Pages - Menu

Saturday, February 5, 2011

124.சிந்திக்க சிறிது இலக்கியம்-பிடியதன் உருவுமை


பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே


இது சம்பந்தர் திருமுறையில் திருவலிவலப் பதிகத்திலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடல்.

பெரும்பாலும் விநாயகர் வணக்கதிற்கு திருமுறையில் தோய்ந்தவர்களுக்கு சட்டென்று நினைவில் வரும் பாடல்.


இதற்கான பொருள் விளக்க வேண்டி எனது தம்பியிடமிருந்து ஒரு மடல் வந்தது.அனைவருக்கும் பயன்படலாம் என்று நினைத்ததால் பதிவாகவும் வருகிறது...



முதலில் பாடலைப் பதம் பிரித்துப் பார்க்கலாம்..


பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது

வடி கொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடி கணபதி வர அருளினன், மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே



முக்கியமான சொற்களுக்கான பொருள்:


பிடி-பெண் யானை

கரி- ஆண் யானை

கடி-விரைவாக

வடிவு-தோற்றம்,அழகு

பயில்-வாழ்கின்ற,வழக்கமாக வைத்திருக்கின்ற



மொழி,இலக்கிய நயம்:


மிகு கொடை வடிவினர்:


மிகுந்த அளவில் கொடைத் தன்மை கொண்ட அழகிய மாந்தர்கள்

அல்லது மிகுந்த கொடைத் தன்மையையே தம்முடைய அழகை அதிகரிக்கும் என்ற வழக்கத்தை கொண்டிருக்கும்...


மிகு கொடை வடிவினர் பயில் என்பது மிகு கொடை பயில் வடிவினர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளத் தக்கது.அதாவது மிகுந்த கொடையை பயில்கின்ற,வழக்கமாக வைத்தருக்கின்ற அழகிய தோற்றப் பொலிவு கொண்ட மக்கள் வாழ்கின்ற வலிவலம் என்றும் பொருள் கொள்ளலாம்.



கடி கணபதி


இடர்களைக் கடிகின்றவன் அதாவது இடர்களைப் பயமுறுத்தி வெருட்டி விரட்டுகின்றவன்.


சந்த நயம்:


இதுவல்லாமல் பாடலைப் படித்துப் பழகும் போதும் வேகமான சந்த நடையில் சொல்லிப் பார்க்கும் போதும் திருப்புகழைப் பாடும் உணர்வு வரலாம்.தமிழ் இலக்கியங்களில் சொற் சந்த நயத்தில் பலவற்றையும் விஞ்சி நிற்பது திருப்புகழ்.


சம்பந்தரின் தேவாரமும் திருப்புகழுடன் ஒப்பில் வைக்கத் தக்கது.


இந்தப் பாடலுக்கான பண் வியாழக் குறிஞ்சி என்கிறது திருமுறைத் தொகுப்பு.


திரண்ட பொருள்:


மிகுதியான வள்ளல் தன்மை பொருந்திய மக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் இருக்கின்ற இறைவன், இறைவி பெண் யானையின் உருவம் கொள்ளவும் தான் ஆண் யானையின் வடிவு கொண்டு,தமது அடியில் பக்தி கொண்டு வணங்கும் அடியவர்களின் இடர்களைக் விரைவாக,வெருட்டியும் களையும் இயல்பு படைத்த கணபதியைத் தோற்றுவித்து அருளினான்.


நன்றி..வாய்ப்புக்கு :))

1 comment: