Pages - Menu

Wednesday, March 10, 2021

197- ஜெயமோகன் - புனைவுக்களியாட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் திரும்பவும் பட்டையைக் கிளப்பும் வேகத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது பக்கத்தில் நாளைக்கு ஒன்று என்று அணி வகுத்திருக்கின்றன சிறுகதைகள்.

எனக்கு அவர் அடிப்படையில் ஒரு இந்துத்தவ வாதியோ என்ற ஐயம் பல நாட்களாக உண்டு. வலதுசாரித்துவமான சிந்தனைகளை மேலோட்டமாகப் பல நேரங்களில் கண்டித்து எழுதியிருந்தாலும், இப்போதைய பாசக அரசையும் சில நேரங்களில் கடுமையாக விமரிசித்திருந்தாலும், அடிப்படையில் அவர் இவை இரண்டுக்கும் ஆதரவான மனிதர் என்பது எனது ஒரு ஐயம். தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றில் ஒரு நையாண்டி அல்லது நக்கலை அவ்வப்போதும் அல்லது எப்போதும் வலதுசாரியர்கள் வெளிப்படுத்துவது வழமை; அவரும் அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒரு படைப்பாளியாக, புனைவு உலகில் அவரது முத்திரைகள் காலந்தோறும் இடப்பட்டு இடப்பட்டு அவை அவராலேயே இன்னும் இன்னும் என மேன்மை செய்யப்படுகின்றன. பெருந்தொற்றுக் காலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நம்மில் பலரும் (நான் உட்பட ) கடுமையான மனச்சோர்வு கொண்டிருந்த காலம் அது. ஆனால் அந்த கடுமையான மனச்சோர்வு நிலையை கடுமையான உந்து சக்தியாக மாற்றிப்  பெற்றுக்கொண்டு கிட்டத்தட்ட 70 சிறுகதைகள் வரை எழுதித் தள்ளினார் ஜெயமோகன்;  அவற்றில் பல பிரமிப்பூட்டுபவை.

இந்த வரிசையிலும் அவ்வாறே. யட்சன் மற்றும் கந்தருவன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். (யட்சன் முதலில் படித்தேன், பின்னரே கந்தருவன் படித்தேன், ஆனால் அவர் கந்தருவனை முதலில் எழுதி யட்சனைப் பின்னால் எழுதியிருக்கிறார்).
அவரது படைப்புத் திறனுக்கு பெரும் சான்றாக இவ்விரு கதைகளையே கூறலாம். யட்சனை முதலில் படித்தீர்கள் என்றால் (கந்தருவனைப் படிக்காத  போது) உங்களது மனதில் எழும் பண்டாரத்தின் மனச்சித்திரம் வேறு. ஆனால் அதையே கந்தருவனைப் படித்து விட்டு யட்சனை மீண்டும் படித்தீர்கள் என்றால் பண்டாரத்தைப் பற்றி உங்கள் மனதில் எழும் மனச்சித்திரம் வேறு. கந்தருவனை முற்றாக மறந்து விட்டு யட்சனை மீண்டும் படித்துப் பார்த்தால் நான் சொல்வது விளங்கும். 

பண்டாரத்தை கந்தருவனாகவும் முருகப்ப செட்டியை யட்சனாகவும் உருவகம் செய்துதான் இவ்விரு கதைகளையும் அவர் படைத்திருக்கக் கூடும்; யட்சனிலாவது முருகப்பனின் பார்வையில் கதை பெரும்பாலும் நகருகிறது. ஆனால் கந்தருவனில் பண்டாரம் மற்றப் பாத்திரங்களின் பார்வையில்தான் வருகிறானேயொழிய கதையை நகர்த்தும் அல்லது கதைசொல்லியாக வருவதில்லை, கடைசியாகக் கோபுரத்ததிலிருந்து குதிக்கும் கட்டம் தவிர.

ஆனால் இவ்விரு பாத்திரங்களும் இருவேறுபட்ட நிலையில் அந்தந்தக் கதைகளில் வழியே, அக்கதைகளைத் தனித்தனியாகப் படிக்கும் போது மனதில் எழுகிறார்கள்.  

பிரமிப்பூட்டும் புனைவுச் சமைவு !!!   😲

அவரது அபுனைவுக் கட்டுரைகள் அல்லது நூல்கள் அத்தனையாக என்னைக் கவருவதில்லை; ஆனால் புனைவில், வரலாறு இணைந்த புனைவுக் கதைக் களத்தில் அவர் மாயங்கள் நிகழ்த்துகிறார். அப்படியே சுழித்துக் கொண்டு எடுத்துச் செல்கின்றன இக்கதைகள். 

அதோடு எத்தனை, எத்தனை மாறுபட்ட சொல்லாக்கங்களை அறிமுகப் படுத்துகிறார் பாருங்கள்... 

பாறை முனம்பு - மழுக்கப்பட்ட முனைகளைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

காராய்மைக் காரர்கள்  மற்றும் ஊராய்மைக் காரர்கள் - இவற்றை நான் மிக இரசித்தேன். அப்படியே குடிமுறை நிர்வாகத்தைக் கண்முன் கொண்டுவருகிறார். புரியாதவர்கள் நாட்டாமை என்ற சொல் வழக்கிலிருந்து பிடித்துச் செல்லுங்கள். இப்போதும் கிராமங்களில், கோயில் வழிமுறைகளில் நாடு வருவது, ஊர்வருவது என்ற சொல்லாடல்கள் மிக வழமையானது.

இமைப்பீலி -  இதை எண்ணி உருவாக்கிப் பயன்படுத்துகிறாரா என்ற வியப்பு.. மயிற்பீலி நாம் அறிந்தது. ஆனால் அச்சொல்லை இமைக்குக் கொண்டு செல்கிறார்...

மற்றும் முருகப்பனும் மனையாளும் கூடி எழும் நிகழ்வை குறிப்பாலேயே உணர்த்தி எழும் இலாகவம் ;  அதில் முருகப்பன் அடைந்த திகில் ; நாயர் சத்தியமும் நாய் மூத்திரமும் போன்ற சொலவடைப் பயன்பாடுகள் என்று உன்னிப்பாப் பார்த்தால் அசத்தும் மொழிக் கூறுகள் நெடுகிலும்...

தொடக்கத்தில் நான் விவரித்த எனக்கிருக்கும் அந்த மனத்தடைகளை அடித்தொடித்துக் கொண்டு அவற்றை மீறி, புனைவுப் படைப்பாளியாக அதகளம் செய்கிறார் ஜெயமோகன்.

இச்சிறுகதைகள் வாசிப்பவர்களுக்குத் தேட்டைதான் !!!

#ஜெயமோகன்
#புனைவுக்களியாட்டம்

😀😀😀

2 comments: