Pages - Menu

Tuesday, May 3, 2016

191.ஒரு வழக்காடியின் அனுபவக் குறிப்புகள்-2- இனியொரு விதி செய்வோம்!

சென்ற பதிவில் ஒரு வழக்காடியின் அனுபவங்களையும் அவற்றை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய அவலநிலையினையும் பற்றிச் சொன்னேன். ஆனால் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் ஒரு முன்னேற வேண்டிய நாட்டின் முறையா என்பதை நாம் கேள்விப் படுத்த வேண்டும்.

அரசாண்மை முறைகளில் தேவையான மாற்றங்கள் கொண்டு வரும் போது குறைந்த பட்சம் சாதாரண மக்கள் இந்த வழக்காடு வட்டத்தில் தங்களுக்குத் தேவையான நிவாரணத்தைப் பெறும் வழிவகைகள் இருக்க வேண்டியது கட்டாயத் தேவை. பெரும் பொருட் செலவும் செய்து விட்டு வழக்கு முறைகளில் நிலைபெற்றிருக்கும் முறையற்ற செயல்களைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டிய அவசியமும் தேவையும் ஒரு சாமானியனுக்கு இருக்கிறது.



சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி நீதித்துறையைக் காப்பாற்றும் படி ஒரு உணர்ச்சி கரமான வேண்டுதலைப் பிரதமர் முன்னிலையில் வைத்திருந்தார். பிரதமரும் அதற்கு இணக்கமான ஒரு பதிலையும், அந்த வேண்டுகோளைப் பரிவுடன் பரிசீலிப்பதாகவும் பதிலிறுத்திருக்கிறார். இந்த நிலையில் பொது சனமும்  அவர்கள் நோக்கில் வழக்காடும் அமைப்பிலிலிருந்து judicial establishment எதிர்பார்க்கும் குறைந்த பட்ச வழக்காடும் மற்றும் நிவாரண முறைகளைப் பற்றியும் ஒரு உரத்த சிந்தனையை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.


தலைமை நீதிபதி இந்தியாவில் எண்ணற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் இதற்கு போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை என்பதும், அலுவலகப் பணியாளர்கள் பற்றாக் குறை என்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்திருக்கிறார். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை; ஆனால் இருக்கும் நீதிபதிகள் எவ்விதம் பணி செய்கிறார்கள் என்பதும், அலுவலகப் பணியாளர்கள் எவ்விதம் பணி செய்கிறார்கள் என்பதும் அவர்களின் பணி எப்போதாவது மறுநோக்கு அல்லது மதிப்பீடு -ரிவ்யூ | இவால்யுவேட் - செய்யப் படுகிறதா என்ற கேள்விகளை எவராவது எழுப்பினார்களா?

இவைபற்றிய ஒரு பருந்துப் பார்வை பார்த்து விடலாம்..முதலில் நீதிபதிகளின் சம்பளம், படி, சலுகைகள் மற்றும் இதர வசதிகள் பற்றிய ஒரு பார்வை.

சம்பளம் - 
முதல் நிலை நீதிபதி-தாலுகா கோர்ட் என்று சொல்வார்களை அந்த நீதிமன்ற நீதிபதிக்கு;
மாதம் 35,000, சம்பளத்தின் 20 சதம் மேலதிக படி, பெட்ரோலுடன் வாகன வசதி, வருடாந்திர விட்டுப் பொருட்களுக்கு செலவாக வருடத்திற்கு இருமாதம் முதல் ஐந்து மாத அளவு சம்பளத் தொகை, மற்றும் அலுவலக உதவியாளர்கள். மாவட்ட நீதிபதிக்கு 60000 சம்பளம், உயர்நீதி மன்ற நீதிபதிக்கு 90000 சம்பளம், உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு ஒரு லட்சம் சம்பளம்! மற்ற சலுகைகள் சம்பளத்திற்கேற்ற படி கூடும். காட்டாக உச்சநீதிமன்ற நீதிபதிக்கு மாதம் 20000 படி, வாகன வசதி, வருடத்திற்கு ஐந்து லட்சம் வரையிலான வீட்டுப் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதி போன்றவை.

இதுபோக அலுவலக உதவியாளர்களை காவல் துறையும், நீதித் துறையும் அபயன் படுத்துவதைப் போல ஒரு துறையிலும் நடப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மாண்பமை நீதிபதியவர்கள் அலுவலக உதவியாளராக நியமிக்கப் பட்டவர் நிதிபதியவர்கள் வீட்டில் நீதிபதியவர்களின் ஜட்டியை ஒழுங்காகத் துவைக்க வில்லை என்பதற்காக, அந்த உதவியாளரை ஏன் நீதிபதியவர்கள் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று எழுத்தில், ஆம் எழுத்தில் ! அளித்த விளக்கம் கோரிய ஆணை முகநூல் பக்கங்களில் சிரிப்பாய்ச் சிரித்தது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

இப்போது பணிநேரம் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம். நீதிபதியவர்களின் பணிநேரம் (அலுவல் விதிகளின் படி)
காலை 9;00 - பகல் 1;00 மணி வரை - வழக்கு விசாரணை | தீர்ப்பு
பகலுணவு 1:00 - 2:00
பிற்பகல் 2:00 - 4:00 மணி வரை - வழக்கு விசாரணை | தீர்ப்பு
பிற்பகல் 4:00 - 5:00 மணி வரை - தமது அறையில் மறுநாளுக்கான வழக்குக விவரங்களைப் படித்தல்

ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகிறது என்பது வழக்கு மன்றங்களில் நீதிபதி வரும் வழிபார்த்து, விழி சோர்ந்து இருப்பவர்கள் அறிவார்கள் ! நமது வழக்கு அன்றைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று நமது வழக்குரைஞர் தெரிவித்திருந்தாலும், நாம் வழக்காடும் அறையில் தேவுடு காத்துக் கொண்டேயிருந்தாலும் வழக்கு பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப் படாமலும் போகலாம், அல்லது எடுத்துக் கொள்ளப் பட்டு 5 மணித் துளிகளில் 'வாய்தா' வரமளிக்கப் பட்டு இன்னும் ஒரு மாதம் கழித்து ஒரு நாள் குறிக்கப் படலாம். ஒரு வழக்கைத் தொடர்ந்த முதல் ஐந்தநாண்டுகளில் இதுதான் பெரும்பாலும் நடக்கும். வழக்கு விசாரணைக்கு வருவதற்கே,ஆம்,விசாரணைக்கு வருவதற்கே சுமார் 5 ஆண்டுகள் ஆகிவிடுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை !

ஏன் இவ்வளவு தாமதம்? ஒரு வழக்கைப் பதிந்து கொள்வதிலிருந்து அந்த வழக்கு தொடர்பாக சுற்றறிக்கைகள் அனுப்புவது, அழைப்பானைகள் அனுப்புவது ஆகிய அனைத்திலும் மெத்தனமும் ஊழலும் மலிந்திருப்பது ஒரு பெரும்பான்மைக் காரணம். விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட வழக்கை விரைந்து முடிக்காதிருக்க வழக்குரைஞர்கள் நடத்தும் நாடகங்கள் பலவகையாக இருப்பது மற்றொரு காரணம். நான் முன்பதிவில் சொன்னது போல, மாண்பமை நீதிபதியவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு நீதி விற்கக் கூடும் என்பது ஒரு வழக்காடு மன்றத்தில் வாடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், சில வழக்குரைஞர்கள் அதை நேரடியாக தமது கட்சிக் காரரிடமும் கூறிவிட்டு, நீங்கள் பணம் கொடுக்கமுடியுமா அல்லது நாம் வாய்தா வாங்கிக் கொண்டையிருப்போமா என்று கேட்பதும் நடைமுறையில் நடக்கும் நிலை, இவை அனைத்துமே வழக்கு இழுபடுவதற்குக் காரணம்.

இப்படி பத்தாண்டுகள் பதினைந்தாண்டுகள் இழுபடும் வழக்குகள் ஒருவாறு முடிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் போது, நீதிபதி வழக்குத் தொடுத்தவர் கொடுத்த வழக்கு மனுவில் கேட்ட ஆதாரமான வினாக்களையும் நிலைகளையும் தீர்ப்பளிக்கும் போது கவனத்தில் கொள்ளப் பட்டதா என்பது எவருக்கும் தெரியாது. எந்த சட்ட விதிகளின் படி தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது, தீர்ப்புக்கு நீதிபதி வந்த முகாந்திரம் என்ன என்பவை எல்லாம் கீழ் வழக்கு மன்றங்களின் தீர்ப்பில் தெளிவாகத் தெரிவிக்கப்படுவதில்லை. அந்த தீர்ப்பில் வழக்குத் தொடுத்தவருக்குத் திருப்தி இல்லையெனில் மேல்முறையீடு ஒன்றே வழி. தாலுகா நீதிமன்றத்தில் பதினைந்தாண்டுகள் எடுத்துக் கொண்ட வழக்கின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றால் அந்த மேல்முறையீடு மேலும் பத்தாண்டுகள் எடுத்துக் கொள்ளும்! இவை பொதுமக்களின்  மதிப்பற்ற நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யும் இரக்கமற்ற நடைமுறைகள்.

இவற்றை எவராவது எக்காலத்திலாவது மறுநோக்கு அல்லது மதிப்பீடு -ரிவ்யூ | இவால்யூவேட்- செய்யாத வரை இந்த பிரிட்டிஷ் கால நடைமுறைகள் இப்படியே தொடரும்! இந்த விதமான மறுநோக்கு ஒரு வழக்கின் ஒவ்வோரு தீர்ப்பு நிலையிலும் செய்யப் படும் வசதி வருகிறது என்று ஒரு எடுத்துக்காட்டுக்கு வைத்துக் கொள்வோம், அப்போது ஒவ்வொரு நிலையிலும் அந்த வழக்கு அந்த வழக்கு மன்றத்தால் எவ்விதம் அணுகப் பட்டது என்பதை அந்த மறுநோக்கிலேயே- ரிவ்யூவில்- அறியலாமல்லவா? ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வழக்குரைஞர், ஒரு குறிப்பிட்ட நீதிபதி கையூட்டு அல்லது திறன்குறைவு போன்ற காரணங்களால் தன் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதைக் கண்டுபிடிக்கப் போதிய காரணங்கள் இருந்தால், அந்தக் குறை கீழ்நிலையிலேயே சரிசெய்யப் படலாம் இல்லையா?

இவை குறித்த சில ரிவ்யூ மற்றும் இவால்யூவேஷன் முறைகளைக் கொண்டு வர வேண்டும் என்பதே இப்பதிவின் சாரம்.



மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இது இந்திய வழக்காடு மன்றங்களின் படிநிலைகளைச் சொல்லும் படம். தாலுகா நீதிமன்றம் என்பவை மாவட்ட நீதிமன்றத்திற்குக் கீழ் வருபவை; மாவட்ட நீதிமன்றங்கள் உயர் நீதி மன்றத்தின் கீழ் வருபவை; உயர் நீதி மன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் கீழ் வருபவை. பொது விதிமுறையின் படி கீழ் நீதிமன்றம் விதித்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்ற நிலையில், அதற்கு மேற்படிநிலையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இந்த வரிசையில் உச்ச நீதிமன்றம் வரை வழக்கை எடுத்துச் செல்லலாம்.

ஆனால் ஒரு கீழமை நீதிமன்றம் வழக்கை ஒழுங்கான முறையில் நடத்த வில்லை என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒழுங்கு என்ற வரைமுறையில், வாதி அல்லது பிரதிவாதியின் வழக்கறிஞர் போதுமான சட்ட அறிவு இல்லாதவராக அல்லது மாறுபட்ட\தேவையற்ற\பிழையான சட்ட விதிகளின் படி ஒரு வழக்கை எடுத்துச் சென்றிருக்கலாம். அல்லது நீதிபதியவர்கள் வேண்டிய பணத்திற்காக நீதியை வளைத்திருக்கலாம். இந்த ஒழுங்கின்மைக்கு என்ன பரிகாரம்? வழக்கைத் திரும்பவும் மேலமை நீதிமன்றத்திற்கு வாதியோ அல்லது பிரதிவாதியோ எடுத்துச் சென்றாலும், இந்த விதமான ஒழுங்கற்ற கடமையாற்றியதற்கான தண்டனை அல்லது திருத்திக் கொள்ளும் வாய்ப்பு வழக்குரைஞர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ இப்போதைய நடைமுறைகளின் படி இல்லை. அதாவது ஒரு வழக்குரைஞர் அல்லது நீதிபதி கையூட்டுப் பெற்றுக் கொண்டு, வழக்கை தவறான திசையில் கொண்டு சென்றார் என்றால், வழக்காடுபவருக்கு அந்த வழக்கு சட்ட விதிகளின் படி சரியான முறையில் நடைபெற்றிருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதேயில்லை. இந்த வாய்ப்பு நீதி அமைப்பின் கண்ணிகளில் எங்காவது இருந்தார் வழக்குரைஞர்களும் நீதியரசர்களும் இன்னும் சிறிது பொறுப்போடு தமது வேலையைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு உரத்த சிந்தனையில் இந்த விதிமுறைகள் எவ்வாறிருக்கலாம்?


1.வழக்கு தொடுக்கப்படும் போது வாதி, பிரதிவாதி மற்றும் வழக்குரைஞர்கள் கட்டாயம் அவர்களது மின்மடல் முகவரியையும், கைத்தொலைபேசி எண்ணையும் வழக்குப் பதிவு அறிக்கையில் குறிப்பிட வகை செய்ய வேண்டும்.

2.வழக்கு தொடர்பாக அழைப்பாணைகள் மின்மடலின் மூலம் அனுப்பப் பட்டு, அனுப்பப்பட்ட தேதி.நேரம் வரித் தகவலாக-டெக்ஸ்ட் மெஸேஜ்- தொடர்புள்ள வாதி அல்லது பிரதி வாதிகளுக்கும் வழக்குரைஞருக்கும் அனுப்பும் படியான கட்டமைப்பு நிறுவப் பட வேண்டும். இந்த அனுப்புதல் கூடியவரை தானியங்கி முறையில் நடைபெற வேண்டும்.

3.வழக்கு எடுத்துக் கொள்ளப் படும் நாள் மற்றும் எந்த வழக்காடு மன்றத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது, எடுத்துக் கொள்ளப் படும் நேரம் முதலியனவும் மின்னஞ்சல் மற்றும் கேபேசித் தகவல் வழி அனுப்பப்பட வேண்டும்.

4.வழக்கின் முறையீட்டு அறிக்கை மற்றும் எந்த சட்ட விதிகளின் படி- ஆக்ட் அன்ட் செக்ஷன்- வழக்குரைஞர் அந்த வழக்கு முறையீட்டை முன்வைக்கிறார் என்பது தேவையான ஆவணங்களுடன் 10 பக்கங்கள் மிகாமல் இருக்க வேண்டும். இந்த நகல் வழக்காடுபவரின் மின்னஞ்சலுக்கு, வழக்குப் பதிவு செய்த உடன் அனுப்பப்பட்டு, வழக்குப பதிவு எண் விவரங்களும் அனுப்பப்பட வேண்டும்.(வழக்குப் பதிதலின் அக்னாலெட்ஜ்மென்ட் & கேஸ் நம்பர்)

5.எந்த வழக்கிற்கும் ஒரு தரப்பிற்கு 5 வாய்தாவிற்கு மேல் எக்காரணம் கொண்டும் கொடுக்கக் கூடாது; வழக்காடுபவர் அழைப்பு நாள் அன்று கலந்து கொள்ள இயலாதெனினும் வழக்குரைஞர் கலந்து கொள்வது கட்டாயமாக்கப் பட வேண்டும்.

6.வழக்குரைஞர் தாக்கல் செய்யும் ஆவணங்கள் உடனுக்குடன் வழக்கு தொடர்பான மென்- ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும். இந்த தகவல் பெட்டகம் வழக்காடுபவர், வழக்குரைஞர் மற்றும் நீதிபதி, பதிவாளர் மற்றும் தேவையான நீதிமன்றப் பதிவாளர்கள் அணுகும் படி இருத்தல் வேண்டும்.வழக்காடும் வாதி, பிரதிவாதிகள் அவர்களின் மின்னஞ்சல் மற்றும் வழக்கு எண்ணை உள்ளிட்டு, கடவுச் சொல் பெறும் வசதி இந்த தகவல் பெட்டகத்திற்கு இருக்க வேண்டும்.

7.வழக்கு விசாரணைகள் முடிந்த பின்னர், வழக்கின் தொகுப்பு ஆவணமாக வாதியின் வழக்குத் தொடுப்பு அறிவிக்கை, விசாரணை முடுந்த பின்னர் வழக்குரைஞர் செய்து முடிக்கும் வழக்காடு அறிக்கை-ஆர்க்யூமென்ட் அறிவிக்கை, மற்றும் பிரதிவாதியின் பதிலான வழக்கு மறுப்பு அறிக்கை, அவர்களின் வழக்காட்டு அறிக்கைக்கான பதில் அறிக்கை, மற்றும் நிதிபதியின் தீர்ப்பு இவை அனைத்தும் இந்த தகவல் பெட்டகத்தில் வழக்கு தொடர்பான அனைவருக்கும் மென் வடிவில் கிடைக்கும் வண்ணம் வசதிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான மொத்தத் தொகையான ஒரு தொகையை வழக்கு மன்றம் வழக்குத் தொடுக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்ளலாம்.( உண்மையில் இம்முறைகள் கொண்டு வரப் பட்டால் வழக்கு மன்றத்தில் இருக்கும் பணியாளர்களில் பாதிப் பேருக்கும் மேல் தேவைப் படாது! அவர்களின் சம்பள மிச்சத் தொகையே இந்தச் செலவுகளை ஈடுகட்டி விடும்).

8.வழக்கின் தீர்ப்பு, மற்றும் வழக்காட்டு அறிக்கை தேவையான சட்ட விதிகளின் சட்டப் பிரிவு எண்களோடு இருக்க வேண்டுவது அவசியம். ஒரு மூன்றாவது வழக்குரைஞர் அல்லது நீதிபதி, வழக்குத் தொடுப்பு அறிவிக்கை, வழக்காட்டு அறிவிக்கை மற்றும் தீர்ப்பு ஆகிய அனைத்தையும் பார்த்தால் வழக்கின் போக்கு மற்றும் வழக்கில் எழுப்பப் பட்ட விதயங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த அறிவிக்கைகள் இருத்தல் வேண்டும்.

9.வழக்கு நடைபெற்ற விதத்தில் வாதிக்கே சந்தேகம் இருந்தால் வழக்கின் தீர்ப்பு, வழக்குத் தொடுப்பு அறிவிக்கை, வழக்குரைஞரின் இறுதி வழக்காட்டு அறிவிக்கை, பிரதிவாதியின் வழக்கு மறுப்பு அறிக்கைர பிரதிவாதியின் வழக்குரைஞரின் இறுதி வழக்காட்டு அறிவிக்கை ஆகிய ஐந்து ஆவணங்களையும் மறுபார்வைக்கு-ரிவ்யூ- அணுப்பும் வண்ணம் உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளின் குழுமம் ஒன்று ஏற்படுத்தப் பட வேண்டும். இந்த ரிவ்யூ ஒரு வலைப் பக்கத்தின் மூலம் பதிவு செய்யப் படும் வசதி இருக்கப் பட வேண்டும். வழக்கை ரிவ்யூ செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் குழு சுழற்சி முறையில் ஒருவர் அல்லது இருவராக ஒரு வழக்கிற்கு நியமிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட வேண்டும்.

10.இந்த ரிவ்யூவில் வெளிப்படையாக வழக்கு நடத்திய முறையிலோ அல்லது சட்ட விதிகளின் படி அளிக்கப் பட்ட தீர்ப்பிலோ, மிக வெளிப்படையாகக் குறைபாடு இருப்பதாக அந்த ரிவ்யூ குழும நீதிபதிகள் ஒத்த கருத்துக்கு வந்தால், குறைபாடு வழக்குறைஞர் பக்கம் இருந்தால் பார் கவுன்சிலிலோ அல்லது நிதிபதியின் மேலிருந்தால் வழக்கு மன்றம் கட்டுப் பட்டிருக்கும் உயர்நீதி மன்றம் அல்லது கொலீஜியத்திற்கு, இந்த ரிவ்யூ குழுமம் தமது பரிந்துரை,முடிவை அறிவிக்க வேண்டும்.

11.இவ்வாறு ஒரு வழக்கறிஞர் அவர் ஈடுபட்ட 5 வழக்குகளில் குறைபாடுடையவராக அறியப் பட்டால், வழக்கறிஞர் தொழில் செய்வது இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப் படவேண்டும்; அவர் வேறு வழக்கறிஞர்கள் சார்பாகப் பணி செய்வதும் தடை செய்யப் படவேண்டும்; அதோடு ஒவ்வோரு தவறாகக் கையாளப் பட்ட வழக்கிற்கும் வாதிக்கு அவர் வழக்குச் செலவு தொகையையும், வழக்குரைஞர் தொகையாக அவர் வாதியிடமிருந்த வாங்கிய கட்டணத்தையும் திரும்பத் தர வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும்.

12.நீதிபதி அளித்த தீர்ப்பு குறைபாடுடையதாக ரிவ்யூ குழுமம் முடிவுக்கு வந்தால், தொடர்புள்ள ஒவ்வொரு தவறான தீர்ப்புக்கும் நீதிபதியின் பணி அனுபவம் ஒரு ஆண்டு குறைக்கப் படவேண்டும். 5 தீர்ப்புகளுக்கும் மேல் ஒரு நீதிபதி தவறாக தீர்ப்பளித்திருக்கிறார் என்றால் அவர் 5 ஆண்டுகளுக்கு நீதிபதியாகப் பணி செய்வது தடைசெய்யப் பட்டு அவர் வழக்குரைஞராகப் பணி செய்யப் போகப் பணிக்கப் பட வேண்டும்.

இவை அர்த்தமற்ற பிதற்றல்களோ அல்லது சுய இரக்கத்தின் பாற்பட்ட எண்ணங்களோ அல்ல.

நமது வழக்காடு மன்றங்கள் செயல்படும் விதத்தை எவ்விதத்திலாவது மேம்படுத்த இயலுமா என்ற சிந்தனையின் விளைவே. இந்த முறைகள் உறுதியாகக் கடைப் படிக்கப் பட்டால் வழக்காடு மன்றங்கள் நேர்மையின் காற்றையாவது சுவாசிக்கும் வாய்ப்பு ஏற்படும் !

5 comments:

  1. செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று உள்ளது. சம்பத்தப் பட்டவர்கள் யாரும் திருந்த மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பொது மக்களுக்குத்தான். நீதிபதிகளுக்கும் காவலர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அது பொருந்தாது.

    சும்மா இப்படி பதிவு எழுதுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. விதி.

    --
    Jayakumar

    ReplyDelete
  2. நன்றி திரு ஜெயக்குமார், சங்கையாவது எடுத்து ஊதுவோம். எந்நாளும் இல்லாத திருநாளாய் ஒரு செயல்படும் பிரதமர் இந்தியாவிற்கு வாய்த்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அரசுப் படித்தரங்களில் எவருக்காவது இந்தப் பிரதி சென்று சேரலாம். நல்லது நடக்கலாம். நம்புவதுதானே வாழ்க்கை !

    ReplyDelete
  3. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள்.
    கோற்ட் என்றாலே பயப்படும் நிலை எல்லோருக்கும். இதனாலேயே கட்டப் பஞ்சாயத்துகள் ஓகோவெனெ வளர்ந்து வருகின்றன

    ReplyDelete
  4. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள். கோர்ட் என்றாலே பயப்படும் நிலை தான் இன்றைக்கு. இதனால் கட்டப்பஞ்சாயத்துகள் ஓகோவென வளர்ந்துவருகின்றன.

    ReplyDelete