ரஹ்மான்-ராஜா சர்ச்சை முன்னவர் ஆஸ்கர் வாங்கியிருக்கும் இந்த நேரத்தில் அதிகமாக எழுப்பப்படுகிறது.
தகுதிகள் என்ற நிலையில் ராஜாவுக்கு நிச்சயமான இசைத்தகுதிகள் இருக்கின்றன.ஆனால் மற்ற வகைகளில்???
ரஹ்மானின் பொதுமுகம்-தனிப்பட்டு எப்படி இருந்தாலும்-மிகவும் பண்பட்ட,சமூக மென்மையான,எவரையும் கடியாத முகம்.அதை அவர் ஒரு மேலாண்மை-management-சார்ந்த விதயமாகக் கூட கடைப்பிடித்திருக்கலாம்.ஆனால் அவரது பொதுமுகம் நட்பானது.ஆனால் ராஜா பல சந்தர்ப்பங்களில் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறார்,வெளிப்படையாக...திரையுலகத்திலும்,இசையுலகத்திலும் இதற்கான தரவுகள் நிறையக் கிடைக்கின்றன.கூடவே எவருக்கும் இருக்கக்கூடாத தலைக்கனம்.இதுவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருப்பதாகப் பலர் சுட்டுகிறார்கள்.இது ராஜாவுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையால் கூட இருக்கலாம்;ஏன் சொல்கிறேன் என்றால்,பாடகர் பாலுவும் கங்கை அமரனும் கலந்து கொண்ட காபி வித் அனுவில் ஒரு சம்பவத்தை பாலு நினைவு கூர்ந்தார்.அது ஏவிஎம் போன்ற படப்பிடிப்புத் தளங்களில் எவ்வாறு ராஜா ஒரு கட்டமைக்கப்பட்ட ஒளிவட்டத்திற்குள்,சாதாரணமாக வேடிக்கை,சிரிப்பு போன்ற இயல்பு நிலையற்று துறவி,குரு என்ற அளவில் அனைவரும் 2 அடி எட்ட நின்று வணங்க வேண்டிய நிலையில் இருக்க விரும்புவார் என்பதையும்,அதை உடைக்க பாலு ராஜாவை கிச்சு கிச்சு மூட்டி ஏவிஎம்மின் அந்தத் தளமெங்கும் சிரித்து ஓடவிட்டதையும்,இவ்வளவு சிரிப்பையும் உற்சாகத்தையும் ராஜா ஏன் ஒளித்து வைக்கிறார் என்று தான் கேட்டதாகவும் விவரித்தார்.அதைக் கேட்ட கணத்தில் ராஜா என்ற மனிதனின் மனப்பான்மை அவ்வாறான ஒரு ஒளிவட்டத்தை தனக்கு விரும்பி அமைத்துக் கொண்ட ஒன்று என்பது என் துணிபு.
இது ஒரு காரணம்.
இந்த குணத்தின் நீட்சியே மணிரத்னம் மற்றும் பாலசந்தர் போன்ற திறமையாளர்கள் இசைக்கு வேறு நபர்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது,பிறகு அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை! He never turn back !
இரண்டாவது காரணம் முன்னவருக்கு இருந்த தொழில்நுட்பத்தில் மேம்படுத்திக்கொள்ளும் வேட்கை.
ரஹ்மான் அன்றன்றைய புதிய தொழில் நுட்பத்தை எவ்வாறு தான் மேலும் சிறப்பாக தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒரு வேட்கையுடன் இருந்தார் என்பது மிக வெளிப்படை.ரோஜா படத்தின் போது ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கூடமாக இருந்த அவரது இடம் இப்போது இந்தியாவின் சிறந்த ஒலிப்பதிவுக் கூடங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள்.எனவே டெக்னிகல் எக்ஸலென்ஸ் இன்னொரு முக்கியக் காரணம்.ராஜா-இசைஞானி,அவர் இல்லாவிட்டால் எந்தப் படமும் ஓடாது என்று 80 களில் எழுப்பப்பட்ட பிம்பங்களினால் தேங்குநீர் நிலைக்குச் சென்று தன் வீழ்ச்சிக்கு அடிகோலிவிட்டார் என்பது உண்மை.
மூன்றாம் காரணம்-சந்தைப் படுத்துதல்.ரஹ்மான் திரை இசை சாராத இசைத்தட்டுக்கள் மூலம் அடிக்கடி திரை அல்லாத இசை வடிவங்களில் தன் தேர்ச்சியை வெளிப்படுத்தவும் அவற்றின் சந்தைப்படுத்தும் உத்திகளின் மூலம் இசையுலகின் பல சந்து பொந்துகளிலும்-நூக் அன்ட் கார்னர்-தன்னுடைய பெயரின் பரிச்சயத்தையும் இருப்பையும் உறுதி செய்தார்.இது அவருக்கு தமிழ்த்திரையுலகை மீறிய இந்தி மற்றும் உலக அளவில் இசைக்கான பல வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் ராஜா தமிழ்த்திரையுலகிலேயே தேய்ந்து முடங்கினார்.நத்திங் பட் விண்ட்,ஹவ் டு நேம் இட் மற்றும் திருவாசகம் தவிர வேறு குறிப்பிட்ட முயற்சிகள் இருக்கின்றனவா தெரியவில்லை!
இம்மூன்று காரணிகளிலும் தான் ரஹ்மான் ராஜாவை வென்றார்,ஆஸ்கர் மூலம்;இசையில் அல்ல !
ஆனால் ஒன்று....500 படங்களுக்குப் பிறகு ராஜா அளித்த தளபதி படம் ஒரு புயல் போல வந்த இசை விருந்து.500 படங்களுக்குப் பிறகு ரஹ்மான் எங்கிருக்கிறார் என்று பார்ப்போம்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் அளிக்கும் இந்தக் கணத்திலும்!
ரஹ்மான் பற்றிய ஒருமுழுத் தகவல் பதிவு ஷாஜி என்பவர் எழுதி ஜெமோ.தமிழ்ப் படுத்தியது...அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று
0 0 0
வழக்கறிஞர்கள்-காவல்துறை மோதல் சர்ச்சைகயில் மெது மெதுவாக காவல் துறைதான் தவறு செய்தது என்ற விதமான முடிவுக்கச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தமிழக காவல்துறை மிக யோக்கியமான துறைகளில் ஒன்று;அவர்கள் அனைவரும் புனிதர்கள் என்பது என் கூற்றல்ல.ஆனால் வழக்கறிஞர் என்ற ஒரு காரணத்தால் மட்டுமே அவர்கள் எந்தவிதமான சட்ட,சமுதாய வரைமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் அல்ல என்ற விதத்தில் நடந்து கொள்வது நல்லதல்ல.
இலங்கைத்தமிழர் நலன்,தாழ்த்தப்பட்டவர் நலன்,நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் விவகாரம் என்ற பலவற்றையும் இதில் இழுத்து விடுவதை ஒரு தேர்ந்த அரசு அனுமதிக்கக் கூடாது.இந்த அனைத்து விதயங்களிலும் இருக்கும் நியாயங்கள் என்பது வேறு;சட்டம் ஒழுங்கு என்பது வேறு.
முந்தைய சாக்குகளைச் சொல்லி,இரண்டாவதை தூக்கி எறிவதை ஒரு சரியான அரசு செய்ய அனுமதிக்கக் கூடாது.
0 0 0
உலகெங்கும் இருக்கும் பொருளியல் மந்தநிலையின் கயாஸ் தியரி விளைவுகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
சிங்கையின் இந்தக் காலாண்டின் பொருளியல் வீழ்ச்சி 16%,அதாவது -16%.இதுவரையிலான வேலை இழப்புகள் 20000 த்தைத் தாண்டிவிட்டன.இந்தியா போன்ற வளரும் தேசத்தில் கூட அதிகமான வேலை இழப்புப் புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இருள்தான் தெரிகிறது;சுரங்கத்தின் முடிவிலான ஒளி-லைட் அட் த எண்ட் ஆஃப் டனல்-எப்போது வரும் என்று தெரியவில்லை.ஒபாமாவின் கொள்கை சாரந்த முடிவுகள் வேறு சேவைத்துறைகளை மிகவும் பாதிக்கும் சாத்தியங்களும் உண்டு.சேவைத்துறை அளித்த முடுக்கத்தில்-impetus-பந்தா காட்டிக் கொண்டிருந்த இந்தியத் தொழில் துறை என்ன ஆகும்?
0 0 0
முதல்வர் மு.கருணாநிதி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார்.
இந்த நேரத்தில் அவரது கடைநிலை வரை அவர் வேறெந்த உடல் உபாதைகளாலும் சிரமப்படாது,நல்ல உடல் நலத்துடன் இருக்க அவரை வாழ்த்துவோம்.
மருத்துவமனையிலிருந்தே(என நினைக்கிறேன்!) இனியான அவரது உயிர் உங்களுக்கானது,அதாவது மக்களுக்கானது என்ற விதத்தில் ஒரு (அரசியல்) அறிக்கை விட்டிருக்கிறார்.அவருக்கான சிகிச்சை உயிரைப் பாதிக்கும் அளவுக்கான எந்த நோய்க்கும் இல்லை என்பதும்,முதுகுவலிக்கானது என்பதையும் இந்த நேரத்தில் யாரும்,குறிப்பாக கழக மணிகள் நினைவில் கொள்ள மாட்டார்கள்....போகட்டும் அதெல்லாம் விதயமல்ல!
அவர் திரும்ப வரும் வழியில் திமுக கட்சியின் கொடியினைத் தாங்கி எண்ணற்றவர்,சுமார் 1000 பேராவது இருப்பார்கள் என நினைக்கிறேன்-வீதிகளில் அவரது கார் வரும் வழியில் நின்றார்கள்,வழியின் இரு புறங்களிலும்.
எனக்கு எழுந்த சந்தேகம்...
இவர்கள் எல்லாம் யாவர்? அவரது வீட்டில் பார்த்து அவரை நலம் விசாரித்து அளவளாவக் காத்திருந்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.அவரைப் பார்த்து ஒருவார்த்தை பேச இயலாத அல்லது நலம் விசாரிக்கவோ இயலாத இந்த தெருக்காத்திருப்பு எதற்கு? அந்த அளவுக்க வேலை வெட்டி இல்லாதவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்ன???!!
ரஹ்மான் ராஜாவை ஒப்பீடு செய்வதை நிறுத்துவோம். இருவரும் தமிழ் இசை அன்னையின் புதல்வர்கள்.
ReplyDeleteரஹ்மான் வந்த பொழுதே சொன்னார்கள், இவர் பாட்டுக்கள் இரண்டு வருடத்திற்கு பின்பு கேட்க முடியாது என்று, ஆனால் அந்த கணிப்பு எல்லாம் தவிடு பொடி ஆகி விட்டது. இன்றும் சின்ன சின்ன ஆசை, என் வீட்டு தோட்டத்தில், உசிலம்பட்டி பெண்குட்டி, பச்சை கிளிகள் தோளோடு, ராசாத்தி என் உசுரு என்னுடு இல்ல பாடல்கள் கேட்க முடிகிறது.
என் பார்வையில் ராஜா, ரஹ்மான், எம் எஸ் வீ, எல்லாருமே சிறந்த இசை அமைப்பாளர்கள்.
குப்பன்_யாஹூ
குப்பன் சார்...நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள்,நன்றி.
ReplyDeleteஉங்கள் கூற்று சரி.ஒவ்வொரு இசைக் கலைஞரும் ஒரு விதம் என்பது மிகச் சரி.
ஒவ்வொருவரின் திறனும் ஒரு கோணத்தில் பளிச்சிடும்.
நான் செய்ய முயன்றது அவர்களுடைய திறனில் ஒப்பீடு அல்ல;ஆஸ்கர் அளவுக்கு ரஹ்மான் போனதற்கான காரணங்களில் ராஜா எங்கு வித்தியாசப்படுகிறார் என்ற சிந்தனையின் அடிப்படையில் எழுதியதுதான் இது...
//உலகெங்கும் இருக்கும் பொருளியல் மந்தநிலையின் கயாஸ் தியரி விளைவுகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன//
ReplyDeleteஅயயய்யோ.. பயமா இருக்கு தல. இப்பவே கண்ண கட்டுதே..
ஷாஜியின் ரஹ்மான் பற்றிய பதிவின் சுட்டி பாரா எழுதியதைப் படித்தபின் கிடைத்தது.
ReplyDeleteஅனைவரும் படிக்க வேண்டிய பதிவு ஷாஜியின் பதிவு....
நண்பர் நர்சிம்,
ReplyDeleteஆம் தினம் தினம் வரும் செய்திகள் ஆயாசம் அளிப்பவையாகத்தான் இருக்கின்றன..
ஐடி துறை ஜூன் 09 க்குப் பிறகு சிறிது முடுக்கம் பெறும் என்ற மதிப்பீடு டிசம்பர் 08 வாக்கில் இருந்தது.ஆனால் இப்போது இன்னும் அவநம்பிக்கை வளர்கிறது..
இனிவரும் காலம் இனிதாக இருக்கும் என்று சொல்ல இயலவில்லை,குறைந்தபட்சம் 2009 முடிவு வரை..