Pages - Menu

Wednesday, March 3, 2010

116.ட்ரீ டாப் வாக்-சிங்கையில் !

கடந்த சில நாட்களாகவே வீட்டில் மக்கள் எங்காவது வெளியில் சென்று விட்டு வரலாம் என்றார்கள்.சரி,எங்கு செல்ல வேண்டும் சொல்லுங்கள் என்றால் வித்தியாசமாக எங்காவது செல்லலாம் என்று பதில்..

சிங்கையில் ஒரு வருடம் வாழ்ந்து,வார இறுதிகளில் மாதத்திற்கு இரண்டு முறை வெளியில் சென்று விட்டு வந்தாலே ஆறு மாதங்களுக்குள் பார்ப்பதற்கு புதிதாக ஏதும் இடம் இருக்காது..இந்த லட்சணத்தில் எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டு இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.சட்டென்று ஒரு இடம் நினைவுக்கு வந்தது..

Mac Ritchie Reservoir !

அலுவலகத்தில் இருந்து வரும் போது ஒருமுறை லோர்னி தெருவிலிருந்தவாறே வண்டியைத் திருப்பி நீர்த்தேக்கத்தை சடுதியாகப் பார்த்து திரும்பியிருந்ததால் இடம் அழகாகவும் ரசிக்கும் படியும் இருக்கும் என்று தோன்றியதில் மேலும் இணையத்தில் குடைந்தேன்.

Tree Top Walk என்று ஒரு சொல்லாடல் கண்ணில் பட்டது;உடனே ரங்ஸ்க்கு ஆர்வம் கண்ணா பின்னாவென்று எகிறியது.'ஆ,,,ட்ரீ டாப் மேலே எல்லாம் நான் நடந்ததில்லை;கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்,,போலாம் போலாம் எனவும்,சரி என்று கிளம்பினோம்.ஆனாலும் ஏதோ ஒரு சம்சயம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தாலும்,அவற்றை புறம்தள்ளி விட்டு கிளம்பினேன்.

சாப்பிட பூரி செய்து எடுத்துக் கொள்ளலாம் என்ற ரங்ஸின் யோசனையை (நல்ல வேளை !) மறுத்து தயிர் சாதமும் உ.கி.கறியும் செய்து எடுத்துக் கொண்டு,நிதானமாக விடுமுறை நாளில் சாவதானமாக கிளம்பினோம்.




நீர்த்தேக்கத்திற்கு நுழைவு வாயிலில் நுழைந்து சுமார் 100 மீட்டர் நடந்தவுடன் அற்புதமான பார்வைப்புலம் விரிந்தது..பின்னணியில் மலைச்சரிவில் பரந்த நீர்த்தேக்கமும் குளிரான நீரில் மேல் மிதந்து வரும் தென்றலும் சுகமாக இருந்தன.நீர்த்தேக்கத்தை ஒட்டிய பாதையில் நடக்க பாதை இரணடு பிரிவாகப் பிரிந்தது.ஒன்று ட்ரீ டாப் வாக்'க்குப் போகும் வழி..இன்னொன்று நீர்த்தேக்கத்தை ஒட்டிய மரப் படிகளூடே நடந்து பூங்காவுக்குச் செல்லும் வழி.முதலாவது 5 கி.மீ என்றும் இரண்டாவது 11 கிமீ என்றும் சொன்னது.






ட்ரீ டாப் என்ற சொல்லாக்கத்தில் சுத்தமாக மயங்கியிருந்த நாங்கள் முதல் வழியைத் தேர்ந்து எடுத்தோம்.மேலும் சுமார் 200 மீட்டர் நடக்கவம் இன்னொரு தகவல் பலகை மறித்து,'ஏய்,மக்கா,நிசமா நீ ட்ரீ டாப்தான் போகணுமா இல்லை இந்த மரப் பாலம் வழியா தண்ணீரை ஒட்டியே நடந்து போயிட்றியா? என்று கேட்டது.சே,சே..என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு,,இவ்வளவு தூரம் மெனக்கட்டு டைம் ஒதுக்கி சாப்பாட்டு மூட்டை தூக்கி வந்ததே மர உச்சி நடைக்குத் தானே..என்ன யோசிக்கறதுக்கு இருக்கு என்று சொல்லிவிட்டு முதல் பாதையையே தேர்ந்தெடுத்தோம்.








பாதை ஆரம்பிக்கும் இடமே மரங்களடர்ந்த குகைக்குள் நுழைவது போல் தோற்றமளித்தது;இந்த லட்சணத்தில் வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் மர உச்சிப் பாதையைத் தேரந்தெடுக்க வேண்டாம்'என்று எச்சரிக்கைப் பலகை வேறு பாதை ஆரம்பத்தில்(உள்ளேயும் பல இடங்களில்) இருந்தது;யேய்,நாங்களும் ரௌடிதான்லே என்று நினைத்து வீறு கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.





(முன்னாலேயே சிங்கை வானிலை எச்சரிக்கை வலைத்தளத்தைப் பார்த்துவிட்டு நாங்கள் செல்ல இருந்த பகுதியில் நல்ல வானிலைதான் என்று உறுதிப்படுத்தியிருந்தேன்..ரங்ஸ் என்னை விட வீரமாக இன்னைக்கு மழை பெய்தாலும் போகிறோம் என்று சபதம் வேறு எடுத்திருந்தது வேறு விதயம்.)

நானும் மிகவும் மகிழ்ந்து-பின்ன சும்மாவா,நம்ம ஆளுக்கு என்னா வீரம்?-அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன்..

சரி,நடைக்கு வருவோம்..முதல் பாதையைத் தேர்ந்தெடுத்தோமா,நடக்க ஆரம்பித்தோம்.






பாதை சமதளமாக இல்லாமல் சிறு சிறு கருங்கற்கள் நிறைந்து,மேடாகவும்,சரிவாகவும் சுமார் 3 பேர் கை கோர்த்துக் கொண்டு நடக்கும் அகலத்தில் இருந்தது.சுற்றியும் பார்த்த பொழுது அந்த மேடு மண்ணால் ஆன மேடு போலத்தான் தோன்றியது;சரி ஒரு கடினப்பாடான தோற்றம்-ரஃக்ட் லுக்-வர வேண்டும் என்றுதான் சிறு சிறு ஒழுங்கற்ற கூழாங்கற்கள் போன்ற கற்களைப் பாதை முழுதும் பரப்பி இருக்கிறார்கள் என்று நினைத்தேன்;அதைப் பகிர்ந்து கொண்ட போது ரங்ஸ்ம் ஆமோதித்தார்.இடையில்-எனது இடையில் அல்ல-நடந்த பாதையின்- பலர் நாங்கள் நடந்த திசையிலும் சிலர் எதிர்த் திசையிலும் நடந்தோம்;அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியர்களாகவே-ஐரோப்பியர்-இருந்தார்கள்.பார்,வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வந்து காடு போன்ற சூழலில் நடக்கிறார்கள் என்று சிலாகித்துக் கொண்டே தொடர்ந்தோம்.

இடையில் பல மரங்களுக்கும் அவற்றின் பெயர்,ஜாதி ஆகியவற்றை அழகாக ஒரு சிறு அட்டையில் பெயிண்டால் எழுதி தொங்க விட்டிருந்தார்கள்;சிங்கப்பூரர்களின் செய் நேர்த்திகளை வியந்து கொண்டு தொடரந்தோம்.எல்லாம் நன்றாகப் போன மாதிரித்தான் ஆரம்பத்தில் தோன்றியது.



முதலில் சிறிது ஆயாசம் ஏற்பட்ட போது உட்கார எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே நடந்தோம்;இடையில் இளைப்பாறுவதற்கென்று ஒரு சிறிய இடம் இருக்கை வசதியுடன்-சாதாரண கல்லிருக்கைதான்- இருந்தது;அதில் அமர்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்த போது பாதையின் குறுக்காக மலைப்பகுதியின் கீழ்ப் புறத்திற்குச் செல்ல ஒரு பாதையும் இருந்தது;அதாவது அது நடக்க வேண்டாம்,போதும் என்று தோன்றுபவர்கள் மரியாதையாக கீழை இறங்கி பூங்காவை நோக்கி நடையைக் கட்ட உதவும் பாதை..

ஹே,இங்க பாரு,நடக்க முடியாத கிழடு கட்டை எதாவது வந்திருச்சுன்னா,வேண்டாம்னு தோனினா இறங்கிப் போயிடலாம் பாரு..மஞ்சத் தோல் காரன் முன் யோசனை முன் யோசனைதான்' என்று கமெண்டிக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தோம்;ஆங்காங்கு மூங்கில் மரங்கள் வளர்ந்து சுமார் 100 அடிக்கும் மேல் வளைந்து நின்றன;நன்கு முற்றிய மூங்கில்கள்,சுமார் 20 செ.மீ. விட்டம் கொண்ட மூங்கில்கள்..தட்டிப் பார்த்தால் கணீர் கணீர் என்று சப்தம் வந்த மரங்கள் கூட்டமாக நின்றன;லேசான காற்றுக்கு அவை ஒரு சப்தம் எழுப்பின;பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் இலங்கைக்குச் சென்று திரும்பி கோடிக்கரையில் கரேயேறி,ஒளிந்திருக்கும் ரவிதாசனைப் பயப்படுத்த முடிவு செய்யும் இடத்தில் கல்கி எழுதி இருக்கும் மூங்கில் மரங்களின் மர்,மர சப்தம் என்றால் என்ன என்று எனக்கு விளங்கியது.கல்கியின் காட்சிப்படுத்தலை வியந்து கொண்டே தொடர்ந்தோம்.





ட்ரீ டாப் என்று எங்களை மயக்கிய (மக்கா,அதுலதானே விழுந்தது !) வார்த்தைப் பிரயோகத்துக்குரிய ஒன்றையும் பாதையில் காணவில்லை;ரங்ஸ் வேறு எங்க ட்ரீ டாப் எங்க ட்ரீ டாப் என்று ஏகத்துக்கும் எகிறிக் கொண்டு வர,நான் மிகவும் சீரியசான தொனியில் மூங்கில் அல்லது 100 அடிக்கும் மேலாக வளர்ந்திருக்கும் ஏதாவது மரத்தில் ஏறிக் கொண்டால் ட்ரீ டாப்தான என்று சொல்லி மொத்து வாங்கினேன்.

நேரம் செல்லச் செல்ல ஒரே மாதிரிச் செல்லும் பாதை அயற்சியாகவும் உற்சாகமளிப்பதாகவும் இல்லை;இதில் 5 மணிக்கு ட்ரீ டாப் மூடி விடுவார்கள் என்று வேறு குறிப்பைப் படித்திருந்ததால்,நடையை எட்டிப் போட்டோம்;வியர்வையும் அயற்சியும் ஆளை அடித்தது.நான் எப்பொழுதும் ஒட்டத்திற்காகப் பயன்படுத்தும் முழுக்காலணியை-ஷூ-பயன்படுத்தினால் அது மழையில் நனைந்து பாழாகி விடக் கூடூம் என்றும் பூங்கா போன்றுதானே இருக்கும் என்ற நினைப்பில் தோலால் ஆன மு.கா.யையே அணிந்திருந்தேன்.பார்த்தால் இது கிட்டத்திட்ட ட்ரெக்கிங் போன்ற ஒரு நடை.அதில் தோல் ஷீ அணிந்து கொண்டு போன ஒரே பிரகிருதி நானாகத்தான் இருக்கும்!

இடையில் களைத்து,அமர்ந்து,களைத்து,அருந்தி 4.75 கிமீ ஐக் கடந்த போது தூரத்தில் வெளிச்ச வெளி தெரிந்தது;ஆகா ட்ரீ டாப்பு வந்து விட்டது என்று டாப் எகிறி விடும் உற்சாகத்துடன் சிறிது ஏற்றமாக இருந்த பாதையை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏறினோம்;ஏறினால்....

டார்லிங் டாங் டாங் படம் பார்த்தீர்கள்தானே..அதில் தற்கொலை செய்யும் உத்வேகத்துடன் பாக்யராஜ் மலை ஏறிச் செல்ல பதைபதைத்து க,பெ.சிங்காரம் மற்றும் மற்றவர்கள் வர,மேலே ஏறிய பாக்யராஜ் அங்கு கண்ட காட்சியைப் பார்த்து விட்டு ஒரு தனியான உணர்ச்சி மற்றும் முழியுடன் நிற்பாரல்லவா,அப்படி நிற்கும் படியானது.ஆம்,தெளிவாக கார் வரும் பாதையாக நல்ல ரோடும் கால்ஃப் வெளியும் விரிந்தன.




இந்த ரோடு இருப்பது தெரிந்திருந்தால் வந்திருக்கவே வேண்டாமே,என்ன கரும்மடா இது என்று நொந்து கொண்டு சுற்றி முற்றும் பார்த்தோம்;இடப்பக்கமாக இன்னொரு பாதை மீண்டும் ட்.டா. பாதையைச் சுட்டியது,இம்முறை 3.5 கி,மீ.ஆஹா,சிக்குனாண்டா சிங்காரம் என்று நினைத்த படியே ரங்ஸ்ஐ நோக்க,அவர் ரொம்பவும் உற்சாகமாக இருப்பது போல ஒரு பாவனையை வெளிப்படுத்திக் கொண்டு,ஹூம் வாங்க,வாங்க நடக்கலாம் என்று சொல்லிக் கொண்டே,மூட்டைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார்.இப்படியை முன்னர் பார்த்த பாவனையிலேயே மேலும் சுமார் 3 கி,மீ.சென்றது.

முடிவில் ஒரு கட்டடமும் கழிப்பறை,குளியலறை வசதிகளும்,குடிநீரும்-சிங்கையில் சாங்கி விமான நிலையம் தவிர பொது இடத்தில் குடிநீர் கிடைப்பது இது போன்ற அத்துவானக் காட்டில்தான் என்று நினைக்கிறேன்-இருந்தன.சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்து,இன்னும் 400 மீட்டர் தூரத்தில் ட்,டா.நடை இருக்கிறது என்று தெளிந்து மேலும் நடையைக் கட்டினோம்.




அழகர் கோவில் மலைக்கு ஏறும் பாதை போன்ற உயர் சாய்வுடன் கூடிய காங்கிரீட் தெருப்பாதை மேலேறியது;களைப்பும் வியர்வையிலும் அப்பாதையில் ஏறி முடிக்க மூச்சு வாங்கி உட்கார்ந்து விடலாம் என்று தோன்றிய இடத்தில் மரச்சட்டங்களால் ஆன படிகள் காணப்பட்டன.








சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதையில் இறங்கி நடக்க சுமார் 200 அடி நடக்க,ஒரு சிறிய காவல் கூண்டும் அங்கு ஒரு வனக்காவல் பணியர் கூண்டுக்குள் ஒரு குரங்குடன் அமர்ந்திருந்தார்;அதாவது குரங்கு கூண்டுக்குள் இல்லை,காவல் கூண்டுக்குள் அமர்ந்திருந்த அவருக்கு 3 அடி தள்ளி குரங்கு செல்லும் பாதையில் சரியாக அமர்ந்து கொண்டு எங்களை மிகவும் விரோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.







காவலர்,யாரும் தின்பதற்கு-அவருக்கு அல்ல,குரங்குக்கு- எதுவும் தருவதில்லையாதலாலும்,காட்டில் தின்ன எதுவும் கிடைக்காததாலும் அவை சிறிது மூர்க்கத்துடன் இருக்கும் என்று பிட்டைப் போட்டு விட்டு,கூடவே ஒன்றும் செய்யாது நீங்கள் போங்க,என்று சொல்லி விட்டு விட்ட மோட்டு வளையைப் பார்க்கத் துவங்கினார்.நான் சிறிது பின் திரும்பி வந்து காய்ந்து கிடந்த ஒரு மரக் குச்சியை ஒடித்துக் கொண்டு-அதைப் பயமுறுத்தப் போகிறேனாம்-பாதையில் நுழைய எத்தனித்தேன்;நண்பர்-காவலர் அல்ல,குரங்கார்தான்-அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டு உடலை சிறிது முன்னால் நகர்த்தி உர்ர்ர் என்று மீண்டும் மூர்க்கம் காட்டினார்;நான் கையில் இருந்த தம்மாத்தூண்டு குச்சியை கதாயுதம் கணக்காக நினைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டு முன்னேற முனைய அன்பர் கிட்டத்தட்ட உறுமிக் கொண்டு மேலே பாய,நான் உளறிக் கொண்டு பின்னால் சாய்ந்து பின்வாங்க நண்பர் இருந்த இடத்தை மீண்டும் அடைந்து அதை போஸில் அமர்ந்து கொண்டார்.




எட்டிப் பார்த்தால் ட்.டா.வாக் பாதை! குறுக்கே குரங்கார்..என்னடா சோதனை என்று நினைத்துக் கொண்டு நிற்கையில் ஐரோப்பியர் கூட்டம் ஒன்று வந்தது.சில பெண்களும் தொடர்ந்த சில ஆண்களும்..கடைசியாக ஒரு கனத்த மனிதர்,ஆஹா,இந்தக் கனத்த மனிதர் மேல் நண்பர் பாய்ந்தால் அவர் உளறியடிப்பது எவ்வளவு தமாஷாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ஆவலுடன் காத்து(பார்த்து)க் கொண்டிருந்தேன்.ஐ,பெண்மணி சிறிது நடை வேகத்தைக் குறைத்து தயங்க,குண்டர் Just go as if it is not there,dont' stare at it or see at it,have straight look on the path என்று சொல்லிக் கொண்டே நடை வேகத்தைக் கூட மட்டுப் படுத்தாமல் நடந்தார்.
பெண்கள் முன்னால் செல்ல,ஆண்கள் பின்னால் செல்ல நமது நண்பர் எவ்வித சலனமும் இன்றி பாதையின் ஒரு பக்க மரக் கைப்பிடியில் அமர்ந்து கொண்டு என் வருகைக்கு மட்டும் காத்துக் கொண்டிருந்ததாகப் பட்டது;ஐரோப்பியர்கள் வந்தார்கள்,சென்றார்கள்..No reaction from our friend !

வாழ்வில் சில தத்துவப் பாடங்கள் இப்படித்தான் எதிர்பாரா இடங்களில் கிடைக்கின்றன என்று நினைத்துக் கொண்டு,கூண்டுக் காவலர் உதவியுடன் நண்பரைக் கடந்து ட்.டா.வாக் பாதையில் நுழைந்தோம்.

3 comments:

  1. hi arivan, excellent description on the Mac Richit reservoir. I think treetop is a new development. It was not there in 2001. The photos were all good and add to the reading experience. Please write more ..

    ReplyDelete
  2. நண்பர் சொக்கா,
    நன்றி.
    அடுத்த பாகம் விரைவில் வர இருக்கிறது.

    ReplyDelete