Pages - Menu

Tuesday, February 21, 2023

201 - தமிழார்வம் வந்த கதை

தமிழார்வம் எப்படி வந்தது என்று கவிஞர் மகுடேசுவரன் எழுதிய ஒரு பதிவைப் நான் பகிர்ந்திருந்த பதிவில்  நண்பி காயத்ரி இராமகிருட்டிணன் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் 

()

|| எப்படி என்று சிறிது நேரம் கழித்து விரிவாகச்சொல்கிறேன்.|| சிறிது நேரம் கழித்துச் சொல்கிறேன் என்று இரண்டு வருடம் போய்விட்டது. :).

சரி சொல்லிவிடுவோம்,

மரபணுவில் எங்கோ தமிழ் நிச்சயம் இருந்தது. ஏனெனில் அம்மாவின் அப்பா, பாண்டித்துரைத்தேவர் மதுரையில் 1901'ல் நிருமாணித்த தமிழ்ச்சங்கத்தில் வித்வான் தேர்வுக்கு அமர்ந்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் வாங்கியவர். அப்போது அவர் ஒரு சிறிய பெட்டிக்கடை போன்ற பலசரக்குக் கடையும், சித்தமருந்துகளைக் கிராம மக்களுக்கு, நோய் அறிந்து கொடுப்பதுவுமான வாழ்வை பிழைப்புக்காக வைத்திருந்தவர். ஆர்வத்தினால் தமிழ் வித்வான் தேர்வு. அந்தத் தேர்வுக்கு முயற்சி செய்யலாம் என்று எண்ணிய காலத்திலேயே அவருக்குத் திருமணம் நடந்து, தேர்வெழுதிய காலத்தில் முதல் குழந்தை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது.

அந்தக் குழந்தை என் அம்மா, தமிழ்ச்செல்வி அம்மை. பெயர் வைத்தவர் ஐயன். தமிழ்க்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கலாம். அவருக்கும் இயல்பிலேயே தமிழார்வம். அவரும் வளர்ந்து பத்தாம் வகுப்பு வந்த பின் (அக்காலத்தில் பாரம் என்று வகுப்பு இருந்தது போல) அதே தமிழ்ச்சங்கப் புலவர் படிப்பில் இணைந்து படித்தவர்.

அவர்களெல்லாம் புலவர்கள், போகட்டும். ஆனால் நான் சாமானியப் பையனாகவே வளர்ந்தேன்.

சாதாரண வகுப்பறை மாணவன். ஆறாம் வகுப்பில் 65 லிருந்து 75 சதம் வரை மதிப்பெண் எடுப்பேன். சராசரி, அவ்வளவுதான்.

எனது ஆறாம் வகுப்பு விடுமுறையைத் தாளித்து விடுவது என்று எங்களது தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முடிவு கட்டியிருந்தது எனக்குத் தெரியாது. மேலைச்சிவபுரியில் அமைந்துள்ள கணேசர் செந்தமிழ்க்கல்லூரி என்ற கல்லூரி புகழ்பெற்றது. வசுப மாணிக்கம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டி போன்ற பல அறிஞர்கள் தொடர்பு கொண்டது. அவர்கள் வருடாந்திரமாகத் தமிழில் ஏதாவது ஒரு போட்டி மாணவர்களுக்கு நடத்தி, போட்டியில் நன்கு தேறும் மாணவர்களுக்குப் பரிசளிப்பார்கள்.

அந்த வருடம் திருக்குறளைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். 10 அதிகாரம், 100 பாக்கள். எப்படிக் கேட்டாலும் சொல்ல வேண்டும். முதற்சொல், கடைசிச் சொல், இடைச்சொல் எப்படி வேண்டுமானாலும் கேட்பார்கள். வரிசையாகவும் கேட்பார்கள்.

இருபது நாள் தினமும் காலையில், மாலையில் விடுமுறையில் இருந்த பள்ளிக்கு, போட்டிக்குச் சென்ற 4 மாணவர்களை வரச்சொல்லி மாணிக்கவாசகம் பயிற்சியளித்தார். ஒவ்வொரு நாளும் இரண்டு, இரண்டரை மணி நேரம். தவறாமல்.

விடுமுறையைக் குடும்பத்துடன் செலவு செய்து நிம்மதியாக இருப்போம் என்ற நல்ல நோக்கங்கள் இல்லாத மனிதர். அந்தப் போட்டிப் பயல்களில் என்னுடன் அவரது மகன் சேகரும் இருந்தான். சேகர் ஐந்தாவது வகுப்பு. நான் ஆறாவது முடித்திருந்தோம்.

போட்டிக்குச் சென்றோம். சொன்னோம். தேர்வாளர்களுக்கு நான் சொன்னவிதம் மிகவும் பிடித்துப் போனது. எப்படிக் கேட்டாலும் பிய்த்து உதறினேன். மாணிக்கவாசகத்தின் பயிற்சி அப்படி. சேகரும் நன்றாகச் சொன்னான் எனினும், ஒரு வயது இளையவனாக இருந்ததாலோ, சிறிது பயிற்சி பற்றாததாலோ, அத்தனை சிலாக்கியம் இல்லை. என்னை கிட்டத்தட்ட முதற்பரிசுக்குத் தேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது.

தேர்வாளர்களில் ஒருவர், 'அம்பி, முடிவுகளை எழுதிச் சொல்ல அரை மணி நேரம் ஆகும்; வேறு ஏதாவது பாடல்கள் தெரிந்தால் சொல்லு கேட்போம்' என்றார் என்னிடம். எனக்கோ, ஒரு வேறு எந்தப் பாடலும் அந்த நேரத்தில் தெரியாது. காரணம் மாணிக்க வாசகம் எனக்கு வேறு தமிழ்ப்பாடல்களை எதையும் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்திருக்கவில்லை. ஆனால் ஒரு மகனாக சேகருக்கு வீட்டில் தொழும் பாடல்களை இசைக்கும் பயிற்சி இருந்தது.

அம்பி, நீ சொல், உனக்கு ஏதாவது பாட்டு தெரியுமா?' என்று சேகரிடம் கேட்டார் தேர்வாளர். அவன் ஏதோ ஒன்றிரண்டு பாடல்களைப் பாடினான்.

முதல் பரிசு அவனுக்குப் போனது; இரண்டாம் பரிசு எனக்கு வந்தது.

வீட்டிற்கு வந்தேன், எனது அம்மா என்னைத் தாளித்து விட்டார். அடேய், எத்தனை நாள சொல்லியிருக்கிறேன், ஏதாவது பாடல்களைக் கற்றுக் கொள் என்று; ஒரு நாளாவது காதில் வாங்கினாயா, இத்யாதி,இத்யாதி...

வாங்கிய இரண்டாம் பரிசும், தவறிப் போன முதல்பரிசும் என்னைத் தூண்டின. பாரதியாரை முதலில் தொட்டேன்.

பின்னர் தமிழ் என்னைப் பிடித்துக் கொண்டது.

காலஞ்சென்று போனாலும், மாணிக்கவாசகம் இன்றும் எனது சிந்தனையில் வாழ்கிறார்.

மாணிக்க வாசகம் மட்டுமல்ல, எனது முதலாம் வகுப்பு ஆசிரியராக இருந்த, கண்ணாடி வாத்தியார் என்ற பாலசுப்ரமணியம் முதல், எனது சிஏ படிப்புக்கு எனது வழிகாட்டு முன்னவராக இருந்த இராம்மோகன் வரை எனக்குள் ஏதாவது ஒரு பண்பில், வடிவில், சிந்தனையில், செயலில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment