Pages - Menu

Saturday, January 14, 2012

137.தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

தை முதல்நாள் தான் புத்தாண்டு;இல்லையில்லை சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் வாதப் பிரதிவாதங்கள் அண்மைக் காலமாக நிகழ்ந்து வருகின்றன..இந்த நிலையில் தை முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டாக இருக்க முடியும் என்பதைச் சுட்டி எழுதப்பட்ட இந்தக் கட்டுரை என்னைக் கவர்ந்தது.

இது தொடர்ந்து எழுதப்பட்ட அனைத்து விதயங்களையும் ஆழ்ந்து சிந்திக்கையில் தை முதல்நாள்தான் தமிழர்களின் புத்தாண்டாக இருந்திருக்க முடியும் என்று சித்திந்து முடிவுக்கு வர முடிகிறது.இது தொடர்பாக நான் முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்;அப்போது கேள்வி இருந்தது,இப்போது முடிவுக்கு வர முடிந்திருக்கிறது..

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!!

************




         
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

அறுபது ஆண்டு கதை 

"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால்  அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)

"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது. 

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது. 

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப்  பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.  எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதிஎதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து  மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று  பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு  என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது  என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்றுநிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு  ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு  வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை  அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த  ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம்அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். 


திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும்   அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள. இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார். 

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.  

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு  அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

தமிழ் புத்தாண்டு 

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும். 
தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது. 

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள்  சில:-

1. ""தைஇத் திங்கள் தண்கயம் படியும்""  (நற்றிணை)

2. ""தைஇத் திங்கள் தண்ணிய தரினும்""  (குறுந்தொகை)

3. ""தைஇத் திங்கள் தண்கயம் போல்""  (புறநானூறு)

4. ""தைஇத் திங்கள் தண்கயம் போல""  (ஐங்குறுநூறு)

5. ""தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ""          (கலிலித்தொகை)

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்', "தை மழை நெய் மழை' முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

தைப்பொங்கல்

"பொங்கல்' என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு- சீரகம்-உப்பு-நெய், முதலிலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

"சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா'-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான தகவல்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக் கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம். பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன். தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழர் புரிந்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழரின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் "ஆண்டு' என்று அழைத்தார்கள் -என்று அறிஞர் வெங்கட்ராமன் கூற்றாகும்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை "அறிவர், பணி, கணியன்' -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் "அறிவர்கள்' குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர் களுடைய அவைகளில் "பெருங்கணிகள்' இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டு கள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலிலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல் நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் "தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் சிறந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆ நர்ஸ்ரீண்ஹப் ஐண்ள்ற்ர்ழ்ஹ் ர்ச் ற்ட்ங் பஹம்ண்ப்ள்லிடஹழ்ற் 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். "வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற் போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு- அச்சொட்டாகப் பொருந்து கின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.

""கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே''          (தொல்காப்பியம்)

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில்- (தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங் களுக்குரியது)

3. கார் - (வைகாசி  ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி (புரட்டாசி ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழர் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்தனர், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துகளாகும்.!

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் நாம் மட்டும் மாறிவிட்டோம்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளி, விநாயக சதுர்த்தி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகை களாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கிறோம்.

இவை குறித்து பேராசிரியர் க.பொ. இரத்தினம்            அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.
""சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன்மூலம்) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன..''

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிலிருந்தே வரலாற்று வழி யாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப்பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு! தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!

பொங்கல் இந்து பண்டிகையா?

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட் களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட "கதை' ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான   ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான நமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!

தைப்பெங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935-ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிலிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில்களில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன், என்று  ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலிலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற்கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல் நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!

பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இத்தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. 

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல, பொங்கலிலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடை முறைகள் மேற்கொள்ளப்படும்.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் தைப் பொங்கலிலின் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் காணும் பொங்கல் என்று அழைப்பர்.இத்தினத்தில் கலை நிகழ்வுகள் அரங்கேற்ற நிகழ்வுகள் புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.'

-நக்கீரன் கட்டுரைத் திரட்டில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி நக்கீரன் வார இதழ்.

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"
-
பாரதிதாசன்

1 comment: