Pages - Menu

Tuesday, May 12, 2009

103- நெகிழ்ந்து மலர்ந்த ஒரு "பூ"

இந்த வாரத்தில் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி(தானே?)நடித்த பூ திரைப்பபடம் பார்க்க முடிந்தது.

நல்ல படங்களை நாங்கள் வெற்றி பெற விடுவதில்லை என்ற தமிழக ரசிக மனோபாவத்துக்கேற்ப வந்த சுவடு தெரியாமல் போன ஒரு படம்.


படம் பார்த்து முடித்த இரவு தூங்க நெடுநேரம் ஆனது;மனம் நெகிழந்த ஒரு உணர்வுடனேயே தூங்கப் போனேன்.சிறுவயதில் நான் பார்த்த நிறம் மாறாத பூக்கள்  உதிரிப் பூக்கள் படத்தின் -விஜயன் நீருக்குள் போகும்-இறுதிக் காட்சி நெடுநாட்களாக நினைவில் இருந்த ஒன்று.அதற்குப் பிறகு இந்தப் படத்தின் இறுதிக் காட்சி மிகவும் பாதித்ததும் நினைவில் நெடுநாட்கள் இருக்கும் என்றும் தோன்றியது.
கதை என்னவோ சாதாரண காதல் கதைதான் என்று கருதினாலும் நாயகியின் அன்பு எப்படிப்பட்டது என்ற அவளின் பார்வையும் அதை வெளிப்படுத்தும் காட்சிகளும் அன்பு-காதல் ஆகிய உணர்வுகளின் நோக்கம்-objective and attainment-மாறுபட்டு என்னவாக இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் இந்தக் கதையின் முடிச்சு.

காதலித்தவர்கள் எப்படியும் இணைவதுதான் காதலின் வெற்றி என்ற பொதுப்பட்ட சிந்தனையிலிருந்த வேறுபடும் படம் ஒருவர் மீதான காதலின் உன்னதம் அவள் அல்லது அவனுடன் இணைவதைக் கூட விலையாகத் தரத் தயாராக இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நச்சென்று சொல்லிச் செல்கிறது படம்.

அத்தை மகனை சிறுவயதில் இருந்து பிரவாகமாய் விரும்பும் ஒரு எளிய கிராமத்துப் பெண் அவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்று தெரிய வரும் பொழுது எப்படி ரியாக்ட் செய்வாள் என்பது பல படங்களில் எடுத்துத் தள்ளியிருக்கும் கருமாந்திரக் காட்சி,இரண்டு வகைப்படும்;ஒன்று அவள் இறந்து போவாள்,பெரும்பாலும் தற்கொலை அல்லது விபத்து ஏதாவது ஒன்றில்;அல்லது சாமியாரிணி ஆவாள்...இவை தவிர்த்த தீர்வுகளை முன் வைத்த படங்கள் மிகக் குறைவு.

பூ நாயகி அதை எளிதாக எதிர் கொள்வதோடு,நாயகனான அத்தை மகன் மீது எந்த வருத்தங்களுமின்றி இருக்கிறாள்;தோழி உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையா என்று கேட்கும் போது,எதுக்கு வருத்தப்படனும்,அது நல்லா இருந்தா பத்தாதா?நான் அது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டா அது எப்படி நல்லா இருக்கும்?எனக்கு அது சந்தோஷமா இருக்கணும் அதுதான் வேணும்.நான் வருத்தப்படாம இருந்தாத்தான் அது சந்தோஷமா இருக்கும் என்று இதழ் நெளியும் புன்னகையுடன் சொல்லும் போது நாம் நெகிழ்ந்து போவது நிச்சயம்.

அவனை எவ்வளவு விரும்புகிறாள் என்பதை,ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அதில் முழுதும் எழுதி அவனிடம் கொடு;அதைப் பார்த்தால் உன் அன்பின் வலிமை தெரிந்து உன்னையே திருமணம் செய்து கொள்வான் என்று தோழியின் யோசனைப்படி முயற்சிக்கும் நாயகி,கடைசியில் எதுவும் எழுதத் தோன்றாமல்,நீ நல்லா இருக்கணும் மாமா..என்று இரு வரிகளுடன் கடிதத்தை முடிப்பது..

மளிகைக் கடைக்கு சாமான் வாங்கச் சென்று விட்டு,என்ன வேணும் என்ற கடைக்காரரின் கேள்விக்கு தன் மாமாவின் பெயரை விளித்து வேண்டும் என்று சொல்லும் தன்னை மறந்த கணம்..

போன்ற சிறு சிறு ரசமான இடங்கள் படம் முழுதும் ஆங்காங்கே.

அவனது திருமணத்திற்கு தனது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து,பகைத்து தூற்றி அவனை சாபமிடும் போது,அவனது நலமான வாழ்வுக்காக அவனுடைய திருமணத்திற்கு கட்டாயம் தன்னுடைய வீட்டிலிருந்து யாராவது கட்டாயம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் நாயகி அதை வலியுறுத்த தற்கொலை வரைக்கும் போகிறாள்..இது மிக வித்தியாசமான ஒரு சிந்தனை.

எங்கள் ஊர்ப் பக்கங்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் நடைபெறும் போது ஒரு வழக்கம் வைத்திருக்கிறார்கள்;அதாவது மணமக்கள் திருமணத்தன்று வருகை தந்திருக்கும் மூத்தவர்கள் அனைவரது கால்களிலும் விழுந்து ஆசி பெறுவது.பொதுவாக எல்லா இனத்திலும் மணமக்கள் நெருங்கிய சொந்தபந்தத்தில் மூத்தவர்களிடம் ஆசி பெறுவார்கள்.ஆனால் நகரத்தார் என்று சொல்லப்டும் நாட்டுக் கோட்டை நகரத்தார் திருமணம் ஒன்றில் நான் பார்த்து வியந்தது வந்திருந்த அனைத்து மூத்தவர்கள் காலிலும் விழுந்து ஆசி பெற்றது..எனது தந்தையுடன் அத்திருமண விழாவில் கலந்து கொண்ட நாங்கள் நட்பு முறையில்தான் அழைக்கப்பட்டிருந்தோம்.எனது தந்தையும் பெண்ணின் தந்தையும் நண்பர்கள்..நண்பர்கள் என்று சொல்வது கூட அதீதம்;ஒருவருக்கொருவர் மதிக்கும் தெரிந்தவர்கள்,அவ்வளவே.

ஆனால் நாங்கள் நுழைந்த உடன் எங்களை வரவேற்ற பெண்ணின் தகப்பானார் தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்;பின்னர் மணமக்களை அறிமுகப் படுத்தினார்.பின்னர் மணமக்கள் எனது தந்தையாரிடம் ஆசி பெற்றார்கள்.

திருமணத்தில் இருந்து திரும்பிய பிறகும் கூட இதன் உளவியல் காரணங்களை எண்ணிக் கொண்டிருந்தேன்;எனது தாயாரிடம் தெரிவித்த போது,மிக எளிதாக அதற்கு ஒரு விளக்கம் கிடைத்தது.திருமணத்தில் அனைவரும் கலந்து கொள்வார்கள்;வருபவர்களில் எவருக்கேனும் விழாக் குடும்பத்தாரிடம் ஏதேனும் மன்த்தாங்கல்கள் சிறிதளவு இருந்தாலும் கூட தம் காலில் விழுந்து தங்களின் உளமார ஆசியை வேண்டும் மணமக்களை முழுமனத்துடன் வாழ்த்துவார்கள்.அவர்களிடம் ஏதும் மனக்குறைவான சிந்தனை இருந்தாலும் கூட தமது குழந்தைகளைப் போல எண்ணி தங்களிடன் ஆசிர்வாதம் ஆசி வேண்டும் மணமக்களின் செயல் அவர்கள் அறியாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு மனப் பிணக்குகளைக் கூட சரி செய்து முழுமனத்துடன் அவர்களை வாழ்த்திச் செல்வார்கள்.அதனால்தான் அப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயம் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்.
அது முழுக்க எனக்கு உடன்பாடானதாகத் தோன்றியது.

கிட்டத்திட்ட அந்த ஒரு செய்தியையே பூ படம் தந்தது.தன்னை நிராகரித்தாலும் தான் விரும்பிய ஒருவன் நன்றாக வாழ வேண்டும் என்று உளமார நினைக்கும் நாயகி தனது மனத்தையே வருத்தங்களற்று மாற்றிக் கொள்வதோடு,அவன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்,அதற்கு தன் குடும்பத்தினரும் சென்று அவனது திருமணத்தில் கலந்து கொண்டு அவனை வாழ்த்திவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனை விதித்து,அதற்கு பதில் நிபந்தனையாக,'அவனது திருமணத்திற்கு முன்னர் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்;அதற்கு சம்மதித்தால் நாங்கள் அவன் திருமணத்திற்குச் செல்கிறோம்' என்று சொல்ல,உடன் சம்மதித்து அவனது திருமணம் நடக்கும் முன்னரே தான் திருமணம் செய்து கொள்கிறாள்.

இவ்வளவு மன நெகிழ்ச்சியுடன் தான் விரும்பியவனின் வாழ்க்கையின் மகிழ்ச்சியை விரும்பும் அவளின் முயற்சிகள் வியர்த்தமாகி விட்டதை தெரிந்து கொள்ளும் கணத்தில் அவளது வெடித்து அழும் உணர்வுகளுடன் முடிகிற படம் மிகுந்த நெகிழ்ச்சியான சிந்தனைகளை விட்டுச் செல்கிறது..

பார்த்து நெகிழ வேண்டிய ஒரு படம் !

7 comments:

  1. நானும் வசந்தத்தில் பார்த்தேன்
    அருமையான படம்

    ReplyDelete
  2. வாங்க திகழ் மிளிர்..

    சிங்கைக்கு வந்துட்டீங்களா,நன்று.

    நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது.

    உங்களுடைய பெயர் நல்ல ஒரு பெயர்,அபிராமி அந்தாதியை நினைவு படுத்துவது...

    ஏதோ ஒரு கன்னட பாட்டு உங்க புரொஃபைலில் வைத்திருக்கிறீர்களே,அது என்ன?

    நன்றி,வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  3. //நிறம் மாறாத பூக்கள்//
    அறிவன்! அது உதிரிப்பூக்கள். இந்தக் காட்சியைப் பற்றிய சுதேசமித்திரனின் சிலாகிப்பு வாசிப்பிற்குகந்தது!

    //அதேபோல் மகேந்திரனின் இன்னொரு படமான உதிரிப்பூக்கள் க்ளைமாக்ஸ்! இரக்கமேயில்லாத வில்லன் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறான். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறான். வெளியே வந்தால் மற்றவர்கள் கொன்றுவிடுவார்கள். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவன்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறான். "இந்த ஊர்ல நான் ஒருத்தன்தான் கெட்டவனா இருந்தேன்! இப்ப உங்க எல்லாரையும் கெட்டவங்களா ஆக்கிட்டேன்!" அவ்வளவுதான் வசனம். இதனால்தான் வசனகர்த்தா என்றால் இன்றும் மகேந்திரன் நினைக்கப்படுகிறார்.//

    உங்களின் அலசல்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பெ.நா.அப்புஸ்வாமியைப் பற்றிய உங்கள் பதிவைப் படித்த பிறகு ரீடரில் உங்கள் பதிவையும் சேர்த்து விட்டேன். தொடர்ந்து எழுதுங்கள்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்ராமன், படம் பற்றிய தவறான தகவலுக்கு வருந்துகிறேன்..படங்களை ரசிக்கத் துவங்கிய பதின்ம வயதுகளில் பார்த்த படம் என்பதால், பெயர் நினைவில் இல்லாவிட்டாலும் படம் மனதில் நின்று விட்டது..

      இப்போது மாற்றி விட்டேன்.

      :))

      Delete
  4. அன்புள்ள ரமணன்,
    தங்கள வருகைக்கும் ஊக்க வார்த்தைகளுக்கும் நன்றி.

    சில நாட்களாக நான் மிகவும் ஊர்சுற்றிக கொண்டிருப்பதால் இணையத்திற்கு அடிக்கடி வர இயலுவதில்லை.

    எனினும் மீண்டும் எழுதுவதற்கான முனைப்புடனேயே இருக்கிறேன்..விரைவில் சந்திக்கிறேன்..

    நன்றிகள் மீண்டும்.

    ReplyDelete
  5. மிளிர் என்பது வினைச் சொல் அல்லவா? பெயராக வைப்பது சரியா? விளக்குங்களேன் ?

    ReplyDelete
    Replies
    1. ராதா கிருஷ்ணன், திகழ்மிளிர் என்ற வார்த்தையை வினைத்தொகையாகக் கருதலாம்,மிளிர்திகழ் என்று எழுதும் போது.

      மிளிர் என்பது வினைச்சொல்தான்;ஆனால் வினைத்தொகையாகப் பயன்படுத்தினால், பெயர்ச்சொல்லாக வரலாம்.

      ஊறுகாய் தெரியும்தானே... :))

      Delete