Pages - Menu

Wednesday, August 25, 2010

121.குறுந்'தொகைகள்-25082010

வலைப்பக்கங்களிலிருந்து நீண்ட ஒய்வு எடுத்துக் கொண்டு விட்டதால் இப்போது புத்துணர்ச்சியுடன் மறு வருகை!

()

மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நாடு தழுவிய முறையில் நடத்தலாம் என்ற அரசின் கொள்கை முடிவும்,அதைத் தொடர்ந்த தமிழக அரசின்,நீதிமன்றத் தடையுத்தரவும் இப்போதைய செய்திகள்.இது பற்றிய தினமணியின் இன்றைய தலையங்கத்தில் தமிழகத்தின் தடை உத்தரவு முயற்சியை விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் மூன்று.அரசு இதனை எதிர்ப்பதற்காக சொல்லப்படும் காரணங்கள் சொத்தையானதாக இருப்பதாகத் தோன்றுகிறது.
இது பற்றிய விவரமான பதிவை புரூனோ எழுதிக் கொண்டிருக்கக் கூடும்;பார்க்கலாம்.

()

ஒரு சிறு விடுமுறையில் இந்தியா சென்று வந்தேன்.காரணம் ஒரு விநாயகர் கோயில் குடமுழுக்கு.

நாத்திகம் பேசும் நல்லவர்கள் இந்தப் பத்தியை ஒதுக்கி விடலாம்;ஆனால் அவர்களின் விவாதத்திற்கும் ஒரு விடயம் இருப்பதை அவர்கள் இழந்து விடுவார்கள்!

கோயில்(கோயிலா,கோவிலா-கோ+இல்-தலைவன் அரசன் இருக்கும் இடம் என்று பொருள் தரும் கோயில் என்பதே சரி என்பது எனது எண்ணம்!) எனது மூதாதையர்கள் கட்டிய ஒன்று.எனது தாத்தா வழிநடையாகச் சென்ற போது வெள்ளிப் பணப் பை முடிச்சை, தங்கி இளைப்பாறிய கோயிலில் மறந்து விட்டு பயணத்தைத் தொடர்ந்து விட்டதாகவும்,இழந்த பணப்பையை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்த பார்த்த பொழுதில் பணப் பை முடிச்சு பசுவின் சாணத்தால் மூடப்பட்டு அங்கேயே இருந்ததாகவும்,அதனால் நெகிழந்த தாத்தா,அந்தப் பணம் முழுவதையும் அந்தக் கோயிலின் சீரமைப்புக்குச் செலவு செய்து கட்டியதாகவும் கேள்வி.இப்போது 40 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு குடமுழுக்கு.

விதயம் அதுவல்ல.இந்தக் குடமுழுக்கு எங்கள் குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளில் நடத்தும் இரண்டாவது கோயில் குடமுழுக்கு.முதல் சிவன் கோயில் குடமுழுக்கு ஆகம முறைப்படி சமத்கிருத வழியிலேயே நடந்தது.

பின்னர் எனது திருமணம் நடைபெற்ற போது,தமிழ் முறையில் திருமுறைத் திருமணமாக நடத்தினோம்;இப்போது இந்த விநாயகர் கோவிலின் குடமுழுக்கும் தமிழ்வேதவழி திருமுறைப் பாடல்களால் நிகழ்த்தப் பட்ட குடமுழுக்காக நடத்தப்படவேண்டும் என்ற உறுதி இருந்ததால் அப்படியே நடத்தினோம்.
ஆனால் இதற்காக பலத்த எதிர்ப்பை கோவில் குருக்கள் மற்றும் அவருடைய கூட்டத்தவரால் நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது;அந்த எதிர்ப்பின் கூர்ப்பு எங்களை எதுவும் செய்து விடுமளவுக்கு இல்லையெனினும்,கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தும்,கோவில் பூசை முறைகளைக் கவனியாதிருந்தும் தனது எதிர்ப்பை மேதமை மிகுந்த குருக்களவர்கள் காட்டி வருகிறார்.

இது தொடர்பாக நடந்த ஊர்க் கூட்டத்தில் எங்களது தரப்பை-அதாவது தமிழ் வழியிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்பதற்கான அழகிய,வலுவான காரணங்களை எடுத்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த அனுபவத்தில் நான் கண்டு மகிழ்ந்த ஒன்று-கிராம மக்கள் உள சுத்தியோடு வைக்கப் படும் கூற்றுக்களை செவிமடுத்ததோடு மட்டுமல்லாது,தோள் கொடுத்துப் பாராட்டியதும்,துணை நின்றதும் மறக்க இயலா நினைவுகள்.உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்றானே, நமது தமிழ்த் தோழன்..அதுதான் பொருள் போலும்!

குருக்கள் தரப்பிலிருந்து அந்த வாதப் பிரதி வாதங்கள் நடந்த நேரங்களில்,நாங்கள் இறைவனின் விந்துவிலிருந்து பிறந்தவர்கள்,நாங்கள் என்ன செய்தாலும்(மது,மாது,மயக்கம்,கொலை...மற்றும் இன்ன பிற)நாங்களே பூசைக் காரியங்களுக்கு உகந்தவர்கள்,வேற்றுப் பிறப்பாளர்கள் இறை பிம்பத்தை அணுகுவதையோ,தமிழ் மொழியில் குடமுழுக்கு நடப்பதையோ அனுமதிக்க முடியாது என்று சண்டித்தனம் செய்தார்கள்.
எங்கள் உறுதியினாலும்,கிராமத்தவர்களின் உறுதுணையினாலும்,பின்னர் நாங்களே தமிழில் குடமுழுக்கு நடத்த ஆட்களை கொணர்கிறோம் என்று முன்வந்தார்கள்; அவர்கள் கொண்டு வரும் நபர்களோ மாலையானால் மயங்கி,சொப்பன வாழ்வை ரசிக்கும் பேர்வழிகள்..எனவே அனைத்தையும் புறந்தள்ளி, தமிழ் முறையில் திருமுறை பதிகங்களின் பிண்ணனியில் குடமுழுக்கு பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இனிதாகவே நடந்தேறியது.

மிகுந்த நிம்மதியுடனும் உளத் திருப்தியுடனும் எங்கள் ஊருக்குத் திரும்பிய போது இரவு மணி 9.00.(கோவில் இருக்கும் ஊர் எங்களது ஊரிலிருந்த 20 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்).

மறுநாள் காலை எங்களை வந்து சந்தித்த ஊர்ப் பெரியவர்கள்,என் அம்மாவிடம் சொன்னார்கள்-'அம்மா, தனி ஒரு நபராக நின்று அரும் செயலைச் செய்து விட்டீர்கள்,நேற்றிரவு 10 மணிக்கு துவங்கிய மழை இரவு முழுவதும் அடித்துப் பெய்து அதிகாலைதான் நின்றது.எங்களுக்கு மெத்த மகிழ்ச்சி' !!!

சில விதயங்களில் மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் செயற்படுகின்றன என்பது உண்மைதானோ?

()