Pages - Menu

Wednesday, October 16, 2024

204 - உயிருக்கு நேர் - சுவாமி சித்பவானந்தர்

16 வயதில் அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்த போது எனக்கு அந்தக் கல்லூரியைப் பற்றிய பெரிய அறிமுகம் கிடையாது.  மதுரை அமெரிக்கன் கல்லூரி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில்தான் சேருவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த என்னை, எனது பெற்றோரும், பெரியப்பாவும் சேர்ந்து இந்தக் கல்லூரிக்குத் தள்ளி விட்டார்கள். தள்ள முயற்சி செய்து அவர்கள் வென்றதன் காரணம் எளிது; பெரியப்பாவின் மகனும் எனது ஒன்றுவிட்ட தம்பியுமான சொக்கன் அந்தக் கல்லூரியோடு இணைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். 




எனது பள்ளித் தோழர்கள் எல்லாம் , நான் அந்தக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்றதும் என்னைப் பார்த்து அத்தனை அனுதாபப் பட்டார்கள். காரணம் எளிது; அந்தக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் 'ஈட்டியிருந்த' புகழ் அப்படி. ஆனால் அதே கல்லூரி பெற்றோர்கள் மத்தியில் ஈட்டியிருந்த புகழோ முற்றிலும் வேறு மாதிரியானது. 

காலையில் 4:45 க்கு எழ வேண்டும் (!?) எனத் தொடங்கி, அங்குள்ள தினப்படி செயல்முறைகளுக்கு ஒரு வரிசையான பட்டியல் உண்டு  . கல்லூரிக்குள் வேட்டிதான் கட்ட வேண்டும் (அப்படிக் கட்டாயம் கிடையாது, ஆனால் அந்த மதுரை செம்மண் வெம்மைக்கு வேட்டி சிலாக்கியம் என்று அனைவரும் இயல்பாக வேட்டிக்கு மாறி விடுவார்கள்!), கட்டடங்களுக்குள், வகுப்பறைகளுக்குள்  செருப்பு போடக்கூடாது என்று தொடங்கி ஏகப்பட்ட விதிமுறைகள். அனைத்திலும் சிகரம் வைத்தாற் போன்றது, முற்றிலுமான 'பயலுகள்' கல்லூரி. மருந்துக்கும் பெண்கள் கிடையாது. ஆசிரியர்களில் கூட... 
பதின்மத்தில் மலருகின்ற பருவத்தில் இருக்கின்ற ஒரு ஆண், மனிதன், அங்கு நுழைவானா? 

எனக்கு எப்போதும் ஒரு குணமுண்டு. அது ஒரு நொறுக்குகின்ற உறுதிப்பாடு. மனம் ஒப்பி ஒன்றை ஏற்றுக் கொண்டேன் என்றால், அது எத்தனை கடினமானது என்றாலும் அதனை வென்றே தீர வேண்டும். இல்லையெனில் வாழ்தல் இல்லை. 

அந்தக் கல்லூரி என்னைப் பல 'முதல்'களுக்குப் பழக்கியது. காலை 4:45'க்கு எழ வேண்டும் என்ற விதி இருந்தபோது, நான் 4:40'க்கு பொறியை அழுத்தியது போல தினமும் எழுவேன். ஒரு ஆண்டில் ஒரு பருவம் முழுதும் (செமசுடர்) நடந்த அனைத்துத் தேர்வுகளிலும், அனைத்து சிறப்புப் பாடங்களிலும் (இளமறிவியல் கணிதம்) நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தேன்; அம்மா நன்கு பாடுவார், கோயில், அவர் பேசுகின்ற கூட்டங்கள் என்று கூடப் போகின்ற நேரங்களில் என்னையும் பாடத் தூண்டுவார், ஆனால் அப்போதெல்லாம் பிடிவாதமாக மறுத்துவிடும் நான், (பாடத் தெரியாமல் அல்லது மறுத்து எனக்கு கிடைக்க விருந்த முதல் பரிசையே தவறி விட்ட கதையை  ஏற்கனவே ஒரு பத்தியில் எழுதியிருக்கிறேன்- தொடுப்பு பாதாளத்தில் பின்னூட்டுப் பெட்டியில்) அந்தக் கல்லூரியில் இருந்த போதுதான் முதன் முதலாக வாய்திறந்து பாடப் பழகினேன்; ஓரளவு நன்றாகவே பாடி, கல்லூரி வழிபாட்டுக் கூட்டத்தின் பாடல் குழுவிலும் இருந்தேன்; பின்னர் சி.ஏ., பணி இடங்கள், கூட்டங்கள் என்று பல இடங்களில் பாட்டை எடுத்துவிடும் பாட்டுக்காரனாக நான் திகழ்ந்ததற்கு மூல காரணம் அந்தக் கல்லூரி; கல்லூரித் தமிழ் மன்றத்தில், கல்லூரி இதழ் தயாரிப்பில் அங்கம் வகித்து, தமிழ் மன்றக் குழுவின் செயலாளராக இருந்தேன்; கட்டுரைகள், கவிதைகள் எழுதினேன்; பரிசுகள் வென்றேன்; கல்லூரி ஆண்டு விழாவில் 14 பரிசுகளை வென்று, ஒவ்வொரு அறிவிப்பிற்கும் கீழேயிருந்து மேடைக்கு ஓடுவதைப் பார்த்த, பரிசளித்துக் கொண்டிருந்த காந்திகிராம் நிறுவனத்தில் செயல் தலைவர் இ.ஆ.ப. ஓசா (Oja)  அவர்கள், நீ சிறிது நேரம் இங்கேயே நின்று எல்லாப் பரிசையும் வாங்கிய பிறகு மேடையை விட்டுக் கீழே இறங்கிக் கொள் என்ற 'சம்பவம் செய்த' சம்பவம்.. என்று ஏகப்பட்ட 'சம்பவங்கள்'. 

மேலும் அங்கு கற்றுக் கொண்ட சிலவிசயங்கள் எனது வாழ்வு முழுதும் தொடர்ந்து என்னைச்செதுக்கின. அவை எனது வாழ்வின் பிரமாதமான ஊக்க வருடங்களில் என்னோடு தவறாது இருந்தன. (காட்டாக கல்லூரியிலிருந்து வெளிவந்தாலும், பின்னர் சி.ஏ. வில் சேர்ந்து அது முடித்து, வேலைக்குள் சென்ற பின்னரும் அடுத்த பதினைந்தாண்டுகள் சரியாகக் காலை 4:40' க்கு எழுவது வழமையாக இருந்தது, போலவே உடற்பயிற்சி, ஓட்டம் போன்ற சில).
இருப்பினும், அந்தக் கல்லூரியில் இருக்கும் வரை, அங்கு படிக்கும் வரை, பெரும்பாலும் மாணவர்கள் அனைவரும் அந்த இடத்தை வெறுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். நான் எந்த வித முகமதிப்பும் வைத்துக் கொள்ளாமல்தான் அங்கு நுழைந்தேன். மூன்றாண்டுகளில் அங்கு என்ன பெறமுடியமோ அதில் கவனம் செலுத்தினேன். சிறந்த மாணவன், அறிஞன் என்று கல்லூரி எனக்குப் பாராட்டும் பதக்கமும் அளித்து வெளியே அனுப்பியது;  ஆனால் ஒரு கல்லூரியை, அதுவும் முழு முற்றாக உள்ளுறையும் கல்லூரியாக அவ்வாறு நடத்த முடியும், என்று எது அதனைத் தோற்றுவித்தவரை ஊக்குவித்தது? அந்தக் கல்லூரி மட்டுமல்ல, அதனோடு சேர்ந்த ஏழு கல்லூரிகள், கிட்டத்தட்ட 50 பள்ளிகள்  என்று அத்தனையையும் தன் சிந்தனைக்குள் வடிவாக்கியபடி அத்தனை நேர்த்தியாகத் தோற்றுவித்து காலங்களுக்குத் தொடர்ந்து நடக்கும் படி ஒரு வழி ஏற்படுத்தியவர் ஒரு மாமனிதர். அவரை நான் நேரடியாகப் பார்த்து  அறிந்ததில்லை.  அவர் காலமானததற்குப் பிறகுதான் அவர் உருவாக்கிய கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அவரைப் படங்களில் மட்டுமே பார்த்துத் தெரியும். ஆனால் அவரோடு பழகியவர்கள் சொன்ன அனுபவங்கள் ஒரு மாதிரியான அவரைப் பற்றிய அத்தகைய மனச்சித்திரத்தை எனக்கு அளித்திருந்தன !!!. 

சிறு சிறு உடல் உபாதைகளுக்கு அப்போது மதுரை அழகப்பன் நகரில் இருந்து வைத்தியம் செய்து கொண்டிருந்த தன்வந்திரி வைத்திய நிலையத்தின் மருத்துவர்.சோமசேகரிடன் எனது குடும்பத்தார் செல்வதுண்டு. 17 வயது இளந்தையாக எனது அம்மாவோடு ஒரு முறை அங்கு சென்றிருந்த போது, தற்செயலாக அவர் நான் படிக்கும் கல்லூரியைப் பற்றிய அறிந்தார். 'ஆ, அங்கேயா படிக்கறீங்க தம்பி, உங்க பெரிய சாமியெல்லாம் எப்படிப்பட்ட மனிதர் தெரியுமா?' என்று தொடங்கி அவர் விவரித்த செய்தி கேட்டு ஆடிப் போய்விட்டேன். 

மனித குலத்துக்குத் தொண்டு செய்வதே தனக்கான விதிக்கப்பட்ட வாழ்வு என்று  தேடி வரித்துக் கொண்ட தனது உயிர் வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு, தனக்கு ஒருவர் பணியாளராக எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, தான் விடை பெற நேரம் வந்ததாக அறிவித்து, தன்னை நிறைத்துக் கொண்டார் என்பது அந்த செய்தி.  நிறைத்தல் என்றால் தற்கொலை போன்று எதுவும் அல்ல; எண்ணத்தின் வலிமையும் உணவைச் சிறிது சிறிதாக மறுத்து அறவே நிறுத்திக் கொண்டதும். 
உண்மையாகவா?' என்று வாயைப் பிளந்து கேட்ட என்னிடம், ‘நான் அவரது நீண்ட வருடங்களுக்கான குடும்ப வைத்தியன் தம்பி. நாங்களெல்லாம் எவ்வளவோ கெஞ்சினோம், அவரது மனத்தை மாற்ற இயலவில்லை' என்றார் சோமசேகர். அவர் மட்டுமல்ல, அந்தப் 'பெரிய சாமி'யின் மனதை, எண்ணங்களை வேறு எவரும் எக்காலத்திலும் மாற்றிவிட முடிந்ததில்லை. தனது வாழ்வு ஒரு செய்தி என்று சொன்ன காந்தியடிகளைப் போல, தனது வாழ்வையே ஒரு செய்தியாக விட்டுச் சென்ற ஒரு மாமனிதர் அவர். 

அவரைப் பற்றித்தான்  #உயிருக்குநேர் பகுதி 37'இல்   MadrasPaper இணைய இதழில் எழுதியிருக்கிறேன். 

அவசியம் படியுங்கள்.  கட்டுரையின் தொடுப்பு கீழே...

https://www.madraspaper.com/un-thirty-seven/

#சுயதம்பட்டம்
#உயிருக்குநேர்

No comments:

Post a Comment