Pages - Menu

Thursday, April 23, 2009

102-குறுந்'தொகைகள்-26-04-2009




இலங்கைத்தமிழர்களின் இன்னல்கள் உச்சத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கப்போகும் தேர்தல்கள் கிளர்த்தும் நாடகங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறுகின்றன.

மக்கள் அனைவரும் முட்டாக்**கள் என்று நினைத்துக் கொண்டு அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.தமிழர் தலைவருக்கு மக்களுக்கு எப்படியாவது பல நாடகக் காட்சிகளை நடத்திக் காட்டி தன் 'மக்களை' உயர்த்தும் சாத்தியங்கள் இருக்கிறதா என்று முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்;இன்னும் கழைக்கூட்டாடி மாதிரி குட்டிக் கரணம் அடித்துக் காட்டுவது மட்டும்தான் மிச்சம்,கூடிய விரைவில் அதையும் எதிர் பார்க்கலாம்.

அம்மா ஆயுசு முழுதும் இலங்கையில் கண்ணுக்குத் தெரிந்தார்கள்;இப்போது இலங்கைத் தமிழர்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள்;'புலிகள்' எல்லாம் காற்றில் மறைந்து விட்டார்கள் போலிருக்கிறது....ம்ம்ம்ம்...தேர்தல் எல்லாம் செய்யும் வேலை!

நேற்றுவரை தமிழர் பாதுகாப்புப் புண்ணாக்கு வியாபாரம் செய்தவர்களுக்கு இன்று இரண்டோ அல்லது ஏழோ இடங்கள் எல்லாவற்றையும் மறந்து ஐயாவும் அம்மாவும் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்;இனி தேர்தல் முடிந்து சிலகாலம் வரை இலங்கைத் தமிழர்களை பற்றிய எந்த விவரமும் இவர்கள் வாயில் இருந்து வராது.

பல காரணங்களால் தேசிய அளவில் காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக மாறிப் போய் விடும் என்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களில் கை கொடுக்கும் தமிழகம் கவிழ்த்து விடுமோ என்று பயந்து மீண்டும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு வெளிப்படையாக இலங்கையில் என்ன நடந்தாலும்,எவ்வளவு தமிழர்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை எனபதை வெளிப்படையாக அறிவித்து விட்டால் நல்லது..ஏதாவது செய்வார்களா என்ற பொய் எதிர்பார்ப்பாவது இல்லாமல் போகும்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் போர்நிறுத்த வேண்டு கோளும் அதற்கான இலங்கையின் எதிர்வினையும் மேலும் கலக்கமளிக்கும் இந்தச் சூழல் அவலத்துடன்,அச்சமூட்டுகிறது.

0 0 0

கோவை செண்ட்ரல் எக்ஸைசில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கே.ராஜேந்திரன் எழுதிய ஒரு கவிதை,மீண்டும் சுஜாதாவின் கட்டுரைகளில் இருந்து...

மங்கிய வெளிச்சத்தில்
பளபளக்கும் இமைக்காத கண்கள்
வைக்கோல் திணித்த
கன்றுக்குட்டியின் ஒட்டுத்தோல் பார்த்து
மனம் மறுகும்
முரட்டு விரங்களின்
இயந்திர உரசலுக்கு
மெல்லிய நாவின்
ஈர ஸ்பரிசங்களும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
நினைவில் தேங்கும்
சாட்டைக் கம்பு
நினைவுக்கு வர
அடைத்த துவாரம்
அரை மனதாய்த் திறக்கும்
மார்வலி மரத்து
வெள்ளை ரத்தம் வடிக்கும்

பசு என்னும் தலைப்பில் வந்த இந்தப் புதுக்கவிதை நவீன கவிதையின் பரிமாணங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.பல கவிதைகப் பரிச்சயங்களில் எனக்கு எப்பொழுதும் தோன்றும் 'இன்னும் சிறிது செப்பனிட்டிருக்கலாமோ'என்ற எண்ணம் இக்கவிதைக்கும் ஏற்பட்டது.


(எனக்குத் தோன்றிய)tinkered version

மங்கிய ஒளியில்
வைக்கோல் போர்த்து
அசையா நின்ற ஒட்டுத் தோல் குட்டி;
மெல்லிய நாவின் ஈர ஸ்பரிசமும்
பிஞ்சுப் பற்கடிப்பும்
தேங்கும் நினைவில் மறுகும் மனம்;
சாட்டைக் கம்பு சுழல
முரட்டு விரல்களின்
எந்திர உரசலில்
அடைத்த மடியின் துவாரம்
மார்வலி மரத்துத் திறக்க
வடிகிறது..
வெள்ளை ரத்தம் !

இந்த செப்பம் பல சமயங்களில் நல்ல கவிதையை உன்னதமானதாக மாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன.
நண்பர் ராஜேந்திரன் இப்போது பதிவெழுதிக் கொண்டிருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது;சினப்பட்டால் மன்னிப்பாராக !


0 0 0

மதுரைக் காரரும் சென்னை(நிதி)க் காரரும் (தேர்தலுக்காக)வெளியிட்ட சொத்து விவரம் ஒரு பதிவில் பார்க்க நேர்ந்தது.அதுவே 30,40 கோடிகளில் இருக்கிறது.
எந்த ஒரு கல்வித் தகுதியோ,தனிப்பட்ட வணிக நிறுவனமோ இல்லாத அன்ப நண்பர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு சொத்து என்று சுதந்திர இந்தியாவில் எவரும் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறது.
மாதம் முழுதும் நாயாய் உழைத்தும் நம்மால் ஆயுளில் ஒரு கோடி சேர்க்க முடியுமா என்று மலைப்பாயிருக்கிறது...

ம்ஹ்ம்...

வாழ்க இந்தியா,வாழ்க அரசியல்!

0 0 0

விருட்சம் கவிதைகளி'ல் யுவன் எழுதிய பிரவாகத்தில் ஒரு துளி

எனக்குப் பிடிக்கும்
என்றறியாமலே
ஒலியெழுப்புகின்றன
பறவைகள்.
நான் விழித்து
எழாத போதும்
விடிந்து விடுகிறது பொழுது.
கவிதையின் கணமொன்றை
கண்கள் துழாவ
காலடியில் பாய்ந்து மறைகிறது
கணங்கள் பிரவாகம்

நல்ல கவிதை என்பது ஒரு சொந்த உன்னதம்;அதற்கு இது ஒரு உரைகல்.இந்தக் கவிதை நிச்சயமான ஒரு கவிதை அனுபவத்தை சட்டென்று தருகிறது;கடைசி வரியை கணங்களின் பிரவாகம் என்று மாற்றினால் இக்கவிதை இன்னும் கூர்ப்படுவதாக உணர்கிறேன்!

0 0 0

1 comment: