Pages - Menu

Saturday, August 18, 2012

* * * * * 167.குறுந்தொகை'கள்-மன்மோகன், What is big deal ?!

சுதந்திர இந்தியாவில் இந்தமுறை பதவியிலிருக்கும் மைய அரசைப்போல் வேறு எந்த அரசின் மீதும்,மைய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை என்றே நினைக்கிறேன்.மூன்று ஆண்டு தணிக்கை அறிக்கைகளில் மொத்தமாக கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ருபாய் அளவில்,அதாவது 8,00,000,000,000 ரூபாய்-
ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறது CAG அலுவலகத்தின் அறிக்கை.

1990 களுக்குப் பின்னான இந்தியா பொருளாதாரத்தை முன்னெடுக்க முதலாளித்துவம் மற்றும் பயனாளர் CAPITALISM  & CONSUMERISM சார்ந்ததாக மாறியது.இந்த மாடலில் எந்த அளவுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் இருக்கிறனவோ அந்த அளவுக்கு ஊழலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்தவிதமான நேரங்களில் அமையும் தலைவர்களைப் பொறுத்தே நாடு மற்றும் அமைப்பின் முன்னேற்றமும் மக்கள் நலனும் அமையும்.

உலகெங்கிலும் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற காலங்களில் முன்னேறிய நாடுகளின் வரலாறை ஆராய்ந்தால் நான் சொல்வதின் உண்மை புரியும்.70-90 வரையிலான சிங்கப்பூர்,80 - 95 வரையிலான சீனம், இரண்டாம் உலகப் போரின் போதான ரூஸ்வெல்ட் தலைமையிலான அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும், எப்போதும் இல்லாத ஒரு பாய்ச்சல் பொருளாதார முன்னேற்றத்தை இந்தக் கால கட்டங்களில் எட்டின.அந்தந்த நாடுகளின்  முன்னேற்றத்திற்குக் காரணம் அருமையான,தொலைநோக்குள்ள, தன்னலமற்ற தலைவர்கள் வாய்த்ததுதான்.

அவ்விதமான தலைமைத்துவம் நிரம்பிய தலைவர்கள் இந்தியாவைப் பொறுத்த வரை அவ்வப்போதே கிடைத்தார்கள்; நரசிம்ம ராவ் நிச்சயம் அப்படி ஒரு தலைவரே.வாஜ்பாய், லால்பகதூர், மொரார்ஜி முதலியவர்களும் அந்த வரிசையில் வருபவர்கள்.ஆனால் இவர்கள் அனைவரும் தேர்தல் மற்றும் உட்கட்சி அரசியலால் வாய்ப்பிழந்து காணாமல் போனார்கள்.

ஆனால் மனமோகனர் ஒரு நல்ல கூலி ஆள் மட்டுமே என்பதையும்,தலைவன் கை கட்டிய வழியில் செல்லும் கூலி ஆளின் திறன் தலைவனைப பொறுத்து மாறுபடும் என்பதும் நமக்கு காலம் சொல்லும் பாடம். இப்போதும் அவர் நல்ல ஒரு கூலி ஆளாக ஒரு தலைமை சொல்வதெற்கால்லாம் தவறாது தலையாட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

அருமையான கூலி யாள்; இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்' என்று தலைமை நெகிழத் தக்க அளவுக்கு அருமையான கூலியாள் !


தலைமையைப் பொறுத்த வரை, இன்றைய இந்தியாவில் என்ன விதமான குற்றச்சாட்டு எழுப்பப் பட்டாலும், வாட்'ஸ் எ பிக் டீல்? என்று வினவும் வண்ணம்தான் இருக்கிறது. இப்போதைக்கு ஊழலில் பணம் பண்ணுவதும், எதிர்கால குடும்ப நலனுக்கு, நாற்காலிக் காப்பாளாரக ஒரு மண்'னை வைத்திருப்பதுவும், இடைக்காலத்தில், எந்த நீதிமன்றம், கண்காணிப்பு அமைப்பு அல்லது பொதுநல அமைப்புகள், ஊழல் எதிர்ப்பாளர்கள் என்ன எதிர்ப்பு, குற்றச் சாட்டைக் கூறினாலும், தெளிந்த, உயர்ந்த, அந்தகாரமான மௌனத்தில், மோன நிலையில் இருக்கும் அற்புதத் தலைமை !!!

நாமெல்லாம் பாக்கியவான்கள் !

()


சில திரைப்படங்கள் ஒரு நோக்கத்தை,செய்தியைச் சொல்வதற்காகவே எடுக்கப்பட்டவை என்பதை படத் தொடக்கத்திலிருந்தே சொல்லவிடக் கூடியவை; படத்தின் கனம் சிறிது சிறிதாக அந்த இறுதிக் காட்சியை நோக்கிச் செலுத்தப்படும் வகையிலானவை இவ்வித திரைப்படங்கள்.
சில திரைப்படங்கள் சாதாரணமாகத் துவங்கி, பொழுது போக்காக நகர்ந்து, அசாதாரணமான ஒரு செய்தியைச் சொல்பவை.

இந்தத் திரைப்படம் அந்த விதத்திலானது.

உலகளாவிய நிதி முதலீட்டு நிறுவனத்தில்-Global Investment Banking company- பணியாற்றும் ஒரு நவ நாகரிமான யுவதியான மிகிகா முகர்ஜியும்(லாரா தத்தா), சாதாரணமாக, எங்கும் காணக் கிடைக்கும்,ஒரு சாமான்யனும்-காமன் மேன்-மணு குப்தாவும்(வினய் பதக்), ஒரு விமானப் பயணத்தில் சந்திக்க நேர்கிறது.

அந்தப் பெண், கிட்டத் திட்ட மேற்குலகவாசியாக மாறிவிடும் நிலையில் உள்ள, ஆனால் இந்தியாவில் வசிக்கின்ற இந்தியப் பெண். அந்த நபர், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் காணக் கிடைக்கின்ற ஒரு சிறு அளவு வியாபாரி.விமானத்திற்குள் மனு'வுக்கும், மிகிகாவிற்கும் இடையில் நடக்கும் எண்கவுன்டர்கள் சுவாரசியமானவை.


இவர்கள் இருவரும் பயணம் செய்யும் விமானப் பயணம் எதிர்பாராத நிலையில் தடைப்படுகிறது;நடுவழியில் இறங்கிய ஊரில் இருந்து தில்லிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மிகிகாவிற்கு ஏற்படுகிறது,வெகுதூரம் செல்லவிருக்கும் கணவனைச் சந்திக்க வேண்டிய கட்டாயம்; ஒரு டாக்சியை அமர்த்திக் கொண்டு புறப்பட, டாக்சி வாலா புல் மப்பில் இருப்பது தெரிய வருகிறது; உளறிக் கொட்டும் அந்த டாக்சிவாலாவைச் சமாளிக்க,தானாக ஆஐராகும் மனு குப்தாவின் உதவியை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகும் மிகிகா, மனு குப்தாவுடன் டாக்சியில் பயணப்படுகிறார்.

இரவு நெருங்கும் நேரத்தில்தான், மப்பில் இருக்கும் டாக்சி வாலாவுக்குப் பதிலாக, வண்டியை ஓட்டும் மனு குப்தா, எதிர்த் திசையில் வண்டியை ஒட்டிக் கொண்டு போவது தெரியவருகிறது. இந்த லட்சணத்தில் டாக்சியும் பிரேக்டவுனாக, கிடைத்த லாரி, ட்ரெயின், ரவுடிகளின் ஜீப் என்று பல வழிகளில் அவர்கள் இருவரும் தில்லிக்கு பயணப் படுகிறார்கள்.

இடையில் அவர்கள் வைத்திருக்கும் பணம் பிட்பாக்கெட் ஆகிறது; வெளிக்குப் போகக் கூட இடமில்லாத நிலையும், கரப்பான் பூச்சிக்குப் பயந்து அலறும் தன்மையும், முழங்கால் வரையிலான கவுனும், பிசினஸ் சர்ட்டும் அணிந்த மிகிகாவின் பிரத்யேக நாகரிகம் சார்ந்த தொல்லைகளும், அவற்றிற்கு மனு குப்தாவின் இயல்பான எளிய தீர்வுகளுமாகப்  படம் நகர்கிறது.


நுனி நாக்கு ஆங்கிலமும், நாகரிகமும் மிக்க கனவான்களாகத் தோன்றுபவர்களின் உள்ளார்ந்த உளப்பாங்கும், எளிதாக சகலருடன் பேசித் திரியும்,சதா கேள்வி கேட்கும் சாதாரணர்களைத் தொந்தரவாக நினைக்கும் நேரத்தில், அவர்கள் உண்மையில் எந்த அளவுக்கு தோழமையும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர்களாக இருக்கக் கூடும் என்ற செய்தியும், பல சம்பவங்களின் ஊடாக உறுத்தாமல் படத்தில் வருகின்றன.

தில்லிக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் ஒரு பாடாவதி ஹோட்டலில் குளிக்கவும், இயற்கை உபாதைகளுக்காகவும் தங்க நேரிடுகையில், இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையில் ஏற்படும் சண்டையால், ஊருக்குள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மேலும் திண்டாட்டம் கூடுகிறது மிகிகாவிற்கு. ஒரு வழியாக தன் கணவனை அழைத்து, இருக்கும் இடத்தைச் சொல்லி வந்து இருவரையும் அழைத்துக் கொள்ளச் சொல்லும் மிகிகாவிற்கு, தின வாழ்வின் சொகுசு சௌகரியங்கள் கிடைக்காத இரண்டு பகலும், ஒரு இரவும் ஏற்படுத்தும் மன அழுத்தம் மலையளவு பெரிதாகத் தெரியும் சூழலில், வாட்'ஸ் எ பிக் டீல்? என்ற எளிய, இயல்பான மனப்பான்மையுடன் வாழ்வின் நிகழ்வுகளை எதிர் கொள்ளும் மனு குப்தா வியப்பானவராகத் தெரிகிறார்.

தில்லியை அடைந்ததும், வலுக்கட்டாயமாக, பாதி வழியிலேயை விடை பெற்றுச் செல்லும் மனு குப்தா, படத்தின் முடிவில் மேலும் பல ஆச்சரியங்களை அளிக்கிறார்.

எளிதாகத் துவங்கி, நகைச்சுவையுடன் பயணித்து, வாழ்வில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடத்துடன் முடிகிறது படம்...சில ஆண்டுகளுக்காவது இந்தப் படத்தின் பாடம் என் மனதில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டாயம் பாரக்க வேண்டிய படம்.

சலோ தில்லி, வெளியான ஆண்டு-2011

1 comment: