Pages - Menu

Tuesday, March 16, 2010

118.நித்யானந்த அனுபூதி !

பதிவுலகம் நித்தியானந்தர் விவகாரத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறது.இந்த விவகாரமும் 90 களுக்குப் பிறகான சாமியார்கள் இப்படி பொதுவில் மாட்டும் விவகாரங்கள் அதிகமாகி விட்டிருக்கின்றன என்ற நினைவும் சில யோசனைகளைத் தோற்றுவித்தது.

முதலில் இவ்வாறான கார்ப்பரேட் சாமியார்களின் தேவை சமூகத்திற்கு என்ன? இவர்களை யார் உருவாக்குகிறார்கள்?

புத்தாயிரம் ஆண்டுக்கு முன்னால் பரவலாக அறியப்பட்ட,பெரும் நிறுவனச் சாமியார்கள் புட்டபர்த்தி சாய்பாபா மட்டும் என நினைக்கிறேன்.70'களில் இதயம் பேசுகிறது என்ற பெயரில் பத்திரிக்கை நடத்திய மணியன் சாய் பாபா வின் பி.ஆர்.ஓ.ஆகச் செயல்பட்டவர்;இன்று சந்தியில் நிற்கும் ஒரு இணைய எழுத்தாளரை விட பயங்கரமாக சாயிபாபாவுக்கு ஜால்ரா அடித்தவர்;ஆனால் இந்தியா டுடேயில் புட்டபர்த்தியில் நடத்த கொலையைத் தொடர்ந்து விசாரணைச் செய்திகள் வெளிவந்து போதும் மணியன் இது போல்தான் பம்மினார்.

சந்திரா சாமி போன்ற அரசியல் சாமியார்கள் அவ்வப்போது அவரவர் சார்ந்த அரசியல் கட்சிகள் பதவியில் இருக்கும் போது தலைகாட்டி விட்டுப் பின்னர் மறைந்து விடுவார்கள்.

ஆனால் பக்தியின் பெயரால் நிறுவனமாகக் கிளைவிட்டு பரந்து விரிந்த ஹை டெக் சாமியார்கள் எல்லாம் புத்தாயிரம் ஆண்டு நெருக்கத்தில் அல்லது அதற்குப் பின் வந்தவர்களே என்பது எனது ஊகம்.பயன்பாட்டியல் தலைதூக்கிய சமூகம்தான் இத்தகைய சாமியார்களின் பெருக்கத்திற்குக் காரணமா?

இரண்டாவது இத்தகைய சாமியார்கள் முதலில் எதைக் கடைவிரித்து வெளிவருகிறார்கள்?

மூன்றாவது இவர்கள் எந்த நிலையில் சாயம் வெளுக்கிறார்கள்?

முதலில் காரணம்-
70 களின் இறுதியிலும் 80 களின் மத்தியிலும் 100 ரூபாய் என்பது உயர்ந்த தொகை;பர்சில் 100 ரூபாய் வைத்திருந்தால் என்னப்பா,பெரிய நோட்டா வச்சிருக்கே போலிருக்கு என்று வியந்த பொறாமையில் கேட்பார்கள்.இப்போது 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுக்கள் 10 ஆவது சராசரியாக அனைவரது பணப்பையிலும் இருக்கிறது.இல்லாவிட்டால் சென்னையில் முக மழிப்புக்குக் கூட பணம் தர முடியாத நிலை ஏற்படும் என்று பதிவுலக அனுபவமும் இருக்கிறது.:)

இவ்வாறான எளிமைப்படுத்தப்பட்ட அதிகப் பணம் சமூகத்திற்கு நிம்மதியைத் தர முடியவில்லையா?அல்லது எளிமையற்ற நேர்மையற்ற தகுதியற்ற வழிகளில் சேரும் பெரும்பணத்தினால் விளையும் குற்ற உணர்வும் அது தரும் நிம்மதியின்மையும்,எவரிடமிருந்தாவது ஏதாவது ஆறுதல் கிடைக்காதா என்ற ஏக்கத்திற்கு பெரும்பாலானாவர்களைத் தள்ளுகிறதா?இந்த சூழலை சரியாக கணிக்க முடிந்த சில குயுக்தி புத்திக்காரர்களின் மூளையில் உதித்த ஐடியாதான் கார்ப்பரேட் சாமியார்களின் தோற்றத்திற்கு வழிவகுத்ததா?

நமது கதாநாயகரும் ஒரு வாரப்பத்திரிகையின் விளைவாகவே வெளிச்சத்துக்கு வந்தார்;அவரது தொடர் வெளிவந்த ஆரம்ப நாட்களிலேயே-மிகுந்த விளம்பர வெளிச்சத்துக்கிடையில் அந்த தொடர் வெளிவந்தது-ஒரு நல்லெண்ணம்,என்னைப் பொறுத்த வரை அவர் மீதோ அல்லது அவரது தொடர் மீதோ வரவில்லை. இன்னொரு நபர் சுகபோதம் பற்றியும் இன்னொருவர் வாழும் கலை பற்றியும் இன்னொருவர் தியானம் பற்றியும் பெரும் பிரச்சாரங்களுடன் பொது அரங்கில் தோன்றுகிறார்கள்.

எளிதாக அல்லது தகுதியற்றுக் கிடைத்த பெரும்பணத்தின் உடன் பிறப்பாக வருகின்ற மன மற்றும் உடல் அழுத்தங்களால் உந்தப் படுகின்ற பெரும்பான்மை மக்கள் வந்து இது போன்ற ஆசாமிகளிடம் குவிய ஆரம்பிக்கிறார்கள்;இவர்கள் சமய உண்மைகளையோ அல்லது உயர்ந்த தத்துவ சித்தாந்தக் கருத்துக்களையோ பெரும்பாலும் உபதேசிப்பதில்லை;இவர்களின் உபதேசம் பெரும்பாலும் மிக எளிய மொழிகளில் அனைவரும் கடைப்பிடிக்கும் படியான இன்றைய வேக வாழ்க்கைக்கு எவ்வித இடையூறும் தராத சில சடங்கு அல்லது உடற்பயிற்சி முறைகளாக இருக்கும்;அவற்றை அறிமுகப்படுத்த ஆயிரக்கணக்கில் காணிக்கை விதிக்கும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் குறுகிய காலத்தில் கோடீசுவரர்களாக மாறிப் பின் கேடிஸ்வரர்களாகவும் உள்ளுக்குள் மாறுகிறார்கள்.

இந்தக் கேடி முகம் வெளித்தெரியும் போது உச்ச அதிர்ச்சி நம்மைத் தாக்குகிறது.

இவ்விதப் பயிற்சிகளை,நிம்மதியை,மன அமைதியை பெரும்பாலான பொது மக்கள் அவர்களாகவே தேடி அடைந்து கொள்ள முடியாதா?அதற்கு ஒரு புறக் காரணி தேவையா?

பெரும்பான்மை மக்களுக்கான விஷய ஞானம் மிகவும் குறைந்து கொண்டு இருக்கிறது;மேலும் குடும்பங்களில் வழிநடத்தவோ,மாற்று வழியைச் சுட்டவோ பெரியவர்கள் இல்லாத நியுக்ளியஸ் குடும்பங்களாகவே பெரும்பாலும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மாறி வருகின்றன;அவர்களின் வருமானம் கூடினாலும் கூட பெரும்பாலும் பல காரணங்களால் அவர்கள் தனிக் குடும்பங்களாக வாழ்வதையே விரும்புகின்றனர்.இதனால் சின்னஞ்சிறு உலகியல் கடினப்பாடுகளுக்கும் எவரிடமாவது தீர்வுகளை எதிர்பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டது;கேட்காமலேயே கிடைக்கும் தீர்வுகளை அளிக்கும் பெரியவர்கள் குடும்பத்துடன் இல்லாது போவதும் இவ்வித சாமியார்களிடம் மக்கள் போய் விழுவதற்கான ஒரு காரணம்.

இந்த சூழலில்தான் செய்தி ஊடக சதிகாரர்கள் நுழைகிறார்கள்;செய்தி ஊடகங்களுக்கான தார்மீகக் கடமைகள் இருக்கின்றன என்ற கொள்கைகள் எல்லாம் காற்றோடு போய் வெகுநாள் ஆகிவிட்டது.போட்டி ஊடகம் எவனைப்பற்றிய கதையையாவது அளந்து கொண்டிருக்கிறதா,நீயும் ஒருவனைப் பிடி என்ற அளவில் அவைகளின் செயல்பாடு இருக்கிறது;ஒரளவு வளர்த்து விட்ட பிறகு மேட் ஃபார் ஈச் அதர் என்று இருவரும் சேர்ந்து மக்களை முட்டாளடிப்பதும் நடக்கிறது.

சாதாரணமாக உடல்நலனைப் பேண உதவி செய்யும் யோகாப்பியாச உடற்பயிற்சி முறைகள் கூட ஏதோ பிரம்ம ரகசியம் போலவும்,அவற்றை குரு முகமாகவே நேரடியாக மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பயிற்சிப் பிழைப்பு நடத்தும் ஆசிரியர்களது செயலாலும் நித்தி போன்ற ஆட்களுக்கான தேவை பெரிதுபடுத்தப்படுகிறது.
காட்டாக நல்ல புத்தகங்களின் மூலம் ஆசனப் பயிற்சியின் அறிமுகம் கிடைத்து,அம்மா 30 வருடங்களுக்கும் மேலாக ஆசனப் பயிற்சி செய்தவர்;அதை புத்தகத்தைப் படித்தே நானும் ஆசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டேன்;இந்த யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொள்ள ஒருவர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும் என்பது பாரம்பரிய மிக்க நமது தமிழகத்தில் ஒரு முரண்.அதுவம் இது போன்ற ப்ளே பை நைட் சாமியார்களின் பிரபலம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் வசூல் செய்யும் பணமும் அதிகரிக்கிறது.பெருமளவு முட்டாள்களாக இருக்கும் மக்களும் பணத்தைக் கொட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

கட்டுக்கடங்காத அளவு பணம் எளிதாக ஒரு இடத்தில் குவிகின்ற போது அவற்றின் உபயோகம் கேடு கெட்ட வழிகளுக்கு எளிதாக மாறுகிறது.

சிறிது நினைத்துப் பாருங்கள்,ஊடக சூழலல்லாத தமிழகம் அப்படியே நிலைநின்று போகும் கதியில் இன்று இருக்கிறது;குமுதம்,விகடன் மற்றும் சன் டீவி மூன்றும் நாளை முதல் செயல்படாது என்ற நிலை வந்தால்,தமிழகத்தில் பலர் போர்க்கொடி உயர்த்தினாலும் வியப்பதற்கில்லை.இவை மூன்றும் பிழைப்பது பெரும்பாலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,செய்திகள் மற்றும் நித்யா விவகாரம் போன்றவைதான்..இவற்றின் பிடியில்தான் இன்றைய நடுத்தர வர்க்கப் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள்.

இந்த ஊடக அடிமைத்தனத்திலிருந்து முதலில் வெளிவந்தால் புற உலக சிந்தனைத் தாக்கங்களில் வீழ்வதிலிருந்து சாதாரண மக்கள் பெருமளவு தப்பிக்கலாம்.பின்னரே மற்ற அறிவு சார்ந்த விவகாரங்களும் தேடல்களும் அவர்களின் கவனத்திற்கு வரும்;அந்த நிலையை அடைபவர்கள்தான் நித்யானந்த அனுபூதிகளில் இருந்து தப்பிக்கிறார்கள்.

மற்றவர்கள் இப்போது நாயடி படும் ஒரு எழுத்தாளர் ஆள் போல இருக்கும் புரோக்கர்கள் சொல்வதையெல்லாம் படித்து விட்டு தொண்டரடிகளாக இருந்து புளகாங்கிதம் அடையலாம்!

பி.கு:புரோக்கர் சிகாமணியின் அடிப் பொடிகளாக பதிவுலகில் வலம் வந்த சிலர் ரொம்பவும் வலிக்காத மாதிரி நடித்துக் கொண்டிருப்பது பார்க்கவும்,படிக்கவும் ரொம்பவும் தமாஷாக இருக்கிறது!எதைக் கொடுத்தாவது பிராபல்யம் மற்றும் அதனூடே கிடைக்கும் பலாபலன்கள் என்ற நோக்கில் செயல்படுவதால்தான் இவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் முழிக்க வேண்டியிருக்கிறது.இதற்காகத்தான் ஒரு கிழவன் சொல்லி வைத்தான்..

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்..

ஆனால் எதையாவது கொடுத்து எதையாவது பெறலாம் என்ற நோக்கில்தான் இந்த அடிப்பொடிகளின் பெரும்பான்மை நட்பு இருந்தது போல் எனக்குத் தோன்றுகிறது!இன்னொரு கூற்றும் நினைவில் வந்து தொலைக்கிறது..

உறுவது சீர் தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்!

10 comments:

  1. அறிவன்!

    //எளிதாகக் அல்லது தகுதியற்றுக் கிடைத்த பெரும்பணத்தின் உடன் பிறப்பாக வருகின்ற மன மற்றும் உடல் அழுத்தங்களால் உந்தப் படுகின்ற பெரும்பான்மை மக்கள் வந்து இது போன்ற ஆசாமிகளிடம் குவிய ஆரம்பிக்கிறார்கள்;//

    //பெரும்பான்மை மக்களுக்கான விஷய ஞானம் மிகவும் குறைந்து கொண்டு இருக்கிறது;மேலும் குடும்பங்களில் வழிநடத்தவோ,மாற்று வழியைச் சுட்டவோ பெரியவர்கள் இல்லாத நியுக்ளியஸ் குடும்பங்களாகவே பெரும்பாலும் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மாறி வருகின்றன;அவர்களின் வருமானம் கூடினாலும் கூட பெரும்பாலும் பல காரணங்களால் அவர்கள் தனிக் குடும்பங்களாக வாழ்வதையே விரும்புகின்றனர்.இதனால் சிறிய உலகியல் கடினப்பாடுகளுக்கும் எவரிடமாவது தீர்வுகளை எதிர்பார்க்கும் மனோபாவம் வளர்ந்து விட்டது;//

    இந்த வரிகளிலுள்ள உண்மைகள் குறைந்தபட்சம் ஒரு பத்திரிகை கவர்ஸ்டோரி அளவுக்கு (ஆய்வே பண்ணலாம்!) கவனிக்கத்தக்கவை!

    நல்லதொரு அவதானம்.
    பதிவின் வார்ப்புருவை மாற்றினதும், தேவையற்ற உரலிகளை நீக்கியதும் ரொம்ப நல்லது!

    அன்புடன்
    வெங்கட்ரமணன

    ReplyDelete
  2. நண்பர் வெங்கட ரமணன்,
    வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றிகள்..

    கவர் ஸ்டோரி எழுதலாம்,ஆனால் எந்தப் பத்திரிகை வெளியிடப் போகிறது..

    புதியபார்வைக்கு வேண்டுமானால் எழுதலாம் :))

    வார்ப்புரு கொஞ்சம் படுத்தியது முதலில்,இப்போது நன்றாக இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்..

    ReplyDelete
  3. அறிவன், நல்ல கருத்துக்கள். 10 ரூபாய் கொடுத்து ஒரு நல்ல புத்தகம் வாங்கி படிக்க முடியாதவர்கள் இந்த சாமியார்களிடம் பல ஆயிரங்கள் கொட்டுவதற்க்குக் காரணம் பேராசை. சாமி உண்டியலில் காசைப் போட்டு பரீட்ச்சை பாஸ் பண்ண முயலும் மாணவன் வளர்ந்தால் என்ன செய்வான்? ஆனால் இது பொன்ற கார்ப்பரேட் குருக்கள் செய்வதும் நல்ல காரியமே. மக்களுக்கு நல்ல விசயத்தைத் தான் சொல்லுகிறார்கள் (நித்தியானந்தா உட்பட). ஆனால் மக்கள் இவர்களை தெய்வங்களாக்கி இவர்களை வீழ்த்தி விடுகிறார்கள். ஓஷோவின் ஒரு புத்தகத் தலைப்பு - Don't bite my finger, Look where I'm pointing.

    ReplyDelete
  4. {இது பொன்ற கார்ப்பரேட் குருக்கள் செய்வதும் நல்ல காரியமே.}

    என்பது போன்ற மாயவலைக்குள் மக்கள் சிக்குகிறார்கள்;நித்தியின் யோகக் கலைக்கு கூட்டம் கூடியதும் அப்படித்தான்..ஒரளவு கூட்டம் கூடி கல்லா கட்டியவுடன் இது போன்ற ஆசாமிகளின் பி.ஆர்.ஒ.க்கள் பணக்காரர்களை வளைப்பதும் நடப்பதாகச் சொல்கிறார்கள்;பணக்காரர்களின் பினாமித் தேவைகளுக்கு இது போன்ற நபர்கள் கை கொடுப்பதாகவும் கருத்து நிலவுகிறது..

    சாமி பத்திரமா வச்சிருப்பாங்க,சாமிதான் கேட்கச் சொன்னாங்க' என்பது போன்ற கடை விரிப்புகள் நடக்கின்றன.வருமான வரித்துறை ரெய்டுகள் போன்றவை ஆசிரமங்களில்,ட்ரஸ்டுகளில் நடைபெறும் சாத்தியங்கள் இந்திய சூழலில் குறைவு.எனவே பாதுகாப்பான பினாமிகள் உருவாகிறார்கள்..

    இந்த ஒளிப்படக் காட்சி வெளிவந்ததே அது போன்ற ஒரு பணக்கார நிறுவனத்துடன் நடந்த லடாயில்தான் என்பது பட்சி சொல்லும் செய்தி!

    {ஆனால் மக்கள் இவர்களை தெய்வங்களாக்கி இவர்களை வீழ்த்தி விடுகிறார்கள். ஓஷோவின் ஒரு புத்தகத் தலைப்பு - Don't bite my finger, Look where I'm pointing.}

    அம்மா சிறிய வயதில் அவருக்கு இருந்த ஆசிரியர் பற்றிக் கூறுவார்..டோண்டாக் வாத்தியார் என்று..(இல்லையில்லை,டோண்டுவிற்கும் இதற்கும் தொடர்பில்லை!) பின்னரே தெரிந்தது அவர்,Don't Talk வாத்தியார் என்று..ஏனென்றால் அவ்வாறு அடிக்கடி வகுப்பில் சொல்லிக் கொண்டே இருப்பாராம்..அவரது இன்னொரு பிரபலமான வாசகம்,சிறு வயதில் இருந்து அடிக்கடி கேட்டது..
    Do what I say;Don't do what I do..
    :))
    ஆனால் குரு வடிவம் எடுப்பவர்கள் இதைச் சொல்லி தப்பிக்கக் கூடாது என்பது எனது எதிர்பார்ப்பு.சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா?

    BWT ஒஷோவின் புத்தகம் கேள்விப்படாததாக இருக்கிறது..அறிமுகத்திற்கு நன்றி..தேடுவேன்.

    ReplyDelete
  5. அறிவன், சாமியார்களும் மனிதர்கள் தானே. ஒரு மனிதனிடம் இவ்வளவு பணம்/அதிகாரம் சேர்ந்தால் அவன் நேர் வழியில் நடப்பது முடியாத காரியம். மேலும் நாம் ஏன் இவர்களிடம் perfection எதிர்பார்க்க வேண்டும்?

    நமக்கு என்ன கிடைத்தது என்று தானே பார்க்க வேண்டும். அதற்க்கு தகுந்த காணிக்கை தானே கொடுக்க வேண்டும் (புத்தகம் வாங்குவது, நுழைவுக் கட்டணம், etc)? மற்றபடி முட்டாள் ஜனங்கள் இவரிடம் காசைக் கொட்டி ஏமாந்தால் நமக்கு என்ன?

    ReplyDelete
  6. {அறிவன், மேலும் நாம் ஏன் இவர்களிடம் perfection எதிர்பார்க்க வேண்டும்?}

    ஏனெனில் அவர்கள் தங்களை குரு என்று பிரகடனப்படுத்திக் கொள்வதால்;இந்திய ஆன்மிக மரபின் காவியை அணிந்து ஏமாற்றக் கிளம்புவதால்;நித்தியே யோகாசனப் பயிற்சி மையம் என்ற பெயரில் நிலையம் அமைத்திருந்தால் கூட தவறில்லை.ஆனால் அவரது ஆசிரமம் தியானபீடம்,அவரது பெயர் பரமஹம்சர் அவர் கிட்டத்திட்ட நவீன கடவுள் என்றே தன்னை டிக்ளேர் செய்து கொண்டார்..
    குரு வடிவம் எடுப்பவர்கள் குருவாக இருக்க வேண்டும் !


    {நமக்கு என்ன கிடைத்தது என்று தானே பார்க்க வேண்டும். அதற்க்கு தகுந்த காணிக்கை தானே கொடுக்க வேண்டும் (புத்தகம் வாங்குவது, நுழைவுக் கட்டணம், etc)? மற்றபடி முட்டாள் ஜனங்கள் இவரிடம் காசைக் கொட்டி ஏமாந்தால் நமக்கு என்ன?}

    நமக்கு ஒன்றும் இல்லை;ஆனால் நாம் வாழும் சமூகத்தின் சறுக்கல்களை அவதானிப்பதும் அவை தரும் பாடங்களும் அனைவருக்கும் அவசியம்.

    ReplyDelete
  7. இம்மாதிரியான கார்பரேட் சாமியார்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி,
    அவர்களை உலக மகானுபவர்களாக உணரச்செய்யும் விளம்பரப்பணியை சிரமேற்கொண்டு செய்யும் பத்திரிகைகள் பற்றியும் நீ சொல்வாய் என எதிர்பார்ப்போடு படித்தேன்! :-)

    எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருளில் மெய்ப்பொருள் காணும் அறிவு மக்களுக்கு எங்கே போனது என எண்ணி, பத்திரிகைகளை மன்னித்துவிட்டாயா?!

    அருமையாக.. அடர்வாக எழுதுகிறாய் அறிவு அலங்காரம். தொடர்ந்து எழுது..

    ஒன்றாம் வகுப்பில் இருந்து உடன் படித்தவன், ஒரே பென்ச் மேட் என உன்னைச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்..

    ReplyDelete
  8. {இம்மாதிரியான கார்பரேட் சாமியார்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி,
    அவர்களை உலக மகானுபவர்களாக உணரச்செய்யும் விளம்பரப்பணியை சிரமேற்கொண்டு செய்யும் பத்திரிகைகள் பற்றியும் நீ சொல்வாய் என எதிர்பார்ப்போடு படித்தேன்! :-)}

    ஃபுல்லா படிச்சியா இல்லையாப்பா?
    பின்வரும் பத்தியைப் படிக்கலையா?

    சிறிது நினைத்துப் பாருங்கள்,ஊடக சூழலல்லாத தமிழகம் அப்படியே நிலைநின்று போகும் கதியில் இன்று இருக்கிறது;குமுதம்,விகடன் மற்றும் சன் டீவி மூன்றும் நாளை முதல் செயல்படாது என்ற நிலை வந்தால்,தமிழகத்தில் பலர் போர்க்கொடி உயர்த்தினாலும் வியப்பதற்கில்லை.இவை மூன்றும் பிழைப்பது பெரும்பாலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,செய்திகள் மற்றும் நித்யா விவகாரம் போன்றவைதான்..இவற்றின் பிடியில்தான் இன்றைய நடுத்தர வர்க்கப் பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. //ஃபுல்லா படிச்சியா இல்லையாப்பா?
    பின்வரும் பத்தியைப் படிக்கலையா?

    சிறிது நினைத்துப் பாருங்கள்,ஊடக சூழலல்லாத தமிழகம் அப்படியே நிலைநின்று போகும் கதியில் இன்று இருக்கிறது;குமுதம்,விகடன் மற்றும் சன் டீவி மூன்றும் நாளை முதல் செயல்படாது என்ற நிலை வந்தால்,தமிழகத்தில் பலர் போர்க்கொடி உயர்த்தினாலும் வியப்பதற்கில்லை.இவை மூன்றும் பிழைப்பது பெரும்பாலும் திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்,செய்திகள் மற்றும் நித்யா விவகாரம் போன்றவைதான்..//

    ’நித்யா விவகாரம் போன்றவை’என்ற தகவல் போதவில்லை நண்பா. நித்யா - ரஞ்சிதா விவகாரம் எனவும் இதை படிப்பவர்கள் எடுத்துக்கொள்ள வழி வகை இருக்கிறது உன் எழுத்தில்.

    ஒரு சாமியாரைச் சந்தித்து, அவரை அழகழகாக புகைப்படங்கள் எடுத்து, அவர் பேசுவதைக் கேட்டு, அதனோடு இன்ன பிற சொந்தக்கருத்துக்களையும் சேர்த்து, சாமியார் எழுதுவது போல இவர்களே எழுதி, அவர்பால் தமிழ் படிக்கும் உலகுக்கு ஈர்ப்பு ஏற்படச் செய்து, அதன்மூலம் அந்த சாமியார்கள் கல்லா கட்டும் பணிகளுக்கு.. வேராகத் துணைபோகும் பத்திரிகைகள் பற்றி ’மட்டைக்கு இரண்டு கீற்று’ என நம் கிராமத்து சொலவடை போல விளக்கமாகத்தான் சொல்லியாக வேண்டும்.

    ’வானமே இல்லை’ என்ற பெயரில் நான் குமுதம் ஜங்ஷன் இதழில் குடும்ப இயல் தொடர்பான தொடர் கட்டுரைகள் எழுதியபோது, ‘சாது ஷக்திபாரதி’ என சாமியார் பெயரில்தான் அதை வெளியிட நிர்ப்பந்தம் இருந்தது எனக்கு!

    ReplyDelete
  10. {’வானமே இல்லை’ என்ற பெயரில் நான் குமுதம் ஜங்ஷன் இதழில் குடும்ப இயல் தொடர்பான தொடர் கட்டுரைகள் எழுதியபோது, ‘சாது ஷக்திபாரதி’ என சாமியார் பெயரில்தான் அதை வெளியிட நிர்ப்பந்தம் இருந்தது எனக்கு!}

    இது பிரமாதம்!

    என் பதிவுக்கான ஹை லைட் இதுதான் போல!

    ReplyDelete