Pages - Menu

Monday, September 17, 2007

நீண்டுவிட்ட ஒரு இரவில்....


கிராமத்தின்
பள்ளி முடித்து
மேலும் படிக்க விரும்புகையில்
அழுத்தும் தோள்சுமையில்
புருவம் உயர்த்தாது
புத்தனாய் ஒரு புன்னகை!
தந்தை என்றொரு நண்பன்;
உறுதி உணர்வில்,
கருணை விழியினில் குருதி படர்ந்திட,
பாதாதிகேசமாய் வருடி
பதறி மருகும் பார்வையில் தாய்;
வாய் புதைத்து
வக்கரித்த உறவு முறை;
சாதிக்க சினந்து
வீறுகொண்டு வெளிக் கிளம்பிய
வாலிபச் சீற்றம்;
கல்வி,மேலும் கல்வி,பின் கடமை
எனப் பற்பல ஊர்கள்,நாடுகள்;
பற்பல முகங்கள்,மனிதர்கள்,
பஸ்களில்,பிளேன்களில்;
பற்பல நிறங்களில்
பார்த்துவிட்ட பணவகைகள்;

குறிஞ்சி மலர் பூத்துதிர்ந்து
மீண்டும் மொட்டவிழ
கடந்துவிட்ட காலம்;
உலகின் ஏதோ ஒரு நாடு,
அடைத்திருக்கும் கதவு,வெளி
தனிமையின் தெளிவில்
அறைந்து சீறும் காற்றும் பனியும்;
தொகுப்பு வீட்டின் வெளியில்
பனி படர்ந்த ஏரியின் விசாலம்;
வெளிக்கிளம்பி உள்ளமிழும் வாத்துகள்
தாய்மகனும்,தம்பியும்,தங்கையுமாய்...
தவழ்ந்து விடும் குழந்தையாகி
தாய்மடியில் முகம்புதைக்க
விழைந்து விடும் மனம்...
கண்ணழுத்தும் தூக்கமதில்
புகைபடரும் நினைவு...
விடிகாலை விமானம்,வேலைக்கு செல்ல...
வாழ்க்கை !






(குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்ட என் கவிதை)



No comments:

Post a Comment