Pages - Menu

Wednesday, June 8, 2022

198 - ஆதீனங்களின் கதை

மெட்ராசுபேப்பர் (madraspaper.com)  (இணைய) வார இதழுக்காக எழுதிய கட்டுரை. 
முதல் இதழ் வெளிவந்த சூன் 1' 2022 இதழில் ஆதீனங்களின் கதை வெளிவந்தது. 

முக்கியக் குறிப்பு :  இதில் உள்ளது கட்டுரையின் முழுவடிவம். இதழில் வெளிவந்த போது, இதழ் தேவைகளுக்கேற்ப சிறிது சுருக்கப்பட்ட வடிவம் வெளிவந்தது. அது இதழின், இதழாசிரியரின் உரிமையும் கூட. 
கட்டுரை அதன் முழுவடிவில் இங்கு சேமிக்கப்படுகிறது, படிக்கக் கிடைக்கிறது.


தமிழர் சமயம்
இந்தியாவெங்கும் காலங்காலமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான தத்துவ வழிகாட்டல்கள் நெடுங்காலந்தொட்டே இருக்கின்றன. இவை பொதுவாக ஒவ்வொரு சமய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்த வழிகாட்டல்கள், வழிகாட்டிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. கிருத்துவம், இசுலாம் போன்ற பெரு மார்க்கங்களுக்கான வழிகாட்டல்கள் எவ்விதம் உள்ளன என்பது பெரும்பாலும் பரவலாக அறியப்பட்டது; இந்த பெருமதங்கள் அல்லாத மற்றவற்றைப் பொதுவாக இந்து என்று குறிப்பிடும் வழக்கம் இற்றை நாளில் நிலவுகிறது. கவனித்துப் பார்த்தோமானால் இந்த இந்து என்ற பதத்தை இந்து 'சமயம்' என்று தமிழில் குறிப்பிட விழைவார்கள்; இந்து 'மதம்' என்று குறிப்பிடுவது குறைவாக இருக்கும். ஆனால் பண்டைய இந்தியாவில் சமயங்கள் மட்டுமே நிலவின; மதங்கள் இல்லை என்பதையும், இன்று இந்து 'மதமாக' நிலவுவதை, இந்து 'சமயமாக' அறிமுகப் படுத்துவதன் உட்பொருள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இது நிற்க.

ஆனால் இந்த இந்து என்ற சொல்லாக்கம் ஆங்கிலேயர் வழி வந்தது. அதற்கு முன்னால் இந்தியாவில் பற்பல சமயங்கள் நிலவின. தென்னாட்டைப் பொறுத்தவரை சைவம் என்ற சிவம், வைணவம் என்ற விண்ணவம், காணாதிபத்யம் என்ற கணபதியம், கௌமாரம் என்ற குமரம், சமணம் என்ற செயினம் (இதற்கு ஆசீவகம் என்ற முன்னோடியும் உண்டு) மற்றும் பௌத்தம் என்ற புத்தம் என்ற சமயங்களே நிலவின. இந்த சமயங்களில் சிவமும், குமாரமும் தமிழ்ச் சமயங்களாக பொ.உ.மு மூன்றாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிலை பெற்று விட்டன என்பதற்கு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை இவற்றிலேயே சான்றுகள் உள்ளன. மயில் மீது அமர்ந்த இளையனும் அழகனுமாக முருகன் குறிப்பிடப் படும் அதே நேரத்தில், சிவன் மிக உயர்ந்த நிலையில் வைத்தும் வழங்கப்படும் தெய்வமாகிறான். இந்த இரண்டு ஆரம்பகால இறை வடிவங்கள் பின்னர் நிலங்கள், தினைகள் மூலம் பிரிக்கப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களுக்கு முறையே வேலன், மாலன், இந்திரன், வருணன், கொற்றவை என்று நிலம் சார்ந்த பகுதிகளாகப் பாகுபாடு அடைந்தாலும் சிவன் என்ற தத்துவம் அனைத்திற்கும் உள்ளாய், அனைத்தினும் புறம்பாய் என்று சித்தாந்தம் குறிப்பிடுவது போல எல்லா இடங்களிலும் நிலை பெற்று வளர்ந்து விளங்கியது. இந்த நிலை பொ.உ. மு மூன்றிலிருந்து பொ.உ.பி இரண்டு வரை நிலவியதற்கான இலக்கியச் சான்றுகள் தமிழில் உள்ளன.