Pages - Menu

Wednesday, September 5, 2012

173.ஆப்பிள் Vs மற்றவை- எது நிற்கும் ???

2000"ங்களில் தொழில் நுட்பம் மூலம் பயனாளர்களில் உலகின் பெரும் பகுதி மக்களைப் பாதித்த பொருட்களைப் பட்டியலிட்டால் அதில் ஆப்பிள் பொருள்களின் பங்கு பெரியது.முதலில் சிறிய ஐபாட் 2002\3 ல் வந்ததிலிருந்து பின்னர் ஐபேட், ஐபோன், ஐபாட் டச், ஐமேக் என்ற ஐந்தே பொருள்களைத் தயாரித்த ஆப்பிள் நிறுவனம் இன்றைய தேதியில் உலகில் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் என்ற உச்ச நிலையை ஜீலை\ஆகஸ்ட் 2012 ல் அடைந்தது.(coveted position of Most vlauable company in terms of market capitalisation-around 650  billions in USD terms)
ஐஃபோன் 4S


இந்த நிலையை அடைந்த ஆப்பிள் நிறுவனம் கடந்த வந்த பாதையும், ஸ்டீவ் ஜாப்ஸ் துவங்கிய அந்த நிறுவனத்திலிருந்து அவரே வெளியேற்றப்பட்டதும், திரும்பவும் வந்ததும் பலர் எழுதி விட்ட வரலாறு, ஆனால் ஜாப்ஸ்'க்கு இருந்த தொலைநோக்கும், எல்லாக் குழப்பம் மற்றும் அவருக்கேயுரித்தான குணக்கேடு எல்லாவற்றிற்கும் மத்தியில், அவருக்கு இருந்த ஒரு உள்ளார்ந்த உந்துதலின் விளைவாக எழுந்த ஒரு ஐடியாவில்(சிறிது அதிர்ஷ்டத்திற்கு மத்தியிலும்) விளைந்த ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் முகத்தையே மாற்றிப் போட்டது;ஆப்பிள் நிறுவனத்தை மட்டுமல்ல, உலகம் கைத்தொலைபேசியை பயன்படுத்திய முறையையும், பொதுவாக கைத்தொலைபேசியின் பயன்பாட்டையும் மொத்தமாக மாற்றிப் போட்டது.



(இந்த நேரத்தில், நான் ஆப்பிள் நிறுனத்தின் மற்ற பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறேன் என்றாலும், ஐஃபோனை இன்னும் பயன்படுத்த வில்லை என்பதையும் சொல்லி வைக்கிறேன்)


கம்யூனிகேஷன் மற்றும் கைத்தொலைபேசி சார்ந்த தொடர்புக் கருவிகளில் புரட்சியை ஏற்படுத்திய ஐஃபோனை சமாளிக்க முடியாமல் திணறிய மற்ற நிறுவனங்களுக்கு மத்தியில் முதலில் விழித்துக் கொண்ட நிறுவனங்கள் கூகிளும், சாம்சங்'கும். கூகிள் மென்பொருளையும், சாம்சங்' வன்பொருளையும் பிரித்துக் கொண்டு களத்தில் போட்டிக்கு இறங்கியதில், அன்ட்ராய்ட் கைத்தொலைபைசிகள் சந்தையில் பெருகின.

மென்பொருளைப் பொறுத்த வரை கூகிளின் அன்ட்ராய்ட்  ஐ மென்பொருளைப் போலவே (காப்பி அடித்து)கட்டமைக்கப்பட்டது என்று சொல்லி விட முடியாது;ஆனால் சாம்சங்'கின் கலக்ஸி வரிசை கைத்தொலைபேசிகள் கிட்டத்திட்ட ஐஃபோனி'ன் காப்பி என்றே சொல்லும் படி இருந்தது.(கலக்ஸி எஸ்2)



ஏற்கனவே பொறுமிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை சாம்சங்கின் கலக்ஸி எஸ் 2 வழக்கு மன்றத்திற்கு  செல்ல வைத்தது; இந்த வழக்கில், கலக்ஸி எஸ்3 அமெரிக்காவில் விற்பனைக்கு விடப் போன சமயத்தில் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து வழக்கு ஆப்பிளுக்கு சாதகமாக முடிந்ததும், கிட்டத்திட்ட 5500 கோடி அபராதம் கொடுக்க வேண்டும் எனவும்,முடிவுகள் வந்தது தெரிந்த செய்தி.மேலதிகமாக மேலும்சில சாம்சங் நிறுவனத்தின் தொலைபேசி மாடல்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படவேண்டும் என்றும் ஆப்பிள் நிறுவனம் இன்னொரு வழக்கும் போட்டிருக்கிறது.இரண்டு நிறுவனங்களும் உலகின் பல நீதி மன்றங்களில் இது தொடர்பில் இன்னும் மோதிக் கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில், தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, சாதக,பாதகங்கள் என்ற நோக்கில் மட்டும் இந்தத் தீர்ப்பு சரியானதா என்ற கேள்வி பல தளங்களில் எழுந்திருக்கிறது.இந்த வழக்கு ஜூரிகளால் முடிவு செய்யப் படலாமா அல்லது நீதிபதிகளிடம் விடப் பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.இந்தியாவில் ஜூரிகள் மற்றும் ஜட்ஜூகளுக்கிடையேயான வேறுபாடு புரிந்து கொள்ளப்படுவதில் சிரமங்கள் இருக்கலாம்.எளிய சொற்களில் சொல்வதானால் இந்தியாவில் பஞ்சாயத்துகள் நடந்து,பஞ்சாயத்தார்கள் தீர்ப்புச் சொல்வதின் நீட்டப்பட்ட வடிவம் ஜூரிகள் முறை; நீதிமன்றத்தின் முறை ஜட்ஜூகள் முறை என்று சொல்லலாம்.(மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்)

இந்த வழக்கும் தீர்ப்பும் போங்கு ஆட்டம், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் இன்னொருவரைக் காப்பி அடித்துத்தான் புதிய,மேம்பட்ட நுட்பங்களை வழங்குகிறார்கள்;இதைத் வழக்குகளின் மூலம் தடுக்க நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் பத்ரி.

போர்ஃப்ஸ் இதழ் கூட வழக்குகளில் கவனம் செலுத்தவதை விட ஆப்பிள் எப்போதும் போலப் புதிய பொருட்களைக் கண்டு பிடிப்பதில் ஆர்வம் செலுத்தலாம்;இதெல்லாம் வெட்டிவேலை என்ற தொனியில் எழுதியிருக்கிறது. (Mr.Cook, move on. Create !)

ஆனால் கைத்தொலைபேசிகளின் வடிவாக்கத்தின் வரலாறையும் ஐஃபோனுக்கு முன்னாலும் ஐஃபோன் வந்த பின்னும கைத்தொலைபேசி உலகில் ஐஃபோன் ஏற்படுத்திய மாற்றத்தையும் கவனிப்பவர்கள், ஐஃபோன் வடிவாக்கத்தின் வரலாறையும் நோக்குகையில் இந்தத் தீர்ப்பு சரியானதே என்று நினைக்கிறேன்.ஐஃபோனை வடிவத்திற்குக் கொண்டுவர ஜாப்ஸ்க்கு சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாகியிருக்கிறது என்பதையும், விளையாட்டு, தொடுதிரை, தொலைபேசி, இசைபாடும் கருவி, இணையம் என்ற ஐந்தின் உன்னதமான கலவையாக ஐஃபோன் வெளிவந்தது என்றால் அது மிகையில்லை.

அதை இரண்டு வருடங்களுக்குள் அப்படியே கிட்டத்திட்ட காப்பி அடித்து இன்னொரு பெயரில் தயாரித்து விற்கலாம் என்று சாம்சங் நினைத்ததற்கு, சரியான பரிசாகவே இதை நான் பார்க்கிறேன்.தொழில் நுட்பத்திற்கு நிச்சயம் வரையறைகளும் உரிமையும் எவரும் கொண்டாட முடியாது;ஆனால் தொழில்நுட்பத்தின் சரியான வெளிப்பாட்டு வடிவம் பெரும் வெற்றி பெரும் போது, அதை அப்படியே திருடுவதும் சரியானது அல்ல.

ஆப்பிள் நிறுவனம் இந்த வழக்கின் மூலம் இலக்கில் வைத்தது உண்மையில் சாம்சங் அல்ல, கூகிளின் அன்ட்ராய்ட் செயலியையே அது குறி வைத்திருக்கிறது;ஆனால் இறுதி வடிவமாக வரும் வன்பொருள் நிறுவனத்தையே இலக்காக்க முடியும் என்பதால், சாம்சங் இலக்காகியிருக்கிறது;உண்மையில் இது கூகிளின் அன்ட்ராய்டின் மீதான ஆப்பிளின் போர் என்று சில கருத்துக்கள் உலவுகின்றன.

இந்தப் போட்டிகள் ஓர்மைப் படுத்தப்பட்டு ஆப்பிள் ஒரு பக்கத்திலும் மற்ற கைத்தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பக்கத்திலும்(பின்னணியில் கூகிளுடன்)  நிற்கும் நிலை வரலாம்; அந்த நிலை வருவதை சாம்சங் பெருமளவு விரும்புகிறது.

சாம்சங் ஒரு வாரத்திற்கு முன் கலக்ஸ் நோட் 2 ஐ வெளியிட்ட போது, விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு நுண்ணறி கைத்தொலைபேசியை ஆச்சரியமாக அறிமுகப் படுத்தியதும், எச்டிசி, சோனி போன்ற பல நிறுவனங்கள் இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் அன்ட்ராய்டில் இயங்கும் பொருள்களைத் தயாரிப்பதில் தங்களுக்கும் எதிர்காலச் சிக்கல் வரலாம் என்று பயப்படுவதும் மேற்கண்ட கருத்தை வலுப்படுத்துகிறது.

இரண்டொரு வாரத்தில் ஐஃபோனின் வடிவம் 5 வெளியாகப் போவதாகச் செய்திகள் வந்து விட்டன.அதில் பெரும் மாற்றங்கள் எதையும் சந்தை எதிர்பார்க்கவில்லை. வியக்கத்தக்க வகையில் அதில் ஏதாவது விரும்பத் தக்க மாற்றங்கள் வந்தால் ஆப்பிள் ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட முதல் கம்பெனியாக வரலாற்றில் உயரும்.( சென்ற ஆண்டில் ஆப்பிள் பங்கின் விலை 380 டாலர், இப்போது 675 டாலர் !)

இவை எல்லாவற்றின் விளைவு,கைத்தொலைபேசி வடிவாக்கத்தில் இன்னொரு பெரிய மாற்றத்திற்கான தேவையையும் அவசியத்தையும்  விதைத்திருப்பதே. ஜாப்ஸ் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாற்றத்திற்கான ஊகங்கள் இதைவிடப் பன்மடங்கு பெருகியிருந்திருக்கும்.

அவர் இல்லாத நிலையில் டிம் குக் எந்த அளவுக்கு இதை நீட்டித்துக் கொண்டு செல்வார் என்றதும், மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டில், கண்டுபிடிப்புகளில் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும் என்பதில் இருக்கிறது எவர் வெற்றி பெறுவார்கள் என்பது !

வாண வேடிக்கைகள் காத்திருக்கின்றன !!!

2 comments:

  1. ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கிறேன்... நல்ல அலசல் சார்... அறிந்து கொண்டேன்... அங்கங்கே இணைப்பு கொடுத்துள்ளீர்கள்... அங்கு சென்று வாசிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர் தனபாலன்...
      படித்த பிறகு சொல்லுங்கள்..

      நீங்கள் டெக்ஸ்டைல் துறையில் இருப்பதாக சொல்லியிருந்ததாக ஒரிடத்தில் படித்ததாக நினைவு..என்ன துறை என்று மேலும் சிறிது அறியலாமா?

      Delete