Pages - Menu

Thursday, August 2, 2012

151.சாலத் தலை - நாளொரு பாடல்-2




தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும்-காயவிடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையு மிம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை.





நூல்: அறநெறிச்சாரம்
பாடல் எண்:107
ஆசிரியர்:முனைப்பாடியார்

பதம் பிரித்த பாடல் :
தூயவாய்ச் சொல் ஆடல் வன்மையும்,துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும்-காய இடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்மையும் இம் மூன்றும்
சாற்றும் கால் சாலத் தலை.

முக்கிய சொற்கள்:
வன்மை - குணம்
வண்மை என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. வண்மை-திறம்
ஆய பொழுது- வரும் பொழுது
ஆற்றும் ஆற்றல்- தளர்வடையாமல் செயல் படும் திறம்
காய- வெறுப்பு
வேற்றுமை- பகை,வெறுப்பு,வேறுபாடு
சாற்றும்-கூறும் பொழுது

கருத்து:
நல்ல கருத்துக்களை,குற்றமில்லாமல் சொல்லும் திறமும்,வாக்கு வன்மையும்; துன்பங்கள் நேரும் போது தளர்வடைந்து மயங்கி நிற்காமல்,ஊக்கமுடன் செயலாற்றும் திறமும்;தம் மீது வெறுப்பும்,பகையும் கொண்டு வருபவர்களிடமும் வேறுபாடோ,வெறுப்போ,கோபமோ இல்லாத நிலையும்; ஆன இவை மூன்றும்,சொல்வதெனில்,மிக உயர்ந்த குணங்களாகும்.

டிட் பிட்ஸ்:
நல்ல கருத்துக்களை அறிதல் மட்டும் அறிவன்று;அவற்றைத் திறம்பட குற்றமில்லாமல் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் வேண்டும்.அதுவே அறிவின் விளைவு.

நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்- என்பது தமிழ்க் கூற்று. அக்காலத்தில் ஓலையில் எழுயிருக்கப் படும் ஒரு பத்தியை அல்லது செய்யுளை,இக்காலத்தில் புத்தகத்தை வாசிப்பது போல எளிதில் வாசித்து விட முடியாது.ஓலைகளில் எழுதிய எழுத்துக்களில் சில காலம் ஒற்றெழுத்துக்கள் தனியாகக் புள்ளி வைத்து எழுதாத காலமும் உண்டு. அப்போது எழுதி இருக்கும் கருத்தை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ள, நல்ல மொழி அறிவும்,கருத்துத் தெளிவும் அவசியம்.

அவ்வளவு தெளிவு கொண்டவர்கள் எந்த ஓலையில் எழுதியிருக்கும் பாடலையும் தெளிவாக,அப்பாடல் என்ன சொல்கிறது என்ற கருத்தை,பிழையில்லாமல் வாசித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

இதை கருத்தில் கொண்டே, அப்படி வாசிக்கத் தெரியாதவர்கள் மரத்திற்கு ஒப்பானவர்கள் என்ற சொல்லாடல் எழுந்தது.(இந்த வரிகள் ஔவைப் பாட்டியின் பாடலில் இருந்து வந்தது என்று நினைவு)

சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்பது குறள் வாக்கு. துன்பங்கள் வரும் போது தளர்வடையாமல் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்தையே அந்தக் குறளும் குறிப்பிடுகிறது.(பெருக்கத்து வேண்டும் பணிதல்..)


2 | 365

4 comments:

  1. நல்ல கருத்துக்களை அருமையா சொல்லி உள்ளீர்கள்...
    பாராட்டுக்கள்...
    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்.

    கடந்த சில பதிவுகளில் உங்கள் உற்சாகமான ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பிரிச்சு மேஞ்சுட்டீங்க அறிவன். இதே முனைப்பாடியார்தான் தலைவி தலைவனைப் பிரிந்து பாலையில் நிற்கும் போது பாடியதாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உளறுகிறேனா என்று தெரியவில்லை. :-)

    ReplyDelete
    Replies
    1. மைனருக்குப் பொருத்தமான கேள்வி. :))

      சங்கப் புலவர்களில் பெயர்களில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஔவையார், முனைப்பாடியார் போன்ற புலவர்களின் பெயர்கள் பலருக்கும் உரியவை. சங்கப் புலவர்களில் நான்கு ஔவையார் இருந்ததாகக் கருத்து இருக்கிறது.

      அகப்பாடல் பாடிய முனைப்பாடியார்தான் அறநெறிச்சார முனைப்பாடியாரா என்பது தெரியவில்லை. ஒரு புரட்டு புரட்டி விட்டு மேலும் சொல்கிறேன்..

      எனது,உங்களால் விளைந்த- பெண் எழுத்தில் ஔவை மற்றும் முனைப்பாடியார் இருவரையும் பற்றி எழுதியிருக்கிறேன்.. :))

      Delete