்று ஆண்டுகளில் உண்மையாக செயல்படுத்தும் நோக்கில் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 16 கோடியே 16 லட்சம் மட்டுமே...அதுவும் எதற்காக உபயோகிக்கப்பட்டது தெரியுமா?

-ஒரு அறிக்கை தயாரிக்கபட்டது
-அமைச்சகத்தின் வலைப்பக்கத்தில் இச்செய்தி போடப்பட்டது
-பிரதமருக்கு ஒரு காட்சி விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது
-திட்டப் பரிந்துரைகள் வேண்டி செய்தி பல ஏஜென்ஸிகளுக்கு அனுப்பப்பட்டது

அவ்வளவுதான்..

திட்டத்தின் கூறுகள் பற்றிக் கூட எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை; திட்டப் பகுதிகள் வரையறை செய்யப்படவில்லை; திட்டத்திற்கான செயல் திட்ட அறிக்கை கூட முழுதாக தயாரிக்கப்படவில்லை.

ஆனால் இம்மூன்று திட்டங்களும் ‘திட்ட செயல்பாட்டு அறிக்கையில்’ செயல்படுத்தி முடித்துவிட்ட திட்டங்களோடு சேர்க்கப்பட்டு விட்டன.அதாவது Action Completed Report ன் பகுதியாகி விட்டன....

கலாம் என்றொரு விவரமில்லாதவர் சிறிதுகாலம் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார்;அப்போது அவர் புரா,புரா என அவ்வப்போது புலம்பிக் கொண்டிருந்தார்.
புரா-PURA – என்றால் என்ன? Provision of Urban amenities in Rural Area என்பதின் சுருக்கம் தான் புரா.அதாவது கிராமப் புறங்கள் எவ்விதம் மேம்பாடு அடையலாம் என்பதற்கான் ஒரு ஆதாரத் திட்டம்.

இந்தியாவில் ஏன் நகரங்களில் இவ்வளவு நெருக்கடியும்,மக்கள் கிராமங்களை விட்டு நகர் நோக்கி ஓடுவதும் ஏன் நடக்கிறது,இதைத் தவிர்க்க அரசும்,அமைப்புகளும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கலாம் சிறிது சிந்தித்ததன் விளைவே இந்தத் திட்டம்.

(என்னுடைய வேறு இரு பதிவுகளில் இந்த ஆதார விதயத்தை நான் தொட்டிருக்கிறேன்,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசு எவ்விதம் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சிப் பகுதியாக மாற்றுகிறது என்பதை நேரில் பார்ப்பவர்கள் அறிவார்கள்.சிங்கையிலும் ஒரு காலத்தில்(1980 களில் கூட) காடு போல இருந்த ஜுராங் தீவு பத்து வருடங்களுக்கு முன் தொழில் நகராக மாறி,இப்போது சுமார் 7.50 மில்லியன் டாலர் முதலீட்டில் ஏரி சார்ந்த-Lake View Project- தொழில் மற்றும் குடியிருப்புத் தடமாக மாறப்போகிறது)

இந்த புரா’ விற்கான திட்டம் ஒன்று 2005-2006 நிதிநிலை அறிக்கையில் நமது நிதி அமைச்சரால் அறிவிக்கப் பட்டது(கலாமின் தொந்தரவு தாங்கவில்லை போல !!!!) இதற்கான மாதிரி திட்டங்கள்-Pilot Projects – நாட்டின் ஒரு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2005-06 ல் செயல்படுத்தப் படும் என அறிவிக்கப் பட்டது.

அவ்வளவுதான் நடவடிக்கை; கலாம் போனார், புரா’வும் பறந்து விட்டது !

அடுத்தது 2004-2005ன் நிதிநிலை அறிக்கை-நமது பெரும்பாலான் ஏழை மக்களுக்கு பொருள்கள் சரியான விலையில் கிடைக்க நியாய விலைக்கடைகள் செயல்பாடு திறனுடன் அமைய வேண்டும்;அவற்றின் செயல்பாட்டை சீரமைப்பது ஏழை மக்களின் வாழ்வை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் என அமைச்சர் கூறினார்.
இதற்கு உணவுச் சிட்டைகள்-Food Stamps – விளிம்புநிலை மக்களுக்கு வழங்கப்படும்,இந்த மாதிரித் திட்டத்திற்கு-Pilot Project – நாட்டின் இரு மாநிலங்கள் முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

பிறகு ????

2007-2008 நிதிநிலை அறிக்கை வரை ஒன்றும் நடைபெறவில்லை;ஆனால் இப்பொதும் நிதி அமைச்சர் நியாயவிலைக் கடைகள் சீராக செயல்பட வேண்டியதன் அவசியமும், அதன் மூலம் நாட்டின் பெரும்பாலான ஏழைகள் பயனடைவதும் வலியுறுத்தப்பட்டது;இம்முறை யோசனை-நியாயவிலைக் கடைகளைக் கணினி மயமாக்கலும்,அவ்ற்றை இந்திய உணவுக் கழகத்துடன் இணைப்பதும்,செயல் காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் சரி...

இந்த வருடம் நிதிநிலை அறிக்கையில் டெக்னாலஜி முன்னேற்றம் கண்ட விட்டது; இப்போது ஏழை பயனாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் திட்டம் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது !
இன்னும் நமது நியாய விலைக் கடைகள் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இருக்கின்றன.

1997 ல் 'கனவு' நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த போது,அடுத்த ஆண்டில் சுப்ரமணியன் சுவாமி இதே போன்று,அறிவிக்கப் பட்ட திட்டங்கள் செயல்படாது ஒதுக்கப்பட்ட 50000 கோடி ரூபாய்கள் அப்படியே கருவூலத்துக்குத் திரும்பிய செய்தியை சுட்டி எழுதி இருந்தார்;பெரும்பாலானவர்களின் கவனத்துக்கு அது வந்திருக்காது !!!

சிங்கப்பூர்,அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் என் டி யூ சி ,வால்மார்ட், கார்ஃபோர் போன்ற நிறுவனங்கள்-பின்னவை இரண்டும் தனியார் நிறுவனமாக இருப்பினும்- மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் எவ்விதம் முனைப்புடன் பங்காற்றுகின்றன என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள்.

ஆக வெறும் திட்டங்கள் காகிதத்தில்-இப்போது மடிக்கணினிகளில்-மட்டும் தயாரிக்கப்பட்டு,பாராளுமன்றத்தில் படிக்கப்பட்டு ஆளும்கட்சிக் காரர்கள் கைதட்டிவிட்டும்,எதிர்க்கட்சிக் காரர்கள் மைக்கால் தட்டி விட்டும் கலைய,தேசமும்,ஏழை இந்தியனின் நிலையும் அப்படியே தொடர்கின்றன..

இது எந்தவிதமான செயல்பாடு?????

திறனுக்கும், செயல்பாட்டுக்கும் தொடர்பில்லாத இந்நிலை நீடிப்பது யாருடைய குற்றம் ??????????


Aknowledgements to Arun Shourie,Express Press Holdings

4 comments:

  1. சோதனை.

    ReplyDelete
  2. நன்று ! இதைப்போன்ற பதிவை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. அநானி,
    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி.
    ஆனால் பாராட்ட்க் கூட முகமூடி போட்டுக்கொள்ளும் உங்களைப் பார்க்க(?) விநோதமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. உலகில் பலநாடுகள் நம்மை விட பரப்பளவிலும் கனிம வளங்களிலும் அறிவித் திறனிலும் ,மனித ஆற்றலுலும் பின் தங்கி உள்ளது என்றாலும் அவர்களின் பொருளாதார,சமுதாய பண்பாட்டு , மக்கள் வாழ்வின் வசதிகள் ஆகியவற்றின் வளர்சி ஏன் இந்தியாவில் இல்லை எனும் மனதில் ஏற்படும் வினாவுக்கு மிகச் சரியான விளக்கம்.
    பல புதிய சொற்கள் படிப்பதற்கு .நன்றி.

    நம் அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது போய் இப்போ அடுத்த மசோதாவை( enactment of law/ agreements) எப்படி காப்பாற்றுவது/கடைத்தேற்றுவது
    என்றல்லவா உள்ளது போல் தெரிகீறது.

    t.vijay

    please visit my blog
    http://pugaippezhai.blogspot.com

    உங்கள் பார்வைக்கு:

    1.அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே 54 மறுமொழிகள் | விஜய்

    2.என்னை வளர்த்த மனிதா, உன்னை அளிப்பேன் எளிதாய்" 32 மறுமொழிகள் | விஜய்

    ReplyDelete