Pages - Menu

Tuesday, November 25, 2008

83.மறந்த பெயரும் மறக்காத சாதியும்

அண்மையில் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன் பற்றிய புன்னகை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி உண்டு.

அவர் செய்தி வாசிப்பில் முத்திரை பதித்தவர் என்பதும் இந்திய சுதந்திரச் செய்தியைத் தமிழில் சொன்னது அவருடைய குரல் என்பதும் பலருக்குத் தெரிந்த செய்தியே.

ஆனால் அவர் முதலில் செய்தி வாசிக்க ஆரம்பித்தது ஒரு எதேச்சையான நிகழ்ச்சியால் என்பதும் அதில் நடந்த குளறுபடியுகளும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன நடந்தது என்பதை அவரின் வார்த்தைகளிலேயே கேட்போம்:


ஆகாசவாணியின் தமிழ்ச் செய்தி அறை.
நேரம் - காலை ஏழு மணிக்கு மேல் எத்தனை
நிமிடமோ!
செய்தி அறிவிப்பு நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தலைப்புச்
செய்திகள் மொழி பெயர்ப்பாகிக்கொண்டு இருந்தன. மற்ற செய்திகளையெல்லாம் உரிய
வரிசையில் அடுக்கியும் வைத்து விட்டோம். ஆனால், செய்தி அறிவிக்க வேண்டியவரைத்தான்
காணவில்லை. என்ன கோளாறோ? ஒருவேளை தூங்கிப்போய்விட்டாரோ, என்னவோ!
கடைசி நிமிடம்
வரை காத்திருந்து பார்ப்பது என்று ஒன்று உண்டே... அந்த அற்புத சித்தாந்தத்தின்படி,
நண்பருக்காகக் காத்திருந்தோம். ஆனால், கடைசி நிமிடம் வரை என்றால், எந்தக் கடைசி
நிமிடம் வரை? ஏழே காலுக்கு, 'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...' என்று
ஆரம்பித்தாகவேண்டுமே! மணி ஏழு பத்தாகிவிட்டது. 'இனிமேல் காத்திருப்பதில் பலன்
இல்லை' என்ற கட்டாய முடிவுக்கு நாங்கள் அதிக தாமதமின்றி வந்துவிட்டோம் என்பது
மகிழ்ச்சியுடன் அறிவிக்கவேண்டிய செய்தி!
நாங்கள் என்றால், யார் யார்? நான்,
என்னைப் போலவே மொழி பெயர்க்கவும், ஒலிபரப்பவும் லைசென்ஸ் பெற்ற இன்னொரு நண்பர்,
மொழி பெயர்க்க மட்டுமே ஒப்பந்தமாகியிருந்த 'குரலற்ற' நண்பர் ஒருவர் - ஆக மூன்று
பேர்!
கடைசியில் நான்தான் செய்தி வாசிப்பது என்று தீர்மானமாகி விட்டது. இனி,
ஒரு கணம் கூட 'வேஸ்ட்' பண்ணமுடியாது. மேஜையில் அநாதையாய்க் கிடந்த செய்தி அறிக்கையை
அள்ளிக்கொண்டு ஸ்டூடியோவுக்கு ஓடினேன். அப்போது மணி ஏழு பதினாலு. நல்லவேளை, ஏழு
பதினைந்தைத் தாண்டிவிடவில்லை.
படிப்பதற்காக 'மைக்'கின் ஃபேடரைத் திறந்து படிக்க
ஆரம்பித்தேன்.
''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது...''
அட பாவி! செய்தி
படிப்பது யார் என்பது கடைசி வரையில் நிச்சயமாகாமல் இருந்ததால், தலைப்புச் செய்திகளை
எழுதிக் கொடுத்த 'அனுகூலச் சத்ரு', வாசிப்பவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில்
வெறும் புள்ளிகள் போட்டிருந்தார். நான் அந்தப் புள்ளிகளைப் பார்த்தவுடன் சரக்கென்று
பிரேக் போட்டேன். ''வாசிப்பது...'' என்று சொல்லியாகிவிட்டது; அடுத்தாற் போல் என்
பெயரைச் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக பிரேக்? ஆனால், பாழாய்ப்போன என் பெயர் ஞாபகம்
வந்து தொலைத்தால்தானே சொல்வதற்கு?
நம்பமுடியாதுதான்! சொந்தப் பெயர் எப்படி
மறக்கும்? ஆனால், மறந்துவிட்டதே! அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில்..!
நான் யார்?
காலம் தோன்றியது முதல், யோகியரும் ஞானியரும் அறிய முயன்று தோற்றுப்போன விஷயம்;
கல்ப கோடி காலம் தவம் செய்தும் அறியமுடியாத உண்மை... இப்போது ஆகாசவாணியின்
மைக்குக்கு எதிரே தலையைப் பிய்த்துக்கொண்டால் புலனாகிவிடுமா என்ன?
எதிரே
கடிகாரம் 'டிக்... டிக்...' என்று நேரத்தை விநாடி விநாடியாக என் கண்ணில் காட்டிக்
காட்டிப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.
நான் யார்..? நான் யார்..?
தவியாய்த் தவித்தேன். நினைவுக்கு வரவில்லை. ''நான் யார்?'' என வாய்விட்டே
கத்திவிடுவேனோ என்ற பயத்தில் ஃபேடரை' மூடி, மைக்கின் வாயை அடைத்தேன். மூளையைத்
துருவித் துருவி ஆராய்ந்தேன். என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு
அணி அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக்கொண்டு என் நினைவில் வந்து
மோதின.
செய்தி அறிவிப்பில் என் உற்ற தோழர்களாயிருந்த நாகரத்தினம், பஞ்சாபகேசன்,
(அன்று வராமற்போன) நாராயணன், வேங்கடராமன், சாம்பசிவன், இசக்கி... இவர்கள் தவிர,
எங்கெங்கோ எப்போதோ சந்தித்த கணக்கற்ற நண்பர்களின் பெயர்களும்-தென்காசி ஆமல்
ராவுத்தர், அம்பாசமுத்திரம் சாமு வாத்தியார், பத்தமடை சுப்பய்யா இப்படிக்
கணக்கில்லாத நபர்களின் பெயர்களும் என் நினைவுக்கு வந்து குழப்பியடித்தன. இந்த
மாபெரும் பெயர்க் கூட்டத்துக்கு நடுவே, நான் என்னையே தேடித் தேடிக்
களைத்துப்போனேன்.
எதிரே கடிகாரம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தக் கடும் குளிர்
நாளில், என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்துக் கொட்டியது.
நான் அழ
ஆரம்பிப்பதற்குள் ஸ்டுடியோ கதவு திறந்தது. எஞ்சினீயர் பாலு பரபரப்புடன் உள்ளே
வந்தார். என்னைப் பெயர் சொல்லி அழைத்து, ''அரை நிமிஷ மாகக் குரலே வரலையே! மைக் கைத்
தவறுதலாக மூடிவிட்டீர் கள் போலிருக்கிறது. முதலிலிருந்தே படியுங்கள்'' என்று
சொல்லி, 'ஃபேடர்' பக்கம் கையைக் காட்டிவிட்டு, வந்த வேகத்திலேயே மறைந்தார்.
அரை
நிமிடம்தானா? எனக்கு அரையுகமாகப் பட்டதே! அது இருக்கட்டும்... பாலு என் பெயரைச்
சொன்னாரல்லவா? அப்பாடா! நான் யார் என்பதை எனக்குப் புரிய வைத்த பாலுவை மானசிகமாக
வாழ்த்திக்கொண்டு மறுபடியும் ''ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது பூர்ணம்
விசுவநாதன்'' என்று ஆரம்பித்தேன்.

சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த அவரது சக வானொலியாளர் சரோஜ் நாராயணஸ்வாமி,சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விஸ்வநாதனையே இந்த நிகழ்ச்சியை விவரித்து எழுத வேண்ட,அவர் ஆ.வி.யில் 1969 ல் எழுதிய பகுதிதான் மேலே நீங்கள் படித்த கட்டுரை.

()

சமீபத்தில் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை பற்றியும் அதனுடைய நியாய,அநியாயங்கள் பற்றியும் பலரும் எழுதி விட்டார்கள்.மத்தியில் பல உண்மை அறியும்’ அறிக்கைகளும் வந்தன.


கல்வியறிவு இல்லாத சிந்திக்க இயலாத கிராம மக்கள் சாதீயத்தின் கூறுகளை விடாமல் பிடித்துக் கொண்டு சமுதாயத்தில் பல வேண்டத்தகாத நிகழ்வுகளை நடத்திக் கொண்டிடிருப்பது நாம் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் படித்த சிந்திக்க முடிந்த சட்டம் பயிலும் மாணவர்களும் சாதீயக் கூறுகளை முன்னெடுப்பதும் அதிகார,ஆட்சி,அரசியல் வர்க்கங்களின் கூறுகள் அவர்களைப் பின்னாலிருந்து இயக்கி சாதீயக் கூறுகள் முனை மழுங்கி விடாமல் கவனித்துக் கொள்வதும்,அரசியலில் பார்த்து,முதலில் பயந்து,பின்னர் சலித்து,இப்போது அரசியலின் கூறுதான் அது’என்ற சுரனை கெட்டத் தனத்துடன் நாம் ஏற்றுக் கொண்ட வன்முறை வன்மம் மாணவர்கள் அளவில் செயல்படுத்திக் காட்டப்படுவதும் எதிர்கால சமூகத்தைப் பற்றிய பயங்களை மனதில் விதைக்கின்றன.

இந்த சமுதாய சூழலில்தான் நமது குழந்தைகள் வளரப் போகின்றன என்பது திகில் தரக் கூடிய ஒரு நிதர்சனம் !