Pages - Menu

Saturday, January 21, 2017

194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி

சுற்றி நிற்காதே போ, பகையே !

நடந்து கொண்டிருக்கும் சல்லிக்கட்டுக்கான போராட்டம் 60 களுக்குப் பின் தமிழகம் கண்ட மிகப் பெரும் எழுச்சிப் போராட்டம்.
இவ்வளவு தன்னெழுச்சியாக மக்கள் பெரும் எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டது இரண்டு போராட்டங்களிலும் நடந்த ஒற்றுமை. மக்கள் உணர்வு ரீதியாக போராட்டத்தின் காரணத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். உண்மையில் மக்கள் உணர்வு ரீதியாக ஈடுபட்டு நடக்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. வரலாறு இதை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பதிவு செய்திருக்கிறது. இது ஒற்றுமை.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...



இனி சில முக்கியமான வேற்றுமைகள் பற்றிய சிந்தனை.
1. 60 களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்  அரசியல் கட்சிகளால் முன்னெடுத்து நடத்தப் பட்டது; கட்சிகள் முன்னெடுத்தாலும் மக்கள் போராட்டக் காரணத்துடன் ஒன்றுபட்டார்கள். எனவே காட்டாறாய் வந்த மக்கள் அலையின் விளிம்பில் தன்னைப் பொருத்திக் கொண்டது கட்சி. பின்னர் நிகழ்ந்தது வரலாறு.
இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் அரசியல் கட்சிகளை அடித்து விரட்டினார்கள். அடையாளம் தேடிக் கொள்ள முயன்ற ஈனத்தனங்களை துடைத்தெறிந்தார்கள். இதனால் இப்போராட்டம் இன்னும் சிறப்புப் பெறுகிறது.

2.இரண்டு போராட்டங்களும் மத்திய அரசையும், மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அரசையும் நோக்கியே நடத்தப் பட்டவை. அப்போதைய போராட்டத்தை நசுக்க தனது கையில் இருந்த அனைத்து அதிகாரம் மற்றும் வலிமையைப் பயன்படுத்தியது அரசு. போராட்டக் காரர்கள் தாக்கப் பட்டார்கள்; ஒடுக்கப் பட்டார்கள். பலர் இறந்தார்கள். ஆனால் இப்போதைய போராட்டத்தில் மாநில அரசு தனது அடக்குமுறை, காவல்துறையை அடியாளாகப் பயன்படுத்தும் நிலை போன்றவற்றில் இருந்து விலகி இருந்தது. அதாவது போராட்டம் நிகழ அரசும் ஒத்துழைத்தது. முதல்நாளே காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப் பட்டிருந்தால் பல உயிரிழப்புகள் அல்லது இரத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஜெ இருந்திருந்தால் கூட இதுதான் நடந்திருக்கும். ஆனால் பன்னீர் செல்வம் பண்புடனேயே நடந்து கொண்டிருக்கிறார். போராட்டம் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக வடிவெடுக்காமல் பார்த்துக் கொள்ளும் படியே காவல்துறைக்கு அறிவுறுத்தப் பட்டிருக்க வேண்டும். எனவே அரசின் மறைமுகக் கைகளும் போராட்டத்தில் இருந்தது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
காந்தி சுடப்பட்டு இறந்த போது சர்ச்சில் சொன்ன மகத்தான வாசகங்கள் இங்கு நினைவு கூரப் படவேண்டும். காந்தி மகாத்மாவாக வெளிப்பட்டது பிரிட்டிஷ் தரப்பின் தயவாலும்தான்; ஹிட்லரோ, ஐஎஸ்எஸ் போன்றவையோ ஆட்சியில் இருந்திருந்தால் முதல் போராட்டத்திலேயை மோகன்தாஸ் கரம்சந்தர் நசுக்கப்பட்டு  அடையாளம் தெரியாமல் மறைந்து போயிருந்திருக்கலாம். நடைபெறும் போராட்டத்தின்  நோக்கம் அறத்தின் படி இருந்தாலும், அறத்தின் ஒரு சிறு கீற்றொளியாவது ஆட்சியாளர்களிடம் இல்லாவிட்டால் அங்கு கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையே வெற்றி கொள்ளும். ஈழம் இதற்கொரு சரியான எடுத்துக் காட்டு.
கடைசியாக வந்த கணிப்பு 11.5 லட்சம்
எனவே முதல்வர் பன்னீர் செல்வம் பாராட்டுக்குரியவர்.

3.ஜெயிடம் இல்லாத அந்த அறத்தின் கீற்று பன்னீர் செல்வத்திடம் எப்படி இருந்தது? காரணம் பன்னீர் அடிப்படையில் ஒரு தமிழர், ஒரு கிராமவாசி, கிராமம் சார்ந்து தமிழ் சமூக வாழ்க்கையின் தடங்களிலிருந்து வந்தவர். சர்ச் பார்க்குகளில் அடைகாக்கப் பட்டு பொரிக்கப்பட்ட ப்ராய்லர் கோழி அல்ல அவர். தமிழகத்தின் கிராமத்தினரின் விவசாயம் சார்ந்த மண்வாசனையை இயல்பாகவே அறிந்திருந்ததால் நேர்ந்த ஒரு அறத்தின் சிறு கீற்று அவருக்குள்ளிருந்திருக்க வேண்டும்.  தமிழ்க் கல்வி சார்ந்த மரபு அவருக்குள் சிறிதாவது இருந்திருக்க வேண்டும்.

இன்று இந்தப் போராட்டத்தை எள்ளும் அனைவரையும் அவர்கள் பின்னணியையும் கவனியுங்கள். அவர்களுக்கும் தமிழ்மொழி, தமிழ்மொழி சார்ந்த கல்வி, தமிழிலக்கியங்கள் அவற்றில் சிறிதும் ஈடுபாடற்ற வடமொழிக் காவலர்களாக அல்லது சாதியர்களாக இருப்பவர்களே இப்போராட்டத்தை ‘நான் ப்ராக்ரஸிவ்’ நிலையாகப் பார்க்கிறார்கள்.  இது அவர்களின் குற்றமுமல்ல.

ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்து வளரும் முதல் பதினைந்தாண்டு அனுபவங்களினாலேயே  சிந்தனை வடிவில் கட்டமைக்கப் படுகிறான்;  தமிழ் இலக்கியம் சார்ந்த, குறள் சார்ந்த, ஔவை மொழி சார்ந்த கூற்றில் வளர்ந்த இளம் பிள்ளைகள் இயல்பாகவே தமிழின் கலாச்சாரத் தொடர்ச்சியைத் தன்னுள் கொண்டிருப்பார்கள். தமிழ் நீசமொழி என்று சொல்லிக் கேட்கப்பட்டு, தமிழிலக்கியங்கள் அவற்றின் அறக் கூறு, வாழ்வியல் முறை பற்றிய எந்த அனுபவமும் அற்ற குழந்தைப் பருவம் கொண்டவர்கள் இந்த மண்ணின் வாழ்க்கை முறைகளுடன் பொருந்த முடியாது.

வட இந்தியாவில் மராட்டியர்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்களே, டில்லியில் ஆதரிக்கிறார்களே அவர்களெல்லாம் தமிழில் படித்தார்களா என்று ‘புத்திசாலிக் கேள்விகள்’ எழுப்புவார்கள். அவர்கள் தமிழில் படிக்காவிட்டாலும் மண்சார்ந்த, இயற்கை சார்ந்த வாழ்வு முறையில் வடித்தெடுக்கப் பட்டு வந்திருப்பார்கள். நீர் இருக்கும் இடத்தில் வாழ்ந்து, நகர்ந்து கொண்டேயிருக்கும் நீர்ப் பாசிகள் போன்றவர்களுக்கே மண் சார்ந்த மரபு சார்ந்து தொடர் பினைப்பு ஏதும் இருக்காது; அவர்களின் உன்னதங்கள் கற்பனையில் வாழும் மொழிகளிலும், அவர்களுக்கான வரலாறு கட்டமைக்கப் பட்ட புரட்டுகளில் மட்டுமே இருக்கும். அவற்றிற்கான மண் சார்ந்த வாழ்வியல் தொடர்புக் கண்ணி எங்கும் தென்படாது. எனவே அவர்களிடம் எந்த மண் சார்ந்த உணர்வுப் பற்றும் இருக்காது. அதனாலேயே முட்டாள்தனமான எள்ளல் தொனியுடன் இந்தப் போராட்டத்திற்கான காரணங்களை எந்தப் புரிதலுமின்றி,  அவர்களால் தட்டையான காரணங்கள் சொல்லி விமர்சிக்க முடிகிறது.

இந்தப் போராட்டத்தின் வெற்றியில், சூழ்நிலையின் காரணமாக முதல்வர் நாற்காலியில் இருந்திருக்கும் பன்னீருக்கும்  ஒரு தவிர்க்க முடியாத பங்கு இருக்கிறது.

புதிய விடியலுக்கான களமும் அறிகுறியும்...
இது வெற்றியடைந்து விட்டால் தமிழர் வாழ்வு உன்னதம் பெற்று விடப் போவதில்லை. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். நல்ல தலைவர்கள் கூட இதிலிருந்து கிளம்பி வரக் கூடும். அப்படி அவர்கள் எங்காவது தென்பட்டால் ஆரத் தழுவி அவர்களை வரவேற்கவும் தோள்கொடுக்கவும் தமிழ்ச் சமுதாயம் தயாராக இருக்க வேண்டும்.

4 comments:

  1. இத்துணை ஆரவாரங்களுக்கும், சலனங்களுக்கும் மத்தியில், மிக நேர்த்தியாகவும், நடுநிலையுடனும், எண்ண முதிர்ச்சியுடனும் எழுதப்பட்டுள்ள கட்டுரை. மெத்த மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமான வார்த்தைகளுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி லட்சுமி நரசிம்மன்.

      Delete
  2. அறத்தின் கீற்று என்றெழுதிய மை காய்வதற்குள் இப்படிச் செய்து விட்டீர்களே முதல்வரே? இது மனிதத்தனம் உள்ள செயலா?

    ReplyDelete
  3. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai
    nattu marunthu online

    ReplyDelete