Pages - Menu

Thursday, December 6, 2007

27-வாழ்க்கை,குடும்பம்,மகவு ??????????

குழந்தைகள் கோடை விடுப்பு எடுப்பது போல நான் ஆண்டுக்கு (குறைந்தபட்சம்) ஒருமுறை இந்தியா சென்று திரும்புவது வழக்கம்.இந்தமுறை சற்று நீண்ட விடுமுறை இடைவெளி,பதிவுகள் பக்கம் எட்டிப்பார்க்க வகை இல்லாமல் வலைஇணைப்பு சரிவர கிடைக்காத இரண்டும் கெட்டான் ஊர் எங்கள் ஊர்.அதற்கு மேலும் ஊரில் சென்று சந்திக்க வேண்டிய உறவுகள்,இந்தியா போகும் போது செய்து கொள்ளலாம் என்றே நம்மில் பலர் சேர்த்து வைக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கதம்ப வேலைகள் அனைத்திற்கும் மத்தியில் பதிவாவது,ஒன்றாவது !!!!
எனினும் சென்று திரும்பி வந்த பின் மனக்குளத்தில் திமிறும் பந்தாக பல நினைவுகள்.

நம்மில் பலருக்கு ஆட்டோக்ராஃப் நினைவுகள் வரும்;எனக்கும் வந்தது,ஆனால் அவை கிளறிய காயங்களில் சில வாழ்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.விரிவாகவே சொல்கிறேன்.

என் அம்மா அதிகம் வாசிப்பு நாட்டம் உடைய பெண்மணி;அவர் படித்த புத்தகங்களும் என்னை படிக்கத் தூண்டிய புத்தகங்களும் ஏராளம்.
சமையலறை,தொலைக்காட்சியுடன் முடங்கும் பல தமிழக பெண்களில் இருந்து வேறுபட்ட,
இந்த வயதிலும்(60 ஆரம்பம்) ஒரு நாளைக்கு குறைந்தது 50 பக்கங்கள் படிக்கவோ அல்லது 5 பக்கங்களாவது எழுதவோ மறக்காத ஒரு மனுஷி.
வீட்டு ஹாலின் நீண்ட நாற்காலியில் எப்போதும் இறைந்து கிடக்கும் (குறைந்தபட்சம்) 50 புத்தகங்களும் கையெழுத்துப் புத்தகங்களுமே அதற்குச் சாட்சி.

வீட்டு வரவேற்பறை சீராக இருக்க வேண்டும் என்று பிடிவாதமுள்ள நான் இதற்காகவே குரலெடுத்துக் கடிந்து கொள்வது வாடிக்கை.ஆயினும் இப்போதெல்லாம் அம்மாவின் அந்தப் போக்கும் நேசிப்பில் கலந்துவிட்டது,எனவே கத்துவதில்லை,மாறாக அடுக்கி வைப்போம் அல்லது கிண்டலடித்து சிரித்துவைப்போம்.

தமிழில் திருமுறைகள்,திருமந்திரம்,சைவசித்தாந்தம்,கம்பன்,பாரதிஆகியவற்றில் மாறாத ஈடுபாடும் ஈர்ப்பும் கொண்ட பெண்மணியாக எப்படி அம்மா இருக்கிறாள் என்பதற்கு விடை எங்கள் ஐயா.(அம்மாவின் தகப்பனார்).
எங்கள் ஊர்,அதாவது எங்கள் அப்பாவின் – அம்மா வாழ வந்த ஊரின் – அருகாமையில் சுமார் 10 கி.மீ தொலைவுதான் ஐயாவின்,அம்மாவின் பிறந்த ஊர்.வள்ளல் பாரி வாழ்ந்த பறம்புமலை என்றழைக்கப் படும் பிரான்மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம்.
1940 களில் கிராமங்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என சொல்லத் தேவையில்லை.

அந்த கிராமத்தில் சிறு பெட்டிக் கடையுடன்,விவசாயம் ஆகியவற்றுடன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.பெட்டிக் கடை துணிக்கடையாக உருமாறியதும்,கூடவே விவசாயமும் முன்னேற்றமும் திடமும் அளிக்க,கூடவே கல்வியிலும் ஆர்வம்.

பள்ளிக் மேற் கல்வியுடன் இருந்தவர் மதுரை தமிழ்ச்சங்கத்தில் சேர்ந்து புலவர்-அக்காலத்தில் வித்வான் என்றழைப்பார்களாம்- படிப்பில் பெரு விருப்புடன் சேர்ந்து படித்திருக்கிறார்,அந்நிலையில் அம்மா கருவானாள்.(ஐயா படித்து வித்வான் பட்டம் பெற்றவுடன் நான் பிறந்தேனாம்,அதனால்தான் அவரின் தமிழார்வம் என்னிடமும் தொற்றிக் கொண்டது,என அம்மா சொல்லி நானே கேட்டிருக்கிறேன்.)

ஆசையாய்ப் பிறந்த குழந்தைக்கு அவர் சூட்டிய பெயரும் தமிழ்ச்செல்வி என ஆளைப் போலவே,அழகான பெயர்.ஐயாவுக்கு அம்மாவின் மேல் எப்போதும் கூடுதல் வாஞ்சை;காதலுடன் பிறந்த குழந்தையாகவும்,முதல் குழந்தையாகவும்,எதிலும் தெளிவான பார்வையும் கருத்தும் கொண்டதாலும் இருக்கலாம்-அம்மாவைப் பற்றி விரிவாக பிறிதொருமுறை சொல்கிறேன்-ஆகையால் என்னையும்,என் தங்கையயும் சிறிது கூர்ந்து அவதானிப்பார்.
ஐயாவுக்கு நான்கு பெண்கள் கழித்து கடைசியாக ஒரே மகன்.அம்மாவின் திருமணப் புகைப்படத்தில் 6 வயது சிறுவனாக மாமா.எனக்கும் அவருக்கும் 8 வயது வித்தியாசம்தான்.

எங்கள் தாய்வழி உறவுக் குழந்தைகளில் முதல் ஆண் நானே;இரண்டு வயது குறைவாக முதல் சித்தி மகன் சொக்கன்;எங்கள் பதின்ம வயதில்-எனக்கு 12 வயதும்,சொக்கனுக்கு 10 வயதும்-பள்ளி விடுமுறை விட்டால் ஐயா வீட்டுக்கு சென்று அதகளம் பண்ணுவோம்;ஒரு சலிப்பு சலித்துக் கொள்ள மாட்டார்;மாறாக நடைமுறை வாழ்க்கயின் சிறு சிறு அற்புதங்களையும் நேர்த்திகளையும் கற்றுக் கொடுக்காமல் கற்றுக் கொடுப்பார்;நாங்கள் போனால் மாந்தோப்பில் மாங்காய் அடித்துக் கொண்டுவரச் செய்வார்;(எத்தனை என நினைக்கிறீர்கள்,சுமார் 200 லிருந்து 400 காய்கள் வந்து பழுக்க வைக்கப்படும்-பெரிய மாந்தோப்பு வைத்து சுமார் 50-100 மரங்கள் வளர்த்து வந்தார்);தேன் விற்கும் மலை கிராமத்தார்களிடம் சொல்லி தேன் கொண்டு வரச் செய்வார்;அதனை அளந்து வாங்கும் போது கூடவே இருத்திக் கொண்டு சிறு சிறு வேலைகள் சொல்வார்-போய் லிட்டர் உழக்கு அம்மணியிடம் வாங்கி வா,புனலை எடுத்துக் கொண்டு வா,கழுவித் துடைத்து வைத்திருக்கும் கண்ணாடிப் போத்தலை(பாட்டில்) எடுத்துக் கொண்டு வா,புனலைப் பிடித்துக் கொள் என்றெல்லாம் அவர் சொன்ன வேலைகள் வாழ்க்கையின் தேர்ந்த ரசனைகளை சொல்லித் தந்தன;தேன் அளந்து வாங்கியபின் தேன் ராட்டில் இருக்கும் சொற்பத் தேனையும்,பாட்டிலில் ஊற்றியது போக உழக்கில் இருக்கும் மீதத் தேனையும்,காகிதத்தில் கூம்பு செய்யச் சொல்லி,அதில்-கையில் விளையாட்டு அழுக்கிருக்கும்- ஊற்றி சாப்பிடச் சொல்லுவார்.பாட்டிலில் இருக்கும் தேன் சாப்பாடு சமயத்தில் பந்திக்கு வரும்!.

காலை வயலுக்கு அழைத்துச் சென்று,வேப்பங்குச்சியாலோ அல்லது கரிசாலை இலையாலோ பல் துலக்க வைத்து,காலைக் கடன் கழிக்க வைத்து பிறகு,பெரிய வயல் கேணியில் நீந்திக் குளிக்க வைத்து- என் இடுப்பில் அவரின் நீண்ட துண்டைக் கட்டி வயல் கேணியின் உள் வரந்தையில் சுற்றிச் சுற்றி நடந்து வந்து,என்னை நீந்த வைத்து- எனக்கு மட்டும் அவரே நீந்தக்கற்றுக் கொடுத்தார்-ஈர உடையுடன் வீட்டுக்கு வருவோம்,வரும்போதே பசி காதை அடைக்கும்...

ஐயாவுக்கு-தூய சைவ உணவாளியெனினும்-ஆறடிக்கும் மேற்பட்ட ஆஜானுகுபாகுவான முறுக்கேறிய உடல்,அந்நாட்களில் கர்லாக் கட்டை சுழற்றுவாராம்,வீட்டின் பின்னால் கிடந்து நானே பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றி கோயில் வீட்டுக்கு சென்று(பூசனை செய்யும் அறைக்கு அப்பெயர்) தொழுது,நெற்றி,உடல்,கை,கால்களில் திருநீறு அணிந்து சாப்பிட வருவார்.

சாப்பிடும் வேளை இன்னொரு ரசவாத வேளை!

வாழை இலையில்(வயலில் இருந்து வரும்போதே அரிந்து கொண்டு வருவோம்)தான் சாப்பிடுவார்;உணவுகள் பரிமாறப்படும் போதே ‘உப்பை இடது மூலையில் தான் வைக்க வேண்டும்;ஊறுகாய் அதற்கடுத்து வை’ என்றெல்லாம் குறிப்புகள் வரும்; ‘பண்டிதம்(ன்)புள்ளை,பேசாமச் சாப்பிடுய்யா’ என்ற அம்மணியின் எள்ளல் கேலியைப் புறந்தள்ளி எங்களுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்;ரசம் சாதம் உள்பட உணவு சாப்பிடும் போது கை விரல்கள் வாய்க்குள் நுழைக்காமல் சாப்பிடுவார்.
மதிய உணவெனில் பல ஆச்சரியங்கள் நிகழும்.சாதத்திற்கு நெய் அம்மணி ஊற்றுவது,சாம்பார் கரண்டியில்! இலையில் குறைந்தது 50 ml ஆவது நெய் விழும்;அதுவும் வீட்டிலேயே கடைந்த மோரின் நெய்!சாப்பிட்டபின் கடைந்த மோர் குடிக்க சொல்லுவார்.

கடையில் அவர் தரையில் பாயில்தான் உட்காருவார்.துணிகள் அடுக்கியிருக்கும் ராக்கையின் கீழ்ப்பகுதியில் தொடை உயரத்தில் இருக்கும் பகுதி கீழிருந்து மேலாக மூடும் மரக் கதவுகளால் தடுக்கப்பட்டு புத்தக அலமாரியாயிருக்கும்;அதில் திருமுறைகள்,சித்த,ஆயுர்வேத வைத்தியக் குறிப்பு புத்தகங்கள்,மாசிலாமணி முதலியார் எழுதிய வைத்தியக் குறிப்புப் புத்தகம் எனக் கலந்து கட்டிய புத்தகங்கள் இருக்கும்;அவற்றை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பார். கிராமத்தில் பலர் வந்து உடல் நலமின்மைக்கு சித்த,கடைச்சரக்கு மருந்துகள் வாங்கிப் போவார்கள்.

செந்தமிழ்ச்செல்வி என்னும் மாத இதழ் தபாலில் வருத்துவார்;அதனை எங்களைப் படிக்கச் சொல்லுவார். இரவில் சாப்பிட்டுப் படுக்கும் முன் உச்சந்தலையில் வில்வாதி தைலம்(அவரே தைலம் காய்ச்சுவார்!) சிறிது எடுத்து கரகரவெனெ தேய்த்துக் கொண்டு நமக்கும் தேய்த்துவிடுவார்;பின் சிறிது நேரம் சன்னமான குரலில்,ராகத்தில் திருமுறைப் பாடல்கள்...கேட்டுக் கொண்டே தூங்கி விடுவோம்!

இப்போது எண்ணிப் பார்த்தால் வாழ்வின் இளம்பருவத்து நுண்ணிய ரசனைகளில் பல-குளிப்பதில் இருந்து,சாப்பிடுவது வரை-அவரைப் பார்த்து வந்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
அப்படியான ஐயா கடந்த 15 வருடங்களாக எங்கள்(தன் மூத்த மகள்) வீட்டுக்கு வராமல் மகனால் தடுக்கப்பட்டார்- அப்பச்சி ,உனக்கு நான் வேணுமா,மக வேணுமா,என்ற மகனின் உறுமலுக்கு அடங்கி-பல அற்பச் சண்டைக் காரணங்களுக்காக!

இந்த இடைப்பட்ட காலத்தில் மாமா தன் குடும்ப வாழ்வில் பல இடியாப்பச் சிக்கல்களை தானே உருவாக்கிக் கொள்ள-அவருக்கு ஒரு சித்தியின் பெண்,எனது ஒன்று விட்ட சகோதரிதான்,மனைவி- அவருக்கு எழுதினால் ஏறாது என எண்ணி என் சகோதரிக்கு,அதாவது மாமிக்கு,பாரதியின் ‘வீணையடி நீ எனக்கு’ஐ மேற்காண்பித்து எழுதிய கடிதத்தைப் படித்தவர்,'தமிழ் மகனா இப்படியெல்லாம் எழுதினா(ன்)'என மிகவும் பெருமிதத்தில்,மகிழ்ச்சியில் சிலாகித்தார் எனக் கேட்டபோது எனக்கு மனது கனத்தது!

இப்பருவத்தில் நாங்களும் கல்வி மேற்படிப்பு,வேலை என சிறகுகள் விரிக்க அவரைப் பார்க்கும் தருணங்களும் வெகுவாகக் குறைந்தன.ஆயினும் அவர் தன் மகளையோ,எங்களையோ சந்திக்கும் தருணங்கள் நெகிழ்வாகவே இருக்கும்.
கடைசியாக 5 வருடங்களுக்கு முன் என் திருமண அழைப்பைக் கொண்டு அவரை பார்க்கச் சென்றேன். ‘அப்பச்சி,தமிழ் வந்திருக்கேன்,மகனுக்கு(எனக்கு) கல்யாணம் வச்சிருக்கோம்’(பார்வை அவருக்கு போக்கடிக்கப் பட்டிருந்தது,கவனக் குறைவால்) எனக் கேட்டதும் பசுவைக் கண்ட கன்றாய் பரபரத்தார்.’உக்காரும்மா,உக்காரும்மா,பயலுக்கு கல்யாணமா,நல்லா,இருக்கானா,எங்க சிங்கப்பூர்லயா இருக்கா(ன்),நல்லாருக்கட்டும்,நல்லாருக்கட்டும்’ என்று நெகிழ்ந்த மனிதரின் உருவத்தில் ஏற்பட்டிருந்த பிம்ப மாறுதல்கள் அப்பொழுதே என் மனதைக் கிழித்தன.

தந்தைக்கும்,தன் பிம்பம் போன்றதேயான மகளுக்குமான அந்த சந்திப்பு,பிரிந்திருக்க வேண்டிய விதியின் துயரும்,மனதில் பொங்கும் அன்பின் நெகிழ்வும் நிறைந்து என்னையும் அழ வைத்தது.
இம்முறை போனபோது அம்மா,’ அவன்(மாமா) என்ன பண்ணாலும் சரி,வாடா,போய் பார்த்துட்டு வரலாம், நீ அடுத்தமுறை வரும் போது இருக்காரோ,இல்லையோ சொல்ல முடியாது..’ என்று சொல்ல,உறுதியாக மறுத்தேன்,சிங்கம் போன்ற அவரின் என் மனபிம்பம் துவண்டு மருகி,சிதையும்  நேரடிக் கணங்களை என்னால் சீரணிக்க இயலுவதில்லை என்பதால் !

பெட்டிக் கடையில் வாழ்க்கையை ஆரம்பித்து,நான்கு பெண்களை சீராகக் கரையேற்றி,நிலமும்,வயலும்,தோப்பும்,கடையுமாக செழித்த தன் அத்தனை உழைப்பையும் தாரைவார்த்துக் கொடுத்த தன் ஒரே அன்பு மகன் அவரின் கடைசிக் கால நிம்மதியான,நிறைவான வாழ்க்கைக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளாத நிலையில்,குடும்பம்,மக்கட்பேறு,வாழ்வு இவைகளின் நோக்கம்தான் என்ன??????????!!!!!!!!!

2 comments:

  1. காலத்தின் கோலத்தால் பாசமிகு உறவுகளில் வரும் விரிசலையும் வலியையும் எழுத்தில் வடித்த விதம் என் மனதை கனக்கச்செய்தது. என் அம்மா மரணத்தின் படுக்கையில், பிறந்த வீட்டு உறவுகளால் பட்ட துயரம் கண்முன்னே வந்தது. உங்கள் எழுத்து என் நேசத்திற்குரியதாகிவிட்டது.வாழ்த்துக்கள்

    ReplyDelete