Pages - Menu

Saturday, April 11, 2009

100-நூறுகளின் நாயகன் !!!








நூறு என்ற எண்ணுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.இன்னுமொரு நூற்றாண்டிரும் என்று வைணவ சம்பிரதாயத்தில் மட்டுமல்ல மற்றவரும் நூறாண்டு வாழ்க என்றுதான் வாழ்த்துவார்கள்.

தலைவரு ஒருக்கா சொன்னா நூறு தரம்...கேட்டிருக்கிறோம்,ரசித்துக் கூட இருக்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டிலும் நூறுகளுக்கு தனியான மதிப்பு உண்டு.
ஒருநாள் போட்டிகளில் தன் வாழ்நாள் முழுதும் அடிக்க முடியாத ஒரு நூறை தன் கடைசிக் காலத்தில் நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் எடுத்ததன் மூலம் ஒரு பெரிய தர்மசங்கடத்தைத் தவிர்த்தார் காவஸ்கர்.இத்தனைக்கும் அப்போதும் பின்னரும் பலகாலம் வரை-நான் சரியென்றால் நம் கதாநாயகன் அந்த சாதனையை முறியடிக்கும் வரைக்கும்-அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கைகளில் நூறுகளை அடித்தவர்.(34)

1989 ல் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் தன் கிரிக்கெட் வாழ்வைத் துவங்கினார் டெண்டுல்கர் என்றழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.அப்போது அவருக்குப் பதினாறு வயதுதான்.குழந்தைத் தனம் மாறாத முகம்.உள்ளூர் போட்டிகளிலும் ஒரு சீசனில்தான் விளையாடி இருந்தார்.இருப்பினும் அவரது விளையாட்டுத் திறனும் அப்போதே வியக்க வைத்த அவரது உள்நாட்டுப் போட்டி ரன் விகிதங்களும் உதவ ஸ்ரீகாந்தின் தலைமையிலான இந்திய அணியின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார் டெண்டுல்கர்.

முதல் டெஸட் போட்டியில் டெண்டுல்கரின் ரன்கள் 15 மட்டுமே;முதல் ஒருநாள் போட்டியிலோ டக் அவுட்!

பாகிஸ்தானின் வக்கார் யூனிஸும் அந்த தொடரில்தான் அறிமுகமானார்.அவரதும் அகரமதுமான புயல்வேகப் பந்து வீச்சில் பலமுறை உடலில் அடி வாங்கினார் டெண்டுல்கர்.அகரமின் பந்து வீச்சு அவரது மூக்கை உடைத்தது,உண்மையாகவே.ரத்தம் கொட்டிய மூக்குடன் ரிட்டையர் ஹர்ட் ஆகாமல் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வந்து ஆடினார் டெண்டுல்கர்.

அடுத்து நியூசிலாந்து டூரில் டெஸ்ட் மேட்சில் 88 வரை அடித்தார்.

அடுத்த ஆஸ்திரேலியத் தொடரில்தான் சிட்னி போட்டியில் அழகான 148 ரன்கள் அடித்தார்,அதுவும் unbeaten..அந்த தொடரில்தான் ஷேனும் அறிமுகமானார்..அந்தப் போட்டியில் வர்ணனை நேரத்தில் மெர்வ் ஹெக்ஸ் ஆஸ்திரேலிய கேப்டன் பார்டரிடம் சொன்னாராம்,'this little prick is going to get more runs than you, AB'

எவ்வளவு அழகான தீர்க்க தரிசனம்...இன்று சச்சின் 85 சதங்கள் அடித்து விட்டார்.டெஸ்ட் போட்டிகளில் 42,ஒரு நாள் போட்டிகளில் 43.நூறு நூறுகளுக்கு இன்னும் 15 தான் பாக்கி ! எளிதாக அடித்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன்,பலரும் நம்புகிறார்கள்..

அந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின்னர் வார்னே பல போட்டிகளில் டெண்டுல்கரை எதிர்த்துப் பந்து விசிய மேட்சுகள் எல்லாம் விஷுவல் ட்ரீட் களாக அமைந்தன;பல போட்டிகளில் இந்தியாவுக்கான் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய டெண்டுல்கர் இந்தியாவுக்குக் காப்பாற்றிக் கொடுத்த போட்டிகள் எண்ணிலடங்காதவை.

1994 ல் ஆக்லாந்தின் ஒருநாள் போட்டியில்தான் முதன் முதலில் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் டெண்டுல்கர்.இறக்கியவர் அஸாருத்தீன்,அவர்தான் அப்போதைய அணித்தலைவர்.ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்துக்கான ஒரு புதிய பரிமாணத்தைத் திறந்து வைத்தது அந்த ஆட்டம்!பின்னர் அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரரானார்,சமீபகாலம் வரை,சுமார் 13 ஆண்டுகளுக்கு.
ஆட்டம் துவக்குவது டெண்டுல்கருக்கு மிக வசதியாகப் போயிற்று;அவர் சொன்னார்,ஆடுவதற்கு நிறைய ஒவர்கள் கிடைக்கிறது,நிறைய ஒவர்கள் இருக்கும் போது,நிறைய ரன்கள் வருகின்றன என்று !கிரிக்கெட்டின் பல ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டு விட்டன 1994 க்குப் பிறகான அந்த 13 ஆண்டுகளில்!


அசாருத்தீன்,கங்கூலி,திராவிட் கேப்டனாக இருந்த காலங்களில் பல குழப்பங்களும் நடந்தன,ஆனால் டெண்டுல்கரின் கிராஃப் எந்த வித பெரும் இடையூறும் இன்றித்தான் இருந்தது.இடையில் சில காலம் கேப்டனாகவும் இருந்தார்,ஆனால் ஒரு கேப்டனாக அவரால் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.2004 க்குப் பிறகான மூன்றாண்டுகளில் பல காயங்கள்,தோள்பட்டை லிகமண்ட் கிழிந்த நிகழ்வு போன்ற பல குறைகளால் அவதிப்பட்டார்.ரன்களும் குறையத் துவங்கின.

ஆனால் தோனி கேப்டனான பின்னர் அவர் திரும்ப தன்னை புத்தாக்கம் செய்து கொண்டது போலத் தெரிகிறது.சமீப காலத்தில் அவரது ஆட்டத்தில் பழைய நெருப்புப் பொறி பறக்க வில்லையெனினும் பண்பட்ட ஆட்டம் மீண்டும் முகிழ்கிறது.

எல்லாவற்றிற்கும் மத்தியில் டெண்டுல்கரின் குணமும்,ஆட்டக்களத்திலும்,வெளியிலும் அவர் நடந்து கொள்ளும் முறையில்தான் அவரது முழு குணமும் வெளிப்பட்டது.எவருக்கும் எளிதாக அணுகும் வண்ணம் இருப்பது,செய்தியாளருக்கு எப்போதும் அணுக்கத்தில் இருப்பது,ஆட்டக்களத்தில் எவரையும் முறைப்பது,எதிர்ப்பது போன்ற தாதாத் தனங்கள் இல்லாது,தனது பேட் மூலம் மட்டுமே பேசுவது போன்ற அவரது குணங்கள் அவரது புகழை உயர்த்தின.

கெய்க்வாட் பயிற்சியாளராகவும் அஸார் கேப்டனாகவும் இருந்த காலங்களில்,ஒரு மேட்ச் பிக்ஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும்,அஸாரும் கூட அதில் பங்கேற்றிருக்கலாம் என்ற சூழலிலும் டெண்டுல்கரிடம் வந்து கெய்க்வாட் வருந்திய போது,'நாளைய போட்டியை இந்தியாவுக்காக நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று உறுதியளித்த டெண்டுல்கர் சொன்னதைச் செய்தார்.இது பின்னர் கெய்க்வாட்டின் பேட்டி ஒன்றில் வெளிவந்தது,அஸார் மீது குற்றச்சாட்டு பதிவான காலங்களில்.இது மற்றும் அவரது தந்தை இறந்த சமயத்தில் உலகக்கோப்பை ஆடிக் கொண்டிருந்த அவர் இந்தியா வந்து இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு மீண்ட அவர் மறுநாள் ஆட்டத்தில்(கென்யா என்று நினைவு) ஆடிய திறனும்,ஹென்றி ஒலங்கோ என்ற கத்துக் குட்டி பௌலர் கேட்ட who is tendulkar என்று கேட்ட கேள்விக்கு,அவரது ஓவரில் அளித்த 33 ரன்கள் பதிலும் மறக்க இயலாதவை!

நியூசியின் செய்தியாளர் ரிச்சர்ட் பூக் ஒரு முறை டெண்டுல்கரின் ஹோட்டல் அறைக்கு எதிர் அறையில் இருக்க நேர்ந்ததை நினைவு கூர்கிறார்.டெண்டுல்கரின் அறைக் கதவு இரவு 12 மணி வரையும் மீண்டும் காலை 7 மணியிலிருந்தும் பல ரசிகர்களாலும் நண்பர்களாலும் தட்டப்பட்டுக் கொண்டே இருந்ததையும்,எவருக்கும் முகம் சுளிக்காது அனைவரையும் அனுமதித்த அவரது பொறுமையையும் சிலாகித்து எழுதுகிறார் ரிச்சர்ட்.

கிரிக்கெட் களத்திற்கு வெளியேயான டெண்டுல்கர் இவ்வளவு அணுக்கமாக இருந்தாலும்,உள்ளார்ந்து அவர் கிரிக்கெட் களத்துக்குள்ளான விருப்ப மனிதர்.

100 நூறுகளை அவர் கடக்கும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை!வரும் உலகக் கோப்பையில் விளையாடும் பட்சத்தில் இப்போது இருக்கும் அணியின் கட்டமைப்பைப் பார்க்கையில் அவரது நிறைவேறாத கனவான உலகக் கோப்பைக் கனவும் நிறைவேறலாம்!

ஒரு கவிஞரின் மகனான இவரது கவிதை மனமும் கூட கிரிக்கெட்டில்தான் காணக்கிடைக்கும்...ஃப்ரண்ட் புட்டில் அவரது கவர் ட்ரைவும்,நேரான் ஸட்ரைட் டிரைவும்,பேக் ஃபுட்டில் அவரது ஸ்கொர் கட்டும் கிரிக்கெட் விளையாட்டு என்பதை விட மட்டையால் அவர் மைதானத்தில் எழுதும் கவிதையைப் போலத்தான் தோன்றும்.கங்கூலியின் ஆஃப் சைட் ஷாட்டுகளையும் கூட இவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்!

கிரிக்கெட் விளையாட்டின் உன்னதங்களில் மேற்கண்ட ஷாட்டுகளை விட அரிதான காட்சிகள் இருக்க முடியாது;அவை நிகழ்ந்து கொண்டிருக்கும் கணங்களைப் பொக்கிஷப் படுத்துவோம்,இப்போதைக்கும் பின்னாளைக்குமான அரிதான கணங்களாய் !!!!

பி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே ?!!!!!!

4 comments:

  1. ///
    பி.கு: வலது மூலையில் மேலே எதற்கு கோபிகா இருக்கிறார் என்று முழிப்பவர்களுக்கு....சச்சின் என்று கூகிளாண்டவரில் தேடிய போது சச்சின் படத் துவக்க விழாவில் பங்கேற்ற அம்மணியின் படமும் வந்தது...சரி,நல்லாத்தானே இருக்கு அப்படின்னு வச்சுட்டேன்.....ஓ.கே ?!!!!!!
    ////

    நல்லா யோசிக்கிறீங்க

    ReplyDelete
  2. "தல " எப்பவுமே தல தான்

    ReplyDelete
  3. பிரபு,
    நன்றி,வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete