Pages - Menu

Wednesday, November 13, 2024

208 - பாரதி களஞ்சியம் - ஐநூறு அறிஞர்களின் கட்டுரைகள் கொண்டு ஆக்கப்படும் தொகுப்பு

பாரதி களஞ்சியம் என்ற ஒரு தொகுப்பு தமிழகத்தின் ஐநூறு அறிஞர்கள் பாரதியை அறிந்து படைத்தளித்திருக்கும் ஐநூறு கட்டுரைகளின் தொகுப்பாக, பத்து தொகுதிகள் உள்ள, சுமார் 5000 பக்கங்கள் உள்ள நூற்தொகுதியாக வெளிவர இருக்கிறது. வர்த்தமானன் பதிப்பகம் இந்த பெருஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறது. 




இந்த ஐநூற்றுவரில் ஒருவனாக எனது கட்டுரையும் இணைந்திருக்கிறது என்று அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். பாரதி என்னும் பன்முகப் பாவலன் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெறுகிறது. 

கட்டுரையின் முன்னோட்டம் இவ்வாறு தொடங்குகிறது...


()


பாரதி என்னும் பன்முகப் பாவலன்

முன்னுரை:

பாரதி என்ற சொல்லே ஒரு மந்திரம்.

உலகின் மாபெரும் கவிஞர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் வாக்கினில் பிறந்த சொற்கள் தனித்தன்மையுடையனவாக இருக்கும். அவை எளிய சொற்களாகவே இருக்கலாம், ஆனால் அவை சுட்டும் பொருளுடன் இணைந்து வரும் போது அவற்றிற்குத் தனியொளி உண்டாவதை இயல்பாகப் பார்க்கலாம். உன்னதக் கவிகளுக்கான இலக்கணம் அவர்களின் சொற்கள் வழி விளையும் இம்மாயமே.

Monday, November 11, 2024

207 - இந்திய அரசிகள் - நான் எழுதி வருகின்ற தொடரின் இறுதிப் பகுதி

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி ஏற்படுவதற்கு முற்பட்ட காலம். முற்காலப் பாண்டிய அரசர்களில் ஒரு பாண்டிய அரசரின் அரசி இவர்.

ஆட்சிக் காலத்தில் அவர் எடுத்த முடிவுகளால் தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதோடு சைவ சமயத்தின் சமயப் பெரியார்களாகக் கருதப்படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் இந்தப் பெண்மணிக்கு ஓர் இடம் கிடைத்தது. அந்த அறுபத்து மூவரில் இடம் பெற்ற பெருமையுடைய மூன்றே பெண்களில் இவரும் ஒருவர்.

கூன்பாண்டியன் என்ற அழைப்புப் பெயர் கொண்ட, நின்றசீர் நெடுமாற பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட, அரிகேசரி மாறவர்ம பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசத் துணைவியும், சைவ சமய முக்கிய அடியாராகவும் விளங்கிய மங்கையர்க்கரசி தேவியார்தான் அவர்.

மங்கையர்க்கரசி பிறந்தது சோழக் குலத்தில். மணம் செய்து சென்றது பாண்டியக் குலம். அதுவும் போரில் தனது தந்தையை வென்ற பாண்டிய மன்னனைத் திருமணம் செய்து கொண்டவர். புகுந்த வீட்டில் நாட்டின் மன்னனும் கணவனும் தலைவனுமாகியவன் கைக்கொண்ட மாறான சமயக்கொள்கையும், அதன் தீவிரத்தன்மையும் தன்னையும் மக்களையும் வருத்தியபோதும் அதுகுறித்து மயங்கி நிற்காமல், அதிலிருந்து மீளும் வழியைப் பற்றிச் சிந்தித்தவர். தமிழகத்தின் பக்தி இலக்கியக் காலம் தோன்றி நிலைபெற அவரும் ஒரு காரணம். தனது கணவன் கூன் முதுகாலும் நோயாலும் தவித்த காலங்களில், அரச நிர்வாகத்தையும் நாட்டையும் நெறியாகக் கையாண்டவர். தொடர.... இந்திய அரசிகள் - முருகு தமிழ் அறிவன்