Pages - Menu

Wednesday, December 19, 2007

33.சிந்திக்க சிறிது இலக்கியம்-தமிழின் தொண்மையும் அழகும் !

அறிந்த வெழுத்தம்முன் பன்னிரண்டாவிக ளான;கம் முன்
பிறந்த பதினெட்டு மெய் ;நடு வாய்தம் ; பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறும்;ஙஞண நமனவென்று
செறிந்தன மெல்லினம்; செப்பாத வல்லினம்; தேமொழியே.


பொருள்:அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகளான- அறிந்து சொல்லப்பட்டு நின்ற எழுத்துக்களுக்குள்ளே அகரம் முதல் ஔகாரம் ஈறாக சொல்லப்பட்ட பன்னிரண்டு எழுத்தும் உயிரெழுத்து என்னும் பெயர் உடையன; கம்முன் பிறந்த பதினெட்டுமெய்- ககர ஒற்று முதல் னகர ஒற்று ஈறாக சொல்லப்பட்ட பதினெட்டும் மெய்ய்யெழுத்து என்னும் பெயரவாம்; நடுவாய்தம்- உயிரெழுதிற்கும் மெய்யெழுத்திற்கும் நடுவாந் தன்மையாய் இருக்கின்ற அஃகேதனம் என்னும் தனிநிலை எழுத்தானது ஆய்த எழுத்து என்னும் பெயரதாம்; பெயர்த்து இடையா முறிந்தன யமுதல் ஆறும்-முன் சொன்ன பதினெட்டு மெய்களுக்குள்ளே யரவலளழ வென்னும் ஆறெழுத்தும் இடையின எழுத்தென்னும் பெயரவாம்;செப்பாத வல்லினம்- இவற்றில் சொல்லாத கசடதபற என்னும் ஆறெழுத்தும் வல்லின எழுத்துக்களாம்.
மேற்சொன்ன பாடல் ஒரு தமிழ் நூலின் முதல் பாடல்.
தமிழ் மொழி காலத்தால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத முதல் மொழிகளுள் ஒன்று என்பதை நாளும் விளக்கி நிற்கும் நூல்களில் இது ஒன்று.
தமிழின் அடிப்படை இலக்கணமான ஐந்திலக்கணங்கள் எனச் சொல்லப்படுகின்ற எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என்னும் அடிப்படை இலக்கணத்தைப் விளக்கும் பாடல்களால் ஆனது இந்நூல்.

எழுத்து-மொழியின் எழுத்துக்களைப் பற்றிய விளக்கம்
சொல்-சொற்கள் அமைவதற்கான விதி
பொருள்-சொற்களுக்கான பொருள் எவ்விதம் கொள்ளப்படவேண்டும்
யாப்பு-சொற்களைக் கொண்டு பாடல்கள் அமைக்கும் விதிகள்
அணி-பாடல்களில் அமையும் அழகுகள்-எ-டு-உவமை,உருவகம் போன்றவை

இந்நூலின் பெயர்:வீரசோழியம்.எழுதிய ஆசிரியர் பெயர்: புத்தமித்திரனார்.இவர் புத்தமதத்தைத் தழுவியவர்,ஆதலால் இப்பெயரைச் சூட்டிக் கொண்டவர்.
வீரசோழியத்திற்கு முதல் நல்ல உரை எழுதியவர் பெருந்தேவனார்.

இந்நூல் இடைச் சங்க காலத்து நூல்களில் ஒன்று.நூலின் பெயர்க் காரணம் நூலாசிரியருக்கு புரவலராய் இருந்து ஆதரித்த வீர ராசேந்திர சோழன் என்னும் மன்னன்;எனவே நன்றியறிதலாக மன்னனின் பெயரையே நூலுக்கு வைத்து விட்டார் ஆசிரியர்.

மூலைக்கு மூலை டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்பது போன்ற புத்தகங்கள் இருக்கக் காரணம் தொ.கா. என்னும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு பலகாலம் பயன்படுத்தப்பட்டு அதன் சிறப்புகள்,அமைப்புகள் அனைத்தும் முழுப் பயன்பாட்டில் இருக்கும் காலம்,ஆதாலால் எளிதில் அதன் ஆதார விதிகள் அனைத்தும் எல்லோருக்கும் புரியும் அளவிற்கு காணக்கிடைக்கின்றன.

அது போலவே ஒரு மொழி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து செம்மையடைந்திருந்தால் மட்டுமே,அதன் எழுத்துக்கள் முதல் பயன்பாடு வரைக்கும்,அனைத்து இலக்கணத்திற்கும் செறிவான பல விதி-நூல்கள்(Rule Structures) ஆக்கப்பட்டிருக்க முடியும்.

தமிழின் தொன்மையும் பெருமையும் நினைத்து நினைத்து மகிழ்வு கொள்ள வேண்டிய ஒன்று.

இப்படி ஒருநூல் இருப்பதே நம் தலைமுறையினர் பலருக்குத் தெரியாது என நினைக்கிறேன்.எனவே இந்த சிறிய அறிமுகம்.

அறிமுகங்கள் அவ்வப்போது தொடரும் !!!!!!

No comments:

Post a Comment