Pages - Menu

Sunday, October 21, 2007

^^^ பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

குறிப்பு : இப் பதிவு திண்ணை இதழிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.


உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த லிண்ட்சே என்ற ஆசிரியர் மீது 40 ஆண்டுகளுக்குப் பின்பு-ஆச்சரியப்படாதீர்கள்-அவரது 40 ஆண்டு வேலைக்காலத்தில்தான் அவரது மாணவிகளில் ஒரு பெண்ணான பிராமோவ் தொடர்ந்த வழக்கில் மூலம் ஆசிரியரின் அனுமதிச் சீட்டு(licence) பறிக்கப் பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு செய்தி அவர் மேல் கடந்த 40 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவர் பணிபுரிந்த பள்ளிகளில்,கல்லூரிகளில் சுமத்தப்பட்டும் அவை கடுமையான விசாரணையோ,தண்டனையோ இல்லாமல் கிடப்பில் போடப் பட்டிருக்கின்றன.நிர்வாகச் சுழலின் பல மட்டங்களில் செய்த புகார்கள் பயனற்றுப் போகவே,ப்ராமோவ் அரசை எதிர்த்தே வழக்குத் தொடர்ந்த பின் அரசு தண்டணையாக ஆசிரியரின் பணி அனுமதியைப் பறிக்க பரிந்துரைக்கையில்,அவர் சுகமாக விருப்ப ஓய்வும்,பணி அனுமதியை சுய-ரத்தும்(surrender) செய்து விட்டார்.
மேலும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் நாடெங்கிலும் இதுபோன்ற சுமார் 2500 குற்றங்கள் நடந்து அவை அடிகார மட்டத்தால் பதிவு செய்யப் படாமலேயே ஆங்காங்கே சமாளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இவையெல்லாம் பாலியல் கல்வியும்,சுதந்திரமான கலவியல் சிந்தனைகளும் அனுமதிக்கவும்,வாழ்க்கை முறையாகவும் கருதப்படுகின்ற அமெரிக்காவில் நடந்திருப்பவை !
இந்தியா போன்ற நாடுகளில்,அமெரிக்கா அளவிற்கு மோசமில்லையெனினும்,பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் சமீபத்திய 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்திருப்பதும் கண்கூடு.
இவை பாலியல் கல்வி,சுதந்திரக் கலவி மனப்பான்மை ஆகியவை பற்றிய கருத்துக்களில் மிகு-மீள் ஆய்வு(revised thoughts/analysis) செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலியல் பற்றிய பேச்சுக்கள் பள்ளி,கல்லூரி அளவில் இல்லை;பள்ளி கல்லூரிகள் அளவில் இப்போதிருக்கின்ற அளவு பாலியல் குற்றங்களும் இல்லை.ஆயினும் அதே சமயத்தில் உலகிற்கே கலவி இன்பம் பற்றிய பெரும் கருத்துக் கருவூலங்களாகக் கருதப்படுகிற வாத்சாயனரின் காமசாத்திரம்,தாந்ரிக் மற்றும் கோக்கோகம் முதலிய ஆய்வுகளின் ஊற்றாகவே இந்தியா விளங்கி இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல நாடுகளில் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்களின் படி குடும்ப ரீதியான கலவியல் வாழ்விலும்,மிக திருப்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்த செய்தியும் படிக்கக் கிடைத்தது.

ஆக இந்தியாவைப் பொறுத்தவரை சிறார்கள் கல்விகற்கும் வயதில் இது போன்ற விடயங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட அதே சமயம்,உரிய பருவத்தினர் கைக்கொள்ள,தேவைப்படும் காலத்தில் தேவைப்பட்ட அறிவு இத்துறையில் கிடைத்தே வந்துள்ளது எனக் கருத வேண்டியிருக்கிறது.
அமெரிக்கா போன்ற சுதந்திர சிந்தனை நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,காட்டுமிராண்டித்தனமாக தண்டனைகள் இருப்பதாகக் கருதப்படும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பொதுவாகவே பாலியல் குற்றங்கள் குறைவாக இருப்பதும்,வேலை போன்ற காரணங்களுக்காக வளர்ந்துவிட்ட வெளி தேசங்கள் செல்பவர்கள்(first world countries) தங்கள் குழந்தைகளில் பதின்ம வயதுகளில் எல்லாவற்றையும் மூட்டைகட்டிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடி வருவதும்,நடைமுறை வாழ்க்கையின் கண்கூடு !
சிறார்களுக்கு பாலியல் கல்வி கொடுப்பதாலேயே,அவர்களுக்கு இயல்பான மானுடத்தின் தன்மையான செயல்படுத்திப் பார்க்கும் ஆர்வம்(Experimental attitude) முளைக்கிறது என்பதும்,இதை மேலும் தூண்டிவிடுவதன் மூலமே சிறார்களுகெதிரான பாலியல் குற்றங்களில் அவர்களும் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் எனக் கருதவும் இடம் இருக்கிறது.
இப்போதைய தகவல் வெள்ளக் காலங்களில் சிறார்களுக்கான பாலியல் கல்வி பள்ளிகளில் இருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தல்ல.
பாலியல் கல்வி முதிர்ந்த,சுதந்திர சிந்தனையுள்ள நாடுகளில் சிறார்களுக்கெதிரேயான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,அதே சமயம் சிறார்களுக்கு பாலியல் கல்வி அவசியம்,அது அவர்களை எச்சரித்து வேண்டாத விதயங்களில் இருந்து பாதுகாக்கும் என்ற சிந்தனையும்,ஒருங்கே நிலவும் கருத்துக்களாக இருப்பது விந்தை.
அனைத்தையும் ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும் போது,சிறார்களின் மீதான பாலியல் தாக்குதலை எப்படி சமாளிப்பது,வருங்கால சமுதாயம் எப்படி அமைவது என்ற இரு கூறுகளில் சிந்தித்தாலேயே இவற்றிற்கான தெளிவு கிடைக்க முடியும்.
சிறார்களுக்கு பாலியல் கல்வி தேவை என்பதை விட உடலியல் கல்வி தேவை என்பதே முக்கியமானது.
அவர்களுக்கு பள்ளிகளில் உடலியல் ரீதியான கல்வியைக் கொடுக்கும் அதே நேரத்தில்,தகுந்த வயது வரை பாலியல் ரீதியான தகவல்கள்,செய்திகளைக் கல்வி முறைகளில் இருந்து விலக்கி வைப்பதே ஆரோக்கிய சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.
சிங்கப்பூர் போன்ற உலகின் ஒரு சில நாடுகளே இவற்றை சரியாகக் கையாளுகின்றன என்பது என் கருத்து.இங்கு பாலியல் குற்றங்கள்-பொதுவாக அனைத்து வகை குற்றச் செயல்களும்-கடுமையாக அணுகப்படுகின்றன;அவற்றிற்கான தண்டனைகள் வேறெவரும் குற்றச் செயல்களில் ஈடுபட பலமுறை யோசிக்கும் வண்ணமே நிகழ்த்தப்படுகின்றன.
கொடும் குற்றங்களுக்கு கடும் தண்டனைகளும்,அவற்றை செயல்படுத்துவதில் ஒளிவுமறைவோ,பாரபட்சமோ இல்லாதிருப்பதும் ஒரு நல்ல நாட்டின் நாடாண்மைக்கு(governance) முக்கியத் தேவைகள் !!!!!

Saturday, October 13, 2007

25-கிரெய்க் வெண்டர்-உயிர்த்துளி

ஆ.வி. யில் வந்த ஒரு செய்தியை எவ்வளவு பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை;வலைப்பக்கங்களில் எந்த ஒரு குறிப்பிடலோ எதிர்வினையோ இல்லை.எனவேதான் இந்தப் பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த கி.வெ என்ற மேற்குறிப்பிட்ட ஒரு மருத்துவர் ஒரு புதிய கண்டுபிடிப்பைப் பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்கிறது செய்தி.
அது முழுக்க,முழுக்க ஆய்வகத்திலேயே உருவாக்கப் பட்ட ஒரு செயற்கை க்ரோமோசோம் பற்றிய செய்தி.
உயிரின் உருவாக்கத்தில் க்ரொமோசோம்களில் பங்கு நாம் அறிந்த செய்தி;ஆனால் கிரெய்க் செயற்கையாக க்ரோமோசோமை உருவாக்கி இருக்கிறார்.
இந்த க்ரோமோசோமை ஒரு செல்லில் செலுத்தி உயிர்ப் பெருக்க நடவடிக்கைகளைத் தூண்டி விட்டு எந்த உயிரையும் உருவாக்கலாம் என்பது அவர் அளிக்கும் சித்தாந்தம்.
க்ளோனிங் இதற்கு எந்த வகையில் மாறுபடுகிறது என்பது அறிவியல் ரீதியாக எனக்கு இன்னும் விளங்கவில்லை;என் புரிதலில் க்ளோனிங்'கிற்கு உருவாக்கப் பட வேண்டிய உயிரியின் ஒரு உடல் செல் தேவை என்றே படித்ததாக நினைவு.ஒரு உயிரியை உருவாக்க இந்த க்ரோமோசோமும் ஒரு செல்லில் செலுத்தப்பட வேண்டும் என்கிறார் க்ரெய்க்.
ஆயினும் க்ரோமோசோமை முற்றிலும் செயற்கையாக பரிசோதனைச் சாலையில் உருவாக்க முடிந்திருப்பது ஒரு புரட்சியான சாதனை என்றே தோன்றுகிறது.
க்ரெய்க் குளோபல் வார்மிங்'கை சமாளிக்க கார்பன் - டை - ஆக்சைடை உட்கொள்ளும் பாக்டீரியாக்களை உருவாக்குவதுதான் முதல் லட்சியம் என்கிறார்.
ஆயினும் அவர் சொல்லுகிற வகையில் இந்த கண்டுபிடிப்பு வேலை செய்தால் படைப்புத் தத்துவம் ஒரு மிகப் பெரிய ஆட்டம் காணும் வாய்ப்பிருக்கிறது.
உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பும் இக் கண்டுபிடிப்பிற்குத் தோன்றியிருக்கிறது.
க்ரெய்க்'கிடம் எதிர்ப்பைப் பற்றிக் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் ஒரு அழகிய முரண் நகை, "கடவுளையே எதிர்க்கும் ஆட்கள் இவ்வுலகில் இருக்கும் போது என் கண்டுபிடிப்பை எதிர்ப்பது எம்மாத்திரம்?"
இவ்வேளையில் சுஜாதா எழுதிய ஒரு விஞ்ஞானச் சிறுகதையில், முழுக்க சோதனைச் சாலையில் உருவாக்கி,ஒரு விஞ்ஞானியால் (ரகசியமாக)வளர்க்கப்படும் ஒரு கொழகொழத்த வடிவற்ற உயிரியும்,அந்தக் கதையின் சுவாரசிய சுஜாதா ப்ராண்ட் முடிவும் எண்ணத்தில் மீள்வதை தவிர்க்க இயலவில்லை.

Wednesday, October 10, 2007

அங்கும்,இங்கும்,எங்கும்.....

இந்தியாவில் பல சமயத்தவர் வாழ்கின்றோம்.பல சமயத்தவருள் பற்பல சடங்குகள்,சம்பிரதாயங்கள் செய்கிறார்கள்.


இவை எல்லாவற்றிலும் மனித குலத்தின் பிறப்பு,இறப்பு தழுவிய சடங்குகள் பலராலும் தவறாது செய்யப்படுபவை கண்கூடு.


இன்னும் சொல்லப்போனால் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட தத்தம் முன்னோர்களை நினைவுகூரும் விதமான சடங்குகளை ,குடும்ப மூத்தவர்கள் சொல்ல சிரத்தையுடன் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.



நான் இவற்றையெல்லாம் பற்றி சிந்திக்கும் போது மற்ற நாடுகளில் இது போன்ற பழக்கவழக்கங்கள் என்ன என்பதெல்லாம் பற்றி கூர்ந்து ஆராய்ந்ததில்லை.



சிங்கப்பூரில் சிலகாலம் இருந்தும் சீனர்கள்,மலாய் இனத்தவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் உன்னிப்பாகக் கவனித்ததில்லை;நான் மட்டுமல்ல,பொதுவாக இந்திய மென்பொருள் வேலையர்கள் இங்கு பல காலம் தங்க நேரும் போது கூட சீனர்கள்,மலாய்க் காரர்களின் சமூக,சமய சடங்குகள்,கொண்டாட்டங்களில் முனைப்புடன் இணைவதோ,கலந்து கொள்வதோ இல்லை என்றுதான் நினைக்கிறேன்.


பொதுவாக சீனர்களுக்கு பிப்ரவரியும்,ஆகஸ்ட்-செப்டெம்பரும் சமூகம் சார்ந்த கொண்டாட்ட,சடங்கு நிகழ்வுகள் நடக்கும் முக்கிய காலங்கள்.


முன்னது சீனப் புத்தாண்டு;பின்னது Ghost Month Celeberation என அவர்கள் அழைக்கும் நீத்தார் நினைவுக் கொண்டாட்ட காலம்.



சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் இந்த ஆண்டு ஒரு சீன நண்பர் அழைப்பில் அவர் வீட்டுக்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தேன்.


ஆகஸ்ட்-செப்டெம்பரில் எனது குடியிருப்புக்கு கீழேயே இவ்வாண்டு மிகப் பெரும் கொண்டாட்ட முஸ்தீபுகள் களை கட்டின.மூக்கு வேர்த்ததால்,இம்முறை இவற்றின் தாத்பரியம் என்ன என்று அறிந்து கொண்டே ஆகவேண்டும் என தீர்மானித்தேன்.அதில் கலந்து கொண்ட சீன நண்பர்களிடம் கட்டை போட்டதில் அறிந்தவைதான் இங்கே !


இரண்டு நாட்கள் பகலிரவாக அலங்காரங்கள் நடைபெற்றன.பின்னர் கிட்டத்திட்ட மூன்று நாட்கள் பலர் கூடி வழிபாடும் விருந்தும்.

வழிபாடு பெரும்பாலும் புத்தருக்கு;வழிபாட்டு சமயத்தில் எவரெவரின் நீத்த மூத்தோர்களை நினைவு கூர வேண்டுமோ அவர்கள் இந்த சடங்குகளை நடத்தி வைக்கும் பிக்குகளுக்கு முன் பணம் கொடுத்து விட வேண்டுமாம்.


இப் பிக்குகள் பெரும்பாலும் தனியர்களாய்,குடும்பம் இல்லாமல்,சீனக் கோவில்களிலேயே தங்குபவர்களாக இருக்கிறார்கள்.


இம்மாதிரியான பிரதிமைகள் அமைத்து வழிபாடுகள் செய்து பின்னர் பலவகை உணவுகள் படைத்து வழிபடுகிறார்கள்.


மேலும் அழகழகான கண்ணாடியாலான(அழகான கடைசல் வேலைபாடுடன் கூடிய கண்ணாடி சிமிழ் மேலே,கீழ்ப்புறம் LPG அடைக்கப் பட்டு திரி மட்டும் மேல்தெரியும் பகுதி;எரியும் போது மிக அழகு!) விளக்குகள்,படத்தில் போல,பெருமளவில் ஏற்றி வைக்கிறார்கள்;கட்டுக் கட்டாக டாலர் வடிவம் அச்சடித்த,டாலர் அளவில் அமைந்த பேப்பர்களை நெருப்பில் எரிக்கிறார்கள்;சாதம்,ஆரஞ்சு,அறுகோண வடிவில் பல நிறத்தில் அமைந்த பஞ்சு போன்று மெத்தென இருக்கும் ஒரு தின்பொருள்-எல்லாம் தரையில் பரப்பி ஒரு கட்டு ஊது பத்திகளை ஏற்றி வைப்பார்கள்...எல்லாம் குடியிருப்பின் நடை பாதையோரத்தில்...
இவை அனைத்தும் நீத்தாருக்காக,விளக்குகள் அவர்களுக்கு பாதைகளில் ஒளி கொடுக்கவும்,எரிக்கப் படும் டாலர் வடிவ காகிதங்கள் அவர்கள் மறு உலகில் செலவு செய்யப் பணமாகவும்,படைக்கப்படும் உணவுகள் அவர்களுக்கு உணவாகவும் பயன்படும் என்றும் நம்புகிறார்கள்.

சீனர்களின் வாழ்விலும் நெருப்பு,வான்வெளி ஆகியவை(பொதுவில் பஞ்சபூதக் கூறுகள்) முக்கிய சமூக,சடங்குகள் சார்ந்த அடையாளங்களாக விளங்குவதை அறிய முடிகிறது.


ஆழ்ந்து நோக்கும் போது உலகின் மிகப் பெரும் இரு நாகரிகங்களில்(இந்திய,சீன)பழக்க வழக்கங்கள்,சடங்குகள் பெரும்பாலும் ஒத்த அளவிலேதான் இருந்திருக்கின்றன.






அக்கினிக் குஞ்சொன்று....

இந்தவார ஜுவி யில் ஒரு மகிழ்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களில் வளர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது
என்று காந்தியடிகள் சொன்னதாகச் சொல்வார்கள்.இதனை மெய்ப்படுத்துவது போன்றது அந்த செய்தி.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுகோட்டை கிராம ஊராட்சியின் நிலை மெச்சத்தகுந்தது.
  • ஷவருடன் கூடிய பொதுக்குளியலறை ஆங்காங்கே,
  • தெருமுனைகளில் குடிநீர்க் குழாய்,
  • ஊராட்சி அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுக் காரிய உபயோகத்துக்கென கணிபொறி-வலை உலாவும் வசதியுடன்,
  • ஒவ்வொரு வீட்டிலும் குளியலறை-கழிப்பறை,
  • மழைநீர் சேகரிப்பு,
  • மனிதக் கழிவிலிருந்து பெறப்படும் மின்சாரம் ஒளியூட்டும் பொது விளக்குகள்,
  • மிச்சப்படும் அந்த மின்சாரக் கட்டணம் மூலமும் ஊராட்சிக்கு அரசு ஒதுக்கும் பணத்தை ஒழுங்காக செலவு,முதலீடு செய்ய ஊராட்சி நிலங்களில் பழத் தோட்டங்கள்,
  • ஊர்முழுவதும் சிமெண்ட் ரோடு,
  • மூலைக்கு மூலை குப்பைத் தொட்டி,
  • பெண்களின் மாதாந்திர உபயோக சாமக்கிரியைகளை எரிக்க நவீன கழிவெரிக்கும் அடுப்புகள்,
  • எல்லாக் குழந்தைகளும் எட்டாவது வகுப்பு வரை படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சட்டம்,
  • அதை மகிழ்வாக பின்பற்றும் ஊர்மக்கள்.....
அட,இது தமிழக கிராமம் தானா என்ற திகைப்பு ஏற்படலாம்.
இவையெல்லாம் எப்படி சாத்தியம்?
காரணங்கள் எளிதானவையும்,ஆத்ம சுத்தியுடன் நமது ஆட்சியாளர்களால் அலசப் பட வேண்டியவையும் !!!
1965 ல் இந்த ஊரின் ஊராட்சி பொறுப்பேற்றிக் கொண்டபோதெ,இப்பதவியில் இருந்து விலகும் போது ஊருக்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என நினைத்தேன் என்கிறார் ஊரின் ஊராட்சித்தலைவர் ராமநாதன்.இவரின் ஆதாரக் குறிக்கோள்கள் சிக்கலற்றவையும்,எளிதானவையும்.
-ஊருக்கு அரசு ஒதுக்கும் பணத்தை பய(ல)னளிக்கும் வகையில் செலவு செய்வது.
-எதற்கு எவ்விதம் திட்டங்கள் தீட்டுவது என்பதை ஊர்க் கூட்டத்தில் முடிவு செய்வது.
-பொதுப் பணத்தை,சொந்தப் பணத்தை சொந்தக் காரியங்களுக்கு செலவிடுவது போன்ற அக்கறையுடன் - கவனிக்கவும் அக்கறையுடன் மட்டும் - பொதுக் காரியங்களுக்கு செலவு செய்வது !
ஜூவி இதனை சாதனை என்று வர்ணித்திருக்கிறது;நல்ல ஊராட்சி முறை இருந்தால் எந்தக் கிராமமும் இருக்க வேண்டிய நிலைதான் இது.ஆயினும் நம்மை ஆள்பவர்கள் மற்ற ஊர்கள்,மாவட்டங்களில் செய்யும் அவலக் காரியங்கள் நாலுகோட்டையின் இந்த நிலையை சாதனை என்ற அளவில் பார்க்க வைப்பதை மறுக்கவியலாது.
எல்லாவற்றிலும் முக்கியமான ஒரு விதயம் இருக்கிறது,இந்த ஊரின் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் சுயேச்சைகள் !
Strictly No to கட்சி அரசியல்.
கழகக் குஞ்சுகள் 40 ஆண்டு காலத்தில் எங்கும் செய்யவியலாத ஒரு விதயம் தனி நபர்களால்-அரசியல்,திராவிட ஆரிய புண்ணாக்குகள்,வெங்காயங்கள் இல்லாமல்-சாதிக்கப் பட்டிருக்கிறது.
ஒரு வித்தியாசமான நாலுகோட்டையை என் வாழ்நாளில் காண்பேன் என்று 1965 களில் வரிந்து கட்டிய ராமநாதனும்,ஒரு வித்தியாசமான சிங்கப்பூரை நான் உருவாக்குவேன் என்று 1960 களில் வரிந்து கட்டிய லீ senior'ம் உண்மையில் ஒத்த படிமங்கள்.
The Singapore Story'ல் முந்தாய்ப்பு வரிகளாக லீ சீனியர் சொல்கிறார்.
They(Malaysia) thought afther they hived off us,we would not work out as an idea of separate singapore and would struggle for each and every resource starting from water and would beg on their feet again,to be associated with them again,on terms they fix.
Not really,till i have different idea(s).I didn't realise that I would spend my entire remaining life to not only make that idea work,but also to make singapore flourish and excel to became a first world country from third world....
இவர்களிலிருந்து பாடம் கற்கத்தான் நமது உளுத்த அரசியல் வாதிகள் தயாராக இல்லை.
அதுதான் நம்மை பீடித்திருக்கும் மிகக் கொடிய பிணியும்,சோகமும் !!!!!