Pages - Menu

Thursday, May 29, 2008

61.அத்தியாவசியப் பொருள்,பெட்ரோல் விலையேற்றம் ஊக வியாபாரத்தாலா ?

நம் நாட்டில் பேராசிரியர் அபிஜித் சென் தலைமையிலான ஆய்வுக் குழு, யூக
வியாபாரம் விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறதா என்கிற கேள்விக்கு விடை அளிக்காமலேயே
மழுப்பிவிட்டது. அமெரிக்காவிலும் அதே கேள்வி அமெரிக்க அரசு முதல், விவசாயிகள்,
வியாபாரிகள், மற்றும் நுகர்வோர் வரை எல்லோரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.

ஆமாம்.

அமெரிக்காவிலும் யூக வியாபாரம் காரணமாகத்தான் பொருள்களின் விலைவாசி
கட்டுக்கடங்காமல் ஏறியிருக்கிறது என்கிற கருத்து விச்வரூபம் எடுத்தது.
பத்திரிகைகளும், விவசாயிகளும், வியாபாரிகளும் ‘அரசு யூக வியாபாரத்தைக்
கட்டுப்படுத்த வேண்டும்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருந்தனர்.

அமெரிக்கா மட்டுமல்லாமல், உலக அளவில் பல பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம்
யூக வியாபாரம்தான் என்ற ஆய்வுக் கட்டுரைகள் பெருமளவில் பத்திரிகைகளில் வந்த
வண்ணமிருந்தன. அமெரிக்காவில் பத்திரிகைகள் நடத்தி வரும் ‘யூக வியாபார விளைவு’ –
என்ற பட்டிமன்றத்தின் சாராம்சத்தை இப்போது பார்க்கலாம் :

யூக வியாபாரம் பற்றிய அமெரிக்கப் பொருளாதார விவாதம் முக்கியமாக, உணவுப்பொருள்
மற்றும் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) விலை இவற்றையும் சம்பந்தப்படுத்தி எழுகிறது.
முதலாவதாக உலக அளவிலான பெட்ரோல் விலை கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வாறு உயர்ந்தது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை (டாலர் கணக்கில்)
வருடம்– டாலர்
2003––– 28.93<>
www.finanacialnews.com என்கிற
வெப்சைட் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ‘கச்சா எண்ணெய் விலைகள் மேல் 12 டிரில்லியன்
டாலர் கேள்விக்குறி’ என்கிற தலைப்பில் ஒரு அதிரவைக்கும் ஆய்வை வெளியிட்டது.
அந்தச் செய்தி வெளிவந்தபோது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு டாலர் 115;
இன்று (இந்தக் கட்டுரை எழுதும்போது) டாலர் 128-க்கும் மேல்.

அதாவது ஜூலை 2008-ல் டெலிவரி கொடுக்க இன்றைய யூக விலை. 2007-ஆம் ஆண்டு உலக
கச்சா எண்ணெயின் தினசரி கொள்முதல் 860 லட்சம் பேரல். இந்த ஆண்டு (2008) தினசரி
கொள்முதல் 870 லட்சம் பேரல்களாக உயரும் என்று கணிக்கின்றனர் நிபுணர்கள்.

நம் நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் மூர்த்தி என்கிற ஆய்வாளர் (இவர் புகழ்பெற்ற
அமெரிக்க நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் அமைப்பில் பணிபுரிகிறார்.) வருகிற
இரண்டு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 முதல் 200 டாலர் வரை
உயரலாம் என்று கணித்திருக்கிறார்.

அவருடைய கணிப்பு உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. அவருடைய கணிப்பின்படி,
கொள்முதல் அதிகமாகி வருகிறது; ஆனால் அந்த அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி
பெருகவில்லை. ஆனால், மேலே கூறிய டௌஜோன்ஸ் ஃபைனான்சியல் நியூஸ் வெப்சைட் ஆய்வுப்படி,
இப்படி திடீரென்று கச்சா எண்ணெய் (பெட்ரோல்) விலை உயர, எதிர்பாராதவிதமாக கச்சா
எண்ணெய் கொள்முதலும் உபயோகமும் அதிகமானதால் அல்ல; யூக வியாபாரச் சந்தையில்
திடீரென்று கொள்முதல் அதிகமானதுதான் காரணம் என்று கூறுகிறது.

டௌ ஜோன்ஸ் அமைப்பின் கணிப்புப்படி பிரம்மாண்டமான வங்கிகளும், தனியார் நிதி
நிறுவனங்களும் யூக வியாபாரத்தில் 12 ட்ரில்லியன் டாலர் (இன்றைய ரூபாய் – டாலர்
கணக்கில் ரூ.504 லட்சம் கோடி) பெறுமான கொள்முதல் விற்பனை ஒப்பந்தங்கள்
செய்திருக்கின்றன. இந்த வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அமெரிக்காவில் புகழ் பெற்ற
‘வால் ஸ்ட்ரீட்’ என்கிற சாலையில்தான் தங்களுடைய தலைமை அலுவலகங்களை அமைத்து தங்கள்
நிதி; வங்கி; வியாபாரம் இவற்றை நடத்துகின்றன. அதனால் வால் ஸ்ட்ரீட் என்றாலே, பண
முதலைகள் என்று நாளடைவில் அர்த்தமாகியிருக்கிறது.
இந்த நிதி நிறுவனங்களோ,
வங்கிகளோ கச்சா எண்ணெயை உபயோகிப்பவர்கள் அல்லது (இந்தியன் ஆயில் போன்ற)
விநியோகிப்பவர்கள் அல்ல. இவர்கள் கச்சா எண்ணெயை உண்மையாக வாங்கப் போவதும் இல்லை,
விற்கப்போவதும் இல்லை. அதை வாங்குவதற்கும், விற்பதற்கும் செய்த ஒப்பந்தக்
காகிதங்களைத்தான் இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். ஏன் இப்படி வங்கிகளும், நிதி
நிறுவனங்களும் கச்சா எண்ணெய் யூக வியாபாரத்தில் இறங்கின?

காரணம் இதுதான் : பங்குச் சந்தையிலும், ரியல் எஸ்டேட் மற்றும் இதர பல
முதலீட்டுத்துறைகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது –
குறிப்பாக, அமெரிக்காவில். ரியல் எஸ்டேட்டிலும் பங்குச் சந்தையிலும் அதிக லாபம் பெற
வழியில்லை என்கிற நிலை வந்தவுடன், பிரம்மாண்டமான வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள்
கச்சா எண்ணெய், எஃகு, மற்றும் பல உலோகங்கள், உணவுப்பொருள்கள், பஞ்சு போன்ற
பொருள்கள் வியாபாரமாகும் சந்தைகளில் புகுந்து யூக வியாபாரத்தில் பெருமளவுக்கு
ஈடுபட்டன. இதனால்தான் பலவிதமான பொருள்களின் விலை ‘கிடுகிடு’வென்று உலகம் முழுவதும்
உயர்ந்தது.

வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள் செய்துள்ள ரூ.504 லட்சம் கோடி பெறுமான கச்சா
எண்ணெய் யூக வியாபாரம் ஒப்பந்தங்கள் (இதை ‘பெட்’ அல்லது ‘பந்தயப் பணம்’ என்று
கூறுகிறது டௌ ஜோன்ஸ் வெப்சைட்) வெற்றிபெற்றால் – அதாவது அந்த நிதி நிறுவனங்கள்
தங்களுடைய கச்சா எண்ணெய் பந்தயத்தில் வெற்றிபெற்றால், என்ன விளைவு என்று கேள்வி
கேட்டு, அதற்குப் பதிலும் அளித்திருக்கிறது அந்த வெப்சைட்.

அப்பாவி உலக மக்கள், வருகிற 5 ஆண்டுகளில் பேரல் ஒன்றுக்கு ஆயிரம் டாலர் –
ஆமாம் ஆயிரம் டாலர் – விலை கொடுக்க வேண்டிவரும் நிலை ஏற்படும் என்று
எச்சரித்திருக்கிறது.

அப்படியும் ஆகுமா? அல்லது ஆகாமல் இருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி ஆனாலும்
ஆபத்து. காரணம், அந்தக் கச்சா எண்ணெய் விலையை உலகம் ஜீரணிக்க முடியாது; அப்படி
ஆகாவிட்டாலும் ஆபத்து – காரணம், அப்படி ஆகும் என்று பந்தயம் கட்டிப் பணம்
போட்டிருப்பவர்களுக்கு, அப்படி ஆகாவிட்டால் பெரும் நஷ்டம்; பந்தயம் போட்ட
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் திவாலாகி, அதனால் கோடிக்கணக்கானவர்களின் பணம்
‘அம்போ’ ஆகும் வாய்ப்பும் இருக்கிறது. ஆக, கச்சா எண்ணெய் யூக வியாபார சூதாட்டம்
வெற்றிபெற்றாலும் ஆபத்து; தோற்றாலும் ஆபத்து என்கிற நிலையில் கச்சா எண்ணெய் சந்தை
தத்தளிக்கிறது.

டௌ நிறுவன வெப்சைட் மேலும் கூறுகிறது: சௌதி அரேபியாவின் எண்ணெய்
உற்பத்தித்துறை அமைச்சரான அலி அல்-நைமியிடம் இந்தப் பிரச்சனை பற்றிக் கேட்டபோது,
அவர் கூறியதன் சாராம்சம் இதோ:
“எங்களை எண்ணெய் உற்பத்தி அதிகம் செய்,
அப்போதுதான் விலை குறையும் என்று மேற்கத்திய நாடுகள் அரிக்கின்றன. ஆனால், இப்போதைய
விலை உயர்வுக்கு உற்பத்திக் குறைவு காரணமல்ல. இந்த விலை உயர்வுக்குக் காரணம் கச்சா
எண்ணெய் சந்தையில் யூக வியாபாரம் சுனாமி போல் பெருகியதுதான். பணயம் வைத்து வால்
ஸ்ட்ரீட் பண முதலைகள் விளையாடும் பந்தயங்களும், சூதாட்டங்களும் நடப்பதுதான்
முக்கியமான காரணம்”.

இப்படிக் கச்சா எண்ணெய் சந்தையில், யூக வியாபாரம் என்று, கண்ணியமான பெயரில்
நடக்கும் சூதாட்டம் பின்பு எஃகு, தாமிரம், அலுமினியம், தங்கம், வெள்ளி போன்ற உலோகச்
சந்தைகளில் புகுந்து அங்கும் விலைவாசி கிடுகிடுவென்று ஏறக் காரணமாகியது.

குறிப்பாக, 2007-ஆம் ஆண்டு யூக வியாபாரம் மூலமாக, வால் ஸ்ட்ரீட் பண முதலைகள்
விவசாய உணவுப்பொருள்கள் சந்தையில் பெருமளவு பிரவேசம் செய்ய, உலகம் முழுவதும்
உணவுப்பொருள்களின் விலை கூரையைப் பிய்த்துக்கொண்டு உயரே சென்றது .அது பற்றி அடுத்த வாரம்......

நன்றி- குருமூர்த்தி, துக்ளக் இதழ்


நண்பர்களே, அதீத உணவுப் பொருள்களின் விலையேற்றம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

மேற்கண்ட கட்டுரை இந்த வார துக்ளக் இதழில் வந்திருக்கிறது. கட்டுரையின் இரண்டாம் பகுதியின் விதயங்களும் வந்தவுடன் இங்கு அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இது தொடர்பான நல்ல விவாதங்கள்,கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 comments:

  1. நல்ல கட்டுரை அறிவன். கூடவே நாம் ஏன் எல்லாவற்றுக்கும் கச்சா எண்ணையை நம்பி இருக்க வேண்டும் என்பது புரியவில்லை. மாற்று எரிபொருளுடன் கூடிய திறமையான வாகனங்களை ஓட விடுவது கடினமே இல்லை. எண்ணை கம்பனிகளின் லாபியால் எல்லா முயற்சியும் வீணாகிறது. கூடவே சில பண முதலைகளின் யூக விளையாட்டு. அமரிக்காவில் ஊழலே நடக்காது என்று பலர் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவும் ஊழல் தான்.

    ReplyDelete