Pages - Menu

Saturday, February 28, 2009

96.வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை !!!???


வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை !
என்ன தலைப்பு விவகாரமாக இருக்கிறதே என்று ஆசிரியர் பெருமக்களும் அவர்கள் வாரிசுகளும் சண்டைக்கு வர வாய்ப்பிருக்கிறது !
நடைமுறை நிலவரத்திலும் சிலசமயம் இவை உண்மைதானோ என்று தோன்றும்.விளக்குகிறேன்...
80 களின் மத்தியில் நான் ப்ளஸ் டூ என்னும் மேல்நிலைக் கல்வி கற்ற காலத்தில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் முதல் இரண்டாம் குழுப்(அறிவியல் மற்றும் மருத்துவம்) படிப்புக்கு விண்ணப்பித்து மேல்நிலைக்கல்வியில் சேர்ந்தார்கள்;அதற்கு அடுத்த நிலையில் 300 லிருந்து 350 க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் வணிகவியல் மற்றும் தொழிற்கல்வியில் சேர்ந்தார்கள்;அதற்கும் கீழ்நிலையான மதிப்பெண்களை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்தவர்களில் பலர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தார்கள்.
என் நினைவில் நல்ல மதிப்பெண் பெற்ற எந்த மாணவரும் ஆசிரியர் பயிற்சியில் விருப்ப முறையில் சேர்ந்ததாக நினைவில்லை;மற்ற எதிலும் வாய்ப்பில்லாத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சியை ஒரு கடைசி வாய்ப்பாகத்தான் பார்த்தார்கள்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இவ்வாறு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே என்று அறுதியிட்டு பொதுக்கருத்தாக இதை வலியுறுத்த முடியாது என்றாலும் நான் காட்டிய சூழல் பெரும்பாலும் இருந்ததை மறுக்க முடியாது.

எனவே மேற்கூறிய பழமொழி உண்மைதானோ?
அதற்கு அடுத்த சொற்றொடருக்கும் இந்த மாதிரிப் பொருள் விரித்து அலசினால் என் மேல் கஞ்சா(பொய்)வழக்குப் பாய்ந்தாலும் வியப்படைய முடியாது.
அது போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை!

0 0 0
உண்மையில் இந்த இரண்டு சொலவடைகள்-வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை;போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை- குறிப்பது என்ன?
இன்றைய நாட்டு சமூக நிலை நாம் பார்த்த அலசிய இந்தப் பொதுப் பொருளுக்கு மிகவும் அருகில் வந்து விட்டாலும்,இவற்றின் உண்மையான பொருள் அது அல்ல.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் உண்மை வடிவம், வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே.
அதாவது வாக்கு என்ற சொல் கல்வித் திறன்,சொல் திறம் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்.வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற ஔவையின் பாடலும் கல்வித்திறனை முன்வைத்தே சொல்லும்.இன்னும் சொல்லப் போனால் வாக்கும் சொல்திறமும் வாழ்வில் வெற்றி பெற விழையும் எந்த ஒரு மனிதனுக்கும் முக்கியமான திறன்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது என்றார் நாவலர்.உலகத்தையே வெல்லும் திறன்களைப் பெற விழையும் ஒருவன் பெற வேண்டிய திறன்களில் ஒன்றான சொலல் வல்லான் என்ற சொல் குறிப்பிடும் வாக்குத்திறம் பெற்ற,அனைத்திலும் வெற்றி பெறத்தக்க அறிவுத்திறம் நிரம்பிய மக்கள் ஆசிரியப் பணியில் இருக்க வேண்டும் என்ற ஆவல் பற்றி எழுந்தது அந்த சொலவடை.அப்படிப் பட்ட ஆசிரியர்கள் இருக்கும் போது மாணவர்கள் அவரைப் பின்பற்றுவதோடு அவரை முன்மாதிரியாகக் கொண்டு நற்திறன்களை வளர்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் பற்றியே அறிவுறுத்தினார்கள் நம் முன்னோர்- வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை.
இதேபோல் போக்கத்தவனுக்கு போலீஸ் வேலையின் திருந்திய வடிவம் போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பதுதான்.
அதாவது ஒரு குற்றம் நடந்த போதோ அல்லது குற்றம் நடக்கலாம் என்று சூழல் இருக்கும் போதே கூட நடக்கும் நிகழ்வுகளை எடை போட்டு அவற்றின் போக்கு-விளைவை முன்னரே அறியும் திறன் பெற்றவர்கள் காவல்பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உண்மைப் பொருள்!
பழமொழிகளிலும்,சொலவடைகளிலும் இருக்கும் மறை பொருள்கள் சிந்திக்க வைப்பவை.இன்னும் சொல்லப் போனால் அவற்றைத் சிதைத்து அவற்றின் கொச்சை வழக்கிற்கு வேறு பொருள் வருமாறு செய்து விட்ட குறை,நம்முடைய குறை....
ஆனால் அந்தவகையான சிதைந்த சொலவடைகள் தரும் பொருளே உண்மை நிலவரம் என்ற அளவுக்கு சமூகமும் பல காரணிகளால் நீர்த்துப் போய் விட்டது என்பதும் யோசித்து வருந்த வேண்டிய விதயம்!

4 comments:

  1. "வாக்கு அற்ற இடத்தில் வாத்தியாருக்கு வேலை, போக்கு அற்ற இடத்தில் போலிசாருக்கு வேலை" என்று படித்ததாக நினைவு.

    ReplyDelete
  2. "வாக்கு அற்ற இடத்தில் வாத்தியாருக்கு வேலை, போக்கு அற்ற இடத்தில் போலிசாருக்கு வேலை" என்று படித்ததாக நினைவு. --- Raja

    ReplyDelete
  3. அனானி ராஜா,
    நன்றி.
    நான் எழுதி இருப்பது பொருள் விளக்கப்படியும் சரியான விளக்கம்.
    நீங்கள் சொன்னது பொருள் விளக்கப்படி சரியான வாக்கியமாகத் தோன்றவில்லை.
    நன்றி.

    ReplyDelete