அவரது கட்டுரைகளின் கருத்துக்களில் பலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.எனக்கும் அவரது கருத்துக்கள் அனைத்திலும் முழு உடன்பாடு என்றும் பொருளில்லை.
அவர் சில மாதங்களாக(வருடங்களாக?) ஆவி.யில் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருப்பதும் அனைவருக்கும் தெரியும்.சமீபத்தில் அது நிறுத்தப்பட்டது;போன வாரத்திலிருந்து அவர் குமுதம் இதழில் ஓ பக்கங்களைத் தொடர்கிறார்.
பின்புலத்து விதயங்களில் சில சுவாரசியமானவை.
ஞாநி எழுதிய அரசியல் கட்டுரைகளில் சில ஆளும் திமுக தரப்புக்குப் பிடிக்காதவை என்பது ஊரறிந்த ரசசியம்,குறிப்பாக திமுக தலைமைக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் எழுதிய கட்டுரை,மற்றும் வேறு சில.
அதற்குப் பரவலான எதிர்வினை எழுந்தது;எவரது எழுத்துக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.ஆனாலும் அவரின் கட்டுரைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களும்,கண்டனக் கூட்ட்ங்களும் நடந்தன.
திமுக’வின் சமீப வெளிச்சப் பிரமுகர் தமிழச்சி கூட்டிய கூட்டத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் உதிர்க்கப்பட்டன. குறிப்பாக ஒருவர் ஞாநி இலக்கியப் பத்திரிகையில் எழுதினால் ஒன்றும் பிரச்னையில்லை;வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவதுதான் பிரச்னை எனக் கூறினாராம்.
சிறிது காலத்தில் விகடனிலிருந்து அவர் வெளியேற்றப் பட்டார்.
விகடன் !
இதே பத்திரிகைதான் எம்ஜிஆர் காலத்தில் பிஹெச்.பாண்டியனின் கருத்தை விமர்சித்து வெளியிட்ட கார்ட்டூனை மறுக்கவோ,திரும்பப் பெறவோ முடியாது என் உறுதியாக மறுத்து,சட்டமன்ற உரிமைப் பிரச்னையை எதிர்நோக்கி,ஆசிரியர் பாலு சிறை சென்று,பின் வழக்காடி,அரசை வென்று,அபராதம் வசூலித்து,அக் காசோலையை பணமாக்காது,சட்டமிட்டு ஆசிரியர் பாலு’வின் அறையில் மாட்டி பெருமிதப்பட்ட பத்திரிகை.
இன்று அரசின் தலைமையை ஒருவர் விமர்சித்தார் என்பதற்காக அதே பத்திரிகை ஒரு நிரூபிக்கப் பட்ட எழுத்தாளரை வெளியேற்றியிருக்கிறது !
நிச்சயம் அரசின்,கட்சியின் அழுத்தங்கள் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அரசின் தலைமை ஒரு அறியப்பட்ட பத்திரிகையாளரும்,அப்படி அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவரும்,பத்திரிகையாளர்களுடன் சுமுகமான உறவைப் பேணுவதில் கவனம் வைப்பவர் என்றும் பரவலாக அறியப்படுபவர்;
செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தர்கள்’ஆண்ட நாட்டைத் தான் அவரும் ஆட்சி செய்கிறார்;அந்த சொற்றொடரை ஆய்ந்தும், பொருள் விரித்தவர் அவர்,ஆனாலும் இப்போது அதை நினைவில் கொள்ளவோ, பொறுக்கவோ இயலவில்லை போலிருக்கிறது !
குமுதம் எத்தனை நாளைக்குப் புகல் அளிக்கும் என்பதும் பொறுத்துப் பார்க்க வேண்டிய ஒன்று !
காலங்கள் மாறும்;காட்சிகள் மாறும்;அரசியல் என்பது பொய்வேஷம் !!!!