குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Tuesday, April 21, 2009

101-சுஜாதா,சூப்பர் சிங்கர் மற்றும் சில மறைபொருள்கள் !

தமிழில் புதுக்கவிதை சென்ற சில பத்தாண்டுகளில் புயல் போலக் கிளம்பி,நல்ல-அல்ல கவிதைகளைத் தரம் பிரிப்பது வைக்கோல்
போரில் ஊசி தேடுவதை விடக் கடினமானதாக ஆகிவிட்டது.ஏதேனும் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலில் தோன்றுவது
கவிதை வடிவம்தான்..அதை ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் பின்னர் மற்ற வற்றில் பார்வையைத் திருப்புவார்கள்..

எங்களுடைய சமூகத்தின் கூட்டமைப்பின் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாள் அன்று கொண்டாட்டங்களும் சில போட்டிகளும்
வைப்பார்கள்;90 களில் ஒரு முறை ஒரு மகானுபவர் யோசைனையில் கவிதைப்போட்டி வைத்து விட்டார்கள்.அதில் படிப்பாளி(?!) என்று என்னை
நடுவர்களில் ஒருவராக்கி என்னை எல்லாக் கவிதைகளையும் கேட்க வைத்தார்கள்.(அந்த வதை அனுபவம் பல நாட்களுக்கு நினைவில் இருந்தது வேறு விதயம்!).சொல்லத் தேவையன்றி,அந்த அசம்(பவ)பாவிதத்திற்குப் பின் நான் ஒரு மோசமான
நடுவராக அறியப்பட்டேன்.

முதல் பரிசுக் கவிதை என்ன தெரியுமா?

அலைகள்,
கடல் கன்னி
கரைக்கு அனுப்பும்அன்பு முத்தங்கள் !

போகட்டும்....நல்ல கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன..கீழே சில நல்ல அல்லது கவரும்
கவிதைகளும்,அவற்றிற்கான சில ரசிப்புகளும்..

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழ்க் கவிதைகளின் தற்காலப் போக்கைக் காட்டும் நான்கு கவிதைகளை இங்கே தருகிறேன்.முதலில் குமுதம் வாசகர்களுக்கு எளிதில்
புரியக் கூடிய கவிதை.என் நண்பர் பாவண்ணன் எழுதியது.

'இடித்துச் சிதைத்தார்கள் ஒருநாள்
எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷனை
காரணங்கள் சொல்வதா கஷ்டம்...
பஸ்ங்க வந்து ரயில் அழிச்சாச்சு வருமானமே இல்ல
ஊர்க்கு நடுவுல பஸ் ஏறுவானா
ஊர்க்கோடிக்கு வந்து ரயில் புடிப்பானா?
என் இளமையின் ஞாபகம் வேற விதம்
ஒவ்வொரு மணிக்கும் ஓடும் ரயில்களுக்கு
வரிசையாய் நின்று சல்யூட் அடிப்போம்
குதிரை வண்டியில் வந்திறங்கி
கூட்டமாய் காத்திருப்பவர்களை
ஆலவிழுதில் ஊஞ்சல் கட்டி
ஆடியபடி பார்த்ததிருப்போம்
அரையனாவுக்கு நாவல்பழம் வாங்கி
ஆளாளுக்குத் தின்றபடி
மரங்கள் நடுவே பாதைபோட்டு
ரயில்கள் போல நாங்களே ஓடுவோம்
தேடிவரும் அம்மா
எங்களைக் காண்பது ரயிலடியில்தான்
காலம் மாறிவிட்டது இன்று
என் பிள்ளை பார்க்க
ரயில் இல்லை இப்போது
அகால நள்ளிரவில் ஊளையிட்டுச் செல்லும்
சரக்கு ரயிலைக் காட்ட முடியாது
தண்டவாளம் மட்டும் இருக்கிறது
பழகின ஏதோ ஒன்றின் மிச்சம் போல

இந்தக் கவிதை வெளிவந்தது 'காலக்கிரமம்' என்னும் சிற்றிதழ்,ஆசிரியர் ஆத்மாஜி.மொத்தம் 18 பக்கம்.முழுவதும்
கவிதைகள்.மேற்சொன்ன கவிதை மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய,சிறுவயதில் நாம் பார்த்துப் பரவசப்பட்ட ரயில்களை ஞாபகப்
படுத்தும் evocative கவிதை.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இழந்தது ரயில் மட்டும் இல்லை என்பது புரியாவித்தாலும்
பரவாயில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழின் நவீன கவிதைகள் எல்லாமே அத்தனை எளிமையானவை அல்ல;முன்பு மேற்சொன்ன பாவண்ணனின் கவிதையை விடச் சற்று
அதிகமாகச் சிந்திக்க வைக்கும் கவிதை ஒன்றை அடுத்துத் தருகிறேன்,அதை எழுதியவர் விக்கிரமாதித்யன்.

போன வருஷச் சாரலுக்கு குற்றாலம் போய்
கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைத்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல் வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலையே இன்னும்.

'ஆகாசம் நீல நிறம்' என்னும் தொகுப்பில் இருபத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்(ஆம்,22 ஆண்டுகளுக்கு முன்தான் !!!!!)இந்த
அபாரமான கவிதை ஏன் இதுவரை கண்ணில் படவில்லை என்று கேட்டு விக்ரமாதித்யன் 'மேலும்' என்னும் பத்திரிகையில் மே 1993
இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.'எனக்கொண்ணும் நஷ்டமில்லை,22 வருஷ இருட்டில் ஒரு தீக்குச்சி பொருத்தி வைத்துப்
பார்க்கிறேன்.எளிமையை ஏற்காத இவர்கள் மனசை லேசாக குத்திக் காட்டுவேன்,அவ்வளவுதான்' என்கிறார்.

இந்த அபாரமான கவிதை கவனிக்கப்படாத்து ஆச்சரியம்தான்.இதற்குப் பரிகாரமாக லட்சக்கணக்கான வாசகர்கள் இதைக் கவனிக்கட்டும்
என்று தீக்குச்சி என்ன,தீப்பந்தமே ஏற்றிக் காண்பிப்பதில் பெருமை அடைகிறேன்.

இந்தக் கவிதையும் புரிவதில் உங்களுக்குச் சிரமம் இருக்காது என்று தோன்றுகிறது.கை(ப்) பேனா,கால்(ச்) செருப்பு ப்பன்னா
ச்சன்னாவை எதற்கு கவிஞர் அடைப்புக் குறிக்குள் போட்டார் என்று கேட்டு உங்களை சங்கடப் படுத்த விரும்பவில்லை.

* * * * * * * * * * * * * * * * * * * * *

பதிலாக அதே காலக்கிரமம் இதழில் வெளியான் இரு கவிதைகளைக் கொடுத்து கவிதைகளின் புரிதல் நிலைகளைச் சற்றே கஷ்டப்படுத்த
விரும்புகிறேன்.

பத்தாமடை
சித்ராங்கியே
மூணாம் படை
மூப்பாயியைப்
போய்ப் பார்
முதுகில் கூடையும்
இடுப்பில் குழந்தையும்
கக்கத்தில் ரைஃபிளுமாகக்
காத்திருக்கிறாள்
மணல் தடுப்புகளுக்கு
பின்னால்

குருநாத் கணேசனின் இந்தக் கவிதை புரிந்தும் புரியாமலும் கோடி காட்டுகிறதல்லவா?இதில் சித்ராங்கி யார்,மூப்பாயி யார் என்று
வியப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு வித்ததில் இலைமறை காய் மறைவாகப் புரிவதுடன் சற்று சங்கடப் படுத்துகிறதல்லவா...அது
போதும்.

இப்போது பிரம்மராஜன் கவிதைகளுக்கு நீங்கள் தயாராகலாம்.

திணைப் புறம்பின் விழுப்
புண்கள் தாமே
தேடியதுன்னை
வியர்க்கும் மணல் மேடுகள்
ஊடே ஞானிகப்படுத்தும் தோள்
வலியில் மொக்கு உட்குழிய
மின்சாரம் அலற
நான் முகத்திலொன்று வாட
நீரின் நினைவு நினைக்கும்
நின்பனை நிலம்
சாவில் முளைக்கும்
வாழ்வின் வைரஸ் பூவே
போற்றி!

பாவண்ணனிலிருந்து பிரம்மராஜன் வரை கவிதை வடிவங்கள் எத்தனை விதமானவை என்று மாதிரி காட்டுகிறது.பிரம்மராஜன் கவிதை
புரிகிறது,புரியவில்லை என்ற தளத்தில் இயங்குவதல்ல.இது ஒரு surreal சித்திரம் போல பார்ப்பவனின் மன விகற்பங்களுக்கு ஏற்ப
அதன் புரிதல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.புரிகிறதா?

* * * * * * * * * * * * * * * * * * * * *

அண்மையில் கோவையில் ஒரு சிறுகதைப் பட்டரையின் போது,'நிகழ்' பத்திரிகையில் மனுஷ்ய புத்திரன் எழுதிய 'கால்களின்
ஆல்பம்' என்கிற கவிதையை வாசித்துக் காட்டிய போது,அது எவ்வளவு தூரம் கேட்டவர்களின் மனசைப் பாதித்தது என்பதை படித்து
முடித்தபின் உணர்ந்தேன்.பலபேர் என்னிடம் வந்து கை குலுக்கினார்கள்.ஒரு பெண்மணி மனுஷ்ய புத்திரனின் விலாசம் கேட்டு
அவருக்குப் பணம் அனுப்ப வேண்டும்,ஏதாவது செய்ய வேண்டும் என்றார்,கண்களில் கண்ணீருடன்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

மேற் குறிப்பிட்ட ஐந்து பத்திகளும் எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.இவை 90 களின்
மத்தியில் எழுதப்பட்டவை.ஒரு புகழ் பெற்ற,தின எழுத்துலகின் பெரும் வாசகர் வட்டத்தைப் பெற்ற சூப்பர் ஸ்டார் எழுத்தாளரான
அவர்,நல்ல கவிதைகளையும் கவனிக்கப்பட வேண்டிய திறமையான கவிஞர்களையும்,அவர்கள் அப்போது எந்த வித அடையாளங்களற்று
இருந்தும்,அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்.இதை ஒரு கடமையாகவே கருதிச் செயல்பட்டார் என்றும் எனக்குத்
தோன்றுகிறது.

மனுஷ்யபுத்திரன் சுஜாதாவின் மறைவின் போது எழுதிய,அவருக்கும் பின்னவருக்குமான பரிச்சயம் ஏற்பட்ட விதங்களும்,அப்போது அவர்
இருந்த(முன்னவர்) நிலையையும் விவரித்த அந்தப் பத்தியைப் படித்து நெகிழாதவர்கள் குறைவு.

அப்படிபபட்ட நேர்மறை மனிதர் இறந்த போது(ம்),அவரின் சாதிய அடையாளங்கள் குறித்த வசைச் சொற்கள் பரவலாக-குறிப்பாகப்
பதிவுலகில்-எழுந்தன.

விஜய் தொலைக்காட்சியில் இப்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று.அந்த நிகழ்ச்சியும்
விஜய் தொலைக்காட்சி நிறுவன்ம் அதை நடத்தும் விதத்திலும் அபாரமாக ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

இந்த நிகழ்ச்சியில் மூன்று நடுவர்கள்,திரு.உன்னி,திருமதி.சுஜாதா மற்றும் திரு.சீனிவாஸ்.

இதுவரை நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் நல்ல திறனுடன் பாடும் போட்டியாளர்களில் ரவி,ரஞ்சனி,விஜய் மற்றும் அஜீஷ்
ஆகிய நால்வரும்தான் இறுதிக்கு வருவார்கள் என்று நான் கணித்திருந்தேன்.(சூப்பர் சிக்ஸ் வரை).ஆயினும் அது வரை நடந்த
சுற்றுகளிலேயே சீனிவாஸ்,போட்டியாளர் ரவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போலத் தோன்றியது எனக்கு.ஆயினும் இசையில்
எனக்கிருக்கும் எளிய திறமைகளுக்கு விஞ்சிய விதயங்களை நடுவர்கள் கண்டிருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

குரல் பயிற்சியாளர் அனந்த் வந்தபிறகு டார்க் ஹார்ஸாக ரேணு முந்தினார்;பல பாடல்களைக் கலக்கலாகப் பாடினார்.

செமிபைனல் சுற்றுகளின் போது இரு நடுவர்கள் வெளிப்படை மதிப்பீடும் ஒரு நடுவர் மறைமுக மதிப்பீடும் செய்வர் என்று
அறிவிக்கப்பட்டது;அப்போது அது ஏன் என்றும் யோசித்தேன்.(பின்னர்தான் விளங்கியது!).தனித்தனியாக ஒருவரையொருவர்
போட்டியிட்டுப் பாடிய அந்த சுற்றுகளிலும் சீனிவாஸ் போட்டியாளர் ரவிக்கு அதிக மதிப்பெண்களும்,அஜீஷுக்கு குறைவான
மதிப்பெண்களும் கொடுத்தார்-இருவருமே ஒரே அளவில் ரசிக்கும்படி பாடியும்!

இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப சுற்றுகளில் விளையாட்டுப் பையனாகத் தோன்றிய அஜீஷ் செமி சுற்றுகளில் கலக்கினார்;ஒரு பாடல்
கூட சோடை என்று சொல்ல முடியவில்லை;ஆனால் ரவியின் திறனில் குறிப்பிட்டு அவதானிக்கும் படி எந்த முன்னேற்றமும்
காணக்கிடைக்கவில்லை.அவர் ஆரம்பம் முதலே நன்றாகத்தான் பாடிக் கொண்டிருந்தாலும் outstanding என்று சொல்லத்தக்க
விதத்தில் பாடவில்லையெனினும் ரவியைப் பற்றிய சீனிவாஸின் கமெண்டுகள் ஆகா ஒகோ என்ற அளவிலேதான் இருந்தன.

மதிப்பெண் வழங்கும் போது இரண்டு சுற்றுகளில் அஜீஷுக்கு குறைவான அளவில் மதிப்பெண்ணும்,ரவிக்கு அதிக மதிப்பெண்களும்
வழங்கி முதல் மூன்று இடங்களில் ரவியை உறுதி செய்தும்,அஜீஷை வெளித் தள்ளவும் ஏதுவான கேவலமான செயலைச் செய்தார் சீனி.இது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் உன்னி,சீனி செய்த அந்தத் தவறைச் சரி செய்தார்,தம் மதிப்பெண்களின் மூலமாக.

அவர் அளித்த மதிப்பெண்கள் பாடியவர்களின் திறனுக்கு அளிக்கப்பட்ட சரியான மதிப்பெண்களாகவே தோன்றியது(அஜீஷுக்கு முதல் இடமும்,ரேணுவுக்கு இரண்டாம்
இடமும்,ரவிக்கு மூன்றாமிடமும் அவர் அளித்த மதிப்பெண்களைச் சேர்த்த பின்னர் கிடைத்தன்).அவரின் மதிப்பெண்களின்
மூலம்,அஜீஷ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
திறனுக்கேற்ற மதிப்பீடுகளைச் செய்யத் தவறிய சீனியின் அசிங்கமான செயலைப் பார்த்த போது,மாறுபட்டு சுஜாதாவின் கவிதை
அறிமுகங்கள்தான் எனக்குத் தோன்றியது;பல மறைபொருள் சிந்தனைகளும் வந்தன..

பாராட்டும் விதத்தில் நடந்த உன்னி நெஞ்சை நிறைத்தார் !

சுஜாதா,உன்னி போன்ற உயர்ந்த மனிதர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

2 comments:

  1. நான் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்க்கவில்லை..

    ஒரேயொரு எபிஸோட் மட்டுமே பார்த்தேன்.

    மற்றபடி வாத்தியார் சுஜாதா இல்லையேல் மனுஷ்யபுத்திரன் இப்போது இருக்கும் நிலையில் இருந்திரு்கக முடியாது.. அவரே அறிமுகப்படுத்தி, அவரே வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுத்தார்..!

    திறமைசாலிகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தி மகிழ்ந்தவர் வாத்தியார் சுஜாதா..!

    அவரைப் போல் வேறில்லை ஸார்..!

    ReplyDelete
  2. நன்றி நண்பர் உ.த.

    சுஜாதாவை சாதீயக் கோடுகளுக்குள் அடைத்து நிந்தித்த விதம் என்னைப் பொறுத்த வரை ஒப்புக் கொள்ளத் தக்க வகையில் இல்லை.உண்மையில் அவர் பல சமயங்களில் அதற்கு நேர்மாறாகத்தான் இருந்தார்.

    சில விதிவிலக்கான நிகழ்வுகளைச் பலர் சுட்டலாம்;ஆனால் விதிவிலக்குகள் எல்லோர்க்கும் உண்டு என்பதுதான் நிதர்சனம் !

    நன்றி.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...